எங்க கல்யாணம் – 4

ஏப்ரல் 18, 2021
**
2016, ஏப்ரல் 12 ஆம் தேதி, பிற்பகல் மூன்று மணி இருக்கும். சென்னை – அம்பத்தூர் அருகில் உள்ள நண்பர் ஒருவரை சந்திக்கப் போயிருந்தேன். நெருங்கிய நண்பரெல்லாம் கிடையாது. ஓரளவுக்குத் தெரியும். அதுவும் அவர் எழுத்து வழியாக. அவ்வளவுதான்.
சற்றுமுன் மது அருந்தியவராக இருக்கவேண்டும். அருகில் சென்றதும் வாசம் காட்டிக்கொடுத்தது. பேச்சில் சிறு உளறலும் இருந்தது.
பேச்சின் நடுவில் ஏதோ நினைத்தவராய், ”வடிவு உன் செல்போனக் கொஞ்சம் கொடு’’ என வாங்கி என் எண்ணிலிருந்து கோமதி எண்ணுக்கு அழைத்தார். ஆம்! கோமதி அவருக்குத் தோழி. அதுவும், முகநூல் வழியாக சில மாதங்களுக்குமுன் அறிமுகம் ஆனவர்.
அழைத்தவர் இரண்டு, மூன்று நிமிடங்கள் பேசிவிட்டு… சட்டென என்னிடம் தந்து, ”என் செல்ல தங்கை. பேரு கோமதி, டாக்டர் மேடம். ரொம்ப நல்லப் பொண்ணு, பேசு’’ என பேசச் சொன்னார். ஒருவித தயக்கத்தோடு வாங்கி என்ன பேசுவதெனத் தெரியாமல் சம்பிரதாய நலவிசாரிப்புகளோடு நண்பரிடம் திரும்பக் கொடுத்துவிட்டேன்.
வாங்கியவர் கோமதியிடம், ”வடிவு ரொம்ப நல்லப் பையன். பாட்டுலாம் எழுதுவாரு. தொப்புள்கொடின்னு ஒரு பாட்டு எழுதியிருக்காரு. ரொம்ப நல்லாயிருக்கும். விகடன்ல வேல பார்த்தவரு. இப்போவும் எழுதிட்டிருக்காரு’’ என என் பற்றி இன்னும் சிலவற்றை சொல்லிவிட்டு வைத்துவிட்டார்.
இவ்வளவு நேரம் நடந்ததை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், அதன்பின் நண்பர் சொன்னதைக் கேட்டு சற்று திகிலுற்றேன். ஆம்!
”வடிவு, நீயும் கோமதியும் வேணா காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கோங்க. உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப பொருத்தமா இருக்கும்’’ என நான் சற்றும் எதிர்பாராத வார்த்தைகளை சொல்லக் கேட்டு, ‘ஏதோ விளையாட்டுக்கு, அதுவும் போதையில் சொல்கிறார்’ என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் அவர் திரும்பவும் என் நகர்பேசியை வாங்கி கோமதிக்கு அழைத்து என்னிடம் சொன்னதை அவரிடமும் சொல்லப்போவதாக சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
‘என்ன இவர் பாட்டுக்கு என்னென்னமோ பண்றார்?’ என எரிச்சலாக இருந்தது. கூடவே, கோமதி என்னைப் பற்றி என்ன நினைப்பார் எனும் கேள்வியும் எழுந்தது.
கோமதிக்கு அழைத்து மீண்டும் என்னைப் பற்றி ஏதேதோ சொன்னவர், திரும்பவும் என்னிடம் தந்து அவரிடம் பேசிக்கொண்டிருக்குமாறு சொல்லிவிட்டு, அருகிலுள்ள இருகடைகளுக்கு நடுப்பட்ட சந்துக்கு சிறுநீர் கழிக்கப் போனார்.
”அவர் என்னப் பத்தி பேசனத நெனச்சி தப்பா எடுத்துக்காதீங்க. அவர் பாட்டுக்கு வாய்ல வந்ததெல்லாம் சொல்லிட்டார். நான் உங்க நம்பர கூட டெலிட் பண்ணிட்றன். பயப்படாதீங்க, கால் மெசேஜ்லாம் பண்ணி தொல்ல பண்ணமாட்டேன்’’ என்றேன். பதிலுக்கு கோமதி, ஒருவித பயம் கலந்த பதட்டத்துடன், ”ஆமாம்… நானும் எதிர்பார்க்கல’’ என்றார்.
