ஐயா (எ) 95 வயது குழந்தை! – 4

ஐயாவிடம் இரு தினங்களுக்கு முன் நகர்பேசியில் பேசியபோது, ”எப்டிய்யா இருக்க?” என்றேன்.
”எனக்கென்னயா நல்லாருக்கன். சோறுதான் செல்லமாட்டுது. கை, கால் மூட்டுலாம் வரவர ரொம்ப வலிக்குது…” என்றார்.
”வயசாக ஆக அப்படித்தான்யா இருக்கும். சோறு செல்லலன்னா இட்லி, தோசன்னு சாப்டுய்யா. முடிஞ்சவரைக்கும் சாப்படாம மட்டும் இருக்காத” என்றேன்.
சாப்பாடு விஷயத்தில் ஐயாவிடம் இருந்து எத்தனையோப் பாடங்கள் இதுவரைக்கும் கற்றிருக்கிறேன். அதில் முதன்மையான ஒன்றெனில், ”எக்காரணம் கொண்டும் சாப்பாட்ட வீணடிக்காம சாப்படணும்” என்பது.
நான் சிறு வயதாக இருக்கும்போது வீட்டில் கிண்ணி (ஒருவகைப் பாத்திரம்) ஒன்றிருந்தது. அதில்தான் பெரும்பாலும் ஐயா சாப்பிடுவார். அவரின் விருப்பச் சாப்பாடு எதுவெனக் கேட்டால் பழைய சோறு எனச் சொல்லும் கஞ்சி சோறு என்பார்.
தினமும் இரவில் மீதமாகும் சோற்றில் தண்ணீர் ஊற்றிவைத்து காலையில் எழுந்ததும் அதில் உப்பிட்டுக் குடித்துவிட்டுதான் ஐயா வேலைக்குச் செல்வார்.
அவரைப் பார்த்து நானும் சிறுவயது முதலே பழைய சோறுப் ப்ரியன் ஆகிவிட்டேன். அதிலும் பழைய சோற்றுக்கு கடித்துக் கொள்ள என்னதான் மோர் மிளகாய், வெங்காயம், ஊறுகாய் என வகைவகையாய் இருந்தாலும் ஆதண்டங்காய் கடித்துக்கொண்டு சாப்பிடும்போது அவ்வளவு சுவையாக இருக்கும்.
ஆதண்டங்காய் பற்றி இங்கே பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது எங்கள் கிராமத்தில் வருடந்தோறும் ஆனி, ஆடி மாதங்களில் காய்க்கும் ஒருவகைக் காய்.
பெரும்பாலும் இது மலை காடுகளில் கள்ளி மரத்தின் மீதோ அல்லது சூரக்கொடியின் மீதோ கொடியாகப் படர்ந்திருக்கும். அதில் எலுமிச்சை அளவு முதல் கிரிக்கெட் பந்து அளவுக்கு அடர் பச்சையாகக் காய்க்கும் காய்தான் ஆதண்டங்காய். அதை ஒவ்வொரு வருடமும் ஐயா தவறாதுப் பறித்து வந்து துண்டுத் துண்டாக வெட்டி உப்பில் ஊறப்போட்டுக் காயவைத்து பின் எண்ணெயில் வறுத்து சாப்பிடத் தருவார்.
அப்படி ஒருதடவைச் சாப்பிடும்போது ஐயா என்னிடம், ”இந்த ஆதண்டங்கா இருக்கே ஆதண்டங்கா… இதுல எவ்ளோ சத்திருக்குத் தெரியுமா? இத சாப்பிட்டா எந்த நோய்நொடியும் நம்மக்கிட்ட வர்றப் பயப்படும். இதோட அருமத் தெரிஞ்சவங்க இதுக் கெடச்சா எவ்ளோக் காசுன்னாலும் கொடுத்து வாங்கிட்டுப் போவாங்க” என்றார்.
அதுமுதல் நானும் வருடந்தோறும் ஐயாவுடன் ஆதண்டங்காய்ப் பறிக்கப் போவேன். அது எங்கெல்லாம் இருக்கும், எப்படியெல்லாம் இருக்குமென ஐயா எனக்கும் அண்ணனுக்கும் ஒருதடவை சொல்லித்தந்தார். அது தொடங்கி ஒவ்வொரு வருடமும் தனியாக அல்லது நண்பர்களோடு சேர்ந்து தவறாது ஆதண்டங்காய் பறிக்கப்போவேன். அப்படி பறித்து வரும் ஆதண்டங்காயை ஐயாவிடம் கொடுத்து நறுக்கிப்போட்டு வத்தலாக்கச் சொல்வேன். அவரும் செய்துதருவார்.
