எங்க கல்யாணம் – 8

ஏப்ரல் 22, 2021

**

திருமணமாகி ஒருவாரம் கழித்து நான் பெரிதும் மதிக்கும் நண்பரும் தற்காப்புக் கலைஞருமான ‘கோபுடோ’ கிருஷ்ணமூர்த்தி சார் வீட்டுக்கு விருந்துக்குப் போயிருந்தோம்.

தியாகராய நகர் – நடேசன் பூங்கா சென்னையின் மிகப் பிடித்த இடங்களில் எப்போதும் சொல்வேன். அதிலும் அண்மையில் அதனுள் உருவாக்கப்பட்ட செய்குன்று காணும்தோறும் என்னை வியத்தக்கூடியது.

சரியாக ஒருமணி நேரத்திற்கு முன்பே சென்று அதன்மேல் உட்கார்ந்து சுற்றிலுமுள்ள மரங்களையும் செடிகொடிகளையும் வேடிக்கை பார்த்தபடி கதைகள் பேசிக்கொண்டிருந்துவிட்டு, பக்கத்துத் தெருவில் இருக்கும் அவரது வீட்டுக்குப் புறப்பட்டு சென்றோம்.

ஏற்கனவே பலதடவை சென்றிருக்கிறேன் என்றாலும் இம்முறை கோமதியோடு அதுவும் திருமணமான புதுத் தம்பதியாக செல்லும் அனுபவம் சற்று வித்தியாசமாக இருந்தது.  

எங்களை எதிர்பார்த்திருந்தவர் தன் குடும்பத்தோடு வரவேற்று அனைவருக்கும் அறிமுகம் செய்துவைத்தார். ஏற்கனவே அவரது மனைவிக்கும் மகனுக்கும் மாமியாருக்கும் நான் அறிமுகம் என்பதால் கூடுதல் உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.

”சார் உங்களப் பத்தி சொல்லியிருக்கார். நீங்க அவரப் பத்தி விகடன்ல எழுதினது, அவர் பி.எச்.டி வாங்கினப்போ கவர்னர் மாளிகை வந்தது, உங்க புக்ஸ்லாம் கூட படிச்சியிருக்கோம்’’

”ஒரு தடவ உங்கள காலேஜ் ஸ்டேஜ்ல பேசும்போது பார்த்திருக்கேன். ரொம்ப நல்லா பேசுனீங்க’’

”உங்க அப்பா அம்மா, சின்ன வயசு காலம், கிராமம் வாழ்க்கைன்னு அப்படியே எல்லாத்தையும் கண்ணுமுன்ன எழுத்துல காட்டிட்டீங்க. பல இடத்துல படிக்கும்போதே கண்கலங்கி அழுதிருக்கேன்.’’

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

பின் சற்றுநேரம் கழித்து கோமதியை கூட்டிக்கொண்டு போய் வீட்டை சுற்றிக் காட்டிவிட்டு வந்தவர்கள்… எங்களுக்காக செய்திருந்த கேசரியை சிறு கிண்ணத்திலும், அதன்பின் பாயசத்தை ஆளுக்கொரு டம்ளரிலும் எடுத்துவந்து தந்தார்கள். மகிழ்வோடு வாங்கி கிருஷ்ணமூர்த்தி சாரிடமும், அவரது குடும்பத்தாரிடமும் பேசிக்கொண்டு சாப்பிட்டோம்.

அவரும் நானும் முதன் முதலில் செம்மொழிப் பூங்காவில் வைத்து சந்தித்தது, அவர் குறித்தும் பெண்களுக்கான தற்காப்புக் கலைகள் பற்றியும் நான் அவள் விகடனில் எழுதிய முதல் கட்டுரை, அதிலும் அதன் தலைப்பு அவரை வெகுவாக கவர்ந்தது, அதன்பின் இருவரும் நண்பர்கள் ஆனது, அந்நட்பு கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்வது, அவர் தற்காப்புக் கலைக்குள் நுழைந்தது, அதில் போராடி தனக்கான இடத்தை உருவாக்கிக் கொண்டது, சில மறக்கமுடியாத வெளிநாட்டுப் பயணங்கள்… என பேச்சு நீண்டது.

