எங்க கல்யாணம் – 5

ஏப்ரல் 19, 2021

**

‘நாம மொதல்ல நல்ல ஃபிரண்ட்ஸா இருப்போம்’ என நான் சொன்னதைக் கேட்டு ‘சரி’ என்ற கோமதி எப்போதும்போல் பேச ஆரம்பித்தார். இருப்பினும் சில நேரங்களில் தன் காதலை அடக்கமுடியாமல் வெளிப்படுத்தி என்னிடம் வசையும் வாங்கியிருக்கிறார். அதுமட்டுமல்ல… சிறுசிறு சண்டைகள் முதல் பெருசண்டைகள் வரை போடவும் வைத்திருக்கிறார்.

2016 ஜூலை 19, மாலை ஐந்தரை மணி இருக்கும். அம்பத்தூர் ரயில் நிலையத்தின் முன்புறம் உள்ள புங்கை மரத்தடியில்தான் முதல் முறையாக நாங்கள் இருவரும் நேரில் பார்த்துக்கொண்டோம். கிட்டத்தட்ட பேச ஆரம்பித்து மூன்று மாதங்களுக்குப் பிறகு. அவர் என்னிடம் தன் காதலைச் சொல்லி ஒன்றரை மாதத்திற்குப் பின். அதுதொடங்கி மொத்தமே நான்கைந்து தடவைதான் சந்தித்திருப்போம்.

உண்மையில் கோமதி என்னிடம் வாங்கிய வசைகள் கொஞ்சநஞ்சமல்ல. பலதடவை திட்டியும், புறக்கணித்தும், அவமானப்படுத்தியும் இருக்கிறேன். அதிலும் ஒருதடவை சண்டை போட்டுக்கொண்டு ஆறு மாதத்திற்கும் மேலாக ஒருவார்த்தை கூட பேசாமல் இருந்திருக்கிறேன். அவரும் என்னிடம் பேச எவ்வளவோ முயற்சித்தார். வடபழனியில் இருந்த என் நண்பரின் ஒலிப்பதிவு கூடத்திற்குக் கூட தேடி வந்திருக்கிறார். அப்போதும் நான் கண்டுகொள்ளாமல் பேசாமல் அவமானப்படுத்தி அனுப்பினேன்.

இன்னொரு தடவை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நான் பாடல் எழுதிய (ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டோருக்கான விழிப்புணர்வு பாடல்) ‘பேரன்புடன்’ குறும்பட வெளியீட்டு விழாவுக்கும் வந்திருந்தார். அப்போதும் ஒருவார்த்தைகூட பேசவில்லை.

இங்கே ஆச்சர்யப்படும் இன்னொரு விஷயம். நான் நண்பர்களோடு ஊர்சுற்றவும், வேலை விஷயமாகவும் கோவாவுக்கும், அந்தமானுக்கும் போயிருந்தபோது, அதை எப்படியோ தெரிந்துகொண்டவர் தினம் அழைத்தும், குறுஞ்செய்தி அனுப்பியும் என்னிடம் பேச முயற்சித்தவர், ஒரு குறுஞ்செய்திகூட அனுப்பி தொந்தரவு செய்யாமல் இருந்ததுதான்.

நான் எவ்வளவு புறக்கணித்தும் கோமதி தன் காதலை கொஞ்சம் கூட குறைத்துக் கொள்ளவில்லை. என் வசைகளையும், சண்டைகளையும் கூட மெல்ல ரசிக்க ஆரம்பித்தார். தான் சொன்னதுபோல் தன் காதலில் மிக உறுதியாகவே எப்போதும் இருந்தார்.

அதிலும் கடந்தாண்டு மத்தியில் அவரது வீட்டில் திருமணத்திற்காக மிகத் தீவிரமாக வரன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதை என்னிடம் பயம் கலந்த வருத்தத்தோடு பகிர்ந்தவர், ”இப்பவாவது என் காதலுக்கு ஒரு முடிவு சொல்வீங்களா, மாட்டீங்களா?’’ என்றார்.

கேட்டுவிட்டு என்ன சொல்வதெனத் தெரியாமல், ”கொஞ்ச டைம் கொடுங்க” என்றேன். “டைம்னா எவ்ளோ நாள்?’’ என்றார். ”டிசம்பர் 31 வரைக்கும்’’ என்றேன், ”சரி” என்றார்.

