2 – ஈரக்கவிதை

உனக்கு ஒன்று தெரியுமா? இந்தத் தந்தையை, உன் அன்னை அளவுக்கு புரிந்தவர்; நேசிப்பவர் யாருமே இல்லை. அதனால்தான் அவள் என்னை துரத்தித் துரத்திக் காதலித்தாள். அவளது காதலை உணர்ந்ததால்தான் நானும் அவளை மனத்தார காதலித்தேன். இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டோம்.
அதுவும் எங்கே, எப்படித் தெரியுமா? சென்னை – வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவரை சாட்சியாக வைத்து, மிகச் சில அன்பர்கள் சூழ, ‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை / பண்பும் பயனும் அது’ என்னும் திருக்குறளை வாசித்து, பனை மாலை சூடி, அகரத்தாலி அணிவித்து.
உலகில் இதுவரை வெளியான நூல்களில் மிகச் சிறந்தது எது என்று கேட்டால், நொடியும் தாமதிக்காமல் திருக்குறள் என்பேன். படைப்பாளி அதனைப் படைத்த திருவள்ளுவரைச் சொல்வேன். அந்த அளவுக்கு தன்னிகரற்ற படைப்பு. உலகப் பொதுமறை, தமிழ்மறை, முப்பால், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து. அதனால்தான் நாங்கள் அப்படைப்பாளிக்காக எழுப்பிய கோட்டத்தில், அவரையே சாட்சியாக வைத்து, அவர் படைத்த குறளை மந்திரமாய் ஓதி மணம் செய்துகொண்டோம்.
தமிழ் எழுத்தாளனான உன் தந்தை, பெரும் கனவுகள் கொண்டவன். கடந்த 2019 ஆம் ஆண்டு, உனது தாத்தாவின் 95 ஆவது பிறந்த நாளுக்கு, அவர் குறித்து ‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதிப் பரிசாகத் தந்தவன். அதுதான் அவனது முதல் நூல். அதைத் தொடர்ந்து கட்டுரை, கவிதை, நாவல், கடிதம், தனிப்பாடல் எனப் பல நூல்களும், பாடல்களும் எழுதியவன்; எழுதுபவன். அது மட்டுமின்றி பல அரிய புத்தகங்களைத் தேடித்தேடி வாசிப்பவன். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் எட்டுத்திக்கிலும் பயணிப்பவன். இன்னும் இன்னும்…
இயன்முறை மருத்துவரான உன் அன்னை, பணத்தைக் காட்டிலும் மருத்துவ சேவை முக்கியம் என எண்ணுபவள். என்னோடு சேர்ந்து பல அரிய புத்தகங்களை வாசிப்பவள். இதோ, இந்நூலைத் தவிர்த்து நான் எழுதும் அனைத்தையும் முதல் வாசகியாக இருந்து படிப்பவள். பல முக்கிய படங்களைத் தேடிப் பிடித்து பார்ப்பவள். அவ்வப்போது என்னுடன் பயணிப்பவள். இவை அத்தனைக்கும் மேலாக, குறைந்தது பத்து நாட்களுக்கு ஒரு தடவையாவது என்னுடன் தவறாமல் செல்லச் சண்டையிடுபவள். இன்னும் இன்னும்…
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் (கடந்த மூவாண்டுகளாக சனிக்கிழமை) சென்னை – கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு படிக்கப்போகும் என்னுடன், உன் அம்மாவும் சென்ற ஐந்தாண்டுகளாக சேர்ந்துகொண்டாள். பல்லாயிரம் புத்தகங்கள் இருக்கும் அவ்விடத்திற்கு உன்னையும் சீக்கிரத்தில் கூட்டிப் போவேன். உனக்கும் அந்த இடம் மிகப் பிடிக்கும். ஆம், மகவே!