அதற்குள் சிறுநீர் கழித்துவிட்டு நண்பர் வர, கோமதியிடம் பேசிவிட்டு அவ்வழியாக செல்வோரையும், அங்கே பக்கத்தில் மூடியிருக்கும் கடையின் மேல் படிக்கட்டில் உறங்குவதுபோல் நடித்துக்கொண்டு நடுநடுவில் என்னை லேசாக கண்திறந்து பார்த்துக்கொண்டிருந்த செந்நிற நாயையும், அதனருகே கிடந்த கால் உடைந்துபோன நாற்காலியையும் பார்த்துக்கொண்டிருந்தேன்.
நண்பர் பெரும் குடிகாரர். விட்டால் இருபத்திநான்கு மணிநேரமும் குடிக்கக் கூடியவர். அவர் பற்றியும் அவரது குடிப்பழக்கம் பற்றியும் பலர் நொந்து சொல்லக் கேட்டிருக்கிறேன் என்றாலும், நேரில் கண்டது இதுதான் முதல் தடவை.
வேகமாக அருகில் வந்தவர், ”வா வடிவு’’ எனக் கையை இறுகப் பிடித்து இரண்டு கடை தள்ளியிருக்கும் மதுபானக் கடைக்குள் கூட்டிப் போனார். எவ்வளவு தடுத்தும் கேட்கவில்லை. நடுவிலுள்ள இருக்கையாகப் பார்த்து உட்கார்ந்துகொண்டு, என்னை எதிர் இருக்கையில் உட்காரச் சொன்னார். வேறுவழியின்றி உட்கார்ந்தேன்.
நான் பீர் மட்டுமே குடிப்பேன், அதுவும் எப்போதாவது மட்டும்தான், தோன்றினால்தான் என்பதை ஏற்கனவே கேட்டறிந்தவர் என்பதால், என்னைக் கேட்காமலேயே எனக்கு ஒரு பீரும், அவருக்கு வேண்டிய மதுவையும் வரவழைத்து என்னை பணம் தரச் சொன்னார். எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. வழியின்றி தந்தேன்.
மெல்ல குடிக்க ஆரம்பித்தவர், ”நெஜம்மா சொல்றன் வடிவு, நீயும் கோமதியும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கோங்க. உங்க ரெண்டு பேருக்கும் பொருத்தமா இருக்கும்’’ என ஏற்கனவே சொன்ன அதே வார்த்தைகளையே திரும்பத் திரும்ப இரண்டு மூன்று தடவை சொல்லிவிட்டு, கோமதியை அழைத்து பேசச் சொன்னார். ”வேண்டாம்’’ என்றேன். உடனே, ”நான் சொன்னா கேட்பியா, மாட்டியா?’’ என்றார் சத்தமாக.
சுற்றிலும் உட்கார்ந்து மது அருந்துபவர்களும், அங்கே வேலை பார்ப்பவர்களும் எங்களையே பார்க்கிறார்கள். என்ன செய்வதெனத் தெரியாமல் கோமதிக்கு அழைத்துப் பேசினேன். அவரும் வேண்டா வெறுப்பாக என்னிடம் பேசினார்.
சட்டென எழுந்துபோன நண்பர் இன்னும் ஒரு மது பாட்டிலை வாங்கிக்கொண்டு வந்து அதை மேசைமேல் வைத்துவிட்டு, என்னிடம் பணம் தருமாறு சொன்னார். அதுதான் என்னிடம் இருந்த கடைசிப் பணம். தந்துவிட்டால் இரவு உணவுக்கும், அங்கிருந்து அறைக்கு செல்லவும் வேறுபணம் கிடையாது. நண்பரிடம் எவ்வளவு மன்றாடியும் கேட்கவில்லை. அவர் பாட்டுக்கு பாட்டிலை திறந்து குடிக்க ஆரம்பித்துவிட்டார். கடைக்காரர் என்னிடம் வந்து பணம் கேட்டு நின்று கொண்டிருக்கிறார்.
‘ஏன்டா இவரப் பாக்க வந்தோம்’ என வருத்தத்தோடு கால்சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த பர்சை வெளியில் எடுத்து பணத்தைக் கொடுத்தேன்.
மடமடவென குடித்துக் கொண்டிருந்தவர் திடீரென்று பாட்டிலை டம்மென ஓசையெழ மேசைமேல் வைத்துவிட்டு, என் கையிலிருந்த பர்சை பிடுங்கி அதிலிருந்த பத்து ரூபாய் நோட்டையும் ஐந்து ரூபாய் நாணயத்தையும் எடுத்துக்கொண்டு, இன்னும் ஏதாவது பணம் இருக்கிறதா என இரண்டு மூன்று தடவை பார்த்துவிட்டு, பர்சை என்மீது வீசிவிட்டு போய் அந்தக்காசுக்கு மசாலா சுண்டல் வாங்கி சாப்பிட்டுக்கொண்டே வந்து எதிரில் உட்கார்ந்தார்.
