ஐயா (எ) 95 வயது குழந்தை! – 3

இன்று காலையிலிருந்து வயிறு சரியில்லை. இதுவரைக்கும் ஐந்து தடவைக்கு மேல் கழிவறை சென்று வந்துவிட்டேன். அதனால் இன்றைக்கு முன்னெச்சரிக்கையாக வெளியில் எங்கும் செல்லாமல் பிடித்தப் படமொன்றைப் பார்க்கவும், புத்தகம் படிக்கவும், நன்றாக ஓய்வெடுக்கவும் முடிவுசெய்துவிட்டேன்.
இதுவே ஊரில் இருந்திருந்தால் ஐயா எங்காவது சென்று ‘கொய்யாப் பிஞ்சி’ பறித்து வந்து தருவார். அல்லது என்னைப் போய் பறித்துச் சாப்பிடச் சொல்லியிருப்பார்.
ஆம்! சிறுவயதில் எப்போதெல்லாம் எனக்கு வயிறு சரியில்லாமல் பேதி ஆகிறதோ அப்போதெல்லாம் இதுதான் நடக்கும். நானும் கொய்யாப் பிஞ்சை சாப்பிட அடுத்த சில மணிநேரத்தில் வயிறு சரியாகிவிடும்.
இப்படி ஐயா எனக்கு மட்டுமல்லாது ஊரில் பலருக்கும், பலவிதமானப் பிரச்சனைகளுக்குத் தனக்குத் தெரிந்த மிக எளியத் தீர்வுகளைச் சொல்லுவார் (அதனை சித்த வைத்தியம் அல்லது இயற்கை வைத்தியம் எனலாம்). உடனே அவை சரியாகிவிடும்.
அத்துடன் ஆடு, மாடு உள்ளிட்ட வீட்டுவாழ் உயிரினங்கள் விஷயத்தில் ஐயா படு கெட்டிக்காரர். ஊரில் உள்ள ஆடு, மாடுகளுக்கு என்னப் பிரச்சனையென்றாலும் முதலில் அவர்கள் மனத்தில் வருவது ஐயாவாகத்தான் இருக்கும். உடனே ஆடு, மாடைப் பிடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவார்கள் அல்லது வீட்டுக்கு வந்து (சில சமயம் நிலத்துக்கு வந்து) ஐயாவிடம் தகவலைச் சொல்லி அழைத்துப்போவார்கள்.
பெரும்பாலும் ஐயா… ‘ஆடு, மாடு என்ன சாப்டது, என்னக் கொடுத்தீங்க, நீன்னுட்டு இருக்கா, படுத்துட்டே இருக்கா, சாணி எப்படிப் போட்டிருக்கு, சிறுநீர் எப்டிக் கழிக்குது’ போன்ற விவரங்களை (இதைத்தான் இன்றைய மருத்துவத்தில் ஹிஸ்ட்ரி என்கிறார்கள்) கேட்டறிந்தே அது என்னப் பிரச்சனையென எளிதில் கண்டறிந்து அதற்கான மருத்துவ முறையை சொல்லிவிடுவார். அப்படி அவர் சொல்லும் மருத்துவ முறை எதுவும் கடினமாக இருக்காது.
மாடு மேயவில்லையா? தைதாலத் தழை (தழை எனில் இலை), வீது தழை, வெள்ளை அருவு, கிளுகிளுப்பித் தழை போன்றவற்றைப் பறித்து ஒன்றாகச் சுருட்டி மடக்கி மாட்டுக்குச் சாப்பிடக் கொடுத்தால் (சில மாடுகளுக்கு வாயில் வைத்து குச்சியால் உள்ளே தள்ளவேண்டும்) மென்று தின்றுவிடும். பின் எப்போதும் போல் மேய ஆரம்பித்துவிடும்.
கறவல் மாடு அதிகம் பால்கொடுக்க… கன்றுபோட்ட நான்கு நாட்களுக்குள் பாலக்கீரை (நாமும் இதை உண்ணலாம்) கொடுத்தால் பால் அதிகமாகக் கொடுக்கும்.
