எங்க கல்யாணம் – 6

ஏப்ரல் 20, 2021

**

திருமணத்திற்கு ஐந்து நாட்கள் முன்பே நானும் ஜெனி அக்காவும் தாலி வாங்கப் போயிருந்தோம். அதுவும் எங்கள் திருமணத் தாலி மற்ற திருமணத் தாலிகள் போன்று இல்லாமல் மிக எளிதாக, அதேநேரம் தனித்துவம் மிக்கதாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்.

திருக்குறள் எவ்வளவு சொன்னாலும் தீராத பெருமைகளை தன்னகத்தே கொண்டதென்பதை யாவரும் அறிவோம். அப்படிப்பட்ட திருக்குறளின் முதல் குறள் ‘அகர முதல எழுத்தெல்லாம்..’ என ஆரம்பிக்கும். எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய முதலை உடையது என்னும் பொருளில்.

‘நாம் ஏன் நம் திருமணத் தாலியை ‘அ’கரத் தாலியாக செய்து அணிவிக்கக் கூடாது?’ எனத் தோன்றியது. உடனே கோமதியிடம் சொன்னேன். முதலில் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு விளக்கமாக சொன்னதும் உற்சாகமாகி ”சரி’’ என்றார்.

சடங்கு, சம்பிரதாயத்தில் எல்லாம் பெரிதாக உடன்பாடில்லை. அதுவும் தாலி விஷயத்தில் சுத்தமாக என்பதால் முதலில் தாலியே வேண்டாம் என்றுதான் நினைத்தேன். இருந்தாலும் கோமதியிடம் ஒருவார்த்தை கேட்போம் எனக் கேட்டதில் இருக்கட்டும் என்றார். அதிலும் அகரத் தாலி விஷயம் அவருக்கு ரொம்பவே பிடித்துவிட்டது.

நகைகள் குறித்து பெரிதாக ஒன்றும் தெரியாது என்பதால் ஜெனி அக்காவை உடன் வருமாறு கூட்டிக்கொண்டு முதலில் சென்னை சில்க்ஸ் எதிரில் உள்ள ஜிஆர்டி-க்கு போயிருந்தோம். செயின் மட்டும்தான் இருந்தது, அகரம் இல்லை. ஆர்டர் கொடுத்தாலும் கிடைக்க குறைந்தது பதினைந்து நாட்கள் ஆகும் என்றார்கள். சரி, கையில் வைத்திருந்த பழைய தங்கத்துக்கு இன்றைய மதிப்பு என்ன என்பதையாவது தெரிந்துகொள்வோம் எனக் கேட்டதில் முப்பத்தி ஒன்பதாயிரம் என்றார்கள். அது மிகக் குறைந்த தொகையாக பட்டது. வேண்டாம் எனச் சொல்லிவிட்டு போத்தீஸ் அருகிலுள்ள சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகைக்குப் போனோம்.

முதலில் ‘அ’கரம் உள்ளதா என்று விசாரித்தோம். நல்லவேளை இருந்தது. ஆனால் பெரிதாக இருந்தது. ”இதைவிட சின்னதாக வேண்டும்” என்றோம். ”இதுதான் உள்ளது..” என்றனர். ”ஆர்டர் கொடுத்தா எப்போ கிடைக்கும்?’’ என்றதற்கு, ”சனிக்கிழமை கிடைத்துவிடும்”, அதாவது மூன்று நாட்களில் என்றார்கள். ”சரி’’ என ஆர்டர் கொடுத்துவிட்டு, அது எப்படி இருக்க வேண்டும், எந்த அளவில், எவ்வளவு எடையில் இருக்கவேண்டும் என ஒவ்வொன்றையும் விளக்கமாகச் சொன்னேன். அமைதியாக கேட்ட சேகர் என்பவர், ”இது எதுக்குன்னு தெரிஞ்சுக்கலாமா?’’ என்றார். சொன்னோம். கேட்டு வியந்தார். ”நிஜமாவே இதுதான் தாலியா?’’ என்றார். அவரால் வெகுநேரம் நம்பவே முடியவில்லை. ”ஆமாம்’’ என்றோம். அதன்பின் எங்கள் திருமணம் குறித்து கேட்டறிந்தவர் மகிழ்வோடு உடனிருந்து தாலியை வாங்கிக்கொண்டு வெளியில் வரும்வரைக்கும் உதவினார்.

