எங்க கல்யாணம் – 9

ஏப்ரல் 23, 2021

**

அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து குளித்துக் கிளம்பி ஊரிலுள்ள ஐயாவையும் அம்மாவையும் பார்த்து ஆசி வாங்கப் போகலாம் என முன்தினம் மாலைதான் திட்டமிட்டோம். அதை அம்மாவிடம் மட்டும்தான் சொன்னோம்.

திருமணம் முடிந்த பிறகு எப்போது ஊருக்குப் போகலாம் என யோசித்தபோது ‘எப்படியும் தேர்தலுக்கு ஓட்டுப் போட போகவேண்டும். அதனால் அதையொட்டியே போகலாம்’ என முதலில் முடிவெடுத்திருந்தோம். இருந்தாலும் மனம் கேட்கவில்லை. அதுவும், ‘தொண்ணத்தேழு வயதை எட்டப்போகும் ஐயாவைப் பார்த்து ஆசிவாங்க இனியும் நாட்களை கடத்தக்கூடாது’ என உள்ளம் சொல்ல, ‘சரி தேர்தலின் போது நாம் மட்டும் போய் வருவோம், இப்போது இருவரும் போவோம்’ என சட்டென முடிவெடுத்தேன்.

அதனால் காலையில் சீக்கிரமே எழுந்து கிளம்பி மெல்ல பல்லாவரம் ரயில்நிலைய மேம்பாலம் ஏறி இறங்கி, ஒளிரும் மின்விளக்கு வெளிச்சத்தில் அதிக ஆள் நடமாட்டமில்லாத தெரு வழியாக நடந்துபோய் வலதுபக்கம் திரும்பி பேருந்து நிறுத்தத்தை அடைந்தோம்.

லேசான பனியும் குளிரும் இருந்தது. ‘ஒரு தேநீர் குடித்தால் என்ன?’ எனத் தோன்ற, கோமதியிடம் கேட்டேன். தனக்கும் வேண்டுமென்றார். சரியென அருகில் உள்ள கடைக்கு வாங்கப் போனேன். அதற்குள் திருவண்ணாமலை செல்லும் பேருந்து வந்து நிற்க, வேகமாக தேநீர் வாங்காமல் ஓடிப்போய் கோமதியை முதலில் ஏற்றிவிட்டு பின்னாலேயே நானும் ஏறி இருவர் உட்காரும் இருக்கையில் உட்கார்ந்துகொண்டோம்.

பேருந்தில் மொத்தமே பதினைந்து பேர்தான் இருந்தார்கள். மெல்ல புறப்பட்டது. எப்போது ஊருக்குக் கிளம்பினாலும் கூடுதல் உற்சாகம் வந்துவிடும். ஆனால் இம்முறையோ உற்சாகத்தோடு சேர்த்து ஒருவித பதற்றமும் வந்தது.

கதைகள் பேசிக் கொண்டும், நடுநடுவில் பாடல்கள் கேட்டுக் கொண்டும், குட்டித் தூக்கங்கள் தூங்கிக்கொண்டும், சன்னல் வழியாக வெளியில் தெரியும் மலைகள், மரங்கள், வீடுகள், ஏரிகள், ஆடுமாடு, மனிதர்கள் என ஒவ்வொன்றாகப் பார்த்து ரசித்துக்கொண்டும், சரியாக காலை ஒன்பதரை மணிக்கு திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் போய் இறங்கினோம்.

இருவருக்குமே பசித்தது. அருகில் உள்ள உணவகத்தில் போய் நான் மூன்று இட்லியும் ஒரு வடையும், கோமதி இரண்டு பூரியும் ஒரு வடையும் சாப்பிட்டுவிட்டு மெதுவாக நடந்து பெரிய கோயிலுக்குப் போனோம்.

கோமதி ஏற்கனவே இரண்டு மூன்று தடவை திருவண்ணாமலை வந்திருப்பதாகவும் அதுவும், கிரிவலம் சுற்றத்தான் என்றும் சொல்ல… கிழக்கு ராஜகோபுரம் வழியாக உள்ளே கூட்டிப் போய் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய முருகன் சன்னதி தொடங்கி… ஒவ்வொரு பிரகாரமாக, சன்னிதிகளாக எனக்குத் தெரிந்த அரைகுறை தகவல்களைச் சொல்லி சுற்றிக்காட்டினேன்.

