எங்க கல்யாணம் – 7

ஏப்ரல் 21, 2021

**

முதலில் நாங்கள் பதிவுத் திருமணம் செய்யலாம் என்றுதான் நினைத்தோம். ஆனால், தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் சொல்லும் விதிமுறைகளைக் கேட்டுவிட்டு, ‘இது என்ன பொதுமக்களுக்கான சட்டமா? இல்லை, அதிகாரத்தில் இருப்பவர்கள் தம் விருப்புக்கேற்ப போட்டுக்கொண்ட சட்டமா?’ என நினைத்துக்கொண்டு, ‘போங்கய்யா நீங்களும் உங்க சட்டமும்?’ என வந்துவிட்டோம்.

நான்கைந்து பேர் முகநூலில் எங்கள் திருமண அறிவிப்பு பதிவை பார்த்துவிட்டு, ”சாதி, மதம், சடங்கு, சம்பிரதாயம் எல்லாம் மறுப்பது சரி, அது எப்படி நீங்கள் சட்டத்தை மதிக்காமல் மறுத்து திருமணம் செய்யலாம்?’’ என்றும், ”படித்த நீங்களே இப்படி சட்டத்தை மறுக்கலாமா?’’ என்றும் கேட்டிருந்தார்கள்.

இவர்கள் உண்மையில் சட்டம் தெரிந்துதான் கேட்கிறார்களா? இல்லை சும்மா கேட்க வேண்டுமே எனக் கேட்கிறார்களா? சரி, நேரம் வரும்போது பதில் சொல்வோம் என அமைதியாக விட்டுவிட்டேன்.

திருமணம் செய்து கொள்ளலாம் என்ற பேச்சு முதலில் எங்களுக்குள் வந்ததும், பதிவுத் திருமணம் செய்யலாம் என்று ஏகமனதாக இருவரும் முடிவெடுத்தோம். உடனே எனக்குத் தெரிந்த வழக்கறிஞர் நண்பர்கள் இருவருக்கு அழைத்துக் கேட்டேன். ஒருவர், ”ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலேயும் ஒவ்வொரு விதிமுறை வைத்திருப்பாங்க. ஒண்ணு நீங்க உங்க சொந்த ஊருக்குப் போய் அங்கே இருக்கிற சார்பதிவாளர் அலுவலகத்துல பண்ணனும். இல்லைனா, அவங்க பகுதியில இருக்க பதிவாளர் அலுவலகத்துல பண்ணனும்’’ என மிக மேலோட்டமான தகவல்களைச் சொன்னார்.

கோவையில் உள்ள இன்னொரு வழக்கறிஞர் நண்பர், ”அதெல்லாம் ஒரு விஷயமே இல்ல நண்பரே. நான் சொல்ற டாக்குமெண்ட்ட மட்டும் எடுத்துட்டு கோவை வாங்க, எப்போ வேணுமோ அப்போ ரிஜிஸ்டர் பண்ணிக்கலாம்’’ என்றார்.

திருமணம் செய்ய கோவை வரை போகவேண்டுமா? என்றொரு தயக்கம். முடிந்தவரை சென்னையிலேயே செய்யவேண்டும் என நினைத்தோம். அதனால், அடுத்தநாள் அருகில் உள்ள ஒரு சார்பதிவாளர் அலுவலகத்துக்கு போய் விசாரிக்கலாம் என முடிவெடுத்தேன். அதற்குமுன் இணையத்தில் பதிவுத் திருமணம் குறித்து சொல்லப்பட்டுள்ள தகவல்களையும், விதிமுறைகளையும் ஒருதடவை வாசித்தேன். சில தெளிவாக இருந்தன, பல குழப்பும் விதத்தில் இருந்தன.

அடுத்தநாள் மதியம் சாப்பிட்டுவிட்டு வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள என் அறையிலிருந்து கிளம்பி மரங்கள் நிறைந்த சாலை வழியாக நடந்துபோய் பேருந்தேறி திருமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றேன்.

