எங்க கல்யாணம் – 10

ஏப்ரல் 24, 2021

**

எங்கள் திருமணத்தன்று காலையில் கோமதி என் அறைக்கு வரும்போது,

‘தனனா தன்னான –

தன்ன தன்னான..

தனன தன்னான –

தான தன்னான..’

என மனத்துக்குள் புது மெட்டு ஒன்று முதல் தடவையாக ஒலிக்க ஆரம்பித்தது.

எப்போது எனக்குள் புதிதாக மெட்டுக்கள் ஒலித்தாலும் அதை கொஞ்சம் கொஞ்சமாக பெருக்கி அசைபோட்டு அடுத்தடுத்த நிமிடங்களில் அதற்கான சொற்களை யாத்து பாடலாக்கிவிடுவேன். அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாத பட்சத்தில் உடனே நகர்பேசியை எடுத்து அம்மெட்டினை பதிவுசெய்து வைத்துக்கொண்டு பின் நேரம் கிடைக்கும்போது ஓட்டி உள்வாங்கி அதற்கான வரிகளை எழுதுவேன். இதுதான் வழக்கம்.

ஆனால், திருமணத்தன்று உதித்த இம்மெட்டுக்கு மட்டும் என்னால் சட்டென எவ்வார்த்தைகளையும் இட்டு நிரப்ப முடியவில்லை. இத்தனைக்கும் இம்மெட்டினை என் நகர்பேசியில் கூட நான் பதிவுசெய்து வைக்கவில்லை. என்றாலும் எனக்குள் இருந்து மறையாமல் திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டிருந்தது.

கோமதி கூட ஒருதடவை நான் லேசான சத்தத்துடன் முணுமுணுப்பதைப் பார்த்துவிட்டு, ”என்ன பாட்டு அது? பாடிக்காட்டுங்க’’ எனக் கேட்டுப்பார்த்துவிட்டார். வரிகள் கோக்காததால் வெறும் மெட்டை மட்டும் பாடிக்காட்டினேன். கேட்டுவிட்டு நன்றாக இருப்பதாகவும், அதற்கான வரிகளை சீக்கிரம் எழுதுமாறும் சொன்னார்.

அதன்பின் வள்ளுவர் கோட்டத் தேரின் முன்பு எங்கள் திருமணத்திற்காக யாவரும் கூடி நிற்கும்போதும், திருமணம் முடிந்து நானும் கோமதியும் கீழே ஒன்றாக இறங்கும்போதும், உணவகத்தில் அனைவருடனும் உட்கார்ந்து சாப்பிடும்போதும், பின் அங்கிருந்து கிளம்பி காரில் பல்லாவரத்தில் உள்ள எங்கள் வீட்டுக்கு வரும்போதும்… அடிக்கடி இம்மெட்டு எனக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.

நானும் ஒவ்வொரு தடவையும் ஏதேதோ வார்த்தைகளைப் போட்டுப் பார்த்தேன். ஒன்றும் ஒட்டவில்லை. ‘சரி, வரும்போது வரட்டும்’ என விட்டுவிட்டேன்.

சென்ற வாரம் நானும் கோமதியும் கோட்டூர்புரம் – அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு போயிருந்தோம். இரண்டாவது மாடியில் உள்ள தமிழ்ப் பிரிவில் என் விருப்பமான இடத்தில் உட்கார்ந்து,

‘யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா;

பொருள் அறிவாரா; ஆயினும் தந்தையர்க்கு

அருள் வந்தனவால் புதல்வர்தம் மழலை :

என் வாய்ச் சொல்லும் அன்ன – ஒன்னார்

கடி மதில் அரண் பல கடந்த

நெடுமான் அஞ்சி! நீ அருளன்மாறே.’

எனும் ஔவை அதியமானை பாடிய இயன்மொழித் துறை புறநானூற்றுப் பாடலை வாசித்துக்கொண்டிருந்தேன். சட்டென இடையில் மீண்டும் மனத்துள் அம்மெட்டு வந்து முன்னை விட சற்று உற்சாகமாய் ஒலித்தது. சத்தமின்றி உள்ளுக்குள் திரும்பத் திரும்ப ஒலிக்கவிட்டு பெருக்கி உள்குரலில் பாடிப்பார்த்தேன். ஆம்!