ஒவ்வொன்றாக அவர் சொல்லச் சொல்ல மகிழ்வோடு கேட்டுக்கொண்டிருந்த கோமதி, தான் அவரை சிறுவயதாக இருக்கும்போது பல தடவை தொலைக்காட்சியில் பார்த்திருப்பதாக சொன்னார். கேட்டுவிட்டு மகிழ்ந்தவர், என்னைக் குறித்து கோமதியிடம் பேச ஆரம்பித்தார். அவற்றில் என் மனத்தில் உடனே வந்து ஒட்டிக்கொண்ட ஒன்று, ”பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்னு சொல்வாங்க. சார் தன் எழுத்து மூலமா எல்லார்கிட்டேயும் இப்போ பேரை வாங்கிட்டு வர்றார். கூடிய சீக்கிரமே ஊரையும் வாங்குவார்’’ என்பது.

சட்டென கோமதி குறித்து கடந்த நவம்பர் மாதம் சந்திக்கையில் அவரிடம் முதல் தடவையாக பகிர்ந்தபோது சொன்ன, ”sir, you are very lucky sir. இந்த காலத்துல இப்படி ஒரு பொண்ணு, அதுவும் இத்தன வருஷமா உங்களுக்காக காத்திருக்கிற பொண்ணு Chanceஏ இல்ல சார்’’ என்ற வார்த்தைகளும், காட்சியும் மனத்திரையில் வந்துபோனது.

சற்று நேரத்தில் உணவு எடுத்து வந்து எங்களுக்கு பரிமாறினார்கள். மிகச் சுவையான உணவு. அதைக்காட்டிலும் இனிமையான உபசரிப்பு. பெரிதாக பசியில்லை என்றாலும் மகிழ்வோடு பேசிக்கொண்டே சாப்பிட்டோம்.

பின் எங்களை நடுவீட்டுக்குள் அழைத்துப் போனவர்கள் மறுவீட்டில் சீர் செய்வது போல் பட்டுப்புடவை, வேட்டி, துண்டு, வெற்றிலை, பாக்கு, பூ, பழங்கள் என ஒரு பெரிய தாம்பாளத் தட்டில் வைத்துத் தந்தது நாங்கள் இருவரும் எதிர்பாராதது.

அதுவும் மொத்த குடும்பமும் சேர்ந்து எங்கள் இருவரின் கையில் தந்து மகிழ்வோடு வாழ்த்தியதும் கண்கள் தானாக கலங்க ஆரம்பித்துவிட்டது. அதை காட்டிக் கொள்ளாமல் மெல்ல புன்னகைத்து நன்றி சொல்லி வாங்கிக்கொண்டு வந்து வரவேற்பறையில் உட்கார்ந்தோம்.

”இது உங்க வீடு மாதிரி. சார் என்னோட very close friend. நீங்க எப்போ வேணாலும் இங்கே வரலாம்..’’ என்று கிருஷ்ணமூர்த்தி சார் சொன்னதைக் கேட்டு என்னை விட கோமதி பெரிதாய் மகிழ்ந்தார்.

இன்னும் சற்றுநேரம் பேசிவிட்டு பல்லாவரத்தில் உள்ள எங்கள் வீட்டுக்கு வாசல் வரைக்கும் வந்து காரில் ஏற்றி அனுப்பிவைத்தார்கள். வரும் வழிநெடுக ‘கோபுடோ’ கிருஷ்ணமூர்த்தி சார் பற்றியும், அவர் குடும்பம் பற்றியும் கோமதியிடம் சொல்லிக்கொண்டு வந்தேன்.