பெரும் கட்டிடம் ஒன்றின் இரண்டாவது மாடியில் உள்ள அலுவலகம் செல்லும் வழிநெடுக வழக்கறிஞர்கள் கூட்டம். உள்ளே நுழைந்ததுமே பெரியவர் ஒருவர் என்னிடம் வந்து, ”என்ன சார் வேணும்?’’ என்றார். சொன்னேன். பாக்கெட்டிலிருந்து சிறுதாள் ஒன்றை எடுத்து என்னிடம் தந்து ”கீழ இருக்க இந்த கடை எண்ணுக்கு போங்க, சொல்வாங்க’’ என்றார்.

‘சரி, அது தகவல் சொல்லும் இடம் போல’ என நினைத்துக் கொண்டு போனால், அது ஒரு தனியார் அலுவலகம். வெளியில் நின்று உள்ளே பார்த்தேன். வரிசையாக இருக்கைகள் போடப்பட்டிருந்தது. நான்கைந்து வழக்கறிஞர்கள் இருந்தார்கள். அவர்களிடம் ஐந்தாறு பேர் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒருவாறு யூகித்துவிட்டேன், ‘இவர்கள் நடுவில் தரகர் வேலை பார்த்து பணம் வாங்கும் கும்பல். இது நமக்கு சரிப்பட்டு வராது’ என மீண்டும் மேலே வந்தேன்.

அதே பெரியவர் அருகில் வந்து, ”என்ன பேசுனீங்களா?’’ என்றார். ”இல்ல, நான் வெறும் தகவல் கேட்கதான் வந்தன். நீங்க ஏன் அங்க போகச் சொன்னீங்க?’’ என்றேன். கடுப்பானவர் எதுவும் சொல்லாமல், ”போய் உள்ள கேளுங்க, நல்லா சொல்வாங்க’’ என்றார். அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் உள்ளே சென்று நீள் காத்திருப்புக்குப் பிறகு அலுவலர் ஒருவரிடம் கேட்டேன், ”சார், பதிவுத் திருமணம் செய்ய என்னதான் procedure?”.

சட்டென முகத்தை பல கோணங்களில் காட்டியவர், ஏதோ வரக்கூடாத இடத்திற்கு வந்து கேட்கக்கூடாத கேள்வியை கேட்டுவிட்டதாக நினைத்து, ”ஏன் சார் தொல்லை பண்றீங்க? அதான் எல்லாத்தையும் நெட்ல போட்டிருக்கமே, வெளியில கூட எழுதி ஒட்டியிருக்கமே’’ என்றார்.

நான் சொன்னேன், ”எல்லாத்தையும் பார்த்தேன் சார். சரியா புரியல, அதான் நேர்ல கேட்கலாம்னு வந்தேன்’’  என்றேன்.

அதே கடுப்புடன், ”ஏன், என்ன புரியல? தமிழிலேதான எழுதியிருக்கு, வேகமா சொல்லுங்க. எனக்கு ஆயிரம் வேல இருக்கு’’ என்றார்.

உடனே நான், ”சாட்சி கையெழுத்து எத்தன பேர் போடணும், யார்லாம் போடலாம் சார்’’ என்றேன்.

அதைத்தான் கேட்பேன் என முன்னமே நினைத்தவராய் நக்கலாக சிரித்துவிட்டு, ”என்ன திருட்டுக் கல்யாணம் பண்ணப் போறீங்களா?’’ என்றார், குரலை சற்று குறைத்து தலையை மெல்ல ஆட்டியபடி.

நான் சொன்னேன், ”இல்ல சார், எல்லாருக்கும் சொல்லிட்டு வந்து சட்டப்படி பதிவுத் திருமணம் பண்ணப் போறோம்’’.

என் பதிலில் திருப்தியுறாதவராய், ”அடையாள அட்டை வச்சிருக்க யார் வேணா பையன் சார்பா வந்து கையெழுத்து போடலாம். ஆனா, பொண்ணுக்கு அவங்க அப்பா இல்லன்னா அம்மாதான் போடணும்’’ என்றார்.