கோயிலில் பெரிய கூட்டம் இல்லை என்பதால் மிக எளிதாகப் போய் கருவறையிலுள்ள அண்ணாமலையாரையும் உள் பிரகாரத்தில் உள்ள நடராஜரையும் பார்க்க முடிந்தது. அம்பாள் சன்னதியில் ஏதோ பூஜை நடந்துகொண்டிருந்தது. முடிக்க நேரமாகும் என்றார்கள். வெளிப்பிரகாரம் மட்டும் சுற்றிவிட்டு கொடிமரத்தருகில் வந்து உட்கார்ந்தோம்.

ஆலயத்தின் கம்பீரத்தில் அதிலும் குறிப்பாக அதன் அடுக்கடுக்கான அமைப்பைக் கண்டு வியந்த கோமதிக்கு கோயில் மிகவும் பிடித்திருந்தது. அதுவும் கொடிமரத்தருகில் நின்று பின்னாலுள்ள லிங்கவடிவ மலையையும் அதன் அடிவாரத்தில் உள்ள பெருங்கோயிலையும் ஒருங்கே பார்ப்பது அலாதியானது என்றார்.

மெல்ல கிளி கோபுரம் கடந்து கிழக்கு ராஜகோபுரம் வழியாக வெளியில் வந்து பேருந்து நிலையம் நோக்கி நடக்க ஆரம்பித்தோம். அருகிலுள்ள காந்தி சிலையில் நடக்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு பேச இருப்பதால் பெருங்கூட்டம் கூடி வழி மொத்தத்தையும் மறித்து பேருந்துகள் எதுவும் நகருக்குள் வரவிடாமல் தடுத்திருந்தது.

மிகுந்த சிரமப்பட்டு கூட்டத்துக்குள் நுழைந்து வெளியேறி பேருந்து நிலையம் வந்தும் பேருந்துகள் எதுவும் வராததை நினைத்து வருத்தத்தோடு நின்றிருந்தோம். சிறிது நேரத்தில் திண்டிவனத்திலிருந்து சாத்தனூர் அணை செல்லும் பேருந்தொன்று வந்தது. ‘சரி, இதில் ஏறி தண்டராம்பட்டு வரை சென்று, அங்கிருந்து வேறு பேருந்து மாறிப் போகலாம்’ எனும் முடிவோடு ஏறினோம்.

கட்சிக் கூட்டம் ஒட்டுமொத்த நகரத்தையும், அதன் சாலைகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதால் பேருந்து பதினான்கு கிலோமீட்டர் மலையை ஒட்டிய கிரிவலப் பாதை வழியாக சுற்றிக்கொண்டு மறுபுறம் உள்ள எங்கள் ஊர் நோக்கிய சாலைக்குச் சென்றது.

அம்மாவுக்கு மட்டும்தான் முதலில் நாங்கள் ஊருக்கு வருவதை சொல்லியிருந்தோம். வேறு யாருக்கும் சொல்லவேண்டாம் என்றும் கூறியிருந்தோம். தற்செயலாக திண்டிவனம் தாண்டி போகும்போது பெரிய அண்ணி அழைத்திருந்தார்.

”கல்யாணத்துக்குதான் எங்கள ஒரு நாளைக்கு முன்னாடி கூப்ட. கல்யாணமாயி இத்தன நாள் ஆவுது, இன்னும் வூட்டுக்கு கூட்டுனு வரலனா எப்டி?’’ என சண்டை போட்டார். வேறுவழியின்றி ஊருக்கு சென்று கொண்டிருக்கும் தகவலை சொல்லிவிட்டேன்.

கேட்டுவிட்டு ஒருபக்கம் மகிழ்ந்தவர், இன்னொரு பக்கம் கோபத்தோடு, ”இப்டி திடுதிப்புனு சொன்னா எப்டி? நல்லவேள நான் போன் பண்ணன், இல்லனா சொல்லாம கொள்ளாம வந்துருப்பல்ல’’ என்றார். எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன்.

