6 – தாவரவாசி

என்னிடம் ஒரு பழக்கம் உண்டு. இதை வெறும் பழக்கம் என்று சொல்வதைவிட, நற்பழக்கம் என்று சொல்வதே தகும். நான் யாரைப் பார்த்து கொஞ்சநேரம் அவர்களிடம் பேசினாலும், அதிலும் குறிப்பாக சிறுவர்களிடமும் இளையோர்களிடமும், அருகில் இருக்கும் தாவரங்களைக் காட்டி, ‘இது என்ன மரம்?’ என்றோ, ‘என்ன செடி?’ என்றோ, ‘என்ன கொடி?’ என்றோ கேட்டுவிடுவேன்.
முதல் காரணம், தாவரங்கள் பற்றிய அவர்களது அறிவு எந்த அளவுக்கு உள்ளது என்பதைப் பார்ப்பதற்கு. இரண்டாவது, எனக்குத் தெரியாத தாவரமாக இருந்தால் தெரிந்துகொள்வதற்கு.
அவர்களில் மிக மிகக் குறைவானவர்களே, ‘இது இலுப்பை மரம்’ என்றோ, ‘ஆமணக்குச் செடி’ என்றோ, ‘முஷ்டக் கொடி’ என்றோ சொல்வார்கள். மிகுதியானவர்களுக்கு அது ஒரு மரம், செடி, கொடி என்பதைத் தாண்டி அவற்றின் பெயரோ, குணங்களோ தெரியாது.
பெரும் வேதனையாக இருக்கும். நம்முடன் இருக்கும் சக உயிர்களான இன்னும் சொல்லப்போனால், நமக்கும் முன்பிருந்து நமக்குப் பின்னாலும் இருக்கப்போகும் மண்ணின் முதன்மைப் பிள்ளைகளான தாவரங்களைப் பற்றி அதிலும், அதன் பெயர்கூட தெரியாமல், பணத்துக்காக எதையும் செய்யும் நடிகர்களின் பெயர்களையும், அவர்கள் நடித்த படங்களின் பெயர்களையும் தெரிந்து வைத்திருப்பதைப் பெருமையாக நினைப்பதைப் பார்த்தால் கோபமாக வரும்.
உடனே, அவர்கள் மீது கோபப்பட்டு எந்தப் பிரயோஜனமும் இல்லை, எல்லாம் அவர்களைப் பெற்று வளர்த்த தாய் தந்தையரைச் சொல்ல வேண்டும் என்று வராத சிரிப்பை வரவழைத்துக் காட்டிவிட்டு வந்துவிடுவேன். ஆம், மகவே!
உனக்குத் தெரியுமா? அடுத்த தலைமுறைக்காக உன் அப்பா நான் தாவரங்கள் பற்றியே ஒரு முழு நூல் எழுதி இருக்கிறேன். அதற்காக ‘நிலைத்திணை வாழ்த்து’ என்று ஒரு வாழ்த்துப் பாடல்கூட உருவாக்கி வெளியிட்டிருக்கிறேன்.
‘மரம்தான் மண்ணின் முதன்மைப் பிள்ளை –
மழையைத் தந்திடும் வானுக்கு அன்னை…
மரம்தான் உயிரின் உயரிய எல்லை –
உயிர்வரை தந்திடும் உறவுக்கு உண்மை…’
அதில் வரக்கூடிய வரிகள் இவை. இப்பூமியில் வாழும் அனைத்து உயிர்களும் சமமே என்று நினைக்கும் என் போன்றவர்களால்தான் இப்படியெல்லாம் பார்க்க முடியும்; எழுதமுடியும்.
தாவரங்கள் என்பவை ஏதோ மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. அதேநேரம், நமக்குக் கீழானதும் அல்ல. மரங்கள் நாம் பிறக்கும்போது தொட்டிலாய், வதுவையின்போது பந்தலாய், இனவிருத்தியின்போது கட்டிலாய், முதுமையின்போது ஊன்றுகோளாய், இறப்பின்போது பல்லக்காய், இறுதிச் சடங்கின்போது விறகாய் பிறப்பு முதல் இறப்புவரை நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாய் இருந்துவருவது. காலந்தோறும் பின்னிப் பிணைந்திருப்பது.