இதற்கு மேல் இங்கே இருந்தால் சரியாக இருக்காது எனத் தோன்ற எழுந்தேன். என்னையும் நான் எழுந்து புறப்படத் தயாரானதையும் பார்த்தவர் வேகமாக என் கையைப் பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு, இன்னுமொரு பாட்டில் மது வாங்கி தரச் சொன்னார்.
”முடியவே முடியாது. எங்கிட்ட இதுக்குமேல காசு இல்ல’’ என்றேன். அவர் கேட்கவும் இல்லை, நம்பவும் இல்லை. ஒருமாதிரி சிரித்துவிட்டு, ”காசு இல்லனா என்ன, ஏ.டி.எம் வச்சிருக்க தானே வடிவு?’’ என்றார். ”இல்ல’’ என்றேன் (என் ஏடிஎம் அப்போது ஏதோ பிரச்சனையில் இருந்தது).
சட்டென என்னை பிடித்திருந்த கையை உதறி விட்டுவிட்டு, பெஞ்ச் மீது ஓங்கி வேகமாக அடித்து, ”என்ன நீ அசிங்கப்படுத்துறியா? ஒழுங்கு மரியாதையா நான் கேட்டத வாங்கிக் கொடு’’ எனக் கத்த ஆரம்பித்தார்.
பெரும் இக்கட்டில் நானாக வலிய வந்து மாட்டிக் கொண்டதை உணர்ந்தேன். எப்படியாவது இங்கிருந்து தப்பித்துப் போனால் போதுமென நினைத்து சுற்றிலும் பார்த்தேன். அனைவரும் எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒருவர் மட்டும் என் அருகில் வந்து, ”தம்பி அவன் தெனக்யும் இதேமாரிதான். வுட்டுட்டு பேசாம போயிடு. அவனா கொஞ்சநேரம் கத்திட்டு யார்கிட்டனா அடிவாங்கினு போயிடுவான்’’ என்றார். எனக்கும் அதுதான் சரியெனப் பட்டது.
சென்று சிறுநீர் கழித்துவிட்டு வந்து வாங்கித் தருவதாகச் சொல்லிவிட்டு, சிறுநீர் கழிக்கச் செல்வது போல் கழிவறை அருகிலுள்ள இன்னொரு வாயில் வழியாக வெளியில் வந்து, அங்குள்ள சிறு முட்புதரைத் தாண்டி பக்கத்தில் உள்ள சாக்கடையை ஒட்டிய வழியாக பெரும் பதட்டத்தோடு நடந்து சாலைக்கு வந்தேன்.
பின் அங்கிருந்து கிடுகிடுவென திரும்பிப் பார்க்காமல் மூன்று கிலோமீட்டர் தாண்டியுள்ள அம்பத்தூர் வரைக்கும் நடந்த கசப்பான சம்பவங்களை நினைத்து வருந்திக்கொண்டு கால் வலிக்க நடந்துவந்தேன்.
நேரம் முன்னிரவு ஏழரை இருக்கும். பசி ஒருபக்கம். போரூர் கார்டனில் உள்ள என் அறைக்குச் செல்ல அங்கிருந்து குறைந்தது முப்பது ரூபாயாவது வேண்டும். என்ன செய்வதெனத் தெரியாமல் ஆவடியில் இருக்கும் இன்னொரு நண்பருக்கு அழைத்து, ”வச்சிருந்த காச தொலச்சிட்டன். பஸ்ஸூக்கு காசு இல்ல. ஒரு அம்பது ரூபா வந்து தர முடியுமா?’’ என்றேன். அடுத்த அரைமணி நேரத்தில் வந்து நூறு ரூபாய் தந்துவிட்டு போனார்.
அருகிலுள்ள கையேந்தி பவனில் போய் ஐந்து இட்லியும் ஓர் ஆம்லேட்டும் சாப்பிட்டுவிட்டு, அவ்வழியாக கோயம்பேடு செல்லும் பேருந்தில் ஏறி சன்னலோர இருக்கையில் உட்கார்ந்து, பெரும் சோர்வோடு நகர்பேசியை எடுத்து வாட்ஸ்அப்பை திறந்து பார்த்தேன். கோமதியிடமிருந்து நான் முன்னமே அனுப்பியிருந்த, ”பயப்படாதீங்க, நான் உங்க நம்பர டெலிட் பண்ணிடுவன்’’ என்ற குறுஞ்செய்திக்கு பதிலாக, ”ok” என பதில் வந்திருந்தது.