இதுபோன்ற மிக மிக எளிய மருத்துவத்தையே அவர் செய்வார். செய்யச் சொல்வார்.
பெரும்பாலும் அவர் சொல்லும் மருத்துவத்துக்குத் தேவையான செடிகள், மரங்கள் எங்கிருக்கும், எப்படியிருக்கும் போன்றத் தகவல்களை விரல் நுனியில் வைத்திருப்பார். அதனால் வருபவர்களிடம் என்ன செய்யவேண்டும் என்று சொல்லும்போதே, அது எங்கே இருக்கும், எப்படி இருக்கும் போன்ற தகவலையும் சொல்லி அனுப்புவார். முடிந்தவரை அவரே உடன் சென்று எடுத்து தந்தனுப்புவார் (அவற்றுக்குக் கட்டணமாக இதுவரை ஒரு ரூபாய் கூட வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது).
அவ்வகையில் சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்று அவரது சேவையின் அல்லது கடமையின் உச்சம் எனலாம்.
பக்கத்து வீட்டில் இருக்கும் அண்ணன் ஒருவரின் ஆடுகள் திடிரென மேய்ச்சலில் மேயாமல் நிற்க, அவர் என்ன செய்வதெனத் தெரியாமல் அவரது நண்பர் ஒருவரிடம் தகவல் சொல்லி ஐயாவிடம் அனுப்பி வைத்திருக்கிறார். அவர் வந்து ஐயாவிடம் தகவலைச் சொல்ல, விவரம் முழுவதும் கேட்டறிந்து ”கலர்வீதிப் பட்டையையும், குட்டிப்புளியம் பட்டையையும் (நாம் சாப்பிடும் புளியமரம் அல்ல… இது வேறு) எடுத்துவந்து நன்றாக இடித்து அதனைத் தண்ணீரில் போட்டு (ஒரு ஆட்டுக்கு எனில் ஒரு சொம்பு தண்ணீர், இரண்டு ஆட்டுக்கு எனில் இரண்டு சொம்பு தண்ணீர்) நன்கு வடிகட்டி ஆட்டுக்குக் கொடுக்க வேண்டும்” என்று அவரிடம் சொல்லி அனுப்பியிருக்கிறார்.
அவர் சென்று அதனை அண்ணனிடம் சொல்ல… அவருக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி இன்னொரு பக்கம் வருத்தம்.
மகிழ்ச்சி… குடும்ப சண்டையால் பல வருடங்கள் இரு குடும்பத்தினரும் பேசாமல் இருந்துவரும் நிலையிலும் ஐயா மருத்துவம் சொன்னது. வருத்தம்… கலர்வீதி மரத்தை அவர் எங்கே தேடியும் கிடைக்கவில்லை, கண்டுபிடிக்க முடியவில்லை. மீண்டும் அவர் என்ன செய்வதெனத் தெரியாமல் ஐயா காலையில் நிலத்திற்குப் போகும் வழியில் காத்திருந்து, ஐயா வந்ததும் அவர் பின்னாலேயே சென்றிருக்கிறார்.
பயத்தோடும் தயக்கத்தோடும் ‘எப்படிப் பேசுவது, பேசினால் பதிலுக்குப் பேசுவாரா, மருத்துவம் சொல்வாரா?’ என்று யோசித்து தயங்கித் தயங்கி ஒருவழியாகப் பேச, அவரும் ’குடும்பச் சண்டையையும் தனக்குத் தெரிந்த மருத்துவ சேவையையும் தொடர்புப் படுத்திக்கொள்ளாமல்’ இன்னும் விளக்கமாக அம்மரம் எங்கேயிருக்கிறது, எப்படி இருக்கும், என்ன செய்யவேண்டுமென (அதை மட்டும்) சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.
