மலையாற்றுப்படை – 3 : நந்தி மலை

”மலை என்பது ஒருவகையில் காற்றைப் போன்றது. கைகளுக்குள் அடைக்க நினைத்தால் முடியாது. மாறாக, அதன்மீது ஏற நினைத்தால், உள்ளம் வரை தானாக வந்து நிரைந்துகொள்ளும்.’’
(மார்ச் 7, 2026)
***
மலையாற்றுப்படை – 3 : நந்தி மலை
நந்தி மலை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஏறியிருக்க வேண்டியது. அதுவும், நண்பர் சங்கர கணபதியோடு ஐந்து நாட்கள் ஹம்பியின் மாபெரும் கட்டடக் கனவுகளுக்குள் மூழ்கித் திளைத்துவிட்டு, அவ்வெண்ணத்தோடவே லெபாக்ஷி வந்து, பிறகு அங்கிருந்து கோலார் செல்லும் வழியில் சிக்கபள்ளாபூர் அருகில் பேருந்து மாறுவதற்காக நின்றிருந்தபோது எதேச்சையாகக் கண்ணில் பட்டது. அப்போதே ஒருவித ஈர்ப்பு உண்டாகி, அது என்ன மலையாக இருக்கும் எனத் தேடத் தூண்டியது. உடனே, நகர்பேசி எடுத்துத் தேடிப் பார்த்தேன். நான் ஒருபோதும் நினைத்திடாத நந்தி மலை. எங்களூர் அருகில் ஓடும் தென்பெண்ணை ஆற்றின் தோற்றுவாய் உள்ளது.
உடனே, ‘கோலார் செல்லும் திட்டத்தை மாற்றிக்கொண்டு மலையேறச் செல்லலாம்’ என்று மனம் சொன்னது. ‘வேண்டாம், மிகச் சீக்கிரத்தில் இந்த மலையை ஏறுவதற்காகவே தனியாகப் புறப்பட்டு வரலாம். அப்போதுதான் எவ்வித அவசரமும் இல்லாமல் நன்றாக ஏறிப் பார்க்க முடியும்’ என புத்தி சமாதானம் கூறி, பயணத்தைத் தொடர வைத்தது.
அதன்படி இந்த மலையாற்றுப்படையில் மூன்றாவது மலையாக, கர்நாடகத்தின் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் – சிக்கபள்ளாபூரிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள நந்தி மலை ஏற, ஓர் அழகான அதிகாலைப் பொழுதில் பெங்களூருவில் இருந்து நண்பர் ராமும் நானும் புறப்பட்டு, அறுபது கிலோமீட்டர் பயணித்து மிதமானக் குளிரோடு வந்தோம்.
தென்பெண்ணை மட்டுமின்றி, பாலாறு, ஆர்க்காவதி போன்ற இன்னும் பல ஆறுகள் இந்த மலையிலிருந்து உற்பத்தியாகும் தகவல் மேலும் ஈர்ப்பை உண்டாக்கி இருந்தன.
‘நந்தி துர்கா’ என்று அழைக்கப்படும் நந்தி மலை, 1478 மீட்டர் (4849 அடி) உயரம் என்றிருந்தது இணையத்தில். ஆனால், அவ்வளவு உயரம் இருக்காது என்று மனம் சொன்னாலும், ஏறிய பிறகே உறுதி செய்யலாம் என எண்ணிக்கொண்டேன்.
நந்தி மலை பெயர் வந்ததற்கானக் காரணம் குறித்து பல கதைகள் உள்ளன. அவற்றில் முதன்மையானதாக இரண்டினைச் சொல்லலாம். ஒன்று, யோக நந்தீசுவரர் இங்கே தவம் செய்தது. இரண்டாவது, துயில் கொள்ளும் நந்தி உருவில் மலை இருப்பது.
