5 – மகிழ்ச்சிப்பாதை

சிறுவயது முதல் உன் தாத்தா என்னிடம் பல விஷயங்கள் சொல்லி இருக்கிறார். அவற்றில் மிக முக்கியமாக நான் நினைப்பது. ‘எப்பா… எப்பயும் இருக்கறத வச்சு சந்தோசமா வாழக் கத்துக்கோ. அப்பதான் ஒன் வாழ்க்க என்னிக்கும் நல்லார்க்கும்.’ ஆம், மகவே!
இந்த ஒட்டுமொத்த உலகத்து மனிதர்களும் அவர்களது மனங்களும் எது தம்மிடம் இருக்கிறதோ அதை மதிக்காமல், அதைக் கொண்டு மகிழ்வாக வாழாமல், எது இல்லையோ அதற்காக ஏங்குவார்கள். அதனைப் பெற்றிட என்னென்னவோ செய்வார்கள். ஏன், தம் ஒட்டுமொத்த வாழ்வையேகூட பலியிடுவார்கள். இது ஒருவகை நோய் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்நோய் பாதிப்பு இல்லாத; ஏற்படாத மனிதர்களே இல்லை என்னும் அளவுக்கு எங்கும் பரவிப் பெருகியுள்ளது. எனினும் உன் தாத்தா போன்ற மிகச் சிலர் அவற்றிடமிருந்து தப்பி, தம்மிடம் என்ன இருக்கிறதோ, எதுவும் இல்லாவிட்டால்கூட சரி, அதைக் கொண்டு எல்லாம் இருப்பதாக, அனைத்தும் இருப்பவர்களைக் காட்டிலும் பெரும் மகிழ்ச்சியுடன் என்றைக்கும் இருப்பார்கள்; வாழ்வார்கள்.
நினைத்துப் பார்க்கவே ஆச்சரியமாக இருக்கும். அவர்களைப் பொறுத்தவரை எல்லாவற்றுக்கும் மனம்தான் முக்கியமே தவிர பணம் அல்ல.
சிறுவயதில் இது புரியாமல் பலதடவை இல்லாததைக் கண்டு; கேட்டு அடம்பிடித்து அழுதுகொண்டிருந்த எனக்கு, இவ்வுயரிய உண்மையை; பாடத்தை கற்றுத்தந்தது இப்போது நூறு வயதை எட்டியிருக்கும் உனது அன்புத் தாத்தாதான். ஒருநாளும் உண்டு வெறுமே படுத்திருந்து பொழுதைக் கழிக்காது தன்னால் இயன்றதைச் செய்து வாழும் அந்த முதுவர்தான்.
அப்போதெல்லாம் நான் எதிர்வீட்டுப் பிள்ளைகள் வைத்து விளையாடும் விதவிதமான பொம்மைகளையும், உண்ணும் வகைவகையான உணவுகளையும் பார்த்து, எனக்கும் அதுமாதிரி வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்து அழுவேன். அதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கையில் சிரிப்பாக இருக்கிறது. உடனே, என்ன செய்வதெனத் தெரியாமல் உன் பாட்டியும், அத்தையும், பெரியப்பாக்களும் என்னை உனது தாத்தாவிடம் கூட்டிப்போய் விடுவார்கள்.
அவர் மற்றவர்களைப் போல மிரட்ட மாட்டார். அடிக்க மாட்டார். திட்ட மாட்டார். மாறாக, அன்போடு தன் அருகில் கூப்பிட்டு உட்கார வைத்து மிகப் பக்குவமாகச் சொல்வார். ”எப்பா, உனக்கு என்ன வேணும் சாமி…? வெளாட பொம்மைங்கதான… வா, போயி சேறு அள்ளியாந்து நாமளே செய்யலாம். தின்ன பப்புதான வேணும்… வா, போயி என்னென்ன பப்புங்களாம் கீதோ… பறிச்சித் தின்னலாம்.’’
கைபிடித்து நடக்கவைத்தோ அல்லது தோள் மீது தூக்கிக் கொண்டோ சென்று, அந்த நேரத்தில் ஊரைச் சுற்றியிருக்கும் நிலங்களிலும், மலைகளிலும், கரம்புக் காடுகளிலும் மரஞ்செடிகொடிகளில் காய்த்திருக்கும் காய் கனிகளை, அது சூரையோ காரையோ கொய்யாவோ புளியமோ சொத்துக்கிளாவோ கிளாவோ ஞானாவோ எலந்தையோ குளஞ்சியோ சீத்தாவோ தேங்காவோ பனையோ பப்பாளியோ பூலாவோ மணத்தக்காளியோ சுக்கனோ கோவையோ உண்ணிமில்லோ மாங்காயோ நாவலோ நெல்லியோ கொடிக்களியோ… எதுவாக இருந்தாலும் சரி, பறித்துத் தந்து தின்னச் சொல்வார். தின்பேன்.
