ஐயா (எ) 95 வயது குழந்தை! – 6

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 1

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 2

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 3

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 4

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 5

தென்பெண்ணை ஆற்றங்கரையின் தென் புறத்தில் உள்ள எங்கள் கிராமமானது முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள கிராமம் எனலாம். நஞ்சை, புஞ்சை என இருபோகமும் நன்றாக விளையக்கூடிய மண்ணாக இருந்தாலும், சில ஆண்டுகள் மழையின் ஓர வஞ்சனையால் ஒதுக்கப்படவும் கூடும்.

இப்படிப்பட்ட கிராமத்தில் தான் எங்கள் வீடு, அதுவும் மஞ்சம் புல்லால் ஆன அழகிய கூரை வீடு இருந்தது. நான் நான்காவது அல்லது ஐந்தாவது படித்துக்கொண்டிருந்தேன் என நினைக்கிறேன். அப்போதெல்லாம் ஊரிலேயே மொத்தம் பத்து பேரின் வீட்டில்தான் டி.வி இருக்கும். அதிலும் ஒரே ஒரு சேனல் தான் (பொதிகை அல்லது சன் டி.வி) வரும்.

ஊரிலுள்ள பலரும் டி.வி பார்க்க அவர்களின் வீட்டுக்குத்தான் செல்வார்கள். அங்கே உட்கார கூட இடம் இருக்காத அளவுக்கு கூட்டமாக உட்கார்ந்து டி.வி பார்ப்போம். சிலர் வீட்டில் டி.வி பார்க்க வருபவர்களிடம் ஐம்பது பைசா அல்லது ஒரு ரூபாயென டிக்கெட் வசூலிப்பார்கள். சிலர் வீட்டிலோ வேர்க்கடலை உரித்துக்கொண்டே படம் பார்க்க வைப்பார்கள்.

இப்படியான நேரத்தில் ஒருநாள் மாலை நான் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு எங்கள் தெருவில் உள்ள ஒருவரின் வீட்டுக்கு (அவர் எங்கள் சொந்தக்காரர்) டி.வி பார்க்கப் போயிருந்தேன். நன்றாக நினைவுள்ளது. ரஜினியும் பிரபுவும் நடித்த குரு சிஷ்யன் படம்தான் அன்றைக்கு ஓடிக்கொண்டிருந்தது. பார்த்துக்கொண்டே எப்போது தூங்கினேன் எனத் தெரியாமல் தூங்கிவிட்டேன். இரவு எட்டு மணி ஆனவுடன் உடன் வந்த நண்பர்களை எல்லாம் போகச் சொல்லிவிட்டு (விரட்டிவிட்டு) டிவியை அணைத்துவிட்டார்கள். உறங்கிய என்னை எழுப்பிப் பார்த்தவர்கள் ஒரு கட்டத்தில் கடுப்பாகி கைகளை ஒருவர் கால்களை ஒருவரென கணவன், மனைவி இருவரும் பிடித்து தூக்கிவந்து தெருவில் போட… என்னைத் தேடிக்கொண்டு வந்த ஐயா அதைப் பார்த்துவிட்டார்.

பதறி ஓடி வந்து அவர்களிடம் எதுவும் சொல்லாது என்னைத் தூக்கி தன் தோள்மீது போட்டுக்கொண்டு வீட்டுக்குப் போய் படுக்கவைத்தவர், அடுத்த நாளே தான் வளர்த்துவந்த இரண்டு ஆடுகளை விற்றுவந்து பெரிய அண்ணனிடம் பணத்தைக் கொடுத்து டி.வி வாங்கிவரச் சொல்லிவிட்டார். அண்ணனும், அவர் நண்பரும் அன்றே போய் டி.வி வாங்கிவந்தார்கள்.

”இனி எம்பசங்க யாரு வீட்டுலயும் போயி அசிங்கப்படக்கூடாது; அதான் புள்ளயா நெனச்சி வளத்த ஆட்ட வித்து டி.வி வாங்கிட்டு வந்துட்டன்” என கண் கலங்கியவாறு ஐயா, அவரது நெருங்கிய நண்பரிடம் சொன்னதை நான் மறைந்திருந்து கேட்டுவிட்டேன்.

டி.வி வந்த மகிழ்ச்சியில் குதித்துக்கொண்டிருந்தவன் அமைதியாகச் சென்று ஐயாவிடம், ”ஏதுய்யா டி.வி வாங்க அவ்ளோ காசு?” என்றேன். ”எதுக்குயாக் கேக்குற…? போய் ஒன் கூட்டாளிங்களக் கூட்டிட்டு வந்து டி.வி பாரு போ” என சொல்லி அனுப்பிவிட்டார்.

