தாவர சங்கமம் – 7 : கற்கனவு

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

என மாணிக்கவாசகர் தம் சிவபுராணத்தில் ‘புல்லாகியும், பூண்டாகியும், புழுவாகியும், மரமாகியும், பலவகை மிருகங்களாகியும், பறவையாகியும், பாம்பாகியும், கல்லாகியும் (கல்லுக்கும் உயிர் உண்டு என்பது இதனால் உறுதியாகிறது), மனிதராகியும், உடல் நீங்கிய பேயாகியும், பலதரப்பட்ட பூத கணங்களாகியும்,  வலிமை மிகுந்த அசுரராகியும், முனிவராகியும், தேவராகியும் இயங்குகின்ற இந்த அசையாப் பொருள் அசையும் பொருள் என்னும் இருவகைப் பொருள்களுள்ளே [அதாவது, தாவர சங்கமத்துள்ளே], தான் எல்லாப் பிறவிகளிலும் பிறந்து மெலிவடைந்துவிட்டேன் எம்பெருமானே’ என்கிறார்.

[இங்கே எல்லாப் பிறப்பும் என்பதற்கு  தாவரம், நீர் வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, மனிதர், தேவர் என்னும் ஏழுவகையானப் பிறவியையும்… உயிர், தாவரப் பொருளாயிருந்து அறிவு வளர்ச்சிக்கேற்ப சங்கமப் பொருள்களில் தேவர் ஈராக உயர்ந்து பிறவி எடுப்பதையும் கொள்ளலாம்.]

இதன் மூலமாக புல், பூடு, புழு, மரம், பல்விருகம், பறவை, பாம்பு, கல், மனிதர், பேய், கணங்கள், அசுரர், முனிவர், தேவர் ஆகிய பதினான்கும் தாவர சங்கமம் எனப் புலனாகின்றன. [இவற்றில் புல், பூடு, மரம், கல் நான்கும் தாவரம். புழு, பல்விருகம், பறவை, பாம்பு, மனிதர், பேய், கணங்கள், அசுரர், முனிவர், தேவர் பத்தும் சங்கமம்.] திவாகர நிகண்டு, ‘மரமும், மலையும் போல நிற்பன தருபெயர் தானே தாவரம் ஆகும்’ (2226) என்றும், ‘ஊர்வன, பறப்பன, நடப்பன சங்கமம்’ (2227) என்றும் இயம்புகின்றன.

இதை வாசிக்கும்தோறும் அல்லது யாராவது பாடிக் கேட்கும்தோறும் என் கண்முன்னால் ஒரு மாபெரும் கற்கனவு வந்துபோவதை எவ்வளவு முயற்சித்தாலும் என்னால் தடுக்கமுடிவதில்லை. காரணம், அக்கற்கனவின் பிரமாண்டமும், உலகக் கலை வல்லோரால் உச்சிமிசை வைத்துப் போற்றப் பெறுகின்ற அதன் பெருஞ்சிறப்பும், அது தரும் நிகரிலா கலையின்பமும்தான். ஆம்!

மகாபலிபுரம் என இன்று பேச்சு வழக்கில் அழைக்கப்படும் மாமல்லபுரத்தில் இருந்த மலைகளையும் கற்களையும் அப்படியே சிற்பங்களாக்கி, உலகில் வேறெங்கும் அதற்குமுன்பு இல்லாதபடி ஒரு கலைச்சாதனையை முதன்முதலில் பல்லவர்கள் நிகழ்த்தினர் என்பது நம்மில் மேலதிகமானோர்க்கு தெரிந்திருக்கலாம். எனினும், அக்கலைச்சாதனையின் உச்சமாய் சொல்லத்தக்கது, அங்குள்ள ஒரு பாறைச் சிற்பத்தொகுதியே என்பது  மிகுதியானோர்க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

உலகக் கலைவெளியில் எங்கும் காணக் கிடைக்காத ஒப்பற்ற படைப்பாக, பல்லவர் கலையின் மாட்சிமையை இந்தப் பாரெங்கும் காட்டும் விதமாக இருப்பது இம்மாமல்லை சிற்பங்கள். அதுவும் கிழக்கே குணகடலை நோக்கி, தெற்கு வடக்காக ஒன்றடுத்து ஒன்றென நீண்டிருக்கும் இப்பாறைச் சிற்பமானது, முதல் இடை கடை என மூன்று சிற்பத்தொகுதிகள் கொண்டது. இதிலிருக்கும் தபசி அர்ச்சுனன் [அல்லது பகீரதன்] என்றும், இதன் மையப்பொருண்மை இமயம் என்றும், இது மகாபாரதக் காட்சி என்றும் சொல்வதுண்டு.