வேண்டிய மட்டும் வைத்திருந்து தின்பதற்குத் தன் துண்டில் வைத்துக் கட்டி எடுத்துக்கொண்டு, திரும்பி வருகையில் களிமண் அள்ளிவந்து வீட்டின் பின்புறம் இருக்கும் பூவரச மரத்தடியில் உட்கார்ந்து கேட்கும் பொம்மைகளை அழகாகச் செய்து கொடுத்து விளையாடச் சொல்வார். அத்தனை மகிழ்ச்சியாக இருக்கும்.
பின், பறித்துவந்த காய் கனிகளை அன்று முழுக்க, சிலநேரம் அடுத்த நாளும் வைத்திருந்து தின்றுகொண்டு, பூவரச மரத்தடியிலும், அருகிலிருக்கும் துரிஞ்சி மரத்தடியிலும், ஆட்டுப்பட்டியிலும் வீடு கட்டி அல்லது கோயில் கட்டி விளையாடிக் கொண்டிருப்பேன்.
நன்றாக நினைவுள்ளது. ஒரு தடவை எதிர்வீட்டுப் பையன் அவனது அப்பா வெளியூரிலிருந்து வாங்கிவந்த ஒலியெழுப்பி விளக்கு எரியும் பஸ்ஸை திண்ணையில் ஓட்டி விளையாடுவதைப் பார்த்து ஏக்கத்தோடு அழுதுகொண்டிருந்த என்னை, உன் தாத்தா சமாதானப்படுத்த எண்ணி ஒரு செங்கல் எடுத்து வந்து, அதன் முன்பக்கம் இரண்டு இடங்களிலும், பக்கவாட்டில் இரண்டிரண்டு இடங்களிலும் சிறு கல்லால் பெரிய பொட்டு அளவுக்கு கொத்திவிட்டு, அதுதான் முகப்பு விளக்கும் சக்கரமும், ‘ட்ரு ட்ரூ… ட்ரு ட்ரூ… கீங் கீங்… ட்ரு ட்ரூ… ட்ரு ட்ரூ… கீங் கீங்…’ என்று ஒலியிட்டு ஓட்டிக் காட்டினார்.
சட்டென்று அழுவதை நிறுத்திவிட்டு மகிழ்வில் துள்ளி எழுந்து ஓடிப்போய் அதனை வாங்கிக்கொண்டு, ”இது என் பஸ்சு…’’ என்றேன்.
மெல்லிதாய் சிரித்து தலையாட்டிவர், ”ஆமா, உன் பஸ்சுதான்… ஓட்டி வெளாடி’’ என்றார். அத்தனை உற்சாகத்துடன் எல்லா இடங்களிலும் ஓட்டி மகிழ்ந்தேன்.
இதில் வேடிக்கை என்னவென்றால், நான் செங்கல்லை பஸ்சாக ஓட்டி விளையாடுவதைப் பார்த்ததும் தான் வைத்திருந்த விலை உயர்ந்த பொம்மை பஸ்ஸை போட்டுவிட்டு வந்த எதிர்வீட்டுப் பையன் ஆசையோடு கேட்டான். ”டேய், எனக்கும் உன் பஸ்ச தர்றியாடா… நானும் ஒருவாட்டி ஓட்டிப் பாக்கறன்.’’
ஒன்றும் சொல்லாமல் திரும்பி துரிஞ்சி மரத்தடியில் கட்டிலில் உட்கார்ந்து காசிரிக்கா நாரில் கயிறு திரித்துக்கொண்டிருந்த உன் தாத்தாவைப் பார்த்தேன். புன்னகைத்து, ”கொடு’’ என்றார். உடனே தந்தேன்.
வாங்கிக்கொண்டு என் போலவே அவனும் ஓட்டி மகிழ்ந்தான். ‘ட்ரு ட்ரூ… ட்ரு ட்ரூ… கீங் கீங்… ட்ரு ட்ரூ… ட்ரு ட்ரூ… கீங் கீங்…’
எல்லாவற்றுக்கும் இங்கே மனம்தான் காரணம் என்பதை அப்போதுதான் முழுதாகப் புரிந்துகொண்டேன். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். அந்த மனம் மட்டும் நம் வசம் இருந்துவிட்டால் உலகில் எல்லாமே மகிழ்ச்சி தரக்கூடியதுதான்.