தமிழ் எழுத்துக்களில் அகரத்தின் மீது எப்போதும் அளவு கடந்ததோர் ஈர்ப்புண்டு எனக்கு. தமிழில் முதல் எழுத்து என்பதைத் தாண்டி, யாவரும் கற்றுக்கொள்ளும் முதலெழுத்து. தமிழ் எழுத்துக்கேயன்றி வட எழுத்திற்கும் முதலாவது.

அகரமாகிய உயிர், எழுத்துக்கள் எல்லாவற்றினும் பொருந்தி வேறற நிற்பது.

‘அ’கரம் ஆர்டர் கொடுத்துவிட்டு பல தேடல்களுக்குப் பின் தாலி செயின் தேர்வு செய்தோம். புகைப்படம் எடுத்து கோமதிக்கு அனுப்பி வைத்தேன். மிகவும் பிடித்திருப்பதாகச் சொன்னார். உடனே வைத்திருந்த பழைய தங்கத்தை கொடுத்து இதன் இன்றைய மதிப்பு என்ன எனக் கேட்டோம். சோதித்துப் பார்த்துவிட்டு, நாற்பத்தி ஆறாயிரம் என்றார்கள். ஜிஆர்டி-யில் சொன்னதை விட ஏழாயிரம் அதிகம். அதிர்ச்சியாக இருந்தது. ஒரு நகைக்கடைக்கும் இன்னொரு கடைக்கும் இவ்வளவு வித்தியாசமா? ஏதோ நூறு, இருநூறு என்றால் பரவாயில்லை, இதென்ன பகல் கொள்ளையாக இருக்கிறதே என உள்ளுக்குள் நினைத்துக் கொண்டு, பழைய தங்கத்தை கொடுத்துவிட்டு அதற்கான பணத்தில் புதுநகை வாங்கினோம்.

புறப்படும்போது ஒரு தடவைக்கு நான்கு தடவை சேகரிடம் கேட்டுக்கொண்டோம். ”ஆர்டர் கொடுத்தா சனிக்கிழம கண்டிப்பா அகரம் கெடச்சிடும்தானே?’’. ”பயப்படாம வீட்டுக்கு போங்க. கண்டிப்பா வந்துரும், அதுக்கு நான் பொறுப்பு’’ என்றார். நம்பிக்கையோடு வெளியில் வந்தோம்.

கொளுத்தும் வெயிலோடு உள்ளே போனவர்கள், சூரியன் போய் இருள் வந்து எங்கும் மின் விளக்குகள் ஒளிரப் பார்த்துவிட்டு ஜெனி அக்காவிடம், ”என்னக்கா அதுக்குள்ள நைட் ஆய்டிச்சு?’’ என்றேன். என்னை மேலும் கீழும் பார்த்தவர், ”என்னமோ நான்தான் பகல ஒளிச்சிவச்சுட்ட மாதிரி கேட்கறீங்களே தம்பி’’ என கலாய்த்துவிட்டு, ”நாம கடைக்குள்ள போயி நாலு மணிநேரத்துக்கு மேல ஆவுது, அதுவாவது தெரியுமா தம்பி?’’ என்றார். அப்போதுதான் நேரம் பார்த்தேன், இரவு எட்டாக இன்னும் ஐந்து நிமிடம் இருந்தது.

சரி என அக்காவுடன் பக்கத்தில் உள்ள தேநீர்க் கடைக்குப் போய் தேநீர் குடித்துவிட்டு, அவரை ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பிவிட்டு அங்கிருந்து மெல்ல நடந்து என் அறைக்கு வந்தேன். பிடித்த ஒன்றை பிடித்தவாறு செய்தது நினைத்து மனம் கூடுதல் நிறைவாக இருந்தது.

