4 – பல்லாண்டு

எந்த மனிதரும் இங்கே தான் இன்ன இடத்தில், இன்னின்னாருக்கு மகவாகப் பிறக்க வேண்டும், இந்த மொழியைத்தான் தாய்மொழியாகக் கொள்ள வேண்டும் என்று கேட்டுப் பெறுவதில்லை; முன்னமே தெரிந்துகொண்டும் பிறப்பதில்லை. நம்மையெல்லாம் மீறிய ஓர் இறை சக்திதான் அவற்றைத் தீர்மானிக்கிறது. காலந்தோறும் மிக நேர்த்தியாய் அவற்றையெல்லாம் நிகழ்த்துகிறது. ஆம், மகவே!
அது இன்னதுதான் என்று இவ்வுலகம் தோன்றி இத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் ஒருவராலும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் படியாக அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை.
சிலர் சிவன் என்பார்கள். சிலர் விஷ்ணு என்பார்கள். சிலர் சக்தி என்பார்கள். சிலர் முருகன், விநாயகர் என்பார்கள். இன்னும் சிலர் ஏசு, அல்லா, புத்தர் என்பார்கள். இப்படி ஒவ்வொரு மதத்தவரும் அவரவர் கடவுளரை அதற்கான காரண கர்த்தாவாகச் சொல்வார்கள். அதை ஏற்கவும் மறுக்கவும் ஒரு கூட்டம் இருக்கும்.
அதேநேரம், அவர்களுக்கு மத்தியில் வாழும் மிகச் சிலர் எல்லா கடவுளரையும் வணங்குபவர்களாகவும், எந்த மதக் கோயிலுக்கும் தயக்கமின்றி செல்பவர்களாகவும், இப்பிரபஞ்சம் எங்கும் நிறைந்திருக்கும் அனைத்தும் இறைதான்; இறைசக்திதான் என்னும் உயர்ந்த கருத்தைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இதில் எவ்வழியை நீ வளர்ந்து ஏற்கப்போகிறாய்; எந்த வழியில் பயணிக்கப்போகிறாய் என்பதை நீதான் முடிவெடுக்க வேண்டும். அது உன் உரிமை.
ஆனால், நாம் இந்த இடத்தில்தான் அதுவும், இன்னாருக்குதான் பிறக்க வேண்டும், இம்மொழியைத்தான் தாய்மொழியாகக் கொள்ள வேண்டும் என்பது நம்மால் தேர்ந்தெடுக்க முடியாமல் போனதற்குக் காரணம் உண்டு. சிலர் அதனை ஊழ் என்பார்கள். இன்னும் சிலர் நாம் முற்பிறவியில் செய்த வினைக்கேற்ப அது முன்னமே நிர்ணயிக்கப்பட்டது என்பார்கள். அவசியம் நீ அதைத் தேடி அறிய வேண்டும்; தெளிய வேண்டும். ஆம், மகவே!
இம்மொத்தப் பிரபஞ்ச உயிர்த்தொகுதியே தாவர சங்கமத்தால் ஆனது என்பர் நம் மூதாதையர். அதென்ன தாவர சங்கமம் எனக் கேட்கலாம். தாவரம் எனில் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு நகராத நிலைத்திணை (இத்தலைப்பில் உன் தந்தை ஒரு நூல்கூட எழுதியிருக்கிறேன்). சங்கமம் எனில் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு நகரக்கூடிய இயங்குதிணை.
முன்னதற்கு உதாரணமாக, மரம் செடி கொடி புல் பூண்டு பெரணி காளான் பாசியைச் சொல்லலாம். பின்னதற்கு, மனிதர்களாகிய நம்மையும், ஆடு மாடு கோழி குருவி பாம்பு பல்லி ஓணான் கரடி சிங்கம் உள்ளிட்ட மற்ற அனைத்து உயிர்களையும் சொல்லலாம்.
