சொல்லின்றி எதுவுமற்றவன்! – 033
பெண்கள் குறித்தும், பெண்களுக்காகவும் எத்தனையோ பாடல்கள் அதற்கு முன்னால் வந்திருக்க, இந்த ‘தொப்புள்கொடி‘ பாடல் எழுதி வெளியிட தனிப்பட்டக் காரணம் ஏதேனும் உண்டா?
(சிரிக்கிறார்) பெண்கள் குறித்து எத்தனை ஆயிரமாயிரம் பாடல்கள் வந்திருந்தாலும், அவர்கள் பற்றி சொல்லவும், அவர்களை இன்னும் சரிவரக் கொண்டாடவும் இச்சமூகம் தவறியதாகவே எப்போதும் தோன்றும். அக்குறையை ஓரளவேனும் நிவர்த்தி செய்யவே நானும் எனது நண்பர் இசையமைப்பாளர் ஷ்ரவன் கலையும் ஒரு பாடல் உருவாக்க எண்ணினோம். அந்த எண்ணம்தான் ‘தொப்புள்கொடி’ பாடலாக எங்களிலிருந்து வெளிப்பட்டது.
இங்கே இன்னொன்றையும் சொல்லவேண்டும். இப்பாடலின் வரிகளை எனது கல்லூரி மைதானத்தில் உட்கார்ந்து எழுதி என் இசையமைப்பாளருக்கு அனுப்பிவிட்டு, பாடலின் இசை வடிவத்துக்காக அத்தனை ஆர்வத்தோடு காத்திருந்தேன்.
சரியாக அடுத்தநாள் மாலை அழைத்தவர், குரலில் சிறு நடுக்கமும் ஈரமும் தெரிய, ”எல்லாப் பெண்களும் பெருமப்படறமாதிரி ஒரு பாட்டப் பண்ணிட்டோம் பாஸ்’’ என்றுவிட்டு, பாடலை எனக்கு அனுப்பியிருப்பதாகவும், கேட்டுவிட்டு திரும்பவும் அழைக்குமாறும் கூறிவிட்டு வைத்தார்.
அப்போது நான் சென்னை தியாகராயா நகரில் பெரும் கூட்டத்துக்கு மத்தியில் நின்றுகொண்டிருந்தேன். உடனே நகர்பேசி ஹெட்செட்டை எடுத்து காதில் மாட்டிக்கொண்டு பாடலை ஒலிக்கவிட்டேன். கேட்கக் கேட்க கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. திரும்பத் திரும்ப நான்கைந்து தடவை கேட்டுவிட்டு அவருக்கு அழைத்து சொன்னேன். ”அவ்வளவு உயிரோட்டமா இருக்கு பாஸ். வேற என்ன சொல்றதுன்னு தெரியல.”
மறுநாளே இருவரும் நேரில் சந்தித்துப் பாடல் காட்சி குறித்து விவாதித்து, அடுத்தடுத்த நாட்களில் பொம்மலாட்டத்தையும், பரதத்தையும் பதிவுசெய்து, பெரும் போராட்டத்துக்குப் பிறகு பாடலை வெளியிட்டோம்.
கேட்ட ஒவ்வொருவரும் மகிழ்ந்து கொண்டாடினார்கள். பெண்கள் சிலர், ‘தாம் இதுவரை கேட்ட பெண்கள் பற்றினப் பாடல்களிலேயே இதுதான் உச்சம்’ என்றும், ‘ஆண்கள் பெண்களப் பத்தி இப்படியெல்லாம்கூட யோசிப்பீங்களா?’ என்றும், ‘பெண்களா பிறந்ததுக்கு பெருமப்படுறோம்’ என்றும் சொல்லக்கேட்டு நெகிழ்ந்துபோனேன்.
இப்பாடல்தான் என் தனிப்பாடல் மற்றும் திரைப்பாடல் வாழ்வில் முதல் பாடல். இதற்குக் கிடைத்த ஒவ்வொரு வாழ்த்தும், கண்ணீர்த் துளிகளும் என் எழுத்து வாழ்வில் பெரும் பொக்கிஷங்கள். அதற்காகவே இன்னும் பலநூறு பாடல்கள் பெண்கள் குறித்து எழுதலாம் என்று தோன்றும்!
[இன்னும்]
*