உண்மையில் எங்கள் அண்ணன்கள் மேலும், அண்ணிகள் மேலும் பெரும் கோபத்தோடுதான் இருந்தேன். திருமணத்திற்கு வரவில்லை சரி, அதன்பின் ஒருதடவை கூட பேச்சுக்கு அழைத்து ‘எப்படி திருமணம் நடந்தது, எதுவும் பிரச்சனை இல்லையே’ என ஒரு வார்த்தைகூட கேட்கவில்லை. இத்தனை நாள் கழித்து அதுவும் அண்ணி கூப்பிட்டு சண்டைபோடுகிறார். சரி போடட்டும் என விட்டுவிட்டேன்.

மறுபக்கம் இதற்கு அப்படியே நேர்மாறாக ஐயாவும், அம்மாவும், அக்காவும், அண்ணன் குழந்தைகளும் நடந்துகொண்டார்கள். தினமும் கூப்பிட்டு என்னிடமும் கோமதியிடமும் பேசினார்கள். ”எப்போ ஊருக்கு வர்றீங்க?’’ என்று அன்போடு அடிக்கடி கேட்டும், அழைத்தும் வந்தார்கள். ஆம்!

தண்டராம்பட்டு நான் 11 மற்றும் 12ஆம் வகுப்பு படித்த ஊர். அதையும் அந்நாட்களையும் நினைவுபடுத்தியபடி பேருந்திலிருந்து இறங்கினோம். வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. அதிலிருந்து தப்பிக்க நினைத்து அங்குள்ள கடையொன்றின் முன்புற நிழலில் சென்று நின்று அடுத்து வந்த தானிப்பாடி செல்லும் பேருந்தில் ஏறி தென்பெண்ணை ஆற்றை ஒட்டியுள்ள கொளமஞ்சனூரில் போய் இறங்கினோம்.

எங்களுக்காக அங்கே அண்ணனும் அவரது நண்பரும் இருசக்கர வாகனத்தில் காத்திருந்தார்கள். மெல்ல அவர்களோடு கதைகள் பேசிக்கொண்டு மூன்று கிலோமீட்டர் தாண்டியுள்ள எங்கள் சிறு கிராமத்தை அடைந்து, அதன் மறுபக்க முதல் தெருவில் உள்ள எங்கள் வீட்டின் முன் போய் நின்றோம்.

என்னதான் கோமதி எங்கள் கிராமத்துக்கு இதற்குமுன் வரவில்லை என்றாலும், எங்களூர் பற்றிய மனச்சித்திரம் ஒன்றை தன் உள்ளத்தில் உருவாக்கி வைத்திருப்பார் அதுவும், என் நூல்களை வாசித்தும் நான் பேச்சினூடாக சொன்னதைக் கேட்டும் என்பதை அவர் சொல்லாமலேயே அறிந்திருந்தேன். அதனால் எதுவும் சொல்லாமல் அமைதியாக அவரை வேடிக்கை பார்க்கவிட்டு அதைப் பார்த்து ரசித்துக்கொண்டு போனேன்.

அம்மாவும், அண்ணிகள் இருவரும், குழந்தைகள் அறுவரும் ஆரத்தி எடுத்து வரவேற்று உள்ளே கூட்டிப்போய் நடுவீட்டுக்குள் கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்டுவிட்டு காமாட்சியம்மன் விளக்கை கோமதியிடம் ஏற்றச் சொன்னார்கள், ஏற்றினார்.

நம்மை நேசித்த ஒருத்தி அதுவும், நமக்காக நான்கரை ஆண்டுகள் காத்திருந்த ஒருத்தி, நம் மனத்தை வென்றவள், யாவரையும் எதிர்த்து துணிச்சலோடு நின்று கரம் பற்றியவள், அவள் காதலை ஏற்று என் காதலைச் சொன்னபோது கண் கலங்கி அழுதபடி ஓடிவந்து கட்டிக்கொண்டவள், இப்போது நான் பிறந்து வளர்ந்த என் வீட்டில் என் குடும்பத்தார் முன்னால் இதோ மகிழ்வோடு விளக்கேற்றுகிறாள். ஆம்!

நினைத்து நினைத்து உள்ளம் துள்ளிக்குதித்தது. பார்த்துப் பார்த்து ரசித்தேன்.