அதிலும் அவர் ஒருநாள் முன்னிரவு அழைத்து… என் முதல் நூலான ‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’ புத்தகத்தை தன் மாமியார் படித்துவிட்டு கண்கலங்கி அழுததாகவும், அதை தன் படுக்கை தலையணைக்கு கீழே வைத்திருந்து தினமும் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக எடுத்து ஒவ்வொரு கட்டுரையாக படிப்பதாகவும் சொல்லிவிட்டு… தனக்கு இன்னும் நூறு புத்தகங்கள் வேண்டும் என்றும், அதை தம் விருப்பமானவர்களுக்கு எல்லாம் மிக உயரிய பரிசாக தரப்போவதாகவும் சொல்லக் கேட்டு மகிழ்ந்ததையும் சொன்னேன்.  

சென்னை – வள்ளுவர் கோட்டத்தில் நடத்த திட்டமிட்டிருந்த எங்கள் திருமணத்திற்கு அதிகம் பேரை அழைக்க முடியாது என்பதால் மிகச்சில அன்பர்களை மட்டுமே அழைக்கத் திட்டமிட்டிருந்தோம். அதிலும் வெளியூர்களிலிருந்து சிரமப்பட்டு யாரையும் வரவழைக்க வேண்டாம் என்று நினைத்தோம்.

இருந்தாலும் என் வாழ்வில் மிக முக்கிய நபராக (ஓர் அண்ணனாகவும், நண்பராகவும்) இருந்துவரும் பெரம்பலூர் சுரேஷை நிச்சயம் வரவழைக்க வேண்டும், அவர் என் திருமணத்தில் கட்டாயம் இருக்கவேண்டும் என விரும்பினேன்.

அதனால் இரு தினங்களுக்கு முன்பே கூப்பிட்டு என் திருமணத் தகவலை அவரிடம் சொன்னேன். பெரிதும் மகிழ்ந்தவர், வருத்தத்தோடு தனக்கு உடல்நலம் சரியில்லாததைச் சொல்லிவிட்டு, அங்கிருந்தே தாம் வாழ்த்துவதாகவும், கூடிய சீக்கிரம் சென்னை வரும்போது வீட்டுக்கு வருவதாகவும் வீட்டு முகவரி அனுப்புமாறும் சொன்னவர், அடுத்த ஐந்து நாட்களில் எங்கள் வீட்டுக்கு பெரும் திருமணப் பரிசு ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.

அழகான குளிர் சாதனப் பெட்டி. சற்றும் எதிர்பாராத பரிசு என்பதால் பெரிதும் மகிழ்ந்தோம். உரிமையோடு அவரைக் கூப்பிட்டு, ”எதுக்கு சுரேஷ் இதெல்லாம்?’’ என்றேன்.

”அதில்லடா… இவ்ளோ நாள் தனியா இருந்தவரைக்கும் சரி, எப்படி வேணா இருந்திருக்கலாம். இனி குடும்பம் வீடுன்னு ஆனதும் சில அடிப்படையான விஷயங்கள் வீட்டிலே இருக்கணும், அதான்’’ என்றார்.

கூடவே, ”நீ என்னதான் எதுவும் வேணாம்னு சொன்னாலும், நாங்க செய்ய வேண்டிய கடமைன்னு ஒண்ணு இருக்குல்ல. இன்னும் எது வேணும்னாலும் உரிமையா எங்கக்கிட்ட கேளு. எங்களால முடிஞ்சத செய்வோம். எங்க அன்பும் வாழ்த்தும் ஆதரவும் எப்போவும் உனக்கு உண்டு’’ என்று சொல்லி, மீண்டும் ஒருதடவை அவரும் அவரது மனைவியும் (எனக்கு அண்ணி) வாழ்த்தினார்கள். கேட்டு அவ்வளவு மகிழ்ந்தோம்.