சட்டென நான், ”பொண்ணோட அப்பா, அம்மா கல்யாணத்துக்கு ஒத்துக்கலன்னா என்ன பண்றது சார்?’’ என்றேன்.

இதைக் கேட்டு இன்னும் கடுப்பானவர், ”அதுதான் திருட்டுக் கல்யாணமான்னு மொதல்லயே கேட்டேன்ல… இல்ல அது இதுன்னு சொல்லிட்டு இப்போ பொண்ணோட அப்பா, அம்மா ஒத்துக்கலைன்னு சொல்றீங்க. தயவுசெய்து போங்க சார் எங்களுக்கு இங்கே ஆயிரம் வேலை இருக்கு’’ என்றார்.

”ஒரே ஒரு கேள்வி சார் கடைசியா… பொண்ணோட அப்பா, அம்மா அனுமதி இல்லாம கல்யாண வயசான ரண்டுபேரு தான் விரும்பனவங்கள சட்டப்படி நம்ம நாட்ல கல்யாணம் பண்ணவே முடியாதா சார்?’’என்றேன்.

உடனே கோபமானவர் என்னை கீழும் மேலும் பார்த்துவிட்டு, ”முடியவே முடியாது. இப்ப மட்டுமில்ல… நீங்க வேற எங்க போய் யார்கிட்ட கல்யாணம் பண்ணிட்டு வந்து பின்னால அத ரிஜிஸ்டர் பண்ண நினச்சாலும் சரி, பொண்ணோட அப்பா அம்மா permission வேணும். இதான் ரூல்ஸ். போதுமா, போங்க’’ என்றுவிட்டு, ஏதோ முணுமுணுத்தபடி தன் முன்னாலிருந்த பேப்பரில் ஒன்றை எடுத்து எதையோ எழுத ஆரம்பித்தார்.

”அப்போ பொண்ணோட அப்பா, அம்மா அம்பது வருஷம் ஆனாலும் சம்மதம் சொல்லலனா ஒருத்தவங்க திருமணத்த பதிவே பண்ணமுடியாதா சார்?’’ என்றேன்.

‘நீ இன்னும் போகலயா?’ எனும் தோரணையில் என்னை நிமிர்ந்து எரிச்சலோடு பார்த்தவர், ”ஏன் சார் வந்து என் நேரத்த வீண் பண்றீங்க. சட்டம் சொல்றத சொல்லிட்டேன். தயவுசெய்து போங்க’’ என்றார்.

அங்கிருந்து வரும்போது இன்னும் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்கவேண்டும் போலிருந்தது, கேட்டேன். ”மனச தொட்டு சொல்லுங்க, இதுக்குப் பேரு ரிஜிஸ்டர் மேரேஜா சார்?’’.

என் கேள்வியை கேட்டும் கேட்காததுபோல் கீழே குனிந்து தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தார். இத்தனையையும் சற்று தள்ளி நின்று வேடிக்கை பார்த்த அந்த பெரியவர் மீண்டும் பக்கத்தில் வந்து, ”இதுக்குதான் மொதல்லயே அங்க போய் கேளுங்கன்னு சொன்னேன். இப்பவாவது போய் கேளுங்க’’ என்றார்.

‘சரி, போய் கேட்டுத்தான் பார்ப்போமே’ என போனேன். வரவேற்று உட்காரச் சொன்னவர்கள், ”டீ வேணுமா? காபி வேணுமா?” என்றார்கள். ”எதுவும் வேண்டாம்” என்றேன். ”என்ன பண்ணனும் சார் நாங்க, சொல்லுங்க?’’ என்றார்கள். சொன்னேன். ஏதோ செய்யவே முடியாத செயல் ஒன்றை செய்து தரச் சொல்லி கேட்டதுபோல் முகபாவனை காட்டிவிட்டு, அதை எப்படியாவது எனக்கு செய்துதந்துவிட வேண்டும் என தீவிரமாக யோசிப்பதுபோல் கொஞ்சநேரம் நடித்துவிட்டு,