சற்றுநேரத்தில்… செய்யப்போகும் அகரத் தாலி எப்படி இருக்கும்? அதை கையிலெடுத்து எப்போது பார்ப்போம்? அதை பார்க்கும் கோமதி என்ன சொல்வார்? மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? இவ்வூரும் உலகமும் இப்படியோர் தாலியை ஏற்குமா? என ஏதேதோ யோசிக்க ஆரம்பித்தேன்.

சட்டென பக்கத்தில் உள்ள வேப்ப மரத்தில் கூடுகட்டியிருக்கும் காக்கைகள் நான்கைந்து ஒன்றுசேர்ந்து பயத்தில் கரையும் சத்தம் கேட்டு என்னவென ஓடிப்போய் பார்த்தேன். சிறுவர்கள் மூன்றுபேர் மரத்தடியில் நின்றுகொண்டு கல்லால் கூட்டை அடித்திருக்கிறார்கள். கீழிறங்கிப்போய் அவர்களை மிரட்டி அனுப்பிவிட்டு அறைக்குள் வந்தேன்.

அடுத்தநாள் புதன்கிழமை காலையில் கிளம்பி பல்லாவரம் சென்று வீட்டுக்குத் தேவையான பக்கெட், துடைப்பம், மாப்பு போன்றவற்றை வாங்கிப்போய் வீட்டை இன்னொரு தடவை நன்றாக சுத்தம் செய்துவிட்டு, இரண்டு கட்டைப் பைகளில் கொண்டுபோயிருந்த புத்தகங்களை என் படிப்பு அறையில் அடுக்கிவைத்துவிட்டு வந்தேன்.

நண்பர்கள் துளசியையும், விக்கியையும் இரவு ஒன்பது மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் வரச் சொல்லியிருந்தேன், வந்தார்கள். சற்றுநேரம் அவர்களுடன் பேசிவிட்டு, நான்கு தெருக்கள் தள்ளியிருக்கும் என் அறைக்கு கூட்டிப் போனேன். சரியாக நாங்கள் சென்றநேரம் சாமி ஊர்வலம் ஒன்று அவ்வழியாக வந்துகொண்டிருந்தது.

அது சென்றதும் பொருட்களை (மூன்றாவது மாடியில் இருந்து) இறக்கி டாடா ஏசியில் ஏற்றிக்கொண்டு பல்லாவரம் வீட்டுக்குச் செல்லலாம் என்றேன். சரி, என்றார்கள். பத்தரைக்குள் புறப்பட்டு பன்னிரண்டுக்குள் சென்று இறக்குவது என்பதுதான் திட்டம். அதற்குள் எதிர்பாராதவிதமாக சாமி ஊர்வலம் வந்துவிட, ஒரு மணிநேரத்திற்கும் மேல் தாமதம் ஆகிவிட்டது.

மகா சிவராத்திரி என்பதால் பொருட்களை இறக்கி வைத்துவிட்டு நள்ளிரவில் ஏதாவது ஒரு சிவாலயத்திற்குப் போகலாம் என நினைத்தோம். அதேபோல் வந்து இறக்கிவிட்டு அருகிலுள்ள திரிசூலம் – திரிசூலநாதர் கோயிலுக்குப் போயிருந்தோம். பெருங்கூட்டம். மெல்ல உள் நுழைந்து வரிசையில் நின்று சாமியை பார்த்துவிட்டு, சற்றுநேரம் கோயிலுள் உட்கார்ந்து கதைகள் பேசிக்கொண்டிருந்துவிட்டு வீட்டுக்கு வந்தோம்.

அடுத்தநாள் வெள்ளிக்கிழமை மாலை நானும், கோமதியும் பல்லாவரம் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் என் விருப்ப தேநீர்க் கடையில் தேநீர் குடித்துவிட்டு சந்தைக்கு சென்று கொண்டிருந்தோம். சட்டென மனத்தில் ஓர் எண்ணம். ‘நம்ம கல்யாணத்துக்கு ஏன் எல்லாரயும் மாதிரி நாம பூ மால போடணும், வித்தியாசமா எதனா பண்ணா என்ன?’. அடுத்த நிமிடமே, ‘என்ன பண்ணலாம்?’ என்ற வினா. உடனே, ‘நம் மூதாதையர்கள், அதுவும் சங்க காலத்தவர்கள் பனை ஓலையால் செய்த மாலையை அணிந்ததுபோல் நாமும் அணிந்தால் சிறப்பா இருக்குமே?’ என்ற பதில்.