அப்போதே ஐயா சொன்ன இடத்திற்கு அவர் சென்று பார்க்க, அப்படியே அவர் சொன்ன அடையாளங்களோடு அம்மரம் இருக்க, அசந்ததோடு… அதை அவர் எடுத்து தன் நண்பரிடம் தந்து இதுதானாவெனக் காட்டிவருமாறு சொல்லியிருக்கிறார். அவரும் நிலத்தில் இருக்கும் ஐயாவிடம் வந்துக் காட்ட, ஐயா பார்த்துவிட்டு இதுதான் என உறுதிசெய்ய, உடனே அவரும் சொன்னதுபோல் ஆடுகளுக்குச் செய்ய அடுத்த நாளே ஆடுகள் அனைத்தும் சகஜ நிலைக்குத் திரும்பி மேய ஆரம்பித்திருக்கிறது.
’என் போஸ்ட்டுக்கு அவன் லைக் போடல அதனால அவன் போஸ்ட்டுக்கு நான் லைக் போடமாட்டன். என்ன அவன் இப்படி சொல்லிட்டான் அதனால அவன் செத்தாலும் எந்த உதவியும் செய்யமாட்டன்’ போன்ற சில்லறைக் காரணத்திற்கெல்லாம் சண்டைப் போட்டுக்கொண்டும், இல்லாதது பொல்லாதது கூறிக்கொண்டும், வன்மம் வளர்த்துக்கொண்டும் திரியும் இன்றைய டெக் வாசிகள், குடும்பச் சண்டையில் பல ஆண்டுகள் பேசாதிருந்தபோதும், தனக்கு இயற்கையன்னைக் கொடுத்த (ஐயாவிடம் கேட்டால் கடவுள் கொடுத்ததென சொல்வார்) அரிய மருத்துவ அறிவை சேவையாக நினைத்து ‘எதிரிக்கும் ஈ, துரோகிக்கும் இரங்கு’ என்ற நம் தமிழ்மரபின் வழி நின்று தன் கடமையைச் செய்த ஐயா போன்றவர்களை அறிதல் காலத்தின் அவசியம்.
கிராமங்களில் பெரும்பாலும் ஆடு, மாடுகளை தங்கள் வீட்டில் ஒருவராகத்தான் நினைத்து வளர்ப்பார்கள். அது கன்று போட்டால் மகிழ்வதும், இறந்துபோனால் அழுவதும் சர்வ சாதாரணமாக நடக்கும். அப்படிப்பட்ட ஆடு, மாடு விஷயத்தில் ஐயா செய்யும் மருத்துவத்தால் சாகும் தருவாயில் இருக்கும் ஆடு, மாடுகளைக் கூட மிக எளிதில் மீட்டுக் காப்பாற்றிவிடுவார். அதனால் ஆடு, மாடின் உரிமையாளர்கள் பலருக்கும் ஐயா கடவுளாகத் தெரிந்ததையும், அவர்கள் அதை தங்கள் வாயால் சொல்லியதையும் பல தடவை நேரில் கேட்டிருக்கிறேன். பார்த்திருக்கிறேன்.
ஆடு, மாடு விஷயத்திலே இப்படியென்றால் மனிதர்கள் விஷயத்திலும் அவர் பல மருத்துவ முறைகளை (கை, கால் வீக்கத்துக்கு, நெலாவரத் தழையை அரைத்து வீக்கத்துக்கு மேல் தடவினால் சரியாகிவிடும் போன்ற எளிய மருத்துவத்தை), பலருக்குச் சொல்லியிருக்கிறார்.
என்னதான் இப்போது வீதிக்கொரு கிளினிக்கும், மருத்துவரும் வந்துவிட்டாலும் இன்றைக்கும் ஐயாவைத் தேடி பலர் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவரும் உடனுக்குடன் தனக்குத் தெரிந்ததை சொல்லிஅனுப்பிதான் வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் அவரிடம் இதுகுறித்து பேசியபோது வருத்தத்தோடு, ”வயசாயிடிச்சு… அதனால மறதிலக் கொஞ்ச கொஞ்சமான்னு நெறயா மறந்துட்டன். நம்மல நம்பி வர்றாங்க… சரியா சொல்லி அனுப்பனும்ல… அதும் உசுருதான… சும்மா ஏதோன்னு தப்பா சொல்லிடக்கூடாதுல்ல. அதனால நல்லா நெனவுல இருக்குறத மட்டும் சொல்லுறன்’’ என்றார்.
