அரம்பு போற்றுதும் – 036 : வேம்பின் ஒண் பழம்

ஜூன் 28, 2026

*

மாலை ஐந்தரை மணி வாக்கில் அருகில் இருக்கும் பூங்காவுக்குச் சென்றுவிட்டு, அதனை ஒட்டியுள்ள தெருவில் நடந்தபடி எதிர்படும் தாவரங்களின் பெயர்களை வரிசையாக ஐ’க்கு சொல்லி வந்தேன்.

ஓரிடத்தில் ஒரு வீட்டின் முன்பாக சிறிய வேப்ப மரம் ஒன்று இருப்பதை தூரத்திலிருந்தே பார்த்துவிட்டு, அதைக் காட்டி அவனிடம், ”அதோ, அங்க இருக்கே… அது என்ன மரம், பப்பு?’’ என்று கேட்டேன்.

பார்க்காமலேயே அவன், ”தென்ன மரம்’’ என்றான்.

”டேய் பப்பு, சும்மா அடிச்சி விடாம… நல்லா பாத்து சொல்லு.’’

உடனே ஒருதடவை பார்த்துவிட்டு, ”புங்கை மரம்” என்றான்.

அதற்குள் மரம் வந்துவிட்டதால், கீழே போய் நின்று அதன் ஒரு கிளையை பிடித்து சற்று தாழ்த்தி, அதிலிருந்த வேப்பம் பழம் ஒன்றை பறித்து அவன் கையில் தந்து, ”சரி, இது என்ன பழம்னு… இப்போ சொல்லு, பாப்போம்” என்று கேட்டேன்.

அவன் அதற்குமுன் வேப்பம் பழத்தை பார்த்ததில்லை என்பதால், என்ன சொல்லப் போகிறானோ என்று ஆர்வத்தோடு காத்திருந்தேன்.

எந்தப் பிரயத்தனமும் இல்லாமல் சட்டென்று, ”கொண்ணா’’ என்றான்.

அப்படி என்றால் ‘தனக்குத் தெரியாது’ என்பது அவனது சமீப கால பதில். அதாவது, அவனிடம் எது கேட்டாலும், அது அவனுக்குத் தெரியாத பட்சத்தில் ‘கொண்ணா’ என்பான். முன்பு, ‘நேஸ்’ என்றது போல.

உடனே அவனிடம், ”டேய் பப்பு… இதுக்குப் பேருதான் வேப்பம் பழம். வேம்பின் ஒண் பழம்’னு ரண்டாயிரம் வருசத்துக்கு முன்னாடி நம்ம முன்னோர் ஒருத்தர்… இதப் பத்தி நற்றிணையில அழகா பாடியிருக்காரு’’ என்றுவிட்டு மேலும் சொன்னேன்.

”இத, சின்ன வயசா இருக்கும்போது… அப்பா நானு லீவு நாள்ளலாம் போயி, நறையா பொறுக்கி சேத்து காயவச்சி வித்து காசாக்கி… அத எடுத்துனு போயி பக்கத்து ஊர்ல நடக்கற ஆத்துத் திருவிழாவுல ஆசப்பட்டதலாம் வாங்கித் தின்னுவேன், தெரியுமா?’’

எதுவும் கூறாமல் கேட்டுக்கொண்டு, என்னையும் கையில் இருக்கும் பழத்தையும் மாறி மாறிப் பார்த்தான்.

பிறகு அப்பழத்தை பிதுக்கி அவன் வாயை திறக்கச் சொல்லித் தந்து, நன்றாக சப்பித் தின்றுவிட்டு கொட்டையை கீழே துப்பச் சொன்னேன்.  

‘சரி’ என்று தலையாட்டினான்.

சரியாக ஒரு நிமிடம் ஆகியிருக்கும். இன்னும் துப்பாமல் மிகுந்த ஆர்வத்தோடு சப்பித் தின்றுகொண்டிருந்தவனிடம், ”சரி, பப்பு… தின்னது போதும், கொட்டைய கீழே துப்பு’’ என்றேன்.

உடனே, ‘மாட்டேன்’ என்பது போல தலையாட்டினான்.

சட்டென்று அவன் என்ன செய்திருப்பான் என யூகித்துக்கொண்டு, மறுபடியும் துப்பச் சொன்னேன்.

வேறு வழியின்றி இம்முறை துப்புவது போல பாவனை செய்தான். ஆனால், கொட்டை கீழே விழவில்லை.

விடாமல் கேட்டேன். ”டேய் அப்பு… கொட்டைய முழுங்கிட்டயா?”

ஒன்றும் சொல்லாமல் ஆனால், கள்ளமாகச் சிரித்தான்.

பெரும் போராட்டத்துக்குப் பிறகு வாயை திறக்கச் சொல்லிப் பார்த்தேன். எண்ணியது போல உள்ளே கொட்டை இல்லை.

உடனே அவனை பயமுறுத்த நினைத்து அதற்கானக் குரலை வருவித்துக்கொண்டு, ”கொட்டைய கீழத் துப்பாம முழுங்கிட்டயா? போச்சிப் போ. அது வயித்துக்குள்ள போயி… இதோ, இதுமாதிரி பெரிய மரமா முளைக்கப் போகுது’’ என்றேன்.

சட்டென அவன் பயப்படுவதற்கு பதிலாக சிரித்துவிட்டு சொன்னான். ”பழம் தின்னு.’’

அதாவது, ‘முளைத்தால் என்ன, இதுபோல் நிறைய பழம் பறித்துத் தின்னலாம்’ என்கிறான்.

”சரிதான்” என்றுவிட்டு, நான் சிறுவயதில் தெரியாமல் விழுங்கிய வேப்பம் பழத்தையும், அதைப் பார்த்துவிட்டு எங்களூர் சிறார்கள் வயிற்றுக்குள் மரம் முளைக்கும் என்றதை அப்படியே நம்பி பயந்து தேம்பித் தேம்பி அழுதுகொண்டு போய் ஐயாவிடம் சொன்னதையும் மனத்திரையில் ஒருதடவை மீட்டிப் பார்த்துவிட்டு, எட்டி இன்னொரு பழம் பறித்து அவனுக்குத் தின்னக் கொடுத்தேன்.

மகிழ்வோடு வாயைத் திறந்து வாங்கிக்கொண்டவன், அன்றலர்ந்த கொய்யா மலர் போல சிரித்தான்.

அவனது அந்தச் சிரிப்பு, ‘இதையும் நான் முழுங்கத்தான் போகிறேன், அப்பா’ என்று சொன்னது போல இருந்தது.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=