அன்று தொடங்கி எங்கள் வீட்டில் டி.வி பார்க்க குறைந்தது ஒருவராவது வந்திருப்பார்கள். இரவு நேரத்தில் படம் போடும்போது தெருவில் ஸ்டூல் போட்டு அதில் டி.வியை வைத்துவிடுவார் அண்ணன். நாங்கள் மட்டுமல்லாது இருபதுக்கும் அதிகமானோர் டி.வி முன்னால் உட்கார்ந்து படம் பார்ப்போம். அதிலும் கிரிக்கெட் மேட்ச் என்றால் பகல் நேரத்தில் எங்கள் வீட்டின் பக்கத்தில் உள்ள ஆட்டுக் கொட்டகை அல்லது மரத்தடியில் கூட்டமாக உட்கார்ந்து கைதட்டி விசிலடித்துக் கிரிக்கெட் பார்த்தது இன்னும் நன்றாக நினைவில் உள்ளது.

பெரியவர்கள் பெரும்பாலும் பேசிக்கொண்டிருக்கையில் நடுநடுவில் அதுவொருகாலம் என்பார்கள். ஆம்! இதையெல்லாம் நினைக்கையில் எனக்கும் அப்படித்தான் சொல்லத்தோன்றுகிறது.

ஒருதடவை ஐயாவைக் கூட்டிக்கொண்டு பள்ளிக்கூடம் சென்றிருந்தேன். ஐந்தாவது வரைக்கும் மட்டுமேயுள்ள எங்கள் ஊர் பள்ளியில் இருந்து டி.சி வாங்கிக்கொண்டு ஆறாவது சேர பக்கத்து ஊருக்குச் செல்லவேண்டும். வீட்டிலிருந்து நன்றாக என்னிடம் பேசிக்கொண்டு வந்தவர் பள்ளிக்குள் நுழைந்ததும் தலைமையாசிரியரிடம் சென்று, ”இவன் என்னப் படிச்சிக் கீக்கிறான்னு அஞ்சாவது பாஸ் போட்ருக்கீங்க. சுத்த தெண்டம், ஒண்ணும் படிக்கிறதில்ல… இவன் இங்கயே இன்னொரு வருசம் படிக்கிட்டும்” என்று கோபமாகச் சொல்லி சென்றுவிட்டார். எனக்கு என்ன செய்வதெனத் தெரியாது அழத் தொடங்கிவிட்டேன்.

என் அழுகையை சமாதானம் செய்யமுடியாத தலைமையாசிரியர், என்னை அருகில் உள்ள கடைக்குக் கூட்டிப்போய் மிட்டாய் வாங்கித்தர… அதை வாங்காது இன்னும் வேகமாக அழ, அவ்வழியாகச் சென்ற என் அண்ணன் பார்த்துவிட்டார். ஓடிவந்து நடந்ததைக் கேட்டறிந்துவிட்டு, வீட்டுக்குக் கூட்டிப்போய் ஐயாவின் முன்னால் நிறுத்தினார்.

ஐயா… கொஞ்சம் கூட தன் முடிவில் மாறவில்லை.

பிறகென்ன… அடுத்த நாள் மீண்டும் ஐந்தாவது வகுப்பில் போய் உட்கார்ந்தேன்; படித்தேன். இன்னும் நன்றாக; ஆம்! ஐயாவின் அந்த முடிவு என் வாழ்வையே நல்வழியில் மாற்றியதென்றுதான் சொல்வேன்.

தொடக்கத்தில் உடன் படிக்கும் மாணவர்கள் ”ஏ, அஞ்சாவது பெயிலானவனே” எனக் கேலி செய்தாலும், அதனால் ஐயாவின் மீது கோபமாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் எல்லாம் சரியாக ஐயாவுடன் மீண்டும் சகஜமாக ஒட்டிக்கொண்டேன்.

ஐயா எந்தளவுக்கு அன்பானவரோ அதே அளவுக்குக் கண்டிப்பானவர். ஆம்! ஒரு தடவை ஐயாவுடன் அவர் நண்பர் நிலத்துக்குப் போயிருந்தேன். அங்கே தளவு போட்டுக்கொண்டிருந்தார்கள்.

தளவு என்றால், இந்த வருசம் விளைச்சல் நன்றாக இருக்கவேண்டும், மழை பொழியவேண்டும், மண் செழிக்கவேண்டும் என வேண்டிக்கொண்டு கடவுளுக்கு பெரியளவில் பொங்கல் வைத்து ஊர் மக்களை வரிசையாக உட்கார வைத்து சாப்பாடு போடுவதாகும்.