இம்முறை வார்த்தைகள் அடுத்தடுத்து வந்து விழ ஆரம்பித்தது. அதுவும் எங்களைப் பற்றி, எங்கள் திருமணத்தைப் பற்றி. உடனே மேசையில் வைத்திருந்த பேப்பரில் ஒவ்வொரு வரியாக எழுத ஆரம்பித்தேன்.

*

அடடா கல்யாணம் – 
எங்க கல்யாணம்…
அழகு கல்யாணம் –
ஆச கல்யாணம்… 

பத்திரிகை இல்ல –
மேள தாளம் இல்ல…
சடங்குகள் இல்ல –
சாதி மதம் இல்ல…

Flex board இல்ல –
ஆடம்பரம் இல்ல…
Dowry இல்ல –
Photoshoot இல்ல…

அடடா கல்யாணம் – 
எங்க கல்யாணம்…

*

பல்லவி எழுதிவிட்டேன். அடுத்து சரணம் எழுதவேண்டும். எப்படி தொடங்குவது?

ஏதேதோ யோசிக்கிறேன். வெளியில் தெரியும் கொடுக்காய்ப்புளி மரத்தையும், அதன் கிளையில் உட்கார்ந்திருக்கும் நான்கைந்து காக்கைகளையும், அவ்வழியாக நடந்துபோகும் தூய்மைப் பணியாளர்களையும் சில நொடிகள் பார்த்துவிட்டு மெல்ல பார்வையை நூலகத்திற்குள் திருப்பி உலவவிட்டேன்.

வரிசை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நூல்கள். நான்கைந்து நூல்களை ஒருசேர எடுத்துப் போய் உட்காரும் பெண். அதன் பின்இருக்கையில் சாய்ந்தபடி படிக்காமல் உறங்கும் கட்டம்போட்ட சட்டைக்காரர். உடனே அடுத்தடுத்த வரிகளுக்கான மெட்டு மனத்துள் பெருகி வந்தது. கூடவே அதற்கான சொற்களும்.

*

வள்ளுவனை சாட்சியாய் வைத்து –
கரம்பிடிக்கும் கல்யாணம்…
பழமையை எல்லாம் ஒதுக்கி –
ஒன்றிணையும் கல்யாணம்…

‘அ’கரத்தை தாலியாய் கோத்து –
அரங்கேறும் கல்யாணம்…
பனையை மாலையாய் சூட்டி –
புன்னகைக்கும் கல்யாணம்…

காலம் சேர்த்த உறவிது –
காலங்கடந்தும் வாழும் வாழும்…
அன்பில் மலர்ந்த உறவிது –
அன்பாய் என்றும் பொழியும் பொழியும்… (2)

அடடா கல்யாணம் – 
எங்க கல்யாணம்…

*

ஒரு சரணமே போதுமெனத் தோன்றியது. எழுதி முடித்துவிட்டு தாளை கையில் எடுத்து இரண்டு மூன்று தடவை உள்ளுக்குள் சந்தத்தோடு பாடிப் பார்த்தேன். சரியாக அதேநேரம் நன்றாகவும் இருந்தது.

இதை எழுதத்தான் இவ்வளவு நாட்களா? அதுவும் திருமணமாகி இத்தனை நாட்கள் கழித்து இங்கே வந்து கோமதியின் முன்னால் ஆயிரக்கணக்கான நூல்கள் சூழ என் விருப்பமான இடத்தில் உட்கார்ந்தா என உள்ளுக்குள் நினைத்துக்கொண்டேன்.

இவ்வளவு நேரம் நான் எதையோ எழுதிக் கொண்டிருந்ததையும், அதை கையிலெடுத்து படித்தும், பாடியும் பார்த்ததையும், பின் மேசைமேல் அத்தாளினை வைத்துவிட்டு மீண்டும் புறநானூறுக்குள் நுழைந்ததையும் பார்த்த கோமதி… தன் கையிலிருந்த அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ நாவலை கீழே வைத்துவிட்டு,

”பாட்டா?’’ என்றார். ”ஆமாம்’’ என்றேன்.

”என்னப் பத்திதான?’’ எனக் கேட்டுச் சிரித்தார். உடனே நான், ”இல்ல… நம்மளப் பத்தி, நம்ம கல்யாணத்தப் பத்தி’’ என்றேன்.