அப்போ, இந்த ஆறு, மலை எல்லாம்? என்று கேட்கலாம். இதற்கும் நம் மூதாதையரில் ஒருவர் பதில் சொல்லியிருக்கிறார். திருவாசகம் என்னும் பக்தித் தமிழ்ப் பனுவலின் முதல் பாடலில்.
‘புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்‘
என்னும் இந்த சிவபுராண வரிகளில், பறவைக்கும் பாம்புக்கும் அடுத்தபடியாக மனிதருக்கும் பேய்க்கும் முன்னதாக கல்லினைக் குறிப்பிட்டு, அதற்கும் உயிருண்டு, அது ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு நகராத நிலைத்திணை என்று சொல்லியிருக்கிறார், அப்பாடலைப் பாடிய மாணிக்கவாசகர்.
அவ்வகையில் பார்த்தால் ஆறுகள் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு நகரக்கூடிய இயங்குதிணை, மலைகள் நகராத நிலைத்திணை.
இங்கே இவ்வரிகளில் மிக முக்கியமான இன்னொன்றையும் நாம் நுணுக்கமாகப் பார்க்க வேண்டும். தாவரம், நீர்வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, மனிதர், தேவர் என்னும் ஏழுவகையான பிறவியையும்… உயிர், தாவரப் பொருளாயிருந்து அறிவு வளர்ச்சிக்கேற்ப சங்கமப் பொருள்களில் தேவர் ஈராக உயர்ந்து பிறவி எடுப்பதையும் அவ்வளவு அழகாகப் பாடியிருப்பார் மாணிக்கவாசகர்.
தாவர சங்கமத்தை நிலைத்திணை இயங்குதிணை என்றதுபோல் அசரம் சரம் என்றும் சொல்வர். இதைப் பற்றியும், இதனை மையமாகக் கொண்டும் ‘தாவர சங்கமம்’ என்ற பெயரில் ஒரு நூல் எழுதி வருகிறேன். அவசியம் அதை நீ வாசிக்க வேண்டும்.
அதேபோல, இப்புவியெங்கும் அதிலும் குறிப்பாக, நீ பிறந்திட்ட இந்த தென்இந்தியாவில், நீ பயணித்துக் கண்டிட எண்ணற்ற கலைச்செல்வங்கள் நிறைந்து கிடக்கின்றன. அவற்றையெல்லாம் என்போன்ற மிகச் சிலர் மட்டுமே ஆர்வத்துடன் அறிந்துகொண்டு பொருட்படுத்திப் போய் பார்த்துவருகிறார்கள். அவற்றின் அருமை பெருமைகளை எழுதியும், பேசியும் மற்றவர்களுக்கும், வரும் தலைமுறையினருக்கும் பகிர்ந்து வருகிறார்கள். நிச்சயம் நீ எங்களில் ஒருவராய் இருப்பாய் என்று நம்புகிறேன். ஆம், மகவே!
இந்த அரிய பெரும் வாழ்வை எப்படி வேண்டுமானாலும் வாழலாம்தான். ஆனால், இப்படித்தான் அர்த்தமுள்ள முறையில் வாழவேண்டும் என்று ஒரு வழி உள்ளது. அதை வெகுசிலர் மட்டுமே உணர்ந்து வாழ்கிறார்கள். அது ஒருவருக்கு அவர் வளரும் சூழலும், கிடைக்கும் கல்வியும், கலை இலக்கிய அறிமுகமும் வசதி வாய்ப்புகளும்தான் தீர்மானிக்கின்றன.
உனக்கு வேண்டிய எல்லாவற்றையும் முடிந்தவரை நன்முறையில் வழங்கிட இதோ, இந்த அப்பாவும் அம்மாவும் இருக்கிறோம். அதுமட்டுமல்ல… உன்னோடு சேர்ந்து விளையாடவும், கதை பேசவும், ஊர் சுற்றவும் ஆவலோடு எப்போதும் காத்திருக்கிறோம்.