”முன்ன மாதிரி எல்லாம் இப்போ ஈசியா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ண முடியாது சார். ரூல்ஸ் எல்லாம் ரொம்பக் கடுமையா மாத்திட்டாங்க. ஆனா, நீங்க எதுக்கும் கவலப்படாதீங்க. Address proof, birth proof, சாட்சி கையெழுத்து போடப்போற மூணுபேரோட ஆதார் ஜெராக்ஸ், கூட நாலு போட்டோ கொண்டுவாங்க. உங்களுக்காக நான் எப்படியாவது முயற்சி பண்ணி முடிச்சி தர்றன்’’ என்றார்.

கேட்டுவிட்டு சிரிப்புதான் வந்தது. அதுவும் ஏதோ பத்திருபது வருடம் என்னுடன் பேசிப் பழகிய ஒருவர்போல் எனக்காக எப்படியாவது முயற்சி செய்து முடித்துத் தருவதாக சொன்னது. ‘எப்படியெல்லாம் பணத்துக்காக நடிக்கிறார்கள்?’ என நினைத்துக்கொண்டேன்.

உடனே அவரிடம், ”பொண்ணோட அப்பா, அம்மா அனுமதி இல்லாம ரிஜிஸ்டர் மேரேஜே பண்ணமுடியாதுன்னு சொல்றாங்களே சார்?’’ என்றேன்.

”சட்டம் அதைத்தான் சார் சொல்லுது. ஆறு மாசத்துக்கு முன்னாலேதான் இந்த ரூல்ஸ போட்டாங்க. அதப் பத்திலாம் நீங்க கவலப்படாதீங்க. நான் முடிச்சி தர்றேன்’’.

”எவ்ளோ செலவாகும் சார்?’’

அதற்காகவே காத்திருந்தவராய், ”எப்படியும் முப்பத்தைந்தாயிரம் ஆகும் சார், உங்களுக்காக வேணா முப்பதாயிரத்துக்கு முடிச்சித்தர்றேன்’’ என்றார்.

பகீரென்றது. இத்தனைக்கும் பதிவுத் திருமணம் செய்ய பெரிதாக ஒன்றும் செலவில்லை, வெறும் விண்ணப்பக் கட்டணம் மட்டும்தான். அதுவும் நூறு ரூபாய்க்குள்தான்.

”என்ன சார் இவ்ளோ சொல்றீங்க?’’ என்றேன்.

கேட்டுவிட்டு சற்று கடுப்பானவர் பெரிதாக வெளியில் காட்டிக்கொள்ளாமல் பொய் சிரிப்பு காட்டி, ”ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ண பொண்ணு வீட்டு சம்மதம் கட்டாயம் இருக்கணும் சார். ஒருவேள நீங்க கல்யாணம் முடிச்சிட்டு வந்து ரிஜிஸ்டர் பண்ணாலும் இதான் இன்னைக்கு ரூல்ஸ்’’ என்று சொல்லிவிட்டு, தான் கேட்ட சான்றிதழ்களையும் பணத்தையும் தந்தால் கையோடு முடித்துத் தருவதாக உறுதியளித்தார்.

”ஒரே ஒரு சந்தேகம் சார்?’’ என்றேன், கேட்கச் சொன்னார். ”சட்டம் கேட்கற பொண்ணோட அப்பா, அம்மா அனுமதி இல்லாம அப்புறம் எப்படி சார் நீங்க மட்டும் பதிவு பண்ணித் தருவீங்க?’’ என்றேன்.

”அதுக்குதான் சார் அந்த முப்பதாயிரம் கேட்டேன். ஆபீஸர் ஒவ்வொருத்தருக்கும் தரணும். அப்பதான் எதுவும் கேட்காம முடிச்சி தருவாங்க’’ என்றார்.