மனிதரின் வாழ்விலேயே இப்படி என்றால், முழுக்க முழுக்க அதைச் சார்ந்து, அதனையே உணவாகவும், வாழிடமாகவும் கொண்டு வாழும் எண்ணற்ற உயிரினங்களின் வாழ்வில் எத்தகைய பங்கு வகிக்கும்? இதையெல்லாம் மனிதர்களாகிய சுயநலமிகள் எண்ணுவதில்லை. எதிலும் பயன் மட்டுமே நோக்கி, நிலையில்லா வாழ்வில் நிலையாய் இருக்கப்போகும் இருமாப்பில் திரிகிறார்கள்.
அதற்காக ஒட்டுமொத்த மானுட குலமே இப்படித்தான் என்று எண்ணிவிடாதே. நம் மூதாதையர்கள் இதற்கு அப்படியே நேர்மாறாக இருந்திருக்கிறார்கள் [; இப்போதும் இருக்கிறார்கள்; இனியும் இருப்பார்கள்]. தம் அன்றாட வாழ்வில் தாவரங்களுடன் தொடர்புறாமல் ஒரு நாளைக்கூட அவர்கள் வாழ்ந்ததில்லை. தாவரங்களைப் பற்றி பாடாமல் ஓர் இலக்கியப் படைப்பைக்கூட படைத்ததில்லை. தாவரத்துடன் உறவாடாமல் ஒருவரது வாழ்வு கூட முடிந்துபோனதில்லை.
உதாரணத்துக்கு காலத்தால் மிக மூத்த இலக்கியப் படைப்பாக சொல்லப்படும் சங்க இலக்கியத்தையே எடுத்துக்கொள்வோம். பல்லி முட்டைக்கு புன்னை அரும்பு, நண்டின் கண்ணுக்கு நொச்சி அரும்பு, அணில் பல்லுக்கு முள்ளி மலர், மயில் குடுமிக்கு வாகைப்பூ, கிளியின் மூக்குக்கு அவரைப் பூ என்று தாவரங்களின் பூக்களையும், அரும்பையும் பாடல்களில் உமவையாக்கி இருக்கிறார்கள். ஐந்திணைகளுக்கும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என தாவரங்களின் அதிலும் குறிப்பாக, மலர்களின் பெயர்களையே வைத்திருக்கிறார்கள். அதோடு நின்றார்களா?
வாகை, வெட்சி, தும்பை, கரந்தை, உழிஞை, காஞ்சி, நொச்சி, போந்தை என்று வெற்றியை வெளிப்படுத்த தாவர மலர்களை சூடிக்கொண்டார்கள். குறிஞ்சிப்பண், மருதப்பண், முல்லைப்பண், கொன்றைப்பண், ஆம்பல்பண், மாதவிப்பண் என இசைப்பிரிவில் தாவரங்களின் பெயரைப் பயன்படுத்தினார்கள். குறிஞ்சி யாழ், முல்லை யாழ், மருத யாழ், பாலை யாழ், நெய்தல் யாழ் என்று இசைக் கருவிகளுக்கு தாவரப் பெயர்களை இட்டு மகிழ்ந்தார்கள்.
ஆலம், அரசு, வேம்பு, பனை, வன்னி, மகிழம், பலா, வில்வம், கொன்றை, புன்னை எனக் கோயில்கள்தோறும் ஒரு தாவரத்தை தலத் தாவரமாக வைத்து வணங்கினார்கள். ஆலங்குடி, அரசூர், பனையபுரம், புன்னைநல்லூர், கடம்பூர், புரசைவாக்கம், மாங்குடி, நொச்சிக்காடு, காரைக்குடி, திருமுல்லைவாயில், திருப்பாதிரிப்புலியூர் என்று ஊர்களுக்கெல்லாம் தாவரப் பெயர்வைத்து பெருமையுற்றார்கள். இன்னும் இன்னும் இன்னும்.
இவ்வரிசையில் ஆயிரமாண்டு முந்தைய காலத்தால் அழியாத செவ்வியல் படைப்பான கம்பராமாயணத்தின் 3162 ஆவது பாடலில்,
‘மாணிக்கம், பனசம்; வாழை
மரகதம்; வயிரம், தேமா;
ஆணிப் பொன் வேங்கை;
கோங்கம், அரவிந்தராகம்; பூகம்
சேண் உய்க்கும் நீலம்; சாலம்
குருவிந்தம்; தெங்கு வெள்ளி;
பாணித் தண் பளிங்கு, நாகம்;
பாடலம் பவளம் மன்னோ.’
எனப் பத்து மரங்களின் பெயர்களை, அவற்றின் தன்மையோடு வரிசையாக வைத்து கவிச்சக்கரவர்த்தி கம்பர் அழகுற பாடியிருப்பதைப் பார்க்கலாம். அதுவும் எவ்வாறு தெரியுமா?
