1 – பிறப்பொக்கும்

‘உதிரத்தில் உயிர்ப்பித்த –
தந்தை தாயின் முன்னே…
உலகத்தில் உதித்திட்ட –
எல்லாம் அதன் பின்னே…’
இந்த வரிகளை சில ஆண்டுகளுக்கு முன்னால் கவிஞர் ரவிசுப்பிரமணியன் அவர்கள் தாய் தந்தை பற்றி ஒரு பாடல் கேட்க எழுதினேன். இப்போதோ… உன்னால் தந்தையாகி, இதோ,
‘உதிரத்தில் உயிர்த்திட்ட –
பிள்ளையின் முன்னே…
உலகத்தில் உதித்திட்ட –
எல்லாம் அதன் பின்னே…’
என்று அதையே சிறிது மாற்றி எழுதியிருக்கிறேன். ஆம், மகவே!
இந்தப் பூமிக்கு வரும் உனக்கு, ஒரு தந்தையாக நான் முதன்முதலில் சொல்ல நினைப்பது இதுதான் :
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.’
ஐயன் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உரைத்திட்ட இந்த ஏழு வார்த்தைகளைத்தான். ஆம்!
இவை எத்தனை உயரிய வார்த்தைகள்! இவற்றுக்குள் எத்தகைய உயர்ந்த வாழ்க்கைப் பாடம் பொதிந்திருக்கிறது தெரியுமா?
‘பிறப்பால் அனைவரும் சமமே; அவரவர் செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்.’
இந்த ஒற்றைப் பாடத்தை நீ உன் வாழ்வில் முதலில் கற்க வேண்டும். அதன்படி வாழும் நாளெல்லாம் நிற்க வேண்டும் என்று மனத்தார விரும்புகிறேன். ஏனென்றால், இப்பாடம் உன்னை என்றும் நற்பிள்ளையாக; நல் மனிதராக இருக்கவைக்கும்; வாழவைக்கும். ஆம், மகவே!
உனக்கொன்று தெரியுமா? உன் அப்பா நானும், அம்மா கோமதியும் உனது இருப்பை எத்தனை மகிழ்வோடு முதன்முதலாக அறிந்துகொண்டோம் தெரியுமா?
எங்களுக்கு காதல் திருமணம் நடந்து முடிந்து ஈராண்டுகள் பொருளாதார சூழலைக் காரணம் காட்டி குழந்தை வேண்டாம் என்று தள்ளிப்போட்டு வந்தோம். பிறகு ஒருநாள், ‘இதற்கு மேலும் தள்ளிப்போட வேண்டாம்’ என்று முடிவெடுக்க, அடுத்த ஓரிரு நாட்களிலேயே நீ கருவுற்றாய்.
நன்றாக நினைவுள்ளது. அன்று ஏப்ரல் 26, 2023. அப்போது நான் தமிழகத்தில் உள்ள மிகப் பழைமையான பாறை ஓவியங்களில் ஒன்றான பொறிவரை (கரிக்கையூர்) ஓவியம் குறித்து எழுதிக் கொண்டிருந்தேன்.
அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு பணிக்குச் சென்றிருந்த உன் அம்மா, போன வேகத்திலேயே திரும்பி வந்திருந்தாள்.
‘என்ன அதுக்குள்ள வந்துட்ட…?’ என்று கேட்கக் கூட இல்லை. அந்த அளவுக்கு கட்டுரையில் ஆழ்ந்து போயிருந்தேன்.
கதவைத் திறந்துவிட்டு வந்து மடிக்கணினி முன்பாக அமர்ந்து, விட்ட இடத்தில் இருந்து எழுதத் தொடங்கினேன்.
பின்னாலேயே வந்த உன் அம்மா, என்னையும் நான் தீவிரமாக எதுவும் கேட்காமல் வந்து எழுதிக்கொண்டிருந்ததையும் பார்த்துவிட்டு, ”பட்ட்டு…” என்றாள். அப்படித்தான் அவள் என்னை செல்லமாக அழைப்பாள்.
எழுத்திலிருந்து முழுதாக வெளிவராமல், ”சொல்லு மதி…” என்றேன். அவளை நான் அவ்வாறுதான் பெயர் சுருக்கி காதலுடன் அழைப்பது.
இமைப்பொழுதும் தாமதிக்காமல் கையில் வைத்திருந்த சிறு தாளினை நீட்டினாள். என்ன என்பதுபோல் வாங்கிப் பார்த்தேன். அதில் நான் சற்றும் எதிர்பாராத வார்த்தைகளை எழுதியிருந்தாள். அதுவும், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னான தமிழ் எழுத்துருவான தமிழியில்.
‘வடிவரசு
மதி
பாப்பா
2024’
குளிர்மேகம் ஒன்று தவழ்ந்துவந்து முகத்தில் பட்டதுபோல் சிலிர்த்துப்போய் தலைகால் புரியாமல் வேகமாக அண்ணாந்து அவள் முகத்தைப் பார்த்தேன். தாரை தாரையாகக் கண்ணீர் சொட்ட நின்றிருந்தவள், என்னை அப்படியே கட்டிக்கொண்டு, ”நான் அம்மா ஆகப்போறன், பட்ட்டு… நான் அம்மா பட்ட்டு… நான் இப்போ அம்மா பட்ட்டு…’’ என்றாள், சொற்களில் இளந்தாய்மை தோய்த்து.