அவ்வகையில் முதல் சிற்பத்தொகுதி, அதன் ஒட்டுமொத்த கலைவெளிப்பாட்டை; அது தரும் கலையனுபவத்தை வைத்து மலையிலிருந்து கீழே ஆர்ப்பரித்துக் கொட்டும் அழகிய அருவி என்றால், இடைச் சிற்பத்தொகுதி இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு ஒய்யாரமாய் ஓடும் பிரமாண்டப் பேராறு எனவும், அதற்கடுத்துள்ள  கடைச் சிற்பத்தொகுதி அந்த ஆற்றிலிருந்து பிரிந்தோடும் சின்னஞ்சிறு கால்வாய் எனவும் சொல்லலாம்.

இதன் முதல் சிற்பத்தொகுதியில் ஒரு கடவுள், முப்பத்தாறு தேவகணங்கள், ஒன்பது மனிதர், நான்கு யானைகள், இரண்டு காட்டுப்பன்றிகள், ஐந்து சிங்கங்கள், மூன்று ஆடுகள், மூன்று மான்கள், இரண்டு நாரைகள், ஒரு வாத்து, இருபது அன்னங்கள், ஐந்து மயில்கள் என மொத்தம் 91 உருவங்களும் (உருவங்கள் பல தெளிவற்று இருப்பதால் இவற்றில் சிறு மாற்றங்கள் இருக்கலாம்)… இடைச் சிற்பத்தொகுதியில் ஒரு கடவுள், ஒரு கோயில், அறுபத்துநான்கு தேவகணங்கள், பதிமூன்று மனிதர் (தபசி, வேடர், கோயில் முன்னாலிருக்கும் துறவியர் மற்றும் ஆற்றில் நீராடுவோருடன்), பத்து யானைகள், பதினாறு சிங்கங்கள் (குட்டிகள் மற்றும் யாளிகளுடன்), ஒன்பது மான்கள், இரண்டு ஆடுகள், இரண்டு ஆமைகள், ஒரு முயல், ஒரு பன்றி, ஒரு பூனை, பதிமூன்று எலிகள், ஏழு பறவைகள், நான்கு குரங்குகள், ஓர் உடும்பு, எட்டு மரங்கள் (தோப்பாக தென்படுவனவுடன்) என மொத்தம் 154 உருவங்களும்… கடைச் சிற்பத்தொகுதியில் நான்கு யானைகள், ஒரு குரங்கு, ஒரு மயில் என மொத்தம் ஆறு உருவங்களும் செதுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

இங்கே பலருக்கும் ஒரு கேள்வி எழலாம். ‘எதற்காக இத்தனை உயிர்களின் உருவங்களை அதுவும், ஒரே இடத்தில் செதுக்கி வைத்திருக்கவேண்டும்?’. ஒரு பாடலில் அல்லது நூலில் எப்படி வெவ்வேறு சொற்களை ஒன்றன் பின் ஒன்றாக யாத்து, தாம் சொல்ல நினைத்ததை மற்றவர்களுக்கு அதிலும் குறிப்பாக, வருங்கால சந்ததிகளுக்கு நம் முன்னோர்கள் கூறிவிட்டுப் போனார்களோ, அதுபோலத்தான் இச்சிற்பத் தொகுதிகளில் இருக்கும் உயிர்களின் உருவங்களை இதை வடித்த நம் மூதாதைச் சிற்பிகளும் செதுக்கியிருப்பார்கள். 

இம்மூன்று சிற்பத் தொகுதிகளில் உச்சமாய், உலகப்புகழ் பெற்றதாய் கூறத்தக்கது இடைச் சிற்பத்தொகுதியே என்பதை காணும் யாரும் நொடியில் யூகித்துவிடலாம். காரணம், 75.5 அடி நீளமும், 36 அடி உயரமும் உடைய இச்சிற்பத் தொகுதியில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வோர் உருவமும் அத்தனை தத்ரூபமாகவும், கலைநேர்த்தியோடும் செதுக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, சந்திரனது தலையின் பின்புறம் காணப்படும் ஒளிவட்டம் தொடங்கி, மரத்தின் அருகில் உள்ள வேடன் ஏதோ ஒன்றினைக் கழியில் கட்டி சுமந்து வருவது; அவனை அடுத்து வானரமொன்று வாலினை உயர்த்திய வண்ணம் அமர்ந்துள்ளது வரைக்கும் சொல்லிக்கொண்டே போகலாம்.