சோழர் காலத்தில் ‘ஆனந்தகிரி’ என அழைக்கப்பட்ட இம்மலையின் உச்சியில் அவர்கள் கட்டிய கோயில் இருக்கும் தகவலை நண்பரிடம் சொல்லிக்கொண்டு, மலை அடிவாரத்தில் இருந்த வரவேற்புத் தூணையும், அதன் ஒரு பக்கத்தில் அழகான நந்தி சிலை செதுக்கப்பட்டிருந்ததையும் பார்த்துக்கொண்டு, பறவைகளின் கீச்சுக் குரலையும், வண்டுகளின் ரீங்காரத்தையும் கேட்டபடி மிக மிக உற்சாகத்துடன் ஏற ஆரம்பித்தோம்.
எங்களைப் போல இன்னும் சிலர் காலையிலேயே புறப்பட்டு வந்திருந்தார்கள். அவற்றில் மிகுதியானவர்கள் கர்நாடகவாசிகள். ஏழெட்டு வெளிநாட்டினர். அவற்றில் சரிபாதி பெண்கள். யாரும் தனியாக இல்லாமல் குழுக்குழுவாக, தவறாமல் காலில் ஷூ அணிந்துகொண்டு வந்திருந்தார்கள்.
நந்தி மலையில் ஏறுவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று, வாகனங்களில் வந்து செல்வோருக்கான சாலை வழி. மற்றொன்று, நடந்து ஏறுவோருக்கான இந்த வழி.
அழகாகக் கற்கள் பாவிய படிக்கட்டுகளுடன், வழியில் ஆங்காங்கே உட்கார்ந்து ஓய்வெடுக்க ஏதுவாக சிறிய கல் மண்டபங்களும் [, அதில் தவறாமல் நந்தி சிலைகளும், சிற்பங்களும்] அமைக்கப்பட்டிருந்தன.
நந்தி மலையின் சில்லென்ற வளியும், அமைதியானச் சூழலும் அத்தனை இதமாக இருந்ததை சென்ற சில நிமிடங்களிலேயே உணர்ந்துகொண்டோம். அதுவும், ஞாயிறோன் விழித்து வரும் காலைப் பொழுதில், வட மேற்கே சன்னகேசவ பெட்டா, தென் மேற்கே பிரம்மகிரி, வடக்கே ஸ்கந்தகிரி எனச் சுற்றிலும் தெரிந்த மலைகளையும், அதனைப் போர்த்தியுள்ள வெண் மேகங்களையும் பார்த்து ரசித்துக்கொண்டு ஏறும் அனுபவம் புதுவிதமாக இருந்தன.
மலையின் தொடக்கத்திலேயே நாவல், மா, சூரை, வில்வம்… முதலிய நன்கு பரிச்சயமான தாவரங்கள் இருந்ததைப் பார்த்ததும் மிக நெருக்கமான மலையாக உணர ஆரம்பித்தோம். அதிலும், ஏறிய சிறிது தூரத்திலேயே மட்கிய இலைக் குப்பையிலிருந்து காளான்கள் கூட்டம் கூட்டமாக முளைத்திருப்பதைக் கண்டதும்,
‘ஆம்பி வால்முகை அன்ன கூம்பு முகிழ்
உறை அமை தீந்தயிர் கலக்கி’
என்ற மனத்துக்குப் பிடித்த சங்கப்பாடல் வரிகளும் (பெரு – 157), ‘குடைக்காளானுடைய வெள்ளை அரும்புகளை ஒத்த குவிந்த அரும்புகளையுடைய உறையினால் இறுகத் தோய்த்த இனிய தயிரைக் கடைந்து’ என்ற அதற்கானப் பொருளும் நினைவுக்கு வந்து மெல்லிதாகப் புன்னகைத்துவிட்டு, காளான் வகைகள் தொடங்கி, அவற்றுள் உண்ணத்தகுந்த நல்லக் காளான், பச்சரிசிக் காளான் போன்றவற்றை எவ்வாறு சிறுவயதில் உண்போம் என்பது வரைக்கும் மிக விரிவாக நண்பரிடம் பேசிக்கொண்டு, வழியில் எங்கேயும் உட்காராமல் மிதமான வேகத்தில் ஏறிப் போய், பாதி மலையில் இருந்த நாவல் மரத்தை ஒட்டின பெரிய பாறையில் உட்கார்ந்தோம்.