புத்தகம், நூலகம் பற்றியெல்லாம் நான் தெரிந்துகொண்டது, அதன் மகத்துவம் உணர்ந்தது எல்லாம் மிகமிகப் பிந்திதான். அதாவது, எனது இருபது வயதைக் கடந்த பிறகுதான். ஆனால் உனக்கு, பிறந்த உடனேயே புத்தகத்தை கையில் தந்திருக்கிறேன்; அறிமுகம் செய்திருக்கிறேன்.
புத்தகம் என்னும் இந்த மகத்தான மானுடக் கண்டுபிடிப்பை மட்டும் நீ துணைக் கொண்டால், உன் வாழ்வில் அனைத்தையும் மேன்மையுற அடைந்திடுவாய். மற்றவர்களைக் காட்டிலும் தனித்த ஆளுமையாய் உயர்ந்திடுவாய். அதனால்தான் நானும், உன் அம்மாவும் நல்ல நல்ல புத்தகங்களைத் தேடித்தேடி வாசிக்கிறோம். எங்களுக்காகவும், நாளை உனக்காகவும் பல அரிய நூல்களை வாங்கி வீட்டிலேயே சிறு நூலகம் ஒன்றை அமைத்திருக்கிறோம். ஆம், மகவே!
நீ உன் அம்மாவின் வயிற்றில் இருக்கும்போது வேடிக்கையாக அவளிடம் நான் சொல்வதுண்டு. ”நீ வேணா பாரு, மதி… நம்ம பாப்பா பொறக்கும்போதே… ‘அகர முதல எழுத்தெல்லாம்’னு சொல்லினு பொறக்கப் போகுது.’’
பதிலுக்கு அவள் பெரிதாய் சிரித்துக்கொண்டு சொல்வாள். ”உன் புள்ளயாச்சே… சொன்னாலும் சொல்லும்.’’
உன் அம்மா என்னைக் காதலிப்பது அவள் வீட்டுக்குத் தெரிந்ததும், என்னென்னவோ சொல்லி என்னை மறந்துவிட்டு, அவர்கள் பார்க்கும் நபரை திருமணம் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். அவளோ, தன் முடிவில் கடைசிவரை உறுதியாக இருந்ததைப் பார்த்தவர்கள், ‘உனக்கு அவன்தான் வேணும்னா… இதோட எங்களலாம் மறந்துட்டுப் போயிடு. பொங்கல், தீபாவளின்னு… இனி எந்த நல்லது கெட்டதுக்கும் வீட்டுப் பக்கம் வரக்கூடாது’ என்றிருக்கிறார்கள்.
உடனே அவள் என்ன செய்தாள் தெரியுமா? ‘சரி’ என்று தலையாட்டிவிட்டு, இந்த அப்பாவுக்காக எல்லாவற்றையும் நொடியில் தூக்கிப் போட்டுவிட்டு வந்துவிட்டாள்.
இத்தனைக்கும் நான் அப்போது அவளிடம் எனது காதலைக்கூட சொல்லவில்லை. எப்படியும் சொல்லிவிடுவேன் என்று அத்தனை நம்பிக்கை அவளுக்கு. அதனால்தான் அவளை எப்போதும் ‘பெரும் காதல்காரி’ என்று சொல்வதுண்டு. அவளுக்காக ‘அடியே காதல்காரியே’ என்று ஒரு பாடல்கூட எழுதி இருக்கிறேன்.
எனது காதலைக் கேட்டிட உன் அம்மா எவ்வளவு ஆசையோடு நான்கரை ஆண்டுகளாகக் காத்திருந்தாளோ, அதே அளவுக்கு, இன்னும் சொல்லப்போனால் ஒருபடி கூடுதலாக, ஆசையுடன் உன்னைத் தன் கரங்களில் ஏந்திடும் நாளுக்காகக் காத்திருந்தாள்.
அவள் மட்டுமல்ல… இதோ, இந்த அப்பாவும் உன்னைத் தன் கைகளில் ஏந்திட, ஆசை முகம் கண்டிட, அதில் அரும்பும் கவின் சிரிப்பை ரசித்திட, அள்ளி மார்போடு அணைத்திட, உச்சி முகர்ந்திட, உனது பிஞ்சு விரல்களைப் பற்றிட… இத்தனை நாட்களாகக் காத்திருந்தேன்.