அப்படியே கோமதியிடம் சொன்னேன். மகிழ்ந்து, ”சூப்பர்’’ என்றார்.

அடுத்த கேள்வி, ‘பனை மாலை எங்கே கிடைக்கும்?’, எனக்குத் தெரிந்த இருவருக்கு அழைத்து கேட்டேன். அதில் ஒருவர், ”செய்யற ஒருத்தர் விழுப்புரம் பக்கத்துல இருக்காரு. எப்படியும் ஆர்டர் கொடுத்தா கிடைக்க பத்து நாட்களாவது ஆகும்’’ என்றார்.

திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்கள். இது சரிப்பட்டு வராது என சொல்லிவிட்டு, சந்தையில் யாராவது பனைப் பொருட்கள் விற்கிறார்களா, அப்படி விற்றால் அவர்களிடம் கேட்டுப் பார்ப்போம் என தேடிப் பார்த்தோம். யாரும் இல்லை. இரவு முழுக்க அதே எண்ணம்.

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக விகடனில் உடன் வேலை பார்த்த பெல்சின் சாருக்கு அழைத்து கேட்டுப் பார்த்தேன். தனக்குத் தெரிந்தவர்களிடம் கேட்டுவிட்டு உடனே சொல்வதாக சொன்னார். அடுத்த பத்து நிமிடத்தில் அழைத்தவர், ஒரு மாலைக்கு ஆயிரம் ரூபாய் கேட்பதாகவும், தனக்கென்றால் கொஞ்சம் குறைத்து 750 ரூபாய்க்கு தருவதாகவும் சொன்னார். சற்று அதிகமாகப் பட்டது. இருந்தாலும் வேறு வழியின்றி, ”சரி” என்றேன்.

சரியாக அந்நேரம் பார்த்து கோவையிலிருந்து செந்தில் அண்ணன் அழைத்திருந்தார். மாலை விஷயத்தை அவரிடம் சொன்னேன்.

”இப்பென்ன ஒனக்கு பனமால வேணும் அவ்ளோதான, அத எங்கிட்ட விட்டுட்டு மத்தவேலையப் பாரு. நாளைக்குள்ள மால உன்னத் தேடி வரும்’’ என்றார், அவ்வளவு உறுதியாக.

”எவ்ளோ ஆகும்ணா?’’ என்றேன். ”அதெல்லாம் உனக்கெதுக்கு? இப்பவே போன்போட்டு அவங்ககிட்ட மால வேணாம்னு சொல்லிடு’’ என்றார். அப்படியே சொல்லிவிட்டேன்.

அண்ணனின் நண்பரின் நண்பர் மூலமாக, மதுரை மாவட்டம் –  உசிலம்பட்டி அருகிலுள்ள ஏழுமலை என்னும் பேரூருக்குப் பக்கத்திலுள்ள டி.ராமநாதபுரம் என்னும் சிற்றூரைச் சேர்ந்த முகம்தெரியாத சாமிநாதன் ஐயாவிடமிருந்து, யாரென்று தெரியாத அன்பர்கள் வழியாக திருமங்கலம் வந்து, அங்கிருந்து நண்பர் ஆண்டனி மூலமாக மதுரையை அடைந்து, இரவோடு இரவாக லக்கி டிராவல்ஸில் சென்னை எழும்பூர் வந்துசேர்ந்தது. மறுநாள் பிற்பகலில் போய் பெற்றுக்கொண்டு வந்தேன்.

ஆச்சர்யமாக இருந்தது. எத்தனை அன்பர்கள்? ஒரு மாலை, அதுவும் நம் ஆதிமரமான பனைமரத்தின் ஓலையால் செய்த மாலை வேண்டும் என்றுதான் சொன்னேன். அடுத்தடுத்த மணிநேரங்களில் எங்கெங்கோ இருந்து எத்தனை எத்தனையோ கரங்கள் மாறி என் கைக்கு வந்துள்ளது. நினைத்ததும் சிலிர்த்துப்போனேன்.