பன்னிரண்டாம் வகுப்பு வரைக்கும் தொடர்ந்த இப்பழக்கம் அதன் பிறகு இல்லாதுப் போனாலும் ஆதண்டங்காயின் சுவையும், அதன் ஞாபகங்களும் இன்னும் என்னைவிட்டு அகலாது நிறைந்துள்ளதை இதோ இப்போதுக் கூட நன்கு உணர்கிறேன்.
சென்னை வந்து கிட்டத்தட்ட பத்து வருடம் ஆகப்போகிறது. அதில் இரண்டு வருடம் கல்லூரி விடுதி வாழ்க்கை என்றாலும் மீதமுள்ள எட்டாண்டுகளும் தொடர்ந்து ஹோட்டலில் சாப்பிட்டு வந்த நான் கடந்து மூன்று மாதமாகத்தான் அறையில் சமையல் செய்து சாப்பிட்டுவருகிறேன்.
ஐயா நன்றாக சமைப்பார். அம்மா ஊருக்குச் செல்லும்போதும், அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாத போதும், கோயில்களில் பொங்கல் வைத்து பூசை செய்யும்போதுமென ஐயாவின் சமையலை பலதடவை நேரில் பார்த்திருக்கிறேன். சாப்பிட்டுமிருக்கிறேன்.
பெண்கள் தான் சமைக்கவேண்டும். பெண்கள் தான் துணி துவைக்கவேண்டும். வீட்டை சுத்தம் செய்யவேண்டும் என்ற கேவல மனப்பான்மை பெருகிக் கிடந்தக் காலத்திலேயே ஐயா சமையல் செய்வது, துணி துவைப்பது, வீட்டை சுத்தம்செய்வது என அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்ததைப் பார்த்து வளர்ந்ததால், அவருடன் சேர்ந்து நானும் உதவிகள் செய்தும், வேலைகள் செய்தும் வளர்ந்தேன்.
அதனால் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிப் படிப்புக்காக விடுதியில் சேர்ந்தபோதும், அதன்பின் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு தனியாக அறை எடுத்து தங்கியது தொடங்கி… துணி துவைப்பதிலும், சமையல் செய்வதிலும், வீட்டை சுத்தமாக வைத்திருப்பதிலும், பொருட்களையும், புத்தகத்தையும் நேர்த்தியாக அடுக்கி வைப்பதிலும் கூடுதல் விருப்பமும், ஆர்வமும் இருப்பதை உணர்கிறேன்.
வீடு, ஹோட்டல், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் என எங்கு சென்றாலும் உணவை யார் வீணாக்குவதைப் பார்த்தாலும் கோபமாக வரும். முடிந்தவரை யாராவது (தெரிந்தவர்கள்) உணவு வீணடிப்பதைப் பார்த்தால் திட்டிவிடுவேன். அப்படித்தான் கடந்த சில தினங்களுக்கு முன் என் அறை நண்பன் உணவை வீணாக்குவதைப் பார்த்துக் கோபத்தில் திட்டிவிட்டேன். கிட்டத்தட்ட மூன்று நாட்கள் அவருடன் பேசவில்லை. அதன்பின் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டதோடு, இனி தான் எப்போதும் உணவை வீணாக்ககமாட்டேன் என உறுதியளித்தார்.
சிறு வயதாக இருக்கும்போது சாப்பிடக்கூட வீட்டில் நல்ல சாப்பாடு இருக்காது. வறுமையிலும் வறுமை அப்படியொரு வறுமை. கூலி விவசாயம் பார்த்து வந்த ஐயாவும், அம்மாவும் முடிந்தவரை எங்களின் பசியைப் போக்க நினைப்பார்கள். அதனால் அவர்கள் தங்கள் பசியைப் பொறுத்துக்கொண்டு எங்களின் பசியைப் போக்கிவிட்டுத்தான் உறங்கப்போவார்கள். அதிலும் சில தினங்கள் சாப்பிட எதுவுமின்றி புளியங்கொட்டை, பலாக்கொட்டை என அவித்துத் தின்றுவிட்டு பசி போக்கியதையெல்லாம் இப்போது நினைத்தாலும் அழுகையாக வரும்.
