3 – தலைமுறைப்பாடம்

நீ பிறக்கும்போது உன் தாத்தாவுக்கு 99 முடிந்து 100 வயது நடந்துகொண்டிருந்தது. இதுவரை அவருக்கு எத்தனையோ பரிசுகள் தந்திருக்கிறேன். அவற்றில் முதன்மையானதாகப் பலரும் சொல்வது அவரது 95 ஆவது பிறந்தநாளுக்கு அவர் பற்றி எழுதித் தந்த நூலைத்தான்.
எனக்கும் ஆரம்பத்தில் அப்படித்தான் தோன்றியது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல இல்லை, அவரது நூறாவது பிறந்தநாளுக்கு அதைவிட பெரிய, உயரிய ஒரு பரிசைத் தரவேண்டும் என்று மனத்தில் பட்டதால் இதோ, உன்னைத் தரப்போகிறேன். ஆம், மகவே!
நூறாண்டுகள் வாழும் ஓர் அதிசய மனிதருக்கு, அவரது இளைய மகனாக இதைவிட இனி என் வாழ்வில் உயர்ந்த பரிசொன்றைத் தரமுடியும் என்று தோன்றவில்லை.
உன் தாத்தா சாமிக்கண்ணு, ஓர் எளிய மனிதர். எப்போதும் மண்ணோடும் மக்களோடும் ஆடு மாடு கோழி, மரம் செடி கொடி என இயற்கையோடும் வாழும் உன்னத விவசாயி. ஊர்க் கோயிலில் பூசாரியாகவும், தெருக்கூத்துக் கலைஞராகவும் இருந்தவர். பல்லாயிரக்கணக்கான ஆடு மாடுகளுக்கு வைத்தியம் பார்த்தவர்; பார்ப்பவர். அதுமட்டுமின்றி மனிதர்களுக்கும் தன்னாலான வைத்தியங்களைச் சொல்பவர்; செய்பவர். இந்த நூற்றாண்டின் மகத்தான மனிதராக நான் கருதுபவர்.
உன் பாட்டி வெள்ளையம்மாள், பெரும் உழைப்பாளினி. திருவண்ணாமலை மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் தென்புறத்துக் கிராமமான திருவடத்தனூரில் வாழ்ந்து வருபவர். இந்த 85 வயதிலும் யாரையும் சார்ந்திராமல் தன்மானத்தோடு வாழ்பவர்.
உனக்கு இந்த அப்பா வழியில் மட்டும் நான்கு பெரியப்பாக்கள், மூன்று பெரியம்மாக்கள், ஓர் அத்தை மாமா. தவிர, நிறைய அண்ணன்களும், அக்காக்களும், மாமாக்களும். உன் அம்மா வழியில் தாத்தா சேகர், பாட்டி இசைவள்ளி, இரண்டு பெரியம்மா பெரியப்பாக்கள். நான்கு அண்ணன்கள்.
இவர்களோடு உன் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இவ்வாழ்வில் எங்கெங்கிருந்தோ அன்பால் கிடைத்திட்ட நிறைய பெரியப்பாக்களும் பெரியம்மாக்களும், சித்தப்பாக்களும் சித்திகளும், அத்தைகளும் மாமன்களும், தாத்தாக்களும் பாட்டிகளும், அண்ணன்களும் அக்காக்களும், முறைப் பெண்களும் பையன்களும் இருக்கிறார்கள். ஆம், மகவே!
மிகப் பெரும் குடும்பத்தில் பிறந்திட்ட உனக்கு, முந்தைய ஐந்து தலைமுறையினை இங்கே அறிமுகப்படுத்தப்போகிறேன். நாளை யாராவது உன்னிடம் வந்து, ‘உன் முந்தைய தலைமுறையினர் யார்?’ என்று கேட்டால், தயங்காமல் பெருமையுடன் சொல்.