‘அச்சோலையில் உள்ள பலா மரங்கள் மாணிக்க மயமாகவும், வாழை மரங்கள் மரகத மயமாகவும், இனிய மா மரங்கள் வைர மயமாகவும், வேங்கை மரங்கள் உயர் வகைப் பொன் மயமாகவும், கோங்கு மரங்கள் பதுமராகம் என்னும் இரத்தின மயமாகவும், கமுகு மரங்கள் நெடுந்தொலைவு ஒளிரும் நீலமணி மயமாகவும், ஆச்சா மரங்கள் குருவிந்தம் என்னும் மணி மயமாகவும், தென்னை மரங்கள் வெள்ளி மயமாகவும், சுர புன்னை மரங்கள் நீரோட்டம் மிக்க கண்ணாடி மயமாகவும், பாதிரி மரங்கள் பவள மயமாகவும் இருந்தன.’
இப்படி இன்னும் இலக்கியங்களில் மட்டும் ஆயிரம் உதாரணங்கள் சொல்லமுடியும். ஆனால், இன்றைய நவயுக மனிதர்களுக்கு தாவரங்கள் ஒரு பொருட்டே இல்லாமல் போய்விட்டது. அதனால்தான், பிரபல சினிமா ஹீரோவின் படத்துக்கு முதல்நாள் டிக்கெட் கிடைக்காததற்கு வருந்துபவர்கள், நூறாண்டுகள் தம் வீட்டருகில் வாழ்ந்து எண்ணற்ற உயிர்களுக்கு வாழ்வளித்து, நிழல்தந்து, ஐந்து தலைமுறை கண்ட மரம் ஒன்று வீழ்ந்து மடிந்ததற்காக நொடியும் வருந்தாமல் கடக்கிறார்கள். அந்தளவுக்கு இழிபாதையில் சென்றுகொண்டிருக்கிறது மானுட குலம்.
இதில் அத்தி பூத்தாற்போல என்போன்ற மிகச் சிலர் தாவரங்களைத் தம் உறவாக எண்ணி, தமக்கு நிகராகக் கருதி வாழ்ந்துவருகிறோம். அவற்றோடு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் கதைபேசி, தொட்டு வருடி விளையாடி மகிழ்கிறோம். ஆம், மகவே!
இங்கே சிறு வயதில் என் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை உனக்காகச் சொல்கிறேன், கேள். ஒருதடவை ஊர்க் கோயிலில் இருந்த பொர்ச மரத்தடியில் என் வயதுடைய சிறார்களுடன் வீடு கட்டி, கடை வைத்து விளையாடிக்கொண்டிருந்தேன்.
கல்தான் வெள்ளம். மண்தான் அரிசி, சக்கரை, பருப்பு. இலைதான் வெற்றிலை, கீரை, காசு. தண்ணீர்தான் எண்ணெய்.
அப்போது கடையில் வைத்து விற்பதற்காக அருகில் இருந்த சிறு செடிகொடிகளில் போய் கொத்துக் கொத்தாய் இலைகளை உடைத்தும் பறித்தும் வந்து விளையாடிக்கொண்டிருந்தேன். சட்டென என்ன ஆனதோ தெரியவில்லை. எடுத்துவந்த கொத்து இலைகள், அந்த செடிகொடிகளின் கைகளாகவும், விரல்களாகவும், கண்களாகவும் தெரிய நான் பாட்டுக்கு கண்கலங்கி அழ ஆரம்பித்துவிட்டேன். என்ன ஏதென்று புரியாத நண்பர்கள் ஓடிப்போய் உன் தாத்தாவை கூட்டி வந்தார்கள்.
பதறியடித்து வந்து என் அருகில் உட்கார்ந்து, நான் எதற்காக அழுகிறேன் எனக் கேட்டறிந்த உன் தாத்தா, அத்தனை மகிழ்ந்தார். தனக்கும் சிறுவயதில் அதுபோன்ற அனுபவம் இருந்ததாகச் சொன்னார். அதுமுதல் அவரிடம் பார்க்கும் மரம் செடி கொடிகளை எல்லாம் காட்டி அதன் பெயர்களையும், அவற்றின் குணங்களையும் கேட்டுத் தெரிந்துகொள்வதை வாடிக்கையாக வைத்திருந்தேன். அப்பழக்கம் இதோ, இப்போது வரை என்னிடம் தொடர்கிறது.