மனிதர்கள் எத்தனை மகத்தானவர்கள். அதிலும் அவர்கள் அன்பால் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் எத்தனை மகத்துவம் பொருந்தியவை. நினைத்து நினைத்து மகிழ்வுற்று செந்தில் அண்ணனுக்கும் ஆண்டனிக்கும் கூப்பிட்டு நன்றி சொன்னேன். உடன்… முகம் தெரியாத அந்த மாலை செய்த முதுஉள்ளத்துக்கும், அது என்னிடம் வந்துசேர உதவிய மற்ற இளஉள்ளங்களுக்கும் மனதார எனதன்பை காற்றோடு கலந்து அனுப்பிவைத்தேன்.

வெள்ளிக்கிழமை முன்னிரவு சந்தையிலிருந்து கோரைப்பாய் வாங்கிப்போய் வீட்டில் வைத்துவிட்டு வெளியே வருகையில் சரவணா ஸ்டோரிலிருந்து சேகர் அழைத்திருந்தார். ”அகரம் ரெடி ஆயிடிச்சு, நாளைக்கு வந்திடும். மதியத்துக்கு மேல வந்தா வாங்கிக்கலாம்’’ என்றார்.

சொன்னதுபோல் வந்துவிட்டது. மறுநாள் நானும் ஜெனி அக்காவும் சென்று பெருமகிழ்வோடு வாங்கிக்கொண்டு கிளம்பும்போது, ”எங்க ஆர்டர் பண்ணது கடைசி நேரத்துல வராமப்போயிடுமோ, லேட் பண்ணிடுவாங்களோன்னு பயந்துட்டே இருந்தோம். நல்லபடியா கூட நின்னு வாங்கித்தந்தீங்க, ரொம்ப நன்றி சேகர்’’ என்றோம்.

அதைக் கேட்டு மகிழ்ந்த சேகர், ”நன்றியெல்லாம் சொல்லாதீங்க. நீங்க ஆர்டர் கொடுத்துட்டு போனதுல இருந்து தெனம் ஒருவாட்டி கூப்ட்டு கேட்டுட்டு வந்தன். நீங்க பயப்படாம இருக்கணும்னுதான் நேத்தே போன் போட்டு சென்னேன். சந்தோஷமா போயிட்டு வாங்க’’ என்றார். அன்போடு நன்றி சொல்லிவிட்டு வந்தோம்.

எங்கள் திருமணத்திற்கு வந்திருந்த பலரும் ‘அ’கரத் தாலியையும், பனை ஓலை மாலையையும் பார்த்துவிட்டு ”ரொம்ப ரொம்ப அழகாருக்கே’’ என்றார்கள்.

செந்தில் அண்ணனோ, ”தம்பி, மால அட்டகாசமா இருக்கு. இனி இதுதான் நம்ப மொத்தக் குடும்பத்தோட மால. மொத உன் கல்யாணம், அடுத்து ஜெய் கல்யாணம், அதுக்கடுத்து ஜீவன் (இருவரும் அண்ணனின் மகன்கள்). அப்புறம் ஒனக்கு பொறக்கப்போற பசங்களுக்கு. எடுத்துட்டு போய் பத்தரமா வச்சிரு, சரியா?’’ என, நான் சற்றும் எதிர்பாராத வார்த்தைகளை சொல்ல, கேட்டதும் என்னையறியாமல் கண் கலங்கிவிட்டேன்.

அன்போடு இவற்றுக்குப் பின்னால் இருந்தவர்களை உள்ளத்தில் நினைத்துக்கொண்டேன். ஆம்!

முழுக்க முழுக்க அன்பால் நிறைந்ததுதானே எங்கள் திருமணம். இதில் அன்பைத் தவிர இவ்வுலகில் நாங்கள் வெறென்ன பெரிதாக இவர்களுக்கு தந்துவிடப் போகிறோம்?!

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=