இதைப் புரிந்து உணர்ந்த நாள்முதல் உன் தாத்தாவைப் போல நானும் மகிழ்ச்சிப்பாதையில் நடக்க ஆரம்பித்தேன். அதனால் காணும் யாவற்றிலும் அந்தந்த வயதுக்குரிய விளையாட்டுப் பொருட்களையும், அப்போதைய தேவைக்குரியவற்றையும் காண முடிந்தது.
சாதாரண குச்சிகளும், இலைகளும், மண்ணும், மணலும், கல்லும், பூக்களும், காய்களும், விதைகளும் எனக்கு விலை உயர்ந்த விளையாட்டுப் பொருட்களாகின. இயற்கையில் கிடைக்கும் காய்களும், கனிகளும், கிழங்கும் அரிய உணவுப் பண்டங்களாகின. ஆம், மகவே!
உனக்கு இன்னோர் உதாரணமும் சொல்கிறேன், கேள். அப்போது நாங்கள் இருந்த வீடு மஞ்சம் புல்லால் வேய்ந்த சிறு கூரைவீடு. கொஞ்சம் மழை பெய்தாலும் பல இடங்களில் ஒழுகும். பகலாக இருந்தால் நானும் உன் அத்தையும் பெரியப்பாக்களும் ஒழுகுகின்ற இடங்களில் எல்லாம் வீட்டிலிருக்கும் சிறுசிறு பாத்திரங்களை வைத்துவிட்டு கதைபேசி சிரித்துக்கொண்டிருப்போம். அது நிறைந்ததும் கொண்டுபோய் வெளியில் ஊற்றுவோம்.
அதுவே இரவு என்றால், உன் தாத்தாவும் பாட்டியும் எங்களை ஒழுகாத இடமாகப் பார்த்து படுத்து உறங்கச் சொல்லிவிட்டு, விடியும் வரைக்கும் பாத்திரம் வைத்து, எடுத்து ஊற்றுவார்கள்.
வசதிகள் இல்லாத கூரை வீடாக இருந்தாலும், உண்பதற்கு விதவிதமான உணவுகள் இல்லாமல் போனாலும் மகிழ்ச்சிக்கு சற்றும் குறைவிருக்காது. ஒவ்வொருநாள் இரவு சாப்பிடும்போதும் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து, இருப்பதைப் பகிர்ந்து இன்பத்துடன் சாப்பிடுவோம். அது இல்லை இது இல்லை என்ற ஏக்கமோ, புகாரோ, எண்ணமோ யாருக்கும் இருக்காது.
ஆனால், என் வயதொத்த நண்பன் ஒருவனது வீடு நான்கு தெரு தள்ளி இருந்தது. ஊரிலேயே பெரிய மெத்தை வீடு. ஐந்தாறு தலைமுறைக்கு வேண்டிய சொத்துபத்து கொண்டவர்கள். விதவிதமான உணவுகள் தொடங்கி எல்லாம் இருக்கும். எனினும் ஒருநாள்கூட சந்தோசமாக இருக்க மாட்டார்கள். எப்போதும் எது இல்லையோ அதைப் பற்றியே பேசி, அதற்காகவே ஓடி, வாழ்வை வாழாமலேயே கழிப்பார்கள்.
இதை ஒருதடவை நம் வீட்டுக்கு வந்திருந்தபோது சொல்லி அழுதான். பார்க்கவே பாவமாக இருந்தது. உடனே, உன் தாத்தா சொன்ன வார்த்தைகளை என்மொழியில் அவனிடம் சொன்னேன். சட்டெனப் புரிந்துகொண்டவன், அன்றிலிருந்து எங்களைப் போல மகிழ்ச்சிப்பாதையில் நடக்க ஆரம்பித்தான். ஆம், மகவே!
இந்த மனத்தை வென்று நம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அத்தனை எளிதான காரியம் கிடையாது. அதேநேரம், இது ஒன்றும் முடியவே முடியாததும் இல்லை. அதனால், உன் தாத்தா அன்று என்னிடம் சொன்னதை, அதன்பிறகு நான் என் நண்பனிடம் சொன்னதை, இதோ, இப்போது உன்னிடம் சொல்கிறேன்.
‘எப்பா… எப்பயும் இருக்கறத வச்சு சந்தோசமா வாழக் கத்துக்கோ. அப்பதான் ஒன் வாழ்க்க என்னிக்கும் நல்லார்க்கும்.’
இதை எப்போதும் உன் மனத்தில் ஆழப் பதித்துக்கொள். இன்று மட்டுமல்ல… என்றென்றும் உன்னை இது நல்வழிப்படுத்தி மகிழ்வுமிக்க பெருவாழ்வு வாழச்செய்திடும்!
*