‘நான் முதல் தலைமுறை. என் தந்தை தாய் வடிவரசு – கோமதி இரண்டாம் தலைமுறை. பாட்டன் பாட்டி சாமிக்கண்ணு – வெள்ளையம்மாள் மூன்றாம் தலைமுறை. பூட்டன் பூட்டி நாராயணக்கவுண்டர் – நெல்லம்மாள் நான்காம் தலைமுறை. ஓட்டன் ஓட்டி ராமசாமிக்கவுண்டர் – ரேணுகாம்பாள் ஐந்தாம் தலைமுறை. சேயோன் சேயோள் காத்தவராயக்கவுண்டர் – முத்தம்மாள் ஆறாம் தலைமுறை.’
‘அவர்கள் என்ன செய்தார்கள்?’ என்று கேட்டால், ‘இவர்களில் என் அப்பா அம்மாவைத் தவிர எல்லோரும் விவசாயிகளாகவும், விவசாயக் கூலிகளாகவும் கூடவே, ஊர்க் கோயிலில் பூசாரியாகவும், இயற்கை வைத்தியராகவும், தெருக்கூத்துக் கலைஞராகவும் இருந்தவர்கள்’ என்று சொல்.
இன்றைக்குப் பலருக்கு தம் தாத்தா பாட்டிகளின் பெயர்களுக்கு மேல் தெரிவதில்லை. ஆனால் உனக்கு, சேயோன் சேயோள் வரைக்கும் அறிமுகம் செய்திருக்கிறேன். இவர்களை உன் தாத்தா எனக்கு அறிமுகப்படுத்திவைத்தார். நாளை நீயும் உன் பிள்ளைகளுக்கு மறக்காமல் அறிமுகம் செய்துவை. நாம் யார், நம் குடும்பப் பின்னணி எது, நம் முன்னவர்கள் எல்லாம் என்ன செய்தார்கள் என்பது மிக முக்கியமானது.
உன் தாத்தாவும் பாட்டியும் என்னிடம் எவ்வளவோ கதைகள் சொல்லி இருக்கிறார்கள். பல அரிய மருத்துவத் தகவல்களையும், வாழ்க்கைப் பாடங்களையும் கற்றுத் தந்திருக்கிறார்கள். படிக்கவில்லை என்றாலும், படிக்காத மேதைகளாகவே அவர்கள் எப்போதும் என்முன்னால் இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள்.
வாழ்வில் எத்தனையோ கஷ்ட நஷ்டங்களைக் கண்டவர்கள்; கடந்து வந்தவர்கள். அதனால் அவர்களைப் பற்றி நீ தெரிந்துகொள்வதை மிக முக்கியமாக நினைக்கிறேன்; பார்க்கிறேன்.
ஓர் உதாரணம் சொல்கிறேன், கேள். கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் கொரோனா வீடடைவு காலத்தில், எல்லோரும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வீட்டுக்குள் அடைந்துகிடந்த நேரத்தில், ஊரிலிருந்து நகர்பேசியில் அழைத்திருந்தார்கள்.
“எப்பா, ஏதோ கொர்னா வர்துன்னு டிவில பயங்காட்றாங்க. பாத்து பத்தரமா இருங்கய்யா” என்றார் உன் பாட்டி.
“வீட்லதாம்மா இருக்கோம். எங்கயும் வெளிலலாம் போவல. அதனால பயப்பட வேணாம்” என்றேன் நான்.
அப்போது எனக்கும் உன் அம்மாவுக்கும் திருமணம் ஆகவில்லை. நான் ஒரு நண்பரோடு அறையில் தங்கியிருந்தேன்.
“சரி, சாப்பாட்டுக்கு என்னப் பண்றீங்க…?”
“கேஸ் அடுப்பு இருக்கு. அரிசி கொஞ்சம் வாங்கி வச்சிருக்கோம். ஏதோ எங்களுக்கு தெரிஞ்ச சமயல வச்சி ஓட்டிட்ருக்கோம்.”