அதுவரைக் கேட்டிடாத புள் ஒன்றின் ஒலி விடாமல் புதர் ஒன்றிலிருந்து வருவதை சற்று நேரம் கேட்டிருந்துவிட்டு எழுந்து, சுற்றிலும் தெரிந்த மலைகளையும், வந்த வழிகளையும் [, அதில் ஊர்ந்து செல்லும் செந்நிற அரசுப் பேருந்தையும்], மலையடிவாரத்தில் இருந்த சுல்தான்பேட்டை கிராமத்தையும்; நந்தி கிராமத்தையும், அவையொட்டின நிலங்களையும் ஒற்றைப் பார்வையில் பார்த்துவிட்டு, மறுபடியும் ஏற ஆரம்பித்தோம்.
அடுத்த கொஞ்சம் தூரத்திலேயே புல் பூண்டு முளைத்து சிதிலம் அடைந்திருக்கும் கோட்டை சுவர் தெரியத் தொடங்கின. ஆர்வத்தோடு சென்று சிக்க பல்லாபுர பாலேயர்களால் கட்டப்பட்டதாகவும், பின்னர் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோரால் பலப்படுத்தப்பட்டதாகவும் நம்பப்படும் அக்கோட்டை சுவர்களுக்குள் அங்கிருந்த சிறிய வாயில் வழியாக நுழைந்தோம்.
இரண்டு வெளிநாட்டினர் நின்றுகொண்டு அச்சுவரை தொட்டும், தட்டியும் பார்த்து எதையோ தீவிரமாக பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களை நோக்கி மென்மையாக முறுவலித்துவிட்டுக் கடந்து, சற்று தொலைவு போனதும் வலது பக்கமாக பாறை ஒன்றில் அழகான விநாயகர் உருவம் செதுக்கியிருப்பதைக் கண்டுவிட்டு, அதன் அருகில் உள்ள பெரும் பாறையை ஒட்டி, அடியில் இருந்த குகையையும் சேர்த்து சிறு கோயிலாக அதுவும், அண்மையில் கட்டியிருப்பதை பார்த்தோம்.
கோயில் மூடியிருந்ததால் உள்ளே போக முடியவில்லை. அங்கிருந்த பெரியவரிடம், ”இன்னும் எவ்வளவு தூரம் ஏற வேண்டும்?’’ என்று தமிழில் கேட்டதற்கு, கன்னடம் கலந்த தமிழில், ”அவ்வளவுதான் வந்தாச்சு. இன்னும் ஒரு ஐம்பது அடி உயரம்தான் இருக்கும்’’ என்றார்.
அவரது பதில் ஒரே நேரத்தில் ‘அதற்குள் மலை ஏறிவிட்டோம்’ என்று சிறு மகிழ்வையும், ‘இவ்ளோதான் நந்தி மலையா?’ என்று பெருத்த ஏமாற்றத்தையும் தந்தது.
உடனே, நண்பரிடம் வருத்தத்தோடு, ”1478 அடியதான்… தவறா மீட்டருன்னு இணையத்துல போட்டிருப்பாங்க போல சகோ’’ என்று சொல்லிவிட்டு, வழியோரம் நீண்டு உயர்ந்திருந்த யூகலிப்டஸ் என்ற நீலகிரி தைல மரங்களையும், அதில் ஒன்று கீழே விழுந்து கிடப்பதையும், ஆங்காங்கே டிசம்பர் முதலான பூக்கள் மலர்ந்திருப்பதையும், நான்கைந்து இடங்களில் மணத்தக்காளி கொத்துக் கொத்தாய் காய்த்திருப்பதையும் பார்த்துக்கொண்டு, ஒரு செந்நிற கட்டடத்தின் பின்பக்க வழியாக நுழைந்து அதன் முன்னால் போய் நின்றோம். ‘திப்புவின் கோடைக்கால இல்லம்’ என்று எழுதியிருந்தது.