பின் குழந்தைகளிடமும், அம்மா, அண்ணிகளிடமும் பேசிக்கொண்டிருந்துவிட்டு மதிய உணவு சாப்பிட்டோம். எங்களோடு சேர்ந்து அண்ணன் குழந்தைகளும் ஆளுக்கொரு தட்டு எடுத்துவந்து சூழ உட்கார்ந்து கதைகள் பேசிக்கொண்டு சாப்பிட்டார்கள்.

அண்ணன் குழந்தைகள் அதிலும் குறிப்பாக ஹாசினி, திருமணமான அன்றே எனக்கு அழைத்து, ”சித்தி போட்டோ அனுப்புப்பா’’ என்றார். அனுப்பிவைத்தேன். பார்த்துவிட்டு, ”சித்தி நல்லா அழகா இருக்காங்க’’ என்றுவிட்டு, சித்தியின் பேரைக் கேட்டார், சொன்னேன். பின் தன் சிறுவயது ஒளிப்படம் ஒன்றை அனுப்பிவைத்து, ”சித்தி, இதான் நானு’’ என்று குரல்வழி செய்தி ஒன்றும் உடன் அனுப்பியிருந்தார்.

அதைப் பார்த்த கோமதி அதுமுதல் ஹாசினி, கொடி, நிஷாலினி என ஒவ்வொருவரிடமும் தினந்தோறும் பேசுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். ”எப்போ சித்தி வீட்டுக்கு வருவீங்க?’’ பேசும்போதெல்லாம் கேட்பார்கள். ”சீக்கிரமே வருவோம்..’’ என்பார். அதனால் வீட்டுக்குப் போனதும் ஓடிவந்து கோமதியை சுற்றிக்கொண்டு அவரோடு பேசி விளையாட ஆரம்பித்தார்கள்.

மெல்ல சாப்பிட்டு முடித்துவிட்டு அண்ணன் குழந்தைகள் ஐவரை கூட்டிக்கொண்டு இல்லை இல்லை அவர்கள் எங்களைக் கூட்டிக்கொண்டு வழியில் உள்ள சிறுதூர சேற்றுவழி எல்லாம் கடந்து நிலத்திலிருக்கும் ஐயாவை பார்க்கப் போனோம்.

ஏற்கனவே பலதடவை எங்கள் கிராமம் குறித்தும் அதன் அழகு பற்றியும் கோமதியிடம் சொல்லியிருக்கிறேன். அதிலும் குறிப்பாக நான் பள்ளிக்கூடம் படிக்கையில் எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென இருந்த நிலங்களும், மரங்களும் அதன்பின் படிப்படியாக குறைந்து இப்போது நூறில் வெறும் இருபது சதவிகிதம் மட்டுமே இருப்பதையும் வருத்தத்துடன் கூறியிருக்கிறேன்.

வழிநெடுக உள்ள கிணறுகளையும், வயல்களையும், நீரோடும் ஓடைகளையும், கால்வாய்களையும், தென்னை பனை வேம்பு வாழை முருங்கை பொர்சம் பூவரசம் சீத்தா கொடுக்காய்ப்புளி புங்கை மலைவேம்பு புளியம் அரளி பீவேலன் வெப்பாலை இலந்தை கொய்யா பலா அரசு மா  காட்டுவா சவுண்டல் எட்டி கருவேலன் நீலகிரி நெல்லி கொளஞ்சி எலுமிச்சை தேக்கு வாதநாராயணன் ஆலம் அவிஞ்சி வன்னி துரிஞ்சி பப்பாளி ஆத்தி எருக்கு நுணா போன்ற மரங்களையும், துளசி ஞானா ஊமத்தை தொட்டாச்சிணுங்கி தும்பை போன்ற செடிகளையும், ஓணான் முஷ்ட கோவை கட்டு கும்டிக்கா சுக்கங்கா போன்ற கொடிகளையும், காசிரிக்கா முடக்கத்தான் குப்பைமேனி வல்லாரை மணத்தக்காளி பருப்பு அவுத்தி போன்ற கீரைகளையும், கரும்பு மல்லாட்டை நெல் எள் தைலம்பில் மொச்சை பருத்தி குச்சிவள்ளி துவரை உளுந்து போன்ற பயிர்களையும் பார்த்துக்கொண்டு, அவற்றை கோமதிக்கு அறிமுகம் செய்துவைத்து, தூரத்தில் தெரியும் அரசங்கல் மலையையும் கோடிக்கல் மலையையும் காட்டினேன். கண்டு பெரிதும் மகிழ்ந்தார்.