எத்தனைக் கற்பனை வளமும், தொலைநோக்குப் பார்வையும், கலைத்திறமும் இருந்திருந்தால் இத்தகைய கலைச்சாதனையை இங்கே நிகழ்த்தியிருக்கமுடியும். அதிலும் தம் போன்ற மனிதர்களை மட்டும் அவர்கள் சிற்பமாக வடிக்கவில்லை. தமக்கும் மேலானக் கடவுளையும், தேவகணங்களையும் உருவாக்கி இருக்கிறார்கள். அதோடு நின்றார்களா? தன்னுடனும், தன்னைச் சுற்றிலும் வாழும் மரங்கள் தொடங்கி… யானைகள், சிங்கங்கள், மான்கள், ஆடுகள், ஆமைகள், முயல், பன்றி, எலி, பூனை, குரங்கு, பறவைகள், உடும்பு என எல்லா உயிரினங்களையும் வடித்திருக்கிறார்கள்.

எப்படி சங்கப் பாடல்களை வாசிக்கையில் அக்கால மக்களின் வாழ்வில் இயற்கையும், அவற்றின் அங்கமான பிற உயிர்களும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்திருக்கிறதோ, அதேபோலவே இச்சிற்பத் தொகுதியிலும் மனிதர்களோடு மற்ற உயிர்களும் பிணைந்திருப்பதைப் பார்க்கலாம்.

[மேலும் இதன் மூலமாக அக்கால சிற்பிகள் வெறும் கல்லைக் கொத்தி உருவம் வடிப்பவர்களாக மட்டும் இல்லாமல், பல்துறை ஞானம் பெற்றவர்களாக இருந்திருப்பதையும் காணலாம்.]

இன்னொரு வகையில் பார்த்தால், இது அப்படியே மாணிக்கவாசகரின் சிவபுராணப் பாடல் வரிகளின் உத்தேசக் காட்சி வடிவம் என்றும் தோன்றும். அவர் பட்டியலிட்டு சொன்னவற்றில் மிகுதியானதை தம் அகத்துளியால் மனத்துள்ளே செதுக்கிப் பார்த்துவிட்டு, பின் புறத்துளியால் இங்கே செதுக்கியிருக்கிறார்கள். ஆம்!

முதன்முதலாக நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கையில் பள்ளியில் சுற்றுலா அழைத்து சென்றபோது பார்த்து ரசித்து வியந்தது. அதிலும் குறிப்பாக, இச்சிற்பத் தொகுதியில் இருக்கும் யானைகளில் எத்தனை இருக்கிறது என நண்பர்களோடு போட்டிப் போட்டுக்கொண்டு எண்ணி எண்ணி, அழித்து அழித்து வியப்புற்றது இப்போதும் நினைவுள்ளது. அதுதொடங்கி குறைந்தது இருபது தடவையாவது சென்று பார்த்திருப்பேன். ஒவ்வொரு தடவை பார்க்கும்போதும் முன்னைவிட புதிதாக, இன்னும் இன்னும் புதியவற்றை சொல்வதாக இருக்கும்.

அதனால் எப்போது சென்றாலும் சரி, இதன் முன்பாக நின்றுகொண்டு வெகுநேரமாக பார்த்து ரசிப்பது வழக்கம். அவ்வாறு பார்க்கையில் சில நண்பர்கள் கேளியாகக் கேட்பதுண்டு. ‘இன்னும் எவ்ளோ நேரம்தான்… இதையே பார்த்துனு இருப்பயோ?’. நான் சொல்வேன், ‘ஒரு புத்தகம் எப்படியோ, அப்படித்தான் இந்தச் சிற்பமும். ஒவ்வொருவாட்டி வரும்போதும், இதப் படிக்க முயற்சி பண்றன். இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா புரியுது. இன்னும் முழுசா படிக்க எத்தன வருசம் ஆகுமோ, தெரியல.’ என்னையும், என்முன்னால் இருக்கும் சிற்பத்தொகுதியையும் ஒருமாதிரி பார்த்துவிட்டுப் போவார்கள்.

