”மகவேவருக!” – பாடல்
நீ பிறக்கும்போது உன்னை வரவேற்பதற்காக இதோ, உன் அப்பா உனக்காக ஒரு வரவேற்புப் பாடல் எழுதியிருக்கிறேன், பார்!
*
மகவே வருக –
மணியே வருக…
தளிரே வருக – இளந்
தமிழே வருக…
வரமே வருக –
வளமே வருக…
மிசையே வருக – நல்
இசையே வருக…
சுழலும் பூமியை சுற்றித் திரிந்திட –
சின்னக் கால்களே வருக…
தவழும் வானை எட்டிப் பறித்திட –
பிஞ்சுக் கைகளே வருக… (2) (மகவே…)
*
கசக்கும் தமிழை தித்திப்பாக்கிட –
சீரிளம் நாவே வருக…
இருளும் இரவை ஒளிரச் செய்திட –
சுடரும் விழியே வருக…
அலரும் மலரின் குரலைக் கேட்டிட –
அழகுச் செவியே வருக…
குறையும் நாளை நிறையச் செய்திட –
உதிரப் பூவே வருக… (மகவே…)
*
வருக வருக, பொன்மகவே வருக!
வருக வருக, கண்மணியே வருக!
வருக வருக, பசுந்தளிரே வருக!
வருக வருக, இளந்தமிழே வருக!
வருக வருக, உயர்வரமே வருக!
வருக வருக, சொல்வளமே வருக!
வருக வருக, மீமிசையே வருக!
வருக வருக, நல்லிசையே வருக! (வருக…)
*