சொல்லின்றி எதுவுமற்றவன்! – 065
இந்த ஐந்து பாடல்களில் உங்களுக்கு மிகப் பிடித்த பாடல் எது?
(சிரிக்கிறார்) சொல்லப்போனால் இந்த ஆல்பத்தில் இருக்கும் ஐந்து பாடல்களுமே எனக்கு மிகப் பிடித்தமானதுதான்.
அதில் ஒன்றை மட்டும் சொல்லவேண்டும் என்றால், ‘சுதந்திர தேசம்’ பாடலை மனத்துக்கு மிக நெருக்கமானது என்பேன். அதன் ஒவ்வொரு வரிகளையும் பார்த்து பார்த்து ரசித்து ரசித்து எழுதினேன்.
‘அன்னையின் கைகள் விட்டு –
குழந்தை நடக்கையில் சுதந்திரம்…
குஞ்சுகள் கூட்டைத் தாண்டி –
வெளியில் பறக்கையில் சுதந்திரம்…’
‘இலைகள் கிளையைப் பிடித்து –
இசைந்து ஆடுகையில் சுதந்திரம்…
விதைகள் மண்ணைப் பிளந்து –
வேரை விடுகையில் சுதந்திரம்…’
போன்ற பல வரிகள் இப்போது கேட்டாலும் திருப்தி தரக்கூடியது.
இன்னொரு பாடல் சொல்லச் சொன்னால், ஆல்பத்தின் இறுதிப் பாடலான ‘இயற்கை அன்னையின்’ தமிழ்நாடு பற்றி எழுதியது. ஒரு வகையில் இந்தப் பாடலின் முன்னோடியாக பாரதியையும், அவனது ‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே’ பாடலையும் சொல்லலாம்.
இப்பாடலில் வரும்,
‘செந்தமிழ் போற்றும் ஒருநாடே – என்றும்
செழுமை பிறக்கும் செந்நாடே…
நல்லோர்கள் வாழும் நன்நாடே – வையம்
பார்த்து வியக்கும் முன்நாடே…’
எனும் இந்த வரிகளை ஒலிப்பதிவின் போதும், காட்சிப்பதிவின் போதும் கேட்டு சிலித்துப் போனேன்.
உண்மையில் இந்த ஆல்பத்துக்கான வாய்ப்பை தந்த எனது இசையமைப்பாளருக்கும், பொதிகை தொலைக்காட்சிக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற பாடல்களை ஒருபோதும் நான் எழுதியிருக்க மாட்டேன்.
[இன்னும்]
*
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 064