வானளவு மகிழ்ச்சியில் என்ன சொல்வதென்று தெரியாமல், அதை எப்படி வெளிப்படுத்துவது எனவும் புரியாமல், ”நெஜமாவா?’’ என்று கேட்டேன்.
மிக விரைந்து, ”ஆமா பட்ட்டு…” எனத் தலையாட்டியவள், தன் கையில் வைத்திருந்த மருத்துவ அறிக்கையைப் பிரித்துக் காட்டி, ”தோ, பாரு பட்ட்டு…’’ என்றாள்.
சட்டென வாங்கிப் பார்த்து உள்ளத்துள் குதித்தவனாய் எழுந்து, அவள் நெற்றியில் முதல் தந்தைமை சூடிய முத்தம் பதித்துவிட்டு, அங்கிருந்து அவளை கைப்பிடித்துக் கூட்டிப்போய் நம் வீட்டு பூஜை அறையில் இருந்த நடராஜர் முன்பாக ஒரு கற்பூரம் ஏற்றிவைத்து கண்கள் மூடிப் பிரார்த்தித்தேன்.
பின் நீ எப்போது வருவாய், எப்படி இருப்பாய், என்னிடம் எவ்வாறு பேசுவாய், என்னென்ன குறும்புகள் எல்லாம் செய்வாய் எனக் கற்பூரம் அணையும் வரைக்கும் மனக்கண்ணில் வரிசையாகப் பார்த்துவிட்டு, அணைந்ததும் திருநீறு எடுத்து முதலில் உன் அம்மா நெற்றியிலும், அடுத்து நீ இருக்கும் அவளது வயிற்றின் மீதும் வைத்துவிட்டு, கடைசியாக என் நெற்றியில் சிறிது இட்டுக்கொண்டு வந்து உட்கார்ந்து, விட்ட இடத்தில் இருந்து எழுத ஆரம்பித்தேன்.
பகல் முடிந்து இரவு தொடங்கியதன் அறிகுறியாக அப்போது அறை முழுக்க இருள் வந்து ஒளிந்திருந்தது.
என்ன செய்யப்போகிறேன் என்று காண்பதற்காக பின்னாலேயே வந்து ஆசையோடு பார்த்தவள், நான் எதுவும் செய்யாமல் பழையபடி எழுதுவதைக் கண்டு ஏமாந்துபோய், ”என்ன பட்ட்டு… இவ்வளவு பெரிய விஷயம் நடந்தும், நீ பாட்டுக்கு எதுவும் சொல்லாம… திரும்பவும் வந்து எழுதற’’ சற்று கோபத்துடனே சொன்னாள்.
அவளது கோபத்தின் பெரும் ரசிகனான நான் மெல்லிதாய் புன்னகைத்துக்கொண்டு திரும்பி, அவள் கோப முகத்தைப் பார்த்து கவிதைக் குரலில் சொன்னேன். ”அதுவும் குழந்தைதான்… இதுவும் குழந்தைதான். அந்தக் குழந்தை வரப்போற மகிழ்ச்சிய… நான் இந்தக் குழந்தையோட கொண்டாடுறன்.’’
துளியில் தன் கோபம் களைத்து கவிந்து சிரித்திட்டவள், ”சரி சரி, நீ நடத்து…’’ என்று சொல்லிவிட்டு, அப்போது பயின்ற மென்நடையில் அங்கிருந்து நடந்து நடுவீட்டுக்குப் போனாள். ஆம், மகவே!
உன் தந்தையாகிய எனக்கு எழுத்தும், நீயும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துவதற்காகவும், உனது அன்னை உன் இருப்பை அறிந்தது முதல் கொண்ட தாய்மையின் பூரிப்பைக் காட்டுவதற்காகவும்தான் இதைச் சொன்னேன்.
இப்பிரபஞ்சத்தில் உள்ள எல்லா உயிர்களையும் எனது உறவாக எண்ணி என் படைப்புகளில் எழுதும்போது நான் பெரும் உன்னதன் ஆகிறேன். அதனால்தான் மகவே உனக்கு, மானுட குலத்துக்கே மிகப்பெரும் பாடமாக நான் கருதும் ஐயன் வள்ளுவரின், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா / செய்தொழில் வேற்றுமை யான்’ என்னும் உயரிய; உன்னத வார்த்தைகளை முதல் பாடமாகச் சொல்லித் தருகிறேன்.
இப்பூமியில் பிறந்திட்ட எந்த ஒரு குழந்தைக்கும், எத்தந்தையும் இதுவரை சொல்லிடாத இந்தப் பாடத்தை, எழுத்தாளனான உன் தந்தை உனக்குச் சொல்லி இருக்கிறேன். நிச்சயம் நீ இதனைக் கற்று, இதன்படி எந்நாளும் நிற்பாய்; நற்பிள்ளையாய் இருப்பாய்; வாழ்வாய் என்றும் நம்புகிறேன். ஆம், ஆம்!
*