இரண்டு மூன்று நாட்களில் பணம் எடுத்துக்கொண்டு வருவதாக சொல்லிவிட்டு வெளியில் வந்தேன். மெல்ல கீழிறங்கி கட்டிடத்தின் பின்புறம் உள்ள வாகன நிறுத்துமிடம் போய் அங்குள்ள இருசக்கர வாகனம் ஒன்றில் நின்றபடி சாய்ந்துகொண்டு கோவையில் உள்ள நண்பருக்கு அழைத்துச் சொன்னேன்.

”நண்பரே இங்க சட்டம், ரூல்ஸ் எல்லாம் சும்மா பேருக்குதான். பணம் தந்தா முடியவே முடியாதுன்னு சொன்னவங்க சர்வ சாதாரணமா முடிச்சுத் தருவாங்க.’’ என்றவர், இன்று திருமணம் செய்து வைப்பதற்காகவே தமிழ்நாட்டில் பல அறக்கட்டளைகளும், அமைப்புகளும் இருப்பதாகவும், அதன் மூலமாக அவர்கள் கேட்கும் தொகையை செலுத்தி திருமணம் செய்துகொண்டால் மிக எளிதில் பதிவுச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என்றும் சொன்னார்.

நண்பரிடம் கேட்டேன், ”அப்போ சட்டம் பொண்ணோட அப்பா, அம்மா அனுமதி இல்லாம பதிவுத் திருமணம் செய்யவே முடியாதுன்னு சொல்லுதே, அது?’’

நான் சொன்னதைக் கேட்டுவிட்டு சத்தமாகச் சிரித்தவர், ”நண்பரே, இன்னைக்கு பதிவுத் திருமணம்கிறது ஒரு பெரிய பிசினஸ். அதுக்குன்னு ஆயிரக்கணக்கான அமைப்பு, அறக்கட்டளை, வழக்கறிஞர்கள்ன்னு ஊருக்கு ஊர் இருக்காங்க. அவங்க கேட்கிற பணம் தந்தா போதும்… உயிரோட இருக்கவரா செத்துப்போனவரா, அப்பா அம்மா இருக்காங்களா இல்லையான்னு எதையும் பார்க்கமாட்டாங்க. ஆளே இல்லைன்னாலும் Certificate வாங்கித் தருவாங்க’’ என்றவர்,

”ஒண்ணு பொண்ணோட அப்பா, அம்மா கையெழுத்த இவங்களே போட்டு வாங்கித்தருவாங்க. இல்ல, அதுக்குன்னு ஆள ரடி பண்ணி இவங்கதான் அப்பா, அம்மான்னு காட்டி வாங்கித்தருவாங்க’’ என்றார்.

கேட்டுவிட்டு அதிர்ந்தேன். ஒருபோதும் பெற்றோர் உயிருடன் இருக்கும்போது இப்படிப்பட்ட கீழ்மைச் செயலில் ஈடுபடக்கூடாது அதுவும், ஒரு சான்றிதழுக்காக அவர்கள் இடத்தில் வேறு யாரையோ கையெழுத்திட வைத்து பதிவுத் திருமணம் செய்யக்கூடாது என இருவரும் முடிவெடுத்தோம்.

அதுமட்டுமல்ல… இப்படிப்பட்ட சட்டத்தின் மீதும், அதை போட்டவர்கள் மீதும் பெரும் கோபம் வந்தது, நம்பிக்கை இழந்தோம். கடைசியாக ஒரு கேள்வியைக் கேட்டேன் நண்பரிடம், ”இப்படி ஒரு பதிவுத் திருமணம் அவசியம் பண்ணனுமா?’’.

பெரிதாக யோசிக்கவெல்லாம் இல்லை, ”என்னைக் கேட்டா வேண்டாம்னுதான் சொல்வேன் நண்பரே’’ என்றார். எனக்கும் அதுதான் சரியெனப் பட்டது. அதோடு, இவர்கள் கேட்கும் பணத்தை தந்து இன்று ஏமாற்றி பதிவுத் திருமணம் செய்தால் நாளை பெண் வீட்டார், ‘எங்க அனுமதி இல்லாம இவங்க பதிவுத் திருமணம் செய்திருக்காங்க?’ என வழக்கு தொடுக்க வாய்ப்புள்ளது. அப்படி தொடுக்கும்பட்சத்தில் சான்றிதழ் தந்தவர்களும், அதை வாங்கித் தந்தவர்களும் ஏதாவது சொல்லி தப்பித்துவிடுவார்கள். மாட்டிக் கொள்ளப்போவது நாம்தான் என்றும் தோன்றியது. ஆம்!