ஐயாவின் நண்பர் அருணாச்சலம் செட்டியார் நிலம் தாண்டி, அங்குள்ள இலந்தை மர ஓடையைக் கடந்து நிலத்தின் மத்தியில் கிணற்று மேட்டில் எட்டிமர நிழலில் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருக்கும் ஐயாவிடம் மெல்ல இருபக்கமும் கூட்டங்கூட்டமாக நெற்கதிர்கள் வரவேற்க மரிசிமீது நடந்து போனோம்.

எங்களை எதிர்பார்த்திருந்தவர், ”வாய்யா, வாம்மா’’ என இருவரையும் வரவேற்று உட்காரச் சொல்லி பேச ஆரம்பித்தார். அதற்குள் உடன் வந்திருந்த அண்ணன் குழந்தைகள், ”சித்தி… சித்தி…’’ என கோமதியை கைப்பிடித்து கூட்டிக்கொண்டு போய் அருகிலுள்ள கிணற்றையும் அதன் பக்கத்திலுள்ள தொட்டியையும் நெல்லி மரத்தையும் காட்டி… நெல்லிக்காய் பறித்துத்தந்தார்கள்.

கோமதி குறித்தும் அவர் குடும்பத்தார் குறித்தும் நடந்து முடிந்த எங்கள் திருமணம் பற்றியும் கேட்டறிந்த ஐயா, ”பாத்து பத்தரமா இருங்க ரண்டுபேரும். எங்க ஆசி எப்பயும் ஒங்குளுக்கு உண்டு. நீங்க நல்லாருந்தா அதே எங்குளுக்கு போதும்’’ என்றார்.

அதற்குள் மூன்றாவது அண்ணனும் அண்ணியும் மேற்குத் துண்டிலிருந்து மல்லாட்டை பிடுங்கிவந்து கிணற்று மேட்டில் போட்டு ஆய ஆரம்பித்தார்கள். எனக்கும் கோமதிக்கும் ஆளுக்கொரு கை நிறைய மல்லாட்டை எடுத்துவந்து சாப்பிடத் தந்துவிட்டு வேகவேகமாக ஆய்ந்தார்கள்.

மெல்ல எழுந்து கிணற்றருகில் போய் நின்று பார்த்தேன். கோமதி எங்கள் வீட்டாருடன் அதிலும், குறிப்பாக என் ஐயாவின் பக்கத்தில் உட்கார்ந்து சிரித்துப்பேசிய படி மல்லாட்டை சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அருகிலிருந்த மணத்தக்காளி செடியிலிருந்து கை நிறைய பழம் பறித்துப்போய் கோமதியிடமும், அண்ணன் குழந்தைகளிடம் தந்து சாப்பிடச் சொன்னேன். போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சாப்பிட்டார்கள்.

ஆய்ந்த மல்லாட்டையை ஒரு கட்டைப் பையில் போட்டு எடுத்துக் கொண்டு, இன்னொரு பை நிறைய பக்கத்துத் துண்டிலிருந்த புளிச்சக்கீரையை உருவிக்கொண்டு இருட்டும் முன் கிளம்பலாம் என்றார்கள். ஐயாவிடம் சொல்லிவிட்டு மெல்ல நடந்து கதைகள் பேசிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் வீட்டுக்கு வந்தோம்.

வந்து சாலையோரம் உள்ள இரண்டாவது அண்ணன் வீட்டுக்குப் போய் அண்ணியையும், குழந்தைகளையும் பார்த்துவிட்டு, கொஞ்சநேரம் அவர்கள் வீட்டில் இருந்துவிட்டு மீண்டும் எங்கள் வீட்டுக்கு வந்தோம். அதற்குள் ஓரளவுக்கு இருண்டுவிட்டது. ஐயாவும் எங்கள் பின்னாலேயே கிளம்பி மெல்ல நடந்து வீட்டுக்கு வந்திருந்தார்.

அனைவரிடமும் சொல்லிவிட்டு புறப்படத் தயாரானோம். ஒவ்வொருவரும் வந்து என்னிடமும், கோமதியிடமும் தனித்தனியாக பேசினார்கள்.

”ஏன் வந்ததும் அதுவுமா ஒடனே கெளம்பறீங்க. ஒருவாரம் இருந்துட்டு போவலாம்ல’’ என்றார்கள்.

