”மகவே வருக” – என்னுரை

மகவே வருக
| கருவறையிலிருந்து பூமிக்கு வரும் மகவை வரவேற்று,
ஒரு தந்தை தந்த முதல் பரிசு |
*
அன்பு மகவே…
நீ ஆணா, பெண்ணா தெரியாது. எதுவாக இருந்தாலும் மகிழ்வேன். அதனால், உன்னை பொதுவான சொல்லால் ‘மகவு’ என்றே அழைக்கிறேன்.
நீ பிறந்து இப்பூமிக்கு வருகையில் உன் தந்தையாகிய இந்த தமிழ் எழுத்தாளன், இங்கே எந்தவொரு தந்தையும் இதுவரை தம் பிள்ளைக்குத் தந்திடாத ஓர் ஆச்சர்யப் பரிசைத் தந்து வரவேற்க எண்ணினேன். உடனே என்ன தரலாம் என யோசித்தபோது, ஒரு புத்தகம் கொடுக்கலாம் என்று தோன்றியது.
வளர்ந்து மொழி பயின்றவர்களுக்குப் புத்தகம் தருவது சரி. அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம்தான். ஆனால் உன் தந்தையோ, அவர்களில் ஒருவர் கிடையாது. எப்போதும், எதிலும் புதுமை நாடுபவர். ஆகையால், நீ பிறந்து இந்தப் பூமிக்கு வரும்போது, உனக்காகவே ஒரு நூல் எழுதி உன் கையில் தந்து வரவேற்க வேண்டும் என்று எண்ணி இந்நூலினை எழுதியிருக்கிறேன்.
இது ஒருவகையில் உனக்கே உனக்கு மட்டுமான நூலாக இருந்தாலும், இன்னொரு வகையில் உன்போன்று இம்மண்ணில் பிறந்துவரும் எல்லாக் குழந்தைகளுக்குமான நூலாகவும் இருக்கும். ஆம், மகவே!
இதில், ஒரு தந்தையாக நான் உன்னிடம் கூற நினைத்தவற்றில் சிலவற்றை எழுதியிருக்கிறேன். இவை நீ வாழும் காலந்தோறும் உன்னுடன் துணையாக இருக்கும் என்றும் நம்புகிறேன்.
எம்மை தாய் – தந்தையாக்கிய உம்மை, மிகுந்த அன்போடும் ஆசையோடும் இந்நூலினைக் கையில் தந்து இப்பூவுலகிற்கு வரவேற்கிறேன். வா, மகவே!
உனக்கான வாழ்வை உனக்கான பாதையில் சென்று, நீ விரும்பும் எல்லாவற்றையும் வாழும் காலமெல்லாம் வாழ்ந்து நிகழ்த்திட வா, மகவே!
முதுபெரும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு, அரிய பல கலைப்பொக்கிஷங்கள் மிக்க தமிழ்நாட்டை தாய்மண்ணாய்ப் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திட வா, மகவே!
‘ஐயா’ என்னும் தன்னிகரற்ற மனிதரின் நூறாம் அகவையில் பிறந்து, இத்தரணியெங்கும் நம்பிக்கை நடைபோட்டு, எட்டுத்திக்கும் உன் பாதங்களைப் பதித்திட வா, மகவே!
ஆயிரம் முத்தங்களுடன்,
‘உன் அப்பா’ வடிவரசு.
*