‘நம்மூர்களில் இருக்கக்கூடிய மிகச் சாதாரண மெத்தை வீடு அளவுக்கே உள்ள இதுதான் பெரும் மன்னரான திப்புவின் கோடைக்கால இல்லமா?’ என்று நினைத்துக்கொண்டு, அதன் முன்பாக ஆங்காங்கே போட்டிருந்த இறுக்கைகளில் ஒன்றில் போய் ஆசுவாசமாக உட்கார்ந்துகொண்டு, ஹைதர் அலியால் தொடங்கப்பட்டு, திப்பு சுல்தானால் கட்டி முடிக்கப்பட்டு, ‘தஷ்க்-இ-ஜன்னத்’ எனப் பெயரிடப்பட்ட (இதற்கு ‘சொர்க்கத்தின் பொறாமை’ என்று பொருள்) கோடைக்கால ஓய்விடத்தையும், அதைச் சுற்றியுள்ள ரம்மியமான இடத்தையும் பார்த்துக்கொண்டிருந்தோம்.
நண்பர் தன் பையிலிருந்து கை நிறைய நெல்லிக்காய் எடுத்துத் தந்தார் (சேலத்தில் அவர் தங்கியிருக்கும் இடத்திலுள்ள மரத்தில் இருந்து கொண்டு வந்தது). வாங்கி ஒன்றைக் கடித்தபடி எழுந்து போய் அந்தக் கட்டடத்தின் பக்கத்தில் நின்று தொட்டுப் பார்த்துவிட்டு, அங்கிருந்து கொஞ்சம் மேலே ஏறிப்போனால் இருக்கக்கூடிய அம்மலையின் மிக முக்கிய நீர் ஆதாரமான வற்றாத அமிர்த சரோவர் குளத்தை (அமிர்த ஏரி) பார்த்தோம். அடியில் கொஞ்சமே கொஞ்சமாக நீர் இருந்தது.
வழியோரம் இருந்த தாவரங்களுக்கு மத்தியில் சிறு தக்காளிப் பழங்கள் கொத்துக் கொத்தாய் இருப்பதைக் கண்டுவிட்டு, பசிக்கு இயற்கை கொடுத்த கொடையாய் எண்ணி மகிழ்ந்து பறித்துத் தின்றோம்.
பிறகு அங்கிருந்த சிறிய வழி ஒன்றுக்குள் நுழைந்து மலையின் விளிம்பை ஒட்டியுள்ள கோட்டைச் சுவர்களையும், அதன் அருகே ஆங்காங்கே பயணிகள் தங்க ஏதுவாகக் கட்டி வைத்திருக்கும் தங்கும் இடங்களையும், விதவிதமான தாவரங்களையும், குரங்கு முதலான உயிர்களையும் பார்த்துக்கொண்டு, நடுநடுவே நின்று சுற்றிலும் தெரிந்த ஊர்களையும், நிலங்களையும், மலைகளையும் கண்டு ரசித்துவிட்டுப் போனோம்.
திடீரென்று ஓரிடத்தில் நான்கைந்து பேர் நின்று அங்குள்ள பள்ளத்துக்குள் எதையோ எட்டிப் பார்ப்பதைக் கண்டுவிட்டு ஆர்வத்தோடு சென்று பார்த்தோம். பாலாறு தொடங்கும் இடம் அதாவது, ‘பாலாற்றின் தோற்றம்’ என்று எழுதியிருந்தார்கள்.
மிகுந்த உற்சாகத்துடன் அங்கிருந்த படிக்கட்டில் இறங்கி உள்ளே போனேன். சிறிய கிணறு போன்று நீர் இல்லாமல் பாழடைந்து புதர் மண்டிக் கிடந்தது. மத்தியில் ஒரு கல் தூணும், அதன் உச்சியில் ஒரு நந்தியும் மட்டுமே இருக்க, மேற்குப் பக்கமாக சிறு குகை போன்று கோயில் இருப்பதைக் கண்டுவிட்டு அருகில் சென்று பார்த்தேன். உள்ளே ஒற்றை லிங்கம் இருந்தது.