நடந்த சம்பவங்களை அழாக் குறையாக அவரிடம் சொன்னேன். வருத்தப்பட்டவர், ”I am sorry” என்றார்.
அது தொடங்கி கோமதியும் நானும் மெல்ல பேச ஆரம்பித்தோம். பெரும்பாலும் வாட்ஸ்அப் வழியாகத்தான். கொஞ்ச கொஞ்சமாக என்னைப் பற்றி அவரும், அவரைப் பற்றி நானும் தெரிந்துகொண்டோம். என் ‘தொப்புள்கொடி’ பாடலைக் கேட்டு பெரிதும் பாராட்டினார். அவள் விகடனில் நான் எழுதி வந்த மருத்துவத் தொடர் கட்டுரைகளை வாசித்துவிட்டு தன் கருத்தைப் பகிர்ந்தார். ஒரு கட்டத்தில் எனக்கு நல்தோழியானார். ஆம்! அப்படித்தான் நினைத்தேன்.
ஆனால் அவரோ, ஏதோ ஒரு தருணத்தில் என்னை தன் காதலனாக அடையாளம் கண்டிருக்கிறார். என்னுடன் பேசுவதிலும், என் குரல் கேட்பதிலும் பெரிதும் மகிழ்ந்திருக்கிறார். இது தெரியாமல் நான் எப்போதும்போல் பேசிக்கொண்டிருந்தேன்.
அடுத்தநாள் என் பிறந்தநாள். முன்னிரவு முதலே நண்பர்கள் அதிலும் குறிப்பாக தோழிகள் வாழ்த்து சொல்லி வந்தார்கள். காலையில் எழுந்து குளித்துக் கிளம்பி குன்றத்தூர் முருகன் கோயிலுக்கு நண்பனுடன் சென்றுவிட்டு, நான் படித்த லயோலா கல்லூரிக்குப் போய் என் நலம்விரும்பிகளில் ஒருவரான அருள்தந்தை இஞ்ஞாசிமுத்து அவர்களை சந்தித்து ஆசிபெற்று வந்தேன்.
கடந்த இரு மாதமாக தினமும் காலையில் குறுஞ்செய்தி அனுப்பும் கோமதி ஒரு மெசேஜ் கூட அனுப்பவில்லை. இத்தனைக்கும் என் பிறந்தநாள் என்று அவருக்குத் தெரியும். சரி, ஏதோ வேலையாக இருப்பார் போல என விட்டுவிட்டேன்.
முன்னிரவு ஏழு மணி இருக்கும். வீட்டின் முன்புள்ள மரங்கள் அடர்ந்த மண் தெருவில் பாடல் கேட்டபடி வெறுங்காலில் மெல்ல நடந்துகொண்டிருந்தேன். சட்டென கோமதியிடமிருந்து வரிசையாக குறுஞ்செய்திகள். அதுவும் குரல்வழிச் செய்திகள். ஒவ்வொன்றாக ஒலிக்கவிட்டேன்.
”ஹாய் வடிவரசு. நான் உங்கள லவ் பண்றேன். இத எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னு தெரியாம ஒரே பதட்டத்தோடவே இருக்கேன். இப்பவும் என் கைகால் எல்லாம் ஒருமாதிரி நடுங்குது. ஹார்ட் வேகமா துடிக்குது. ஹார்ட்பீட் சத்தம் வெளியில கேக்குது. என்னால இதுக்குமேலயும் சொல்லாம இருக்க முடியல. Love you வடிவரசு’’
”இத நான் ஏதோ விளையாட்டா சொல்றன்னு நினைக்காதீங்க. நல்லா யோசிச்சுதான் சொல்றன். I Love you so much வடிவரசு’’
”நீங்க வேலையலாம் விட்டுட்டு எழுத்து, பாட்டுன்னு இருக்கிறது நல்லாவே எனக்குத் தெரியும். உங்களப் பத்தி முழுசா தெரியலைனாலும் தெரிஞ்ச வரைக்கும் போதும். Love you வடிவரசு’’
”நான் உங்கக்கிட்ட பணத்தையோ, பெரிய வீட்டையோ கேட்கப்போறதில்ல. உங்கக் காதல் மட்டும் போதும். வேற எதுவும் எனக்குத் தேவ இல்ல. வேற எதுவும் எனக்குப் பெருசும் இல்ல’’
இப்படி இன்னும் பல குரல்வழிச் செய்திகள். எதுவும் எதிர்பாராதது. அதுவும் பிறந்தநாளுக்கு அழைத்து வாழ்த்து சொல்வதற்குப் பதிலாக தன் காதலைச் சொன்னது நான் ஒருபோதும் நினைத்துப் பார்க்காதது.