சுரேஷ், எனக்கு 2009-ல் அறிமுகமானவர். அதுவும் கண்டதும் காதல் மாதிரி கண்டதும் நண்பரானவர். சைதாப்பேட்டை – அரசு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் உடன் பி.எட் கணிப்பொறி அறிவியல் படித்தவர். என்னை விட வயதில் மூத்தவர். பெரும் திறமைசாலி, திருச்சிக்காரர். என்மீதும் என் எழுத்தின் மீதும் பெருமதிப்பு கொண்டவர். தன்னை விரட்டி விரட்டி காதலித்த பெண்ணை இரு குடும்பமும் எதிர்த்து நிற்க கரம் பற்றியவர். இப்போது பெரம்பலூர் வங்கி ஒன்றில் பணியாற்றுபவர். விரைவில் இரண்டாவது குழந்தைக்கு அப்பாவாகப் போகிறவர். இன்னும் இன்னும்.

சுரேஷும் அவரது மனைவி அனு அண்ணியும் நான் பார்த்து வியந்த காதலர்கள். அதனால்தான் என் இரண்டாவது நூலான  ‘கள்ளிச்செடியில் பூத்த காதல் கடவுச்சொல்’ அட்டைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் கள்ளிச்செடியில் ‘சுரேஷ் – அனு’ என அவர்கள் பெயரை எழுதியிருப்பேன்.

என்மீது அவர்கள் காட்டும் அன்புக்கு ஏதோ என்னால் முடிந்த சிறு கைமாறாக நினைத்து அதன் முதல்பிரதியை சென்றாண்டு ஜனவரி இறுதியில் நடந்த அவர்களது புதுவீடு குடிபுகுவிழாவிற்கு எடுத்துப் போய் நேரில் தந்துவிட்டு வந்தேன். சற்றும் எதிர்பாராதவர்கள் பார்த்துவிட்டு அவ்வளவு மகிழ்ந்தார்கள். ஆம்!

சென்ற வாரம் நானும் கோமதியும் பல்லாவரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜனதா திரையரங்கிற்கு ‘கர்ணன்’ படம் பார்க்கப் போயிருந்தோம். படம் ஆரம்பிக்க பத்து நிமிடம் இருக்கும். நான் பெரிதும் மதிக்கும் நண்பர்களில் ஒருவரான கால்நடை மருத்துவப் பேராசிரியரும், கல்லூரி துணை முதல்வருமான குமரவேல் சார் அழைத்திருந்தார். எடுத்துப் பேசினேன்.

வழக்கமான நல விசாரிப்புகள், இலக்கியப் பேச்சுக்களின் நடுவில் எனக்கு கடந்த மாதம் திருமணமானதை அவரிடம் சொன்னேன். கேட்டுவிட்டு ஒருபக்கம் மகிழ்ந்தவர், இன்னொருபக்கம் அதைவிட பெரிதாக தன்னை திருமணத்திற்கு அழைக்காததைச் சொல்லி வருத்தப்பட்டார்.

”என்ன சார் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா முதல் ஆளா  வந்திருப்பேனே…’’

”அதில்ல சார், எதுக்கு தூரமா இருக்க உங்கள அலைய வைக்கணும்னுதான் சொல்லல’’