ஐயாவுடன் சென்றிருந்த நான் அங்கே என் நண்பர்கள் இருப்பதைப் பார்த்து இன்னும் மகிழ்ச்சியானேன். சரியான சந்தர்ப்பம் பார்த்து ஐயா அவர் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில், என் நண்பர்களுடன் சேர்ந்து அருகில் உள்ள மலையில் ஏற சென்றுவிட்டேன்.

உச்சிமலையில் ஏறி சுற்றிப்பார்த்துவிட்டு, அங்கே கிடைக்கும் காரப்பழம், சூரப்பழம், ஞானாப்பழம் (ஞானப்பழம் இல்லை… கருவேப்பிலை செடி / மரம் போல் இருக்கும். அதில் வெள்ளையாக பழம் இருக்கும்) எல்லாம் பறித்து சாப்பிட்டுவிட்டு இறங்கிவருகையில் ஐயா பெரும் கோபத்தோடு அங்கே நின்றிருந்தார். அவரைப் பார்த்ததும் எதுவும் நடக்காததுபோல் அருகில் செல்ல… அவர் பக்கத்தில் இருந்த துரிஞ்சி மரத்தின் சிமிர் (சின்னக் குச்சி) உடைத்து ”மலமேலயா ஏர்ற? இனி ஏறுவ… ஏறுவ… சொல்லு ஏறுவ…” என அடிஅடியென்று அடிக்க தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தேன்.

அதற்குள் என்னுடன் மலைமேல் ஏறிய நண்பர்கள் எல்லாம் திசைக்கொருவராக கண்ணில் படாத தூரத்துக்கு ஓடிவிட்டார்கள்.

வீட்டுக்கு வரும்வரை ஐயாவுடன் பேசவில்லை. வீட்டுக்கு வந்ததும் அடித்த இடத்தில் மெதுவாகத் தொட்டு, ”ரொம்ப வலிச்சிடிச்சா…? இனி மலமேலப் போவணும்னா நான் கூட்டிட்டுப்போறன் சரியா…? நீங்க எல்லாரும் சின்னப்பசங்க… மலமேலப் போய் ஒண்ணுக்கெடக்க ஒண்ணு ஆச்சுனா என்ன பண்றது? அதான் கோவத்துல அடிச்சிட்டன். இனி அடிக்கமாட்டன் சரியா…” என காலையில் எனக்காக எடுத்துவந்த எலந்தப்பழத்தைக் கொடுத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

அதுதொடங்கி… பள்ளி விடுமுறை தினங்களில் விறகுவெட்ட, ஏர் ஓட்ட, மலையேற என அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் என்னையும் உடன் அழைத்துச் செல்வார்.

அவர் என்னை மகனாக நினைத்துதான் அழைத்துச் சென்றிருப்பார். ஆனால், நான் அவரை வெறும் தந்தையாக மட்டும் நினைக்கவில்லை. நல்ல நண்பராக, ஆசானாக அப்போதே நினைக்கத் தொடங்கிவிட்டேன்.

பெற்றோர் பிள்ளைகளுக்கு நல்ல பெற்றோராகவே இருக்கமுடியாத இக்காலத்தில்… சக நண்பராகவும், எதையும் கற்றுத்தரும் ஆசானாகவும் இருக்கச்சொல்லி நினைத்தல் அல்லது எதிர்பார்த்தல் ‘பேராசை’ என்றே படுகிறது.

வசதிகளும் வாய்ப்புகளும் நம் வேலையையும் வாழ்வையும் என்னதான் புதுப்பித்து எளிதாக்கி ஆடம்பரமாக்கினாலும் இவரைப்போன்ற எளிய மனிதர்களிடம் இருக்கும் வெள்ளந்தி மனத்தையும், அளவுகடந்த அன்பையும் பாசாங்கற்ற அர்த்தமுள்ள வாழ்வையும் அவை ஒருபோதும் தருவதேயில்லை.

ஒருவரின் வாழ்க்கை வசதி வாய்ப்புகளால் மட்டும் அழகானதாக, மகிழ்வானதாக, அர்த்தமுள்ளதாக மாறிவிடுவதில்லை. இதை உணரும் நொடியில்தான் ஒருவரின் வாழ்க்கை அழகை நோக்கி, மகிழ்வை நோக்கி, அர்த்தத்தை நோக்கி நகரும் என்பது என் எண்ணம்.

ஆமாம்தானே?!

[இன்னும்]

*

ஐயா (எ) 95 வயது குழந்தை!

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=