ஒன்றை மட்டும் மிகத் தெளிவாக கவனித்தேன். எப்போதும் உறுதியான குரலில் பேசும் கோமதியின் குரல் முதல்தடவையாக உடைந்துபோய் பதட்டத்தோடும் தவிப்போடும் இருந்ததை என்னால் கேட்டதும் உணரமுடிந்தது. அதோடு, முழுக்க அதில் நிறைந்திருந்த காதலையும்.
என்ன சொல்வதெனத் தெரியாமல் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தேன். சட்டென ஏதோ நினைத்தவனாய்,
”நீங்க birthday wishதான் அனுப்பி இருக்கீங்கன்னு நெனச்சன். ஆனா, Love சொல்வீங்கன்னு கொஞ்சம் கூட எதிர்பாக்கல. I am sorry”
”நீங்க என்ன Love பண்றத தப்புன்னு சொல்லமாட்டன். அது உங்க விருப்பம். ஆனா, என்னப் பத்தி அப்படி என்னத்த தெரிஞ்சிக்கிட்டு சொன்னீங்கன்னுதான் தெரியல’’
”நீங்க நெனக்கிற மாதிரி எல்லா சாதாரணப் பையன்கள்ல ஒருத்தன் நான் கெடயாது. என் ஆச, கனவுலாம் வேற. எல்லாம் ரொம்ப ரொம்பப் பெருசு’’
”தாராளமா லவ் பண்ணுங்க. ஆனா, அத உங்களுக்குள்ள வச்சிக்கோங்க. நாம மொதல்ல நல்ல ஃபிரண்ட்ஸா இருப்போம். என்னப் பத்தி இன்னும் நல்லா தெரிஞ்சுக்கோங்க. குறிப்பா, எங்கிட்ட இருக்க கெட்டத. அப்படித் தெரிஞ்சியும் என் மேல உங்களுக்கு காதல் இருந்தா சந்தோசம், பாக்கலாம்’’
என்று வரிசையாக நானும் குரல்வழி செய்திகளை பதிலாக அனுப்பினேன். ஒவ்வொன்றையும் அமைதியாகக் கேட்டவர், கடைசியாக சொன்னதைக் கேட்டுவிட்டு, ”இப்ப மட்டும் இல்ல… என் காதல் எப்போவும் இருக்கும். ஒருவேளை நீங்க கடைசிவரை என்னை லவ் பண்ணலனாலும் சரி, என் காதல் மட்டும் மாறாது. இது எப்போவும் இருந்துட்டுதான் இருக்கும்’’ என்றார், அவ்வளவு உறுதியாக. ஆம்!
வெறும் வார்த்தைகளில் மட்டுமல்ல… செயலாகவும் இருந்து தன் காதலால் என் மனத்தையும் வென்று, நான்கரை ஆண்டுகளுக்குப் பின் என்னையும் காதலை சொல்ல வைத்து, இப்போது தன் மொத்த வீட்டையும் எதிர்த்து என் கரம்பற்றியிருக்கிறார்.
‘இப்ப மட்டும் இல்ல… என் காதல் எப்போவும் இருக்கும். ஒருவேளை நீங்க கடைசிவரை என்னை லவ் பண்ணலனாலும் சரி, என் காதல் மட்டும் மாறாது. இது எப்போவும் இருந்துட்டுதான் இருக்கும்’
கோமதி அன்று இவ்வார்த்தைகளைச் சொல்லும்போது ஏதோ வயதுக் கோளாறில் சொல்கிறார் என்றுதான் நினைத்தேன். ஆனால், போகப்போக அவர் தன் காதலை எவ்வளவு கொண்டாடுகிறார், தான் காதலிக்கும் என்னை எத்துனை உயர்வாய் நினைக்கிறார் என கொஞ்ச கொஞ்சமாக புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். ஆம்!
காதல் எங்கெங்கோ இருக்கும் இருவருக்குள் சுடர்விட்டு எப்படி தன்னை காலந்தோறும் உயிர்ப்பித்துக்கொள்கிறது என நினைக்கும்போதெல்லாம் வியப்பதுண்டு. அவ்வகையில் கோமதியையும் அவரது உறுதியான காதலையும் நினைக்கும்போது சற்று கூடுதலாகவே வியக்கிறேன்!
[இன்னும்]
*