”இல்ல, நாளிக்கி காலில ஒரு முக்கியமான வேல இருக்கு. போயிட்டு சீக்கிரமே இன்னொருநாள் வர்றோம்’’  என்றோம்.

எல்லோரிடமும் சொல்லிவிட்டு கடைசியாகப் போய் அம்மாவிடமும், ஐயாவிடமும் சொன்னோம்.

”எங்களப் பத்தி எதுவும் நெனக்காம நீங்க ரண்டுபேரும் பாத்து பத்தரமா இருங்க, அது போதும்’’ என்றார் அம்மா.

”எங்க வெளிய போனாலும் பாத்து கவனமா போங்க. எப்பயும் சந்தோசமா இருக்கணும்’’ என்றார் ஐயா.

குழந்தைகளுக்கு டாட்டா காட்டிவிட்டு, பெரிய அண்ணனுடன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு பக்கத்து ஊருக்கு வந்து பேருந்துக்காக காத்திருந்தோம்.

கோமதியிடம் கேட்டேன். ”எங்க வீடும், ஊரும் புடிச்சிருக்கா?’’

சட்டென யோசிக்காமல், ”ம்… புடிச்சிருக்கு’’ என்றார்.  

அடுத்த ஐந்து நிமிடத்தில் திருவண்ணாமலை செல்லும் பேருந்து வந்தது. ஏறி உட்கார்ந்தோம். அம்மாவும் அண்ணிகளும் ‘அ’கரத் தாலி குறித்தும், மெட்டி போடாதது பற்றியும் கோமதியிடம் கேட்டதை பகிர்ந்தார். நான் சொன்னேன், ”அவங்களாம் கிராமத்துலயே இருக்கவங்க, அப்டிதான் சொல்வாங்க. நாம கொஞ்சம் பொறுமையா எடுத்துச் சொன்னா புரிஞ்சிப்பாங்க. அத என்கிட்ட விட்ரு, நான் பாத்துக்கறன்’’.

சரியாக எட்டுமணிக்கு திருவண்ணாமலை பேருந்துநிலையத்தில் வந்து இறங்கினோம். எங்களுக்காக அங்கே காத்திருந்த அக்கா, என்னையும் கோமதியையும் தூரத்திலேயே பார்த்துவிட்டு மகிழ்வோடு அருகில் வந்து பேசினார்.

கூட்டிப்போய் பக்கத்திலிருந்த தேநீர்க் கடை முன் நின்று ஆளுக்கொரு தேநீர் குடித்தபடி பேசிக்கொண்டிருந்தோம். எங்கள் திருமணத்தை நேரில் பார்க்க முடியாததை வருத்தத்தோடு சொன்ன அக்கா, விரைவில் தம் குடும்பத்தோடு சென்னையில் உள்ள எங்கள் வீட்டுக்கு வருவதாகவும், ஓர் அக்காவாக தான் செய்யவேண்டிய முறைகளை செய்யப் போவதாகவும் சொன்னார்.

மறுக்கமுடியாமல் மகிழ்வுடன் சரி என்றுவிட்டு, மெல்ல நடந்து பேருந்து நிலையத்தின் மறுபக்கத்தில் உள்ள சென்னை செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்துக்கு வந்து புறப்படத் தயாராக இருந்த நடத்துனரில்லாப் பேருந்தில் ஏறி பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு உட்கார்ந்து அக்காவிடமிருந்து விடைபெற்று வந்தோம்.

வழிநெடுக காலை முதல் நடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றாக அசைபோட்டுக்கொண்டோம். அதிலும் குழந்தைகள் தன்னிடம் வந்து உடனே ஒட்டிக்கொண்டதையும், கிளம்பும்போது பிரிய மனமில்லாமல் அனுப்பிவைத்ததையும் அவ்வளவு சந்தோசத்தோடு கோமதி பகிர்ந்தார்.

