அரம்பு போற்றுதும் – 034 : அப்பா உட்காரு

ஜூன் 10, 2026

*

கடுமையான மழை வருவது போல வானம் இருட்டிக்கொண்டு இருந்ததால், நானும் ஐயும் கிளம்பி அருகில் உள்ள பூங்காவுக்குப் போகலாமா வேண்டாமா என்று தயக்கத்தோடு நின்றிருந்தோம்.

அவ்வப்போது அவனிடம் எதையாவது கேட்பதுண்டு. அவ்வாறு இன்று கேட்டேன். ”ஐ பாப்பா… மழை வருமா, வராதா?’’

பெரியவர்கள் போல அண்ணாந்து வானத்தைப் பார்த்தவன், ”வராது’’ என்றான்.

அதனை சோதிப்பது போல நானும் ஒருதடவை வானைப் பார்த்துவிட்டு, ”என்னது, மழை வராதா?’’ என்று கேட்டேன்.

”ஆமாம்ப்பா’’ என்றான் இன்னும் உறுதியாக.

”சரிடா பப்பு, இருந்தாலும் இன்னும் கொஞ்சம் நேரம் இருந்து பாத்துட்டு… அப்பறமா போவோம்’’ என்றுவிட்டு ஒரு பத்து நிமிடம் காத்திருந்தோம்.

அதற்குள் காற்று பலமாக அடித்து மேகம் மொத்தமும் களைந்து வானம் தெளிவானதால், ‘இனி கண்டிப்பா மழை வராது’ என்று உறுதி செய்துகொண்டு, ”வாடா அப்பு… நீ சொன்ன மாதிரி மழை வரல. நாம இப்போ போவோம்’’ என்று கூறி கூட்டிக்கொண்டு பூங்காவுக்குப் போனேன்.

சென்றதும் முதலில் ஓடிப்போய் வழக்கம் போல ஊஞ்சலில் உட்கார்ந்து வெகுநேரம் ஆடியவன், சறுக்கு வரை ஒவ்வொன்றாக விளையாடிவிட்டு, மறுபடியும் ஊஞ்சல் வேண்டும் என்று கேட்டான்.

மறுக்காமல் அழைத்துப் போனேன்.

இம்முறை தனக்கு பதிலாக அதில் என்னை உட்காரச் சொன்னதும், ‘இதென்னடா வம்பாப் போச்சி’ என்று நினைத்துக்கொண்டு, ”வேண்டாம்டா, பப்பு… யாராவது பாத்தா திட்டுவாங்க” என்றேன்.

கேட்கவில்லை.

”சரி” என்று யாராவது கவனிக்கிறார்களா என ஒரு தடவை சுற்றிலும் பார்த்துவிட்டு, சிறிது நேரம் உட்கார்ந்தேன்.

அடுத்து சீசா வேண்டும் என்றான். கூட்டிப்போனேன். அதிலும் என்னையே உட்காரச் சொன்னான். மறுபடியும் வேண்டாம் என்றேன். அடம் பிடிப்பது போல செய்ததால், வேறு வழியின்றி உட்காருவது போல நானும் பாவனை செய்தேன்.

கூடவே, ‘அவனது இந்நாளைய பெரும்திட்டம் இதுதான்’ என்று தெரிந்துவிட்டதால், அப்போதிருந்தே அதிலிருந்து தப்பிக்கும் வழியையும் இன்னொரு பக்கம் தீவிரமாகத் தேட ஆரம்பித்தேன்.

அதற்கடுத்து கம்பியில் ஏறச் சொன்னவன், அடுத்ததாக சுற்றிவரும் சிறிய வாத்து பொம்மை மேல் ஏறி உட்காரச் சொன்னான்.

உடனே, மனத்தில் உதித்த வழியை அவன் நம்புவது போல பிரயோகிக்கத் தொடங்கினேன். ”ஐ, பப்பா… இது சின்ன வாத்து பாப்பால்ல. அதனால இவ்ளோ பெருசா இருக்க அப்பாவால… இதுமேல ஏறி உக்கார முடியாது. அதுக்காக அப்பா ஒண்ணு செய்யட்டுமா?’’

சொல்லிவிட்டு, அவன் அடுத்து நான் என்ன செய்யப்போகிறேன் என ஆர்வத்தோடு காத்திருப்பதை பார்த்துவிட்டு, கீழே இருந்த உள்ளங்கை அளவிலான சிறு கல் ஒன்றை எடுத்துக் காட்டி, ”இதோ, இந்தக் கல்லுதான் இப்போ அப்பா. இந்த அப்பா… ஐ பாப்பா சொன்ன மாதிரி… இப்ப வாத்து பாப்பா மேல ஏறி சூப்பரா; சமத்தா; சக்கரயாட்டம் உக்காரப் போறன், பாரு’’ என்றேன்.

மிகுந்த மகிழ்வோடு பார்த்தவன், கல்லை மேலே வைத்ததும் நானே ஏறி உட்கார்ந்தது போல பல் தெரியச் சிரித்துவிட்டு, மெதுவாக சுற்றத் தொடங்கினான்.

அதைக் கண்டு அவனை விட அதிகம் மகிழ்ந்தவனாய் அதாவது, உள்ளத்துள் ஓராயிரம் அடி உயரத்தில் துள்ளிக் குதிக்கத் தொடங்கினேன் நான்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=