உடனே சொன்னார். “நாங்கலாம் எந்த கேசு அடுப்பக் கண்டோம். அதெல்லாம் வர்றதுக்கு முன்னாடி வெறவு அடுப்புல… நம்ம ஊர்ல கெடக்கிறத வச்சி சமச்சி சாப்டோம். அப்பலாம் எந்தக் கொர்னா வன்ச்சி? இன்னிக்கி கண்டத திங்கறாங்க. அதான் கண்டகண்ட நோவுலாம் வர்து.” அமைதியாக கேட்டுக்கொண்டேன்.
பிறகு பேசிய உன் தாத்தா, “எப்பா… மொதல்ல எந்தப் பயமும் இல்லாம ஒன் வேலயப் பாரு. சாப்பாட்டுல மஞ்சத் தூள் நல்லா சேத்து சாப்டு. எலுமிச்சம் பழம் கெடச்சா தெனம் ஒரு பழம் கசக்கி சக்கர போடாமக் குடி. பக்கத்துல வேப்பமரம் இருந்தா வெறும் வவுத்துல நாலு துளுத்த எலய பறிச்சித் தின்னு. வெளில போயிட்டு வந்தன்னா… மஞ்சத்தூள் கலந்த தண்ணீல கையக் கால நல்லாக் கழுவு. முடிஞ்சவரைக்கும் இத உன் கூட்டாளிங்களுக்கும், மத்தவங்களுக்கும் சொல்லி செய்யச் சொல்லு. அப்பறம் ஆண்டவன் வுட்ட வழி” என்றார். மகிழ்ந்து நெகிழ்ந்துபோனேன்.
இதைத்தான் அந்த வீடடைவு காலத்தில் தினந்தோறும் செய்து வந்தோம். முடிந்தவரை அவர் சொன்னதுபோல் தெரிந்தவர்கள் எல்லோரிடமும் சொல்லி பின்பற்றச் சொன்னேன்.
எத்தனை உயர்ந்த எண்ணம் பார்த்தாயா? தம் மகனான என்மீது மட்டும் அவர்கள் அக்கறை காட்டவில்லை. என் போன்ற எல்லோர் மீதும் காட்டினார்கள்.
இப்படித்தான் எப்போதும் அவர்கள் போகிற போக்கில் எத்தனையோ அரிய பல விஷயங்களை மிகச் சாதாரணமாக சொல்லிவிட்டுப் போவார்கள். அவர்களிடமிருந்து கற்றவற்றைத்தான் என் முதல் நூல் தொடங்கி எல்லா நூல்களிலும் எழுதுகிறேன். வாழ்வின் முக்கிய கட்டங்களில் எல்லாம் பின்பற்றி வருகிறேன். ஆம், மகவே!
உன் தாத்தா இதுவரை யாரிடமும் சொல்லாமல் என்னிடம் மட்டும் சொன்ன ஒரு விஷயத்தை இதோ, முதல் தடவையாக உன்னிடம் சொல்கிறேன், கேள்.
கடந்த மே மாதம் ஐந்தாம் தேதி சித்திரை பெளர்ணமியன்று, ஊருக்குப் போய் உன் தாத்தாவைப் பார்த்துவிட்டு வந்தேன். அப்போது அவருக்கு கையில் அடிபட்டு கட்டு போட்டிருந்தார்கள்.
மிகுந்த வலியோடு இருந்தவருக்கு, அன்று இரவு கடும் காய்ச்சல் வந்துவிட்டது. எங்கே, சொன்னால் எல்லோரும் சங்கடப்படுவார்களோ என நினைத்து யாரிடமும் சொல்லாமல் படுத்திருந்தவருக்கு, திடீரென்று இன்னும் கொஞ்சநேரத்தில் தாம் இறக்கப்போகிறோம் என்ற எண்ணம் வந்திருக்கிறது.