சட்டென அதற்குள் ஒருநாள் வந்த வரன்களில் ஒரு வரனை கிட்டத்தட்ட முடிவுசெய்துவிட்டு, அவர்களை குடும்பத்தோடு தம் வீட்டுக்கு பெண் பார்க்க வரச் சொல்லிவிட்டார்கள்.

அதுவரை தன் காதலை வீட்டாரிடம் சொல்லாமல் இருந்தவர், மாப்பிள்ளை வீட்டார் வருவதற்கு முன்தினம் துணிச்சலோடு சொல்லிவிட்டு, ‘வடிவரசைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன். இல்லனா எப்பையும் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். இதுதான் என் முடிவு, இதுல எந்த மாற்றமும் இல்ல’ என மிகத் தெளிவாக, அதேசமயம் உறுதியாகச் சொல்லிவிட்டார்.

அதைக் கேட்டுவிட்டு அதிர்ந்தவர்கள் எவ்வளவோ அடித்தும், மிரட்டியும், கெஞ்சியும் பார்த்துவிட்டார்கள். கோமதி தன் முடிவிலிருந்து சற்றும் பின்வாங்கவில்லை. வேறு வழியின்றி தம் வீட்டுக்கு பெண் பார்க்க வரச்சொல்லியிருந்த வரன் வீட்டார் முன்பு எதுவும் நடக்காததுபோல் இருக்கவேண்டியதாகப் போய்விட்டது.

இத்தனைக்கும் அவர் தன் காதலை வீட்டில் சொல்லும்போது நான் அவரது காதலை ஏற்கவில்லை, என் காதலையும் சொல்லவில்லை. இருந்தாலும் தன் காதலில் நம்பிக்கையுடன் இருந்தார். நான் எப்படியும் ஒருநாள் தன்னிடம் காதலைச் சொல்லிவிடுவேன் என மனதார நம்பிக்கொண்டிருந்தார். ஆம்!

அடித்து திட்டி மிரட்டிப் பார்த்தவர்கள் ‘இனி இவளிடம் பேசி ஒரு பிரயோசனமும் இல்லை’ என முடிவெடுத்துவிட்டு, என் எண்ணுக்கு அழைத்துப் பேசி என்னை சந்திக்க வேண்டும் என்றார்கள். ”சரி’’ என்றேன்.

கோமதியின் இரு சகோதரிகள், அவர்களது கணவர்கள், காவல்துறையில் பணிபுரியும் அண்ணன் (பெரியப்பா மகன்) ஒருவர், தியாகராய நகரில் உள்ள நடேசன் பூங்காவில் சந்திப்பதாக முடிவானது. உடன் நண்பர் ஜெயக்குமாரை மட்டும் கூட்டிக்கொண்டு போயிருந்தேன். பூங்கா பூட்டியிருந்ததால் அருகில் உள்ள தேநீர்க் கடை ஒன்றில் சந்தித்துப் பேசினோம்.

கிட்டத்தட்ட நான்கு மணி நேரமாக என்னிடம் மாறிமாறி பேசினார்கள். கோமதியையும் அங்கே வரவழைத்து தனியாக உட்கார வைத்திருந்தார்கள். நடந்தது இதுதான். அவர்களுக்கு கோமதி என்னைக் காதலிப்பது சுத்தமாகப் பிடிக்கவில்லை. முதல் காரணம், சாதி. இரண்டாவது காரணம், என் எழுத்து வேலை. அதனால் நான் கோமதியிடம் சொல்லி, ‘என்னை காதலிக்காதே, உங்கள் வீட்டில் பார்க்கும் உங்கள் சாதிப் பையனை திருமணம் செய்துகொள், அதுதான் உனக்கு நல்லது’ எனச் சொல்லவேண்டும் என்றார்கள்.

நான் சொன்னேன், ”என்ன லவ் பண்ணுங்கன்னு அவங்ககிட்ட நான் எப்படி சொல்லலையோ, அதேமாதிரி என்ன லவ் பண்ணாதீங்கன்னு நான் சொல்ல முடியாது. அது அவங்களோட தனிப்பட்ட விருப்பம். அதுல தலையிட எனக்கோ, யாருக்கோ இங்க உரிமையில்ல..’’.