எங்கள் இருவருக்குமே பெரியார் சுயமரியாதை இயக்கம் உள்ளிட்ட எந்த அமைப்புகள் நடத்திவைக்கும் திருமணங்கள் மீதும் கொஞ்சம் கூட நம்பிக்கையும், விருப்பமும் கிடையாது. அதனால் சாதி, மதம், சடங்கு, சம்பிரதாயத்துடன்… நம் இந்திய நாட்டில் அதுவும், தமிழ்நாட்டில் திருமண வயது பூர்த்தியடைந்த ஓர் இந்தியக் குடிமகனும், குடிமகளும் தாம் மனதார விரும்பும் ஒருவரை பதிவுத் திருமணம் செய்துகொள்ள விரும்பினாலோ அல்லது கோயிலிலோ வேறு எங்கோ திருமணம் செய்துகொண்டு வந்து அதை பதிவு செய்ய நினைத்தாலோ பெண்ணின் பெற்றோர் அனுமதி இல்லாமல் அதை ஒருபோதும் பதிவு செய்யமுடியாது என சொல்லும் (அதுவே, கேட்கும் பணத்தை தந்தால் முடியும் என முடித்தும் தரும் ஓட்டைகள் நிரம்பிய) மதிப்பிழந்துபோன சட்டத்தையும் மறுத்து திருமணம் செய்யலாம் என முடிவெடுத்தோம்.

எங்களின் இம்முடிவை நண்பர்கள் சிலரிடம் பகிர்ந்தேன். அவர்களும் நாங்கள் சொல்வதே சரி என்றார்கள். உடனே எங்கள் திருமணத்திற்கென,

// இணையேற்பு உறுதிமொழி!

‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
‘ என்னும் வள்ளுவரின் குறளுக்கு ஏற்ப,

திருவண்ணாமலை மாவட்டம் –  தண்டராம்பட்டு வட்டம் – திருவடத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. சாமிக்கண்ணு – திருமதி. வெள்ளையம்மாள் தம்பதியின் இளைய மகனான செல்வன். வடிவரசு என்னும் நானும்…

சென்னை மாவட்டம் –  திருவொற்றியூர் வட்டம் – எண்ணூர் பகுதியைச் சேர்ந்த திரு. சேகர் –  திருமதி. இசைவள்ளி தம்பதியின் இளைய மகளான செல்வி. கோமதி என்னும் நானும்…

சாதி, மதம், சடங்கு, சம்பிரதாயம், சட்டம் போன்ற யாவற்றையும் மறுத்து, எம் முப்பாட்டன் வள்ளுவரை சாட்சியாக வைத்து, மிகச் சில அன்பர்கள் சூழ ‘கணவன் – மனைவியாக’ இணையேற்று, வள்ளுவர் வாக்கிற்கிணங்க ஒருவருக்கொருவர் எந்நாளும் அன்பொழுக அறத்தின் வழியில் வாழ்வின் கடைசிமூச்சு வரை சீரோடும், சிறப்போடும் இருப்போம் என உறுதியளிக்கிறோம்.

(வடிவரசு)

(கோமதி)

15 – 03 – 2021
வள்ளுவர் கோட்டம்,
சென்னை – 34. //

என்றோர் இணையேற்பு உறுதிமொழிச் சான்றிதழை இதுவரை இல்லாத வகையில் புதிதாக நாங்களே உருவாக்கி, மனதார வாசித்து அதில் கையொப்பமிட்டு, வந்திருந்த அன்பர்களில் பத்து பேரிடம் சாட்சிக் கையெழுத்தும் வாங்கி எங்கள் திருமணத்தை நாங்கள் விரும்பியபடி நன்முறையில் நடத்தி முடித்தோம். ஆம்!