அதனால்தான் இன்றைக்கு நூற்றுக்கணக்கான தாவரங்களைத் தெரிந்து வைத்திருக்கிறேன். அதற்காகப் பெருமையும் படுகிறேன். ஆம், மகவே!
[இவ்வரிசையில் அண்மைய உதாரணமாக இங்கே இன்னொன்றையும் உன்னிடம் அவசியம் சொல்லவேண்டும். அதுவும், நீ உனது அம்மாவின் வயிற்றில் இருக்கும் ஏழாவது மாதத்தில் ஒருநாள், அக்டோபர் 18, 2023 அன்று, நிகழ்ந்தது.
சென்னை – முகப்பேரில் உள்ள ஜஸ்வந்த் சிங் தாத்தாவின் தோட்டத்தில், ஆலம் முதல் பிரம்மக் கமலம் வரையான முன்னூறுக்கும் மேற்பட்ட அரிய மரஞ்செடிகொடிகள் சூழ – பனை மாலை, ஜடை, வளையல் – வாழை நார் புடவை, வளையல் – சோற்றுக் கற்றாழைப் புடவை – மா பலா வாழைக் கன்றுகள் – பேய்மிரட்டி என்னும் பெருந்தும்பை திரி விளக்கு – மர பொம்மைகள் (இது நீ வைத்து விளையாடுவதற்காகத்தான்!) – தாவரம் சார்ந்த புத்தகங்கள் – தினை பாயாசம் – பனங்கிழங்கு அல்வா, பனை ஓலைக் கொழுக்கட்டை, தட்டு, பெட்டி… என இன்னும் இன்னுமாய் நூறு சதவிகிதம் மரங்கள் சார்ந்து, மனத்துக்கினிய அன்பர்களும் நண்பர்களும் சொந்தங்களும் கூடி நிற்க, உன் அம்மாவுக்கு மிக அழகான முறையில், அதுவரை யாருக்கும் அதுபோல் நடந்திடாத வகையில், வளையணி விழா நிகழ்த்தினேன்.
வந்திருந்த எல்லோரும் மகிழ்ந்து நெகிழ்ந்து நம் மூவரையும் வாழ்த்தினார்கள். பின் அவ்விழா பற்றிய காணொளி மக்கள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானதை பார்த்துவிட்டு, எங்கெங்கோ இருந்து யார் யாரோ அழைத்து நம்மை வாழ்த்தி மகிழ்ந்தார்கள். ஊரிலிருந்த உன் பாட்டி, தாத்தா முதலான பலரும் தம் மகிழ்வை வெளிப்படுத்தினார்கள். அதிலும் ஒருபடி மேலே போன உன் பாட்டி, ‘நீ செஞ்ச வேலைக்கு ஒண்ண நான் பாராட்டுறன்’ என்று என்னை முதல்தடவையாக பாராட்டினார். ஆம், மகவே!]
நம்முடன் வாழும் உயிர்களையும் நமக்கு நிகராக மதித்து, அதன் அருமை பெருமை உணர்ந்து, அவற்றுக்கு வேண்டியவற்றை முடிந்த மட்டும் செய்து வாழ்வதே என்னைப் பொறுத்தவரை மேன்மிகு வாழ்வு என்பேன்.
அத்தகைய வாழ்வை நீயும் வாழ்ந்திட, எனக்குத் தெரிந்த மரம் செடி கொடிகளை எல்லாம் உனக்கும் சொல்லித் தர ஆவலோடு காத்திருக்கிறேன். அதோடு, தாவரம் என்பது பலரும் நினைத்திருப்பதுபோல வெறும் வேரோ, தண்டோ, கிளையோ, இலையோ, பூவோ, காயோ, பழமோ, விதையோ மட்டுமல்ல. அதையும் தாண்டி எண்ணற்ற அங்கங்கள் கொண்டது. அவற்றையும் சொல்லித் தந்து, இந்தக் கணினிவாசிகள் மத்தியில் தாவரங்களை நேசிக்கும் உன்னதவாசியாய்; தாவரவாசியாய் உன்னை வளர்த்திடுவேன். ஆம், மகவே!
‘மனுசன் இல்லாம மரங்க இருக்கும்; மரங்க இல்லாம மனுசன் இருக்க மாட்டான்’ என்பார் உன் தாத்தா.
தாவரங்கள் பற்றி இதுவே இந்த அப்பா நான் உனக்கு சொல்லித்தரும் முதல் பாடம்!
*