”இதுதான் உங்க முடிவா?’’ என்றார்கள். ”ஆமாம்’’ என்றேன்.

அடுத்த ஆயுதமாக, ”சரி, நீங்க கோமதிய காதலிக்கிறீங்களா, இல்லையா? அதையாவது சொல்லுங்க’’ என்றார்கள்.

எப்போது சாதிதான் தங்களுக்கு முக்கியம் எனச் சொன்னார்களோ அப்போதே அவர்களிடம் ஒருவார்த்தை கூட பேச எனக்கு விருப்பமில்லை. இருந்தாலும் கோமதிக்காக எதுவும் சொல்லாமல் அமைதியாக உட்கார்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

”டிசம்பர் 31-க்குள்ள என்னோட முடிவ சொல்றன்னு அவங்ககிட்ட ஏற்கனவே சொல்லியிருந்தன். அதுக்குள்ள கண்டிப்பா நான் சொல்வன்’’ என்றேன். ”இல்ல, எதுவா இருந்தாலும் இப்பவே சொல்லுங்க, அவ்ளோ நாள்லாம் எங்களுக்கு டைம் இல்ல’’ என்றார்கள்.

எரிச்சலாக வந்தது. மெல்ல அடக்கிக்கொண்டு, ”இப்போ நீங்க கேக்கறதாலயோ, இந்தப் பிரச்சனையாலயோ நிச்சயமா நான் சொல்லமாட்டன். அப்படி சொன்னா அது ஏதோ இதுக்காகவே சொன்ன மாதிரி ஆயிடும்’’ என்றேன்.

என் பதிலைக் கேட்டு கோபம் அடைந்தவர்கள் என்னை திட்டியும், மறைமுகமாக மிரட்டியும் பார்த்தார்கள். எத்தனையோ திட்டலையும், மிரட்டலையும் பார்த்தவன் என்பதால் மெல்ல உள்ளுக்குள் சிரித்துவிட்டு எதுவும் சொல்லாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தேன். என் முன்னாலேயே கோமதியை மிரட்ட ஆரம்பித்தார்கள். தம் பேச்சில் கடைசிவரை சாதியை முதன்மைக் காரணமாக காட்டிப் பேசினார்கள். அதோடு, காதல் ஏதோ செய்யக்கூடாத பெரும் குற்றம் என்பதுபோல நடந்துகொண்டார்கள்.

கடைசியில் வெளியில் வந்து போகும்போது வசையோடு சேர்த்து சாபமும் விட்டுவிட்டு, ”உனக்கு இவன்தான் வேணும்னா இப்படியே போயிடு. வீட்டுப் பக்கம் இனி எதுக்காகவும் வந்துடாத. நாங்க எல்லாரும் இதோட ஒன்ன தலமுழுகிட்டோம்னு நெனச்சிக்கோ’’ என உச்சக்கட்ட கோபத்தில் சாலையில் வருவோர், போவோர் யாரையும் பொருட்படுத்தாமல் சத்தமாக சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.

நானும் கோமதியும் உடன் நண்பர் ஜெயக்குமாரும் சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் அப்படியே நின்றோம். எங்களை வேடிக்கை பார்த்தவர்கள் மெல்ல கடந்து சென்றார்கள்.

இருள் நிறைந்து எங்கும் மின்விளக்கு ஒளிர ஆரம்பித்திருந்தது. கோமதியை கூட்டிப்போய் அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் ஏற்றி விடுதிக்கு அனுப்பிவிட்டு, நண்பரோடு சிறிதுநேரம் பேசிவிட்டு மெல்ல நடந்து அறைக்கு வந்தேன்.

தீபாவளி, பொங்கல் என எதற்கும் கோமதி தன் வீட்டுக்கு போகவில்லை. ‘வந்தா அவன மறந்துட்டு வரணும், இல்லனா வரவே கூடாது’ என சொல்லியிருந்தார்கள். தன் காதலை தன் தாய் தந்தையரிடம் மட்டும் எப்படியாவது சொல்லிப் புரிய வைத்து அவர்கள் சம்மதத்தைப் பெற்றால்போதும் என எவ்வளவோ முயற்சித்தார். கடைசிவரை ஏற்கவில்லை.