என் கேள்வியெல்லாம் இதுதான். ஏன் நம் அரசாங்கமும், நீதித் துறையும் சேர்ந்து இத்தகையதோர் அர்த்தமற்ற பாரபட்சம்கொண்ட மதிப்பிழந்த சட்டத்தை இயற்றியுள்ளது? யாருக்காக இச்சட்டம் சில மாதங்களுக்கு முன் ஊரடங்கு காலத்தில் அவசர அவசரமாக மாற்றியமைப்பட்டுள்ளது? திருமண வயது நிரம்பிய இருவர் பெற்றோரை மீறி அல்லது எதிர்த்து ஒருவருக்கொருவர் சுயமாக முடிவெடுத்து திருமணம் செய்துகொள்ள நினைத்தாலும் அனுமதிக்காத இக்கொடும்சட்டம் (சில மாதங்களுக்கு முன்புவரை அனுமதித்த சட்டம்) குறித்து ஏன் எந்த ஊடகமும், அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் பெரிதாக பேசவில்லை, குரல் கொடுக்கவில்லை?

பெற்றோர் சாதி போன்ற கீழ்மைகளை காரணம் காட்டி அல்லது வேறு ஏதேனும் சொல்லி விரும்பியவரை திருமணம் செய்துகொள்ள கடைசிவரை சம்மதம் தர மறுக்கும் பட்சத்தில் அவர்கள் சுயமாக முடிவெடுத்து வெளியேறி பதிவுத் திருமணம் செய்ய அனுமதிக்காத இச்சட்டத்தால் யாருக்கு இங்கே லாபம்?

இவ்வளவு கடுமையாக மாற்றியமைக்கப்பட்ட ஒரு சட்டம் வெறும் இருபதாயிரம், முப்பதாயிரம் பணம் பெற்றுக்கொண்டு மிக வெளிப்படையாக சான்றிதழ் தரக்கூடிய அளவுக்கு வலுவிழந்து ஓட்டை உடைசலாக இருப்பது ஏன்?

யாவற்றிலும் சட்டத்தை மதிக்கும் எங்களால் இச்சட்டத்தை மட்டும் ஏனோ ஒருவகை வன்முறை நிறைந்த சட்டமாகத்தான் பார்க்கமுடிகிறது. அதனால் இத்தகு வன்முறை நிறைந்த சட்டத்தை மனதார ஏற்க மறுத்து எங்கள் திருமணத்தை எங்களுக்குப் பிடித்ததுபோல் இதோ வள்ளுவரை சாட்சியாக வைத்து செய்திருக்கிறோம், அதை வெளிப்படையாக இவ்வூர் உலகுக்கும் அறிவித்திருக்கிறோம்.

ஒருவேளை நாளை வன்முறை நிறைந்த இச்சட்டம் நேர்மையுடன் பழையபடி திருத்தப்பட்டால் எங்கள் திருமணத்தை நாங்களும் மிக நேர்மையாக சட்டத்தை மதித்து பதிவு செய்வோம். இல்லையெனில் கடைசிவரை பதிவு செய்யமாட்டோம். ஆம்!

நம்பிக்கை விளைவிக்காத பாரபட்சம் கொண்ட இத்திருமணப் பதிவுச் சட்டம் வழங்கும் பதிவுச் சான்றிதழ் (பணச்சான்றிதழ்) இனி ஒருபோதும் எங்களுக்குத் தேவையில்லை. நாங்களே மனதார உருவாக்கிக்கொண்ட மனச்சான்றிதழே (மணச்சான்றிதழ்) போதும். ஆம்!

மனத்தின் உறுதிக்கு முன் மனசாட்சியற்ற இச்சட்டம் என்பது எங்களைப் பொறுத்தவரை வெறும் காகிதம்தான்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=