புறப்படும்போது எவ்வளவு மறுத்தும் வீட்டுக்குத் தேவையான சர்க்கரை, மிளகாய்த்தூள், பருப்புகள், வேர்க்கடலை என ஏதேதோ கொடுத்து அனுப்பியிருந்தார்கள். அக்காவும் தன் பங்குக்கு இரு கட்டைப் பை நிறைய பொருட்கள் எடுத்துவந்திருந்தார். இவை யாவற்றுக்கும் மேலாக கோமதிக்கு மிகவும் பிடித்த மருதாணி இலைகளை ஒரு பை நிறைய குழந்தைகளும் மூன்றாவது அண்ணியும் ஐயாவின் நண்பர் நிலத்திலிருந்து பறித்துத் தந்தனுப்பியதை நினைத்து கோமதி துள்ளிக்குதிக்காத குறைதான்.

திண்டிவனம் தாண்டியதும் இருவரும் அசதியில் உறங்கிவிட்டோம். இருபது நிமிடம் தூங்கியிருப்பேன். சட்டென ஐயாவும், அம்மாவும் கூப்பிடும் குரல் கேட்டு விழிப்பு வந்தது. கண்களை மெல்லத் திறந்து பார்த்தேன். பேருந்தில் நான்கைந்து பேர் தவிர அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தார்கள். மனம் ஏதேதோ நினைக்க ஆரம்பித்தது.

எங்கள் வீட்டில் நான்தான் கடைசி மகன். செல்லப் பிள்ளை. ஐயாவுக்கும், அம்மாவுக்கும் நிச்சயம் என் திருமணத்தை உடனிருந்து பார்க்கவேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும். அவர்கள் அதை அவ்வளவாக வெளியில் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் ஓரளவுக்கு என்னால் உணரமுடிந்திருக்கிறது. இருந்தபோதும் ஐயாவும், அம்மாவும் என் விருப்பத்துக்கு மதிப்பு தந்து நான் திருமணம் செய்யப்போவதை சொன்னதும் மறுப்பு சொல்லாமல் சம்மதித்தார்கள். 

இதேபோல் கோமதியின் அப்பாவும், அம்மாவும் சம்மதம் சொல்லியிருந்தால் எப்படி இருந்திருக்கும்? அவர்கள் வீட்டுக்கு நாங்கள் இதுபோல் எப்போது போய் வருவோம்? குறைந்தது என்னிடம் அவர்கள் ஒரு வார்த்தையாவது பேசியிருக்கலாம், அப்படி என்ன குறைந்துபோய் விட்டோம்?

நள்ளிரவு பன்னிரண்டு முப்பது மணிக்கு பல்லாவரத்தில் வந்து இறங்கினோம். உள்ளம் உற்சாகமாக இருந்தாலும் உடல் சோர்வாக இருந்தது. அங்கிருந்து ஓர் ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்தோம்.

ஐயாவையும் அம்மாவையும் பார்த்து ஆசிபெற்று வந்ததை நினைத்து மனம் மிகு நிறைவாக இருந்தது. அதிலும் அவர்கள் இருவரும் எங்களைப் பார்த்து உள்ளுக்குள் மகிழ்ந்த காட்சி அவர்களின் கண்களில் தெரியக் கண்டதை எண்ணி அவ்வளவு மகிழ்ந்தேன்.

சீக்கிரம் இருவரும் உடைமாற்றிக்கொண்டு உறங்கலாம் என நினைத்தோம். உறக்கம் வரவில்லை. அறைக்கு வெளியில் உள்ள பால்கனியில் போய் நின்று யாருமற்ற சாலையையும் அருகில் உள்ள மாமரத்தையும் பார்த்துக்கொண்டு, தூரத்தில் எங்கோ தன் மொத்த இரவையும் தொலைத்ததுபோல் கத்தும் பெயர் தெரியாத பறவையின் ஏக்கக்குரலை கேட்டுக்கொண்டு… ஊரிலிருந்து புறப்படும்போது ஐயாவும் அம்மாவும் சொன்ன,

‘எங்களப் பத்தி எதுவும் நெனக்காம நீங்க ரண்டுபேரும் பாத்து பத்தரமா இருங்க, அது போதும்’

‘எங்க வெளிய போனாலும் பாத்து கவனமா போங்க. எப்பயும் சந்தோசமா இருக்கணும்’

வார்த்தைகளை திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டேன்.

ஆம்! இதைவிட ஐயாவும் அம்மாவும் வேறென்ன பெரிதாக நினைத்து விடப் போகிறார்கள், சொல்லிவிடப் போகிறார்கள்?!

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=