இன்னொரு பக்கம் கோமதியின் சித்தப்பா, பெரியப்பா மகன்கள், அக்கா என பலரும் என்னிடம் தனியாக பேசிப் பார்த்தார்கள். மிரட்டியும் பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. இறுதிவரை அவர்கள் சாதியை காரணமாகக் காட்டியது எனக்கு மட்டுமல்ல கோமதிக்கும் எரிச்சலை உண்டுபண்ணி இருக்கவேண்டும். அதனால், அடுத்த இருமாதத்தில் நான் என் காதலைச் சொன்னபோது பெரிதும் மகிழ்ந்தவர், தன் காதலில் வென்றதாக துள்ளிக்குதித்தவர், ‘இனியும் சாதியைக் காரணம் காட்டும் இவர்களின் அனுமதிக்காகக் காத்திருப்பதில் எவ்வித பிரயோசனமும் இல்லை’ என நான் சொல்லிவிட்டு, ”திருமணம் செய்து கொள்ளலாம்” என்றதும், எவ்வித யோசிப்புமின்றி ”சரி” என்றார்.

யாரையும் காயப்படுத்தி, யாரிடமிருந்தும் தப்பித்து ஓடிப்போய், எங்கோ யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக திருமணம் செய்துகொள்வதில் எங்கள் இருவருக்கும் உடன்பாடில்லை என்பதால், யாவருக்கும் திருமணம் செய்யப்போகும் இடத்தையும் நேரத்தையும் சொல்லிவிட்டு, ‘விருப்பம் இருந்தா வந்து வாழ்த்துங்க. இல்லனா உங்க சாதியக் கட்டிக்கிட்டு கடைசிவர அழுங்க’ என்பதைக் கூறாமல் கூறிவிட்டு, திருமணத்திற்கான ஏற்பாடுகளை ஒவ்வொன்றாகச் செய்ய ஆரம்பித்தோம்.

இருவரும் ஒன்றாகப் போய் எங்களுக்கு புத்தாடை வாங்கிக்கொண்டோம். மாலை, தாலி என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து தனித்துவமாக தேர்ந்தெடுத்தோம். மிகச் சிலரை மட்டும் அழைத்திருந்தோம்.

வாழ்த்த வரவில்லை என்றாலும் தடுக்கவாவது கோமதி வீட்டிலிருந்து யாராவது வரக்கூடும் என நினைத்திருந்தேன். நண்பர்கள் சிலரிடம் சொல்லியும் வைத்திருந்தேன். நல்லவேளை யாரும் வரவில்லை.

திருமணம் நல்லபடியாக நினைத்ததுபோல் நடந்து முடிந்ததை உலகுக்கு அறிவிக்கும் பொருட்டு என் முகநூலில், ‘சாதி, மதம், சடங்கு, சம்பிரதாயம், சட்டம் போன்ற யாவற்றையும் மறுத்து, வள்ளுவர் சாட்சியாக, மிகச் சில அன்பர்கள் சூழ அவளும் நானும் இனிதே கைத்தலம் பற்றினோம்’ என எழுதி இருவரும் மாலையுடன் திருமணக்கோலத்தில் வள்ளுவர் சிலை முன்பாக இருக்கும் ஒளிப்படத்தையும், எங்கள் திருமணத்திற்காக நாங்கள் உருவாக்கிய இணையேற்பு உறுதிமொழி சான்றிதழையும் பதிவிட்டேன்.

அடுத்த சில நொடிகளில் எத்திசையிலிருந்தும் வாழ்த்துகள் வந்து குவிய ஆரம்பித்தன. நண்பர்கள், உறவினர்கள், சக எழுத்தாளர்கள், நலம் விரும்பிகள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என ஈராயிரத்துக்கும் அதிகமானோர் எங்கள் திருமண அறிவிப்பைப் பார்த்து பெரிதும் மகிழ்ந்து அன்போடு தங்கள் வாழ்த்தினைப் பகிர்ந்தார்கள். சிலர் ஒருபடி மேலே சென்று உரிமையுடன் திருமணத்திற்கு தங்களை அழைக்காததற்காக சண்டை போட்டார்கள். இன்னும் சிலரோ தம் வீட்டுக்கு விருந்துக்கு வருமாறு மகிழ்வுடன் அழைத்தார்கள்.