”விடுய்யா…” என அவரை சமாதானப் படுத்த வேறு விஷயம் குறித்துப் பேசத் தொடங்கினேன். அவரும் அதிலிருந்து அப்போது வெளியில் வந்தாலும் அவரது வலியையும், அர்ப்பணிப்பையும் அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.
அதோடு… எனக்குள்ளே ஒரு பெரும் குற்றவுணர்ச்சி இருப்பதை நான் இப்போது இங்கே சொன்னால் அது சரியாக இருக்குமென நினைக்கிறேன்.
இத்தகைய மருத்துவ அறிவைக் கொண்ட மனிதரிடம் இருந்து அதனை முறையாகக் கற்றுக்கொள்ளவில்லையே, பதிவு செய்யவில்லையே. நான்கு டிகிரி படித்திருக்கிறேன், அதனால் என்ன பிரியோஜனம் என பலநாள் எனக்குள்ளேக் கேள்வி கேட்டு என்னை நானே திட்டியிருக்கிறேன்.
அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைக்காத மருத்துவ அறிவு இது. உயர்ந்தப் பொக்கிஷம். இதை நாம் கற்றிருக்க வேண்டும், பதிவு செய்திருக்கவேண்டும் என்ற எண்ணமும் பக்குவமும் எனக்கு வரும்போது ஐயாவிடம் சென்று பதிவுசெய்யும் எண்ணத்தோடு (அவரிடம் அதுகுறித்து எதுவும் சொல்லாமல்) பேசினேன். ஆனால், அவர் தன் மருத்துவ அறிவில் கிட்டத்தட்ட முக்கால்வாசிக்கு மேல் மறந்துவிட்டதாகவும், சட்டெனப் பல விஷயங்கள் ஞாபகம் வராததாகவும் சொல்லி வருத்தப்பட்டார். சரி, இதற்குமேல் அவரை வருத்தக்கூடாதென நினைத்து என் முயற்சியை அத்தோடு விட்டுவிட்டேன் (இருந்தும் சிலவற்றை அப்பப்போ ஊருக்குச் செல்லும்போது கேட்டறிந்து வைப்பேன். மூன்றாவது அண்ணன் ஓரளவு அவரிடமிருந்து தெரிந்துவைத்திருக்கார் என்பது குட்டியான சந்தோசம்).
இருந்தாலும் முழுவதுமாக அவரிடமிருந்து கற்கவில்லையே, பதிவு செய்யவில்லையே என்ற குற்றவுணர்ச்சி பல நேரம் எனக்குள் வந்துவந்துப் போகிறது. என்ன செய்ய?
”ஐயா… என்ன மன்னிச்சிடுங்க. இந்த மன்னிப்ப நேர்லக் கேட்டா நீங்க ரொம்ப வருத்தப்படுவீங்கன்னு எனக்குத் தெரியும். அதனால இங்கக் கேக்குறன். என்ன மன்னிச்சிடுங்க. இந்த இயற்கை மருத்துவம் உங்களோட முடியனும்னு காலத்தோட ஆசப் போல. அடிக்கடி ஒன்னு சொல்லுவீங்க. எது நடந்தாலும் நல்லதுக்குன்னு நெனச்சிக்கோன்னு. இப்போ இதயும் நான் நல்லதுக்குன்னுத்தான் நெனச்சிக்கிறன் ஐயா. இருந்தாலும் என்ன நீங்க… மன்னிச்சிடுங்க. மன்னிச்சிடுங்க.’
[இன்னும்]
*