எதுவும் புரியாமல் வெறுமே வணங்கிவிட்டு மேலே ஏறி வந்து நின்று, மலையின் கீழ்ப் பக்கமாக சிறு ஓடையாவது செல்வது தெரிகிறதா என்று பார்த்தேன். இல்லை.
உடனே, நண்பரிடம் ஏமாற்றக் குரலில் சொன்னேன். ”இதைப் பார்த்தா… பாலாற்றின் தோற்றம் மாதிரி தெரியலையே, சகோ’’. அவரும், ”ஆமாம்’’ என்றார்.
பிறகு ஒன்றும் பேசாமல் எதிரில் வந்த கல்லூரி மாணவிகளின் கூட்டத்தைக் கடந்து, இன்னும் கொஞ்சம் தூரம் போனோம். அங்கே பெரும் பாறையை ஒட்டிய கல் மண்டபத்துக்குள் அழகான நந்தி சிலை ஒன்று இருப்பது தெரிந்தது.
தூரத்தில் இருந்து பார்த்ததுமே அது சோழர் கால நந்தி சிலை என்று அடையாளம் கண்டுகொண்டு அதன் அருகில் போனோம். சுமார் பத்து அடி நீளமும், ஆறடி உயரமும் கொண்ட அந்நந்தி சிலையை, மலையின் கிழக்குப் பக்கமாக சோழர்கள் பதினோராம் நூற்றாண்டில் நிறுவியிருக்கிறார்கள்.
மானசீகமாக அதன் முன்னால் நின்று வணங்கிவிட்டு, மிக நுண்ணிப்பாக அவற்றின் ஒவ்வொரு செதுக்கல்களையும் கண்டு ரசித்துக்கொண்டு ஒரு சுற்று சுற்றி வந்தோம்.
பிறகு, நந்திக்கு முன்பாக சற்று தள்ளி மலை விளிம்பில் இருந்த நெல்லி மரத்தருகில் நான் மட்டும் தனியாகப் போய் நின்றுகொண்டு, ‘இதுதான் தல விருட்சமாக இருக்க வேண்டும்’ என்று நினைத்தபடி ஒருதடவை தொட்டு வருடிவிட்டு, கீழே தெரிந்த வரண்ட நிலப் பரப்பையும், அதில் எங்காவது ஆற்றின் தடம் தெரிகிறதா என்றும் தேடிப் பார்த்தேன்.
அங்கிருந்த பூசாரி வந்து, ‘’தம்பி’’ என்று விளித்து விபூதியும் வெண் அரலிப் பூவும் கொடுத்துவிட்டு, தனக்குத் தெரிந்த உடைந்த தமிழில் கேட்காமலேயே சொன்னார். ”இது நெல்லிக்காய் பசவண்ணா கோயில். பக்தர்கள் விருப்பத்த இங்கே சொன்னா, அது நிச்சயமா நிறைவேறும்.’’
‘அப்படியா?’ என்பது போல தலையாட்டி, ”நன்றி” கூறிவிட்டு, அருகில் இருந்த பெரும் பாறையையும், அதன் ஓரிடத்தில் இருந்த பிரம்மாஷ்ரம் குகையையும் பார்த்துக்கொண்டு சென்று, அதன் உள்ளே போய் சில நிமிடங்கள் உட்கார்ந்திருந்தோம்.