உனக்கான அழகிய வாழ்க்கை ஒன்று இங்கே உனக்கே உனக்காகக் காத்திருக்கிறது. அதில் நீ நடந்து சுற்றித் திரிய அழகழகான இடங்களும் பாதைகளும், நீச்சல் பழகி குதித்துக் குளித்து மூழ்கி விளையாடிட ஆறுகளும் ஏரிகளும் குளங்களும் கிணறுகளும் குட்டைகளும் கால்வாய்களும், ஏறி உட்கார்ந்து ரசித்து மகிழ்ந்திட மரங்களும் மலைகளும் குன்றுகளும், கண்டு சுகித்திட எண்ணிலா காட்சிகளும், உண்டு சுவைத்திட காய்களும் கனிகளும், வேண்டியமட்டும் பருகிட தேனும் சுனைநீரும் இளநீரும்… நிறைந்து கிடக்கின்றன.
நீ பிறந்திட்ட இத்தமிழ்நாடு உலகின் மிக அரிதான நிலப்பரப்புகளில் ஒன்று. குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்னும் ஐந்திணைகளும் கொண்டது. விதவிதமான தாவரங்களும், மிகச் சிறு உயிர்கள் முதல் பெரும் ஜீவராசிகள் வரையான சங்கமங்களும் ஒருங்கே வாழும் இடம்.
உலகிலேயே நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு என்று சொல்லக்கூடிய ஐம்பூதங்களுக்கும் கோயில் கட்டி வணங்கிடும் மண். ஆயிரக்கணக்கான நெல் முதலிய தானிய வகைகளும், மாடு முதலிய உயிரின வகைகளும் நிரம்பப் பெற்ற புண்ணிய தேசம்.
பல மகான்கள் அவதரித்த நன்னிலம். பெரிய பெரிய அற்புதங்கள் நிகழ்ந்த உயர் பூமி. நால்வகை தெய்வங்கள் உறையும் ஆச்சர்ய இடம். ஆம் மகவே, ஆம்!
நீ பிறந்திட்ட இந்த மண் மட்டுமல்ல… தாய்மொழியாய்க் கொண்டிட்ட தமிழ்மொழியும் பல பெருமைகளுக்குச் சொந்தமானது. உலகின் மிக மூத்த மொழிகளில் ஒன்று. மனிதர்களுக்கு மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் முதலான மொழிகளுக்கும் தாய்மொழி.
எண்ணற்ற இலக்கிய இலக்கணங்கள் மிக்கது. ஈராயிரம் ஆண்டுகள் பழைமையான அழியா இலக்கியங்களைக் கொண்டது. தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகியும் இளமையுடன் இருப்பது. உலகில் வேறெந்த மொழியிலும் இல்லாத அளவுக்கு படைப்புச் சாதனைகள் கண்டது.
எனதன்பு மகவே… இப்பெருமை மிக்க மண்ணில் அவதரித்து, இத்தன்னரும் மொழியை பேசப்போகும் உன் அமுதூறும் நாவுக்கும், எழுதப்போகும் உனது பிஞ்சு விரல்களுக்கும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு. சுழலும் இந்த பூமியைச் சுற்றித் திரியப்போகும் உன் சின்னக் கால்களுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு. அரிய பல கலைச்செல்வங்களையும், இலக்கண இலக்கியங்களையும் கண்டு வாசித்து மகிழப்போகும் உனது கூர் விழிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு. நிகரில் இயற்கையின் சுவைமிகு இசையை கேட்கப்போகும் உன் ஓரிரண்டு செவிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு. ஞாலத்திலுள்ள மலர்களின் மணங்களையெல்லாம் நுகரப்போகும் உனது ஒற்றை நாசிக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு.
எம்மை தாய் தந்தையாக்கிய நன்முத்தே; உன் வாழ்வை விருப்பம் போல வாழ வந்திட்ட உயர்மாணிக்கமே; இந்த எழுத்தாளனுக்கு மகவாய் பிறந்திட்ட பேரிலக்கியமே; இல்லாத சொற்களையெல்லாம் பேசி வியத்தப்போகும் பொற்சிலையே; உம்மோடு சேர்த்து எம்மையும் வளர்த்திடப்போகும் சியமந்தகமே… உனக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு!
*