நான் சொன்னதை கேட்டுவிட்டு, ”அட என்ன சார் பெரிய தூரம், தமிழ்நாட்லதானே இருக்கேன். அமெரிக்காவோ, ஆஸ்திரேலியாவோ இல்லல்ல’’ என்றவர், சட்டென, ”சரிங்க சார், திருமணத்துக்குதான் அழைக்காம விட்டுட்டீங்க, விடுங்க. இப்போ நான் சொல்றத நீங்க கேட்கணும். நீங்களும் உங்க வீட்டம்மாவும் உங்களுக்கு எப்போ சௌகரியமோ சொல்லுங்க. சென்னையிலிருந்து கோவைக்கு வந்துபோக விமானச் சீட்டு, விமான நிலையத்திலிருந்து உடுமலை வரைக்கும் கார், இங்கே தங்க இடமும் சாப்பாடும், இங்கேயிருந்து பக்கத்துல இருக்க எங்கே போகணும்னு விருப்பப்பட்டாலும் சொல்லுங்க கூட்டினு போய் கூட்டினு வர காரும், கூடவே ஒரு ஓட்டுனரும்… எல்லாம் தயாரா இருக்கும். இது என்னோட அன்புக் கட்டளைனு வேணா வச்சிக்கோங்க. இல்ல திருமணப் பரிசாக்கூட எடுத்துக்கோங்க, உங்க விருப்பம். ஆனா, கண்டிப்பா வரணும் சார். நான் எதிர்பார்த்துட்டு இருப்பேன்’’ என்றார்.

”வேண்டாம் சார், எதுக்கு உங்களுக்கு சிரமம்” என எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. கடைசியில் அவரது அன்புக்கு கட்டுப்பட்டு, ”கண்டிப்பா சீக்கிரமே வர்றோம் சார்..’’ என்றேன்.

அதிலும் அவர் என்னிடம் அவ்வளவு உரிமையுடன் சொல்லக் கேட்டு கண் கலங்குவதைப் பார்த்த கோமதி பேசி முடித்ததும், ”என்னாச்சு?’’ என்றார். சொன்னேன். என்னை விட அதிகமாய் மகிழ்ந்தார். ஆம்!

இப்படி யாரென்று முகம் தெரியாத சரவணா ஸ்டோர் சேகர் தொடங்கி… கால்நடை மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் குமரவேல் சார் வரை எத்தனை எத்தனையோ நண்பர்கள், அன்பர்கள் எங்கள் திருமணத்திற்கு தம்மால் முடிந்த பரிசுகளையும், அன்பையும் பகிர்ந்து மகிழ்த்தியிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல… இதுவரை முப்பதுக்கும் அதிகமானோர் தம் வீட்டுக்கு விருந்துக்கு வருமாறு அன்போடு அழைத்திருக்கிறார்கள். யாவரும் நண்பர்கள் (சிலர் மட்டும் முகம் தெரியாதவர்கள்). எங்கள் யாவருக்குள்ளும் எவ்வித எதிர்பார்ப்புமற்ற அன்பும், நட்பும் மட்டும் பெருந்திரளாய் இருக்கிறது. ஒருவருக்கும் சாதி, மதம் ஒரு பொருட்டல்ல. ஆம்!

சாதியைக் காரணம் காட்டி என்னதான் ஒருகூட்டம் எங்களை வீம்புக்கு ஒதுக்கினாலும், வசை பாடினாலும் அதை மிஞ்சிய பெரும் அன்பர்கள் கூட்டம் ஒன்று எங்களை கொண்டாடியும், எங்கள் மீது பேரன்பை செலுத்தியும் வருவதை நினைத்து பெரிதும் மகிழ்கிறோம்.

இந்நேரத்தில் எங்கள் திருமணத்திற்கு வந்திருந்து உடன் நின்று வாழ்த்தி மகிழ்ந்த அன்பர்களையும், நேரில் வர முடியாமல் போனாலும் தூரத்தில் இருந்து வாழ்த்தி தம் அன்பை பகிர்ந்த நல்லுள்ளங்களையும் மனதார நினைத்துப் பார்க்கிறேன்.

இச்சின்னஞ்சிறு பூமியில் இச்சிச்சிறு வாழ்வில் அன்புதானே ஆகப்பெரிய கிடைத்தற்கரிய பொக்கிஷம். அப்பொக்கிஷம் அதிகம் கிடைக்கப்பெற்ற மிகச்சிலரில் நாங்களும் இருவர் என்பதை இங்கே பெருமையோடு சொல்லிக் கொள்கிறோம்!

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=