துளி வெளியுலகச் சத்தமும் இல்லாமல், முழுக்க முழுக்க மலையின் நன்குரலை மட்டுமே கேட்டுக்கொண்டு, அது தந்த இன்குளுமையில் மூழ்கியவர்களாய் அம்மொத்தக் குகையையும், அதில் ஆங்காங்கே வரைந்திருந்த; கிறுக்கியிருந்த கோடுகளையும், பன்மொழி எழுத்துகளையும் பார்த்துவிட்டு, காளி தேவியின் பக்தரான ராமகிருஷ்ண பரமஹம்ச முனிவர் எப்படி அங்கே தியானம் செய்திருப்பார் என மனத்திரையில் ஓட்டிப் பார்த்துவிட்டு, ஒரு வார்த்தைகூட பேசாமல் வெளியில் வந்தோம்.
ஒரு காலத்தில் மிகத் தொன்மையான; ஏகாந்தமான; உயிர்ப்பு மிக்க இடமாக இருந்து, பின் பேராசை மிக்க மனிதர்களின் பிடியில் சிக்கி கொஞ்சம் கொஞ்சமாக சுற்றுலாத் தலமாக மாற்றத் தொடங்கி, இப்போது முழுதாக அவற்றின் தன்மை இழந்து அழிவின் விளிம்பில் இருக்கும் மலையை மிக வருத்தத்தோடு பார்த்துக்கொண்டு, வழியில் வலப்புறமாக இருந்த சிறிய கோயிலையும், அதையொட்டின பேரால மரத்தையும், இடப்புறமாக இருந்த உணவகங்களையும், அதனையொட்டி குவிந்திருந்த கூட்டங்களையும் கண்டு காணாமல் சென்று, அம்மலைக்கு அணியாகத் திகழும் பழைமையான சோழர்கால யோக நந்தீசுவரர் கோயிலுக்குப் போனோம்.
மலையின் உச்சியில் இருந்த கோயிலின் வாயில்களை இரண்டு துவார பாலகர்கள் காக்கின்றனர். உட்புறங்களில் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் மிக அழகாகவும், நேர்த்தியாகவும் இருப்பதைப் பார்த்துக்கொண்டு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோயில் சுவரில் இருந்த நடராசரின் கால் மாற்றி ஆடிய வடிவத்தின் முன்பாகப் போய் சிறிது நேரம் நின்றேன். உடனே, மதுரை சொக்கேசர் கோயில் வெள்ளியம்பல ஆடல்வல்லான் உருவம் கண் முன்னால் வந்து போனது.
கோயிலின் கருவறை வாயிலில் அலங்கார பித்தளைக் கதவுகளும், விஜயநகர ஆட்சியாளர்களால் பரிசாக வழங்கப்பட்ட அழகான துவார பாலகர்களும் இருப்பதை பார்த்துவிட்டு, உள்ளே சென்று யோக நந்தீசுவரரையும், அவர்தம் இணையாளையும் வணங்கிவிட்டு, முன்னால் இருந்த ஓரிடத்தில் போய் சுவர் ஓரமாக உட்கார்ந்துகொண்டு கண்கள் மூடி, மலை அடிவாரத்தில் உள்ள நந்தி கிராமத்தில் இதே போன்று (ஆனால், இன்னும் பிரம்மாண்டமாக) அமைந்துள்ள போகநந்தீசுவரர் கோயிலை உளத்திரையில் ஓட்டிப் பார்த்தேன்.
மிகத் தொன்மையான அந்தக் கோயிலின் முகப்பில் உள்ள பிரம்மாண்டமும், நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளும் காண்போரை வியக்க வைப்பவை. தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்,
முதன்முதலாக நொளம்ப வம்சத்தினர் அதாவது, நொளம்பத்தின் ஆட்சியாளரான நொளம்பதிராஜன் மற்றும் ராஷ்டிரகூடப் பேரரசரான மூன்றாம் கோவிந்தனால் நிறுவப்பட்டதாகவும், பிறகு தென்னிந்தியாவை ஆண்ட கங்க, சோழ, ஹொய்சால மற்றும் விஜயநகர வம்சங்கள் தொடங்கி… அண்மைய ஆங்கிலேயர்கள் வரை இப்பகுதியைக் கைப்பற்றி ஆண்டதாகவும்; தங்கள் சார்பாக அவர்கள் கோயிலுக்குப் பணி செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
மிகுந்த கலைத்திறன் மிக்க அக்கோயில் வளாகத்தில் (இங்குள்ள ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட குடையை ஒரு கலை சாதனை என்றே சொல்லலாம்) ஒரே நேர்கோட்டில் தனித்தனி நந்தி மண்டபங்களுடன் இரண்டு கருவறைகள் உள்ளன. வடக்கே இருப்பது போகநந்தீஸ்வரருக்கும், தெற்கே இருப்பது அருணாச்சலேஸ்வரருக்கும் கட்டப்பட்டது. மேலும், நந்தி மண்டபங்களில் சிறிய கர்ப்ப கிரகமும் உள்ளது.