நீ கருவுற்று நான்காம் மாதம் நிறைகையில் ஒருநாள் அந்திப்பொழுது, முதல் தடவையாக நீ உன் அம்மா வயிற்றில் உதைத்ததாக என்னைக் கூப்பிட்டு பூரிப்புடன் காட்டினாள்.
”அப்டியா?’’ என்று ஆனந்தித்து ஓடிவந்து, நீ இருக்கும் வயிற்றைத் தொட்டு வருடி முத்தமிட்டேன்.
அதுமுதல் உன் இருப்பை இந்த அப்பாவுக்கும் காண்பிப்பாய் என்று ஆசையுற்று வயிற்றின் மீது அடிக்கடி கை வைத்துப் பார்த்தேன். ம்… ஹூம். ஒருதடவைகூட காட்டவே இல்லை.
தொடக்கத்தில் என்றாவது ஒருநாள் உதைத்த நீ, ஐந்தாம் மாதத்தில் அவ்வப்போது உதைக்க ஆரம்பித்தாய். ஆறாம் மாதம் அது இன்னும் அதிகமானது.
இதை உன் அம்மா ஒவ்வொரு தடவை சொல்லும்போதும் எனக்குள் ஏக்கமாக இருக்கும். இருந்தாலும் அதனை வெளியே காட்டிக்கொள்ளாமல், நிச்சயம் நீ சீக்கிரமே உன் இருப்பை எனக்கு மட்டும் தனித்துக் காண்பிப்பாய் என்று காத்திருந்தேன். ஆம், மகவே! எனது நம்பிக்கை வீண் போகவில்லை.
ஆறாம் மாதத்தின் இரண்டாம் வாரத்தில், அதுவும் செப்டம்பர் ஐந்தாம் தேதி ஆசிரியர் தினத்தன்று, நான் வயிற்றில் கை வைத்து உன்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ‘தொப்’ என்று பதில் சொல்வதுபோல் வேகமாக ஓர் உதை உதைத்தாய். அப்படியே சிலிர்த்து ஆர்ப்பரித்துப் போனேன்.
அதுநாள்வரை நீ அத்தனை உறுதியாக உனது இருப்பைக் காட்டியதில்லை என்று உன் அம்மா ஆச்சர்யத்துடன் சொன்னாள். அப்போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதனால்தான் அந்நாளினையும், அவ்வழகிய தருணத்தையும், அது தந்த சில்லிப்பையும், சிலிர்ப்பையும் எழுதாத ஈரக்கவிதையாய் உள்ளத்துள் சேமித்து வைத்திருக்கிறேன்.
அடிக்கடி உன் அம்மா சொல்வாள். ”இவ்வளவு நேரம் இருக்கற இடமே தெரியாம இருந்தது. உன் குரல் கேட்டதும் வந்துடிச்சி.’’ கேட்கவே இன்பமாக இருக்கும்.
இன்னொன்றையும் சொல்வாள். ”நானும் பலவாட்டி பார்த்துட்டேன், பட்ட்டு… ஒவ்வொருமுறை உன் முன்னாடி கால்மேல காலப்போட்டு உட்கார்றப்பயும்… பாப்பா வந்து எட்டி உதைக்குது. சரியான அப்பா புள்ளயா இருக்கும் போல.’’ எதுவும் சொல்லாமல் மனத்துள் ஆடி சிரித்துக்கொள்வேன். ஆம்!
நீ என்னை தந்தை ஆக்கினாய். நானோ உன்னை இப்பூமியில் சிறந்ததொரு பிள்ளையாய் நிச்சயம் ஆக்கிடுவேன் மகவே.
‘தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.’
இது நம் வள்ளுவத் தாத்தன் எனக்காகவும்; என்னைப் போன்ற தந்தையர்களுக்காகவும் சொன்னது.
‘மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.’
இது உனக்காகவும்; உன் போன்ற பிள்ளைகளுக்காகவும் சொன்னது.
*