இவர்களாவது பரவாயில்லை. இங்கே சுற்றுலா வருபவர்களில் அதிகமானவர்கள் வெறுமே முன்னால் வந்து நின்று நான்கைந்து ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டு, ‘அவ்ளோதான் பார்த்தாச்சு… வாங்கப் போகலாம்’ என்று வந்ததைவிட வேகமாக ஓடுவார்கள். காணவே மிகுந்த வேடிக்கையாக இருக்கும்.

அப்போதெல்லாம் தவறாமல் உள்ளுக்குள் நினைத்துக்கொள்வேன். ‘நம்மள சுத்தி உயிரோட இருக்கற உயிருங்களயே இந்த மனுசங்க சரிவரக் கண்டுக்கறதில்ல; மதிக்கறதில்ல. இதுல இங்க சிற்பமா இருக்கறதயா கண்டுக்கப்போறாங்க; மதிக்கப்போறாங்க.’

என்னைக் கேட்டால் உலக அதிசயங்களில் ஒன்றாகவே இம்மாமல்லபுர சிற்பத்தொகுதியைச் சொல்வேன். அத்தனை கலைநேர்த்தியும், தனித்தன்மையும், கலைவெளிப்பாடும் மிக்கது. தாஜ்மகாலுடன் ஒப்பிட்டால் நூறுமடங்கு மேலெனலாம். தாஜ்மகாலை பணமும் மனமும் உள்ள யாரும் கட்டிவிடலாம். ஆனால், இதுபோன்ற ஒரு கற்கனவை உருவாக்க இந்நாளின் வல்லரசு நாடுகளால்கூட முடியாது. இதை ஏதோ பெருமைக்காக சொல்லவில்லை. கடந்த எட்டாண்டுகளுக்கு முன்பு ஒருநாள் காலையில் மாமல்லபுரம் போயிருந்தபோது, அங்கே வந்திருந்த ஓர் அமெரிக்கப் பயணி சொன்னார். கூடவே, இன்னொன்றையும்.

‘எங்களமாதிரி வெளிநாட்டுக்காரங்களுக்கு இதோட அருமை பெருமை தெரிந்ததாலதான் இத்தனை தூரம் கடந்து, இவ்வளவு செலவு செய்து வந்திருக்கோம். ஆனா, இங்கே இருக்க உங்க மக்களுக்குதான் இதன் அருமையும் தெரியல; பெருமையும் புரியல. அதுகூடப் பரவாயில்ல. இதையெல்லாம் விட்டுட்டு, எங்க நாட்டுல இருக்க எந்தக் கலைத்துவமும், பண்பாட்டுத் தொடர்ச்சியும் இல்லாத வெறும் கட்டடங்களை வந்து பார்க்கிறத பெரிய பெருமையா நினைக்கிறதுதான் வேடிக்கையா இருக்கு.’

அவர் சொன்ன அத்தனையும் உண்மை என அப்போதே உரைத்தது. அதோடு, நம் நாட்டின் கலை இலக்கியச் செல்வங்களை; அவற்றின் ஈடிணையற்ற மேன்மைகளை இயன்றவரை தேடிக் கண்டுவிடவேண்டும், அடுத்த தலைமுறைக்கு கொண்டுபோக முயற்சித்திடவேண்டும் என்றும் தோன்றியது. ஆம்!

சங்கப் புலவர்களும், மாணிக்கவாசகரும் சொல்லால் சொன்னதை இங்கே கல்லால் செதுக்கியிருக்கிறார்கள் பல்லவர்கள். அதன் மூலமாக திரும்பத் திரும்ப இம்மாபெரும் பிரபஞ்சத்தில் உள்ள புல் முதலான அனைத்து உயிர்களும் நிகர் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆம், அப்படித்தான் நான் பார்க்கிறேன். அப்படி மட்டும்தான் என்னால் பார்க்கமுடிகிறது.

அதனால்தானோ என்னவோ தெரியவில்லை. மாணிக்கவாசகரின் இந்தப் பாடலை பாடுகையிலும், கேட்கையிலும், வாசிக்கையிலும் இம்மாபெரும் கற்கனவு என் கண்முன்னால் வந்துபோவதை எவ்வளவு முயற்சித்தாலும் என்னால் தடுக்கமுடிவதில்லை!

(கொலுசு – ஜூன் 2023 இதழில் வெளியானது.)

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=