அருகில் அமர்ந்திருந்த நண்பர் தோளைத் தொட்டுக் கூப்பிட்டு, ”போலாமா, சகோ?’’ என்றார். மெல்லத் தலையாட்டிவிட்டு எழுந்து, இன்னொரு தடவை யோகநந்தீசுவரை வணங்கிவிட்டு, கோயிலை ஒரு சுற்று சுற்றிக்கொண்டு வெளியில் வந்தோம்.
வெய்யில் நன்றாக ஏறியிருந்தது. ஆனாலும், வீசும் குளிர் காற்றில் கொஞ்சம் கூட தெரியவில்லை. அங்கிருந்து மேற்குப் பக்கமாக நடந்து கைதிகளை பாறையிலிருந்து தள்ளிவிட்டு கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் ‘திப்புவின் டிராப்’ தொடங்கி, மைசூர் ஆணையரான சர் மார்க் கப்பனின் கோடைகால ஓய்விடமாக இருந்து, தற்போது இந்தியத் தோட்டக்கலைத் துறையின் விருந்தினர் இல்லமாக உள்ள ’நேரு நிலையம்’ வரைக்கும் மலையின் பல இடங்களை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக எவ்வித அவசரமும் இல்லாமல் சுற்றிப் பார்த்துவிட்டு, இறுதியாக கோயில் அருகில் இருந்த உணவகத்துக்கு போனோம்.
மென் குளிருக்கு இதமாக ஆளுக்கொரு சூடானத் தேநீர் மட்டும் வாங்கிக்கொண்டு, ஓரிடத்தில் போய் அமர்ந்து முதல் மிடரு பருகினேன். அதன் சுவையில் நந்தி மலையின் தொன்மையும் கலந்திருப்பதாக உணர்ந்து மகிழ்ச்சியில் புன்னகைத்துவிட்டு நண்பரிடம் கேட்டேன். ”அடுத்ததா… சேலம் பக்கத்துல இருக்க சங்ககிரி மலை ஏறலாமா, சகோ?’’
துளியும் யோசிக்காமல் ‘சரி’ என்று தலையசைத்தார், நந்திமலையின் முதல் மிடரு தேநீரைப் பாருகியபடி.
***
அப்பா,
மலை ஏன் ஒரே இடத்தில் இருக்கிறது?
மழலைக்குரலில் கேட்கிறான்
மலை பற்றிய அடுக்கடுக்கானக் கேள்விகளை
ஏனென்றால்,
விரும்பிய இடத்திலேயே இருக்க நினைப்பதால்.
வியப்புக்குரலில் சொல்கிறார்
மலை பற்றிய மடிப்புமடிப்பானப் பதில்களை.
மலை எப்போது பிறந்தது?
முன்பொரு காலத்தில்
கடவுள் பிறந்த அதே நாளில்தான்.
மலைக்குப் பசிக்காதா?
காலத்தை உண்பதால் ஒருபோதும் பசிப்பதில்லை.
மலைக்கு யார் அம்மா?
கடலைப் படைத்த இயற்கைதான் மலைக்கும் அம்மா.
மலை ஏன் உறங்குவதேயில்லை?
மகனே,
அது வானைத் தீண்டவேண்டுமென்று
விடாமல் முயன்றுகொண்டிருப்பதால்.
*