பலர் எங்கள் திருமணத்தையும், அது நடந்த இடத்தையும், உலகில் இதுவரை யாரும் செய்யாத முறையில் தமிழுக்கும், திருவள்ளுவருக்கும் மேலும் பெருமை சேர்க்கும் விதமாக திருமணம் செய்ததையும் குறிப்பிட்டு வாழ்த்திவிட்டு தம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டாடித் தீர்த்தார்கள்.

”இவ்ளோ அழகா ஒரு கல்யாணம், வாய்ப்பே இல்ல வடிவு’’

”ஊரைக் கூட்டி கல்யாணம் பண்ணலைனாலும் ஊரே வாழ்த்துற மாதிரி கல்யாணம் பண்ணிட்டீங்க, வாழ்த்துகள் வடிவரசு’’

”ஒரு கல்யாணம் எப்படி இருக்கணும்னு உங்க கல்யாணம்தான் சரியான உதாரணம். அன்பும் வாழ்த்தும் வடிவு’’

”இப்படிப்பட்ட ஒரு கல்யாணத்துல இருக்கமுடியாமப் போச்சேன்னு வருத்தப்பட வச்சிட்டீங்க வடிவு. இருவருக்கும் என் வாழ்த்துக்கள்’’

இப்படி ஒவ்வொருவரும் ஏதேதோ சொல்லி மனத்தின் அடியாழத்திலிருந்து வாழ்த்தி மகிழ்ந்தார்கள். இவ்வளவு வாழ்த்துக்களா, இத்தனை அன்பர்களா என சிலிர்த்துப்போனேன் (யாவருக்கும் நன்றி சொல்லி முடிக்கவே பதினைந்து நாட்களுக்கு மேலானது வேறுகதை!).

இதையெல்லாம் கண்ட கோமதியின் சுற்றத்தார் சிலர் கடுப்பாகி ‘இதெல்லாம் ஒரு கல்யாணமா?’ எனும் தோரணையில் வந்திருந்த வாழ்த்து மழைக்கு மத்தியில் விஷக்கற்களை எறிந்து பார்த்தார்கள். நண்பர்களின் பதில் கல்லெறிதலில் மூக்குடைபட்டு ஓடிப் போனதுதான் மிச்சம். ஆம்!

இப்பூமியில் காதல்தான் எவ்வளவு அழகான ஒன்று. இன்னும் எத்தனை காலத்திற்குதான் சாதியைக் காரணம்காட்டி இக்காதலை நசுக்கப் பார்ப்பார்களோ தெரியவில்லை.

வாழ்வில் நாம் எடுக்கும் முடிவொன்று, அது எத்தனை சிறிதாக அல்லது பெரிதாக இருந்தாலும் சரி, பெரும் மாற்றத்தை விளைவிக்கும் வல்லமை கொண்டது என்பார்கள். அவ்வகையில் நாங்கள் எடுத்த இம்முடிவு எங்கள் வாழ்வில் பெரு மாற்றத்தை விளைவித்ததாகவே உணர்கிறோம். ஆம்!

இந்த ஐந்து ஆண்டுகளில் கோமதி முதல்தடவை நண்பர் வழியாக எனக்கு அறிமுகமானது. அதன்பின் என் பிறந்தநாளன்று வாழ்த்து சொல்வதற்குப் பதிலாக காதலைச் சொன்னது, தன் காதலில் உறுதியோடு இருந்து தனியொருத்தியாய் தம் வீட்டாரை எதிர்த்தது. பிறகென் காதலைக் கேட்டு மகிழ்ந்தது. அதன்பிறகு நாங்கள் திருமணம் செய்துகொண்டது. யாவற்றையும் இப்போது நினைத்துப்பார்க்கையில்… ஓர் அழகிய கவிதை போல, அதுவும் காலமும் காதலும் தம்மைக் கொண்டு எங்கள் வழியாக தம்மையே எழுதிக் கொண்டது போல் இருக்கிறது. ஆம்!

காலமும் காதலும் தம்மைக் கொண்டு தம்மை எழுதிக்கொள்வது போல் இவ்வுலகில் அழகான கவிதை வேறு ஏதாவது உண்டா என்ன?!

[இன்னும்]

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=