எழக்கூட முடியாமல் தான் வாழ்ந்த வாழ்வை நினைத்துப் பார்த்தவரை, திடுமென நான்கைந்து பேர் வந்து கூப்பிட்டு, ‘ஏன்ச்சி வா, தாத்தா… மன்மதன் தேரு நம்மத் தெருவுக்கு வந்துருச்சி. நீ வந்து ரண்டு பாட்டுப் பாடு, தாத்தா…’ என்று சொல்ல, நொடியில் அவர் சிந்தை மாறி மனம் உற்சாகமாகிவிட்டது.
உடனே எழுந்து உட்கார முற்பட்டிருக்கிறார். முடியவில்லை. அதைக் கண்டவர்கள், ‘இரு தாத்தா’ என்று கைத்தாங்களாகத் தூக்கி மெல்ல அங்கிருந்து நடக்கவைத்து, தெருமுனையில் வந்து நின்றிருந்த மன்மதன் தேர் முன்னால் அழைத்துப்போய் நிறுத்தி கற்பூரம் ஏற்றிக் காட்ட, தான் இன்னும் கொஞ்ச நேரத்தில் மரணித்துவிடுவேன் என நினைத்தவர், ஏதோ அருள் வந்தவர் மாதிரி, ‘முந்திப் பிறந்தவனே / முக்கண்ணன் தன்மகனே / கந்தனுக்கு முன்பிறந்த கணபதியே முன்னிடவா…’ என்று பாட ஆரம்பித்திருக்கிறார்.
ஒன்றல்ல, இரண்டல்ல. சுமார் அரைமணி நேரத்திற்கு விடாமல் பதினைந்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார்.
சுற்றிலும் கூடி நின்று வேடிக்கை பார்த்த ஊர் மக்கள், தெய்வமே நேரில் வந்து பாடியதுபோல் அதிசயித்துப்போய் கையெடுத்துக் கும்பிட்டும், அவர் காலில் விழுந்தும் ஆசி பெற்றிருக்கிறார்கள்.
காய்ச்சல் களைந்து, கை வலி குறைந்து, மரண எண்ணம் ஒழிந்து, பெரும் குதூகலத்துடன் அங்கிருந்து வீட்டுக்கு வந்ததை, சென்ற செப்டம்பர் ஒன்றாம் தேதி அவரது 99 ஆவது பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லி ஆசிபெறப் போயிருந்தபோது சொன்ன உன் தாத்தா, ”அன்னிக்கி மட்டும் மன்மதன் பாட்டுப் பாட என்னக் கூட்டுனு போவாம இருந்திருந்தா… செத்துதான் போயிருப்பன்’’ என்றார்.
ஒன்றும் பேசாமல் எண்ணமிழந்து அமர்ந்திருந்த என் முகத்தைப் பார்த்து சொன்னார். ”நமக்குப் புடிச்சத செஞ்சா… கிட்ட வந்த சாவு கூட எட்ட போயிடும்.’’ கேட்டதும் சிலிர்த்திட்டேன்.
எத்தனை உயரிய வார்த்தைகள். அதுவும் தன் பெயரைத் தவிர வேறு எதுவும் எழுதப் படிக்கத் தெரியாத ஒரு கிராமத்து மூத்த மனிதரிடம் இருந்து உதித்தது. ஆம், மகவே!
பெரியோர்கள் நமக்குக் கிடைத்த பெரும் பொக்கிஷங்கள். அனுபவங்களால் கனிந்து நிறைந்தவர்கள். அரிய பாடமாக இருப்பவர்கள். இதை என்றும் மறவாதே.
அவர்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் செவி சாய். அவர்களை எந்நாளும் மதித்துப் போற்று. அவர்களது நிறைகளைக் கொண்டாடு. குறைகளை விட்டொதுக்கு. முடிந்த எல்லா உதவிகளையும் அவர்களுக்காக முன்நின்று செய். அவர்களின் ஆசி நிச்சயம் உன்னை வாழ்வாங்கு வாழவைத்திடும்!
*