அப்படிப்பட்டக் குடும்பத்தில் இருந்து, அதுவும் ஒருவேளை நல்ல சோறு கிடைக்காத குடும்பத்தில் இருந்து வந்த எனக்கு, கண்முன்னால் யார் உணவை வீணடித்தாலும் கோபம் வரும். அதிலும் திருமணம் என்கிற பேரில் இன்றைக்கு தன் பண பலத்தையும் வெற்று கவுரவத்தையும் காட்ட நினைத்து வகைவகையாக உணவுகள் செய்து, வருபவர்களைக் கேட்காது முன்கூட்டிய இலையில் வரிசையாக அடுக்கி வைத்து சாப்பிடச்சொல்லி வீணடிப்பதைப் பார்க்கையில் எரிச்சலாக இருக்கும்.
என்ன செய்ய… அவர்களைத் திருத்தமுடியுமா? அல்லது அவர்கள் திருந்தத்தான் போகிறார்களா?
கடந்த பொங்கலுக்கு ஊருக்குச் சென்றிருந்தபோது வீட்டில் ஐயாவும் நானும் அருகருகில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது ஐயா சாப்பிடுவதை அவருக்கே தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். முதலில் தனக்கு எவ்வளவு சோறு வேண்டுமென அண்ணி பரிமாறும்போது சொல்லி வாங்கிக்கொண்டவர், சாப்பிட்டு முடிக்கையில் வழக்கம்போல் ஒரு பருக்கை சோற்றைக் கூட மீதம் வைக்காது எழுந்ததைப் பார்க்கையில் வியப்பாக இருந்தது.
எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல் ஐயா இப்படித்தான் சாப்பிட்டு வருகிறார். காரணம்… அவருக்கு சாப்பாட்டின் அருமை தெரியும் என்பதைவிட பசியின் உக்கிரமும் கோரமும் நன்கு தெரியும்.
பசியின் அருமை தெரிந்தவனுக்குத் தான் சாப்பாட்டின் அருமை தெரியும். அதிலும் ஒருவேளை சாப்பாட்டுக்கு வழியில்லாவனுக்குத்தான் ஒரு பருக்கை சோற்றின் மதிப்புத் தெரியும் என்பார்கள்.
முடிந்தவரை எப்போதும் ஒரு பருக்கை சோறு கூட சிந்தாமல், மீதம் வைக்காமல் சாப்பிட நினைப்பேன். அப்படித்தான் இதுநாள் வரை சாப்பிட்டு வருகிறேன்.
இது எனக்கு ஐயா சொல்லாமல் சொல்லித்தந்த பாடம். அதுவும் வாழ்வின் அதி உன்னதப் பாடம். இப்படி எத்தனையோ பாடங்களை அவரிடமிருந்து கற்றிருக்கிறேன். அவரும் போகிற போக்கில் இப்படிப் பல நற்பாடங்களைச் சொல்லித்தந்திருக்கிறார்.
இன்றைக்கு எத்தனைப் பெற்றோர் இதுபோன்று தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லித்தருகிறார்கள் என்றால் மிக மிகக் குறைவானவர்களே எனலாம்.
அதிலும், ”என் பொண்ணுக்கு / பையனுக்கு அஞ்சு வயசுதான் ஆவுது… இப்பவே போன் எடுத்து கேம் விளையாடுறா/ன்… யூடியூப்லாம் பாக்குறா/ன்…” என வெற்றுப் பெருமை பேசும் பெற்றோர் யாருக்கும், ”என் புள்ளைங்க எப்பவும் சாப்பாட்ட வேஸ்ட் பண்ணாம நேர்த்தியா சாப்புடுவாங்க” என நிஜப் பெருமை பேசத் தெரிவதில்லை, பாவம்.
ஐயா எனக்கிதை சொல்லாமல் சொல்லித்தந்தார். நான் என் அறை நண்பனுக்குச் சொல்லித்தந்தேன். இப்போதெல்லாம் அவன் சாப்பாட்டை வீண் செய்வதில்லை.
இப்படி என்னைச் சுற்றி எத்தனையோ பேர் இதுவரைக்கும்.
மாற்றம் நம்மிலிருந்து தொடங்கவேண்டும் என்பார்கள். ஆம்! அன்று, ஐயாவிலிருந்து எனக்கு. நேற்று, என்னிலிருந்து என்னைச் சார்ந்தவர்களுக்கு. இதோ… இன்று, உங்களிலிருந்து உங்களைச் சார்ந்தவர்களுக்கும் தொடங்கட்டும். தொடரட்டும். வாழ்த்துகள்.
[இன்னும்]
*