கேட்கவெல்லாம் இல்லை, சட்டென கையை நீட்டி அத்தாளை வேகமாக எடுத்து படிக்க ஆரம்பித்துவிட்டார். ‘சரி, படிக்கட்டும்’ என விட்டுவிட்டேன். ஒரு மொட்டு மெல்ல ஒவ்வோர் இதழ்களாக விரித்து மலர்வது போல் கோமதியின் முகம் ஒவ்வொரு வரியாக படிக்கப் படிக்க மலர்வதைக் கண்டேன்.

எப்போதும் என் எழுத்தை அதிலும் குறிப்பாக பாடல் வரிகளை படித்துவிட்டு தன் அபிப்பிராயத்தை உடனே சொல்லும் கோமதி இம்முறை எதுவும் சொல்லவில்லை. மாறாக நான் எதிர்பாராத கேள்வியை கேட்டார்.

”எப்போ இத பாட்டா கம்போஸ் பண்ணப் போறீங்க?’’

சொல்லப்போனால் அந்நிமிடம் வரை அப்படியோர் எண்ணமே இருக்கவில்லை. கோமதி கேட்டதும்தான், ‘இதை பாடலாக இசையமைத்தால் என்ன?’ எனத் தோன்றியது. உடனே நான், ”தெரியல” என்றேன். காத்திருப்பதாகச் சொன்னார்.

கோமதி அடிக்கடி என்னிடம் கேட்கும் ஒன்று, ”எப்போ எனக்கு பாட்டு எழுதப் போறீங்க?’’ என்பது. ஒவ்வொரு தடவை அவர் இப்படி கேட்கும்போதும் எதுவும் சொல்லாமல் வெறுமே புன்னகைத்துவிட்டு, ”தோணும் போது’’ எனக் கடந்துவிடுவேன். அவ்வளவுதான்.

உண்மையில் கோமதியையும் அவரது காதலையும் நினைத்து, அவரது இடத்தில் இருந்து எத்தனையோ பாடல்களை இதுவரை நான் எழுதியிருக்கிறேன். அதிலும் குறிப்பாக கடந்தாண்டு இறுதியில் நானும் என் நண்பரும் இசையமைப்பாளருமான ஷ்ரவன் கலை அவர்களுடன் சேர்ந்து, ‘100 நாள் – 100 பாடல் – 100 நொடி’ எனும் உலகில் இதுவரை யாரும் செய்யாத பெரும் சாதனையை நிகழ்த்துகையில் பல பாடல்களை எழுதியிருக்கிறேன். அதிலொரு பாடல், ‘ஆகாசம் நீலநெறம்’.

கோமதியும் நானும் எங்கள் கிராமத்தில் வாழ்கிறோம். இதேபோல் என்னை அங்கேயும் காதலிக்கிறார். தன் ஆழ்கடல் மனத்துக்குள் வைத்திருக்கும் பெருங்காதலையும் ஆசையையும் வைகறையில் விழிக்கும் கோழிகளிடம் சொல்லி கவிதையாக கூவச்சொல்கிறார். ஆம்!

*

ஆகாசம் நீலநெறம் – 

ஆழ்கடலு மனசுக்குள்ள…

வச்சிப்புட்டா ஆசவொண்ணு –

வைகற கோழிங்களே…

கூவுங்க கவித சொல்லி – 

தாவுங்க எட்டி எட்டி…

கேளுங்க காத தீட்டி –

ஆடுங்க தட்டி தட்டி…

இவ பாட்டக் கேட்டு –

தலயாட்டும் ஆட்ட…

ஒன் வீட்டக் காட்டி –

அனுப்பி வச்சா…

மல்லாட்டப் போருல –

செத்தத்தான் எடுத்து…

ஒன் பேச்ச சேத்து –

கொடுத்தனுப்பேன்…

*

அடடே ஆளுங்கிறுக்கா – 

ஒண்ணால ஆனா கிறுக்கா…

ராத்தூக்கம் காணல காணல –

கனா மட்டும் காணுறா…

சேட ஓட்டும் கறுப்பா – 

சேதியேதும் இருக்கா…

கா(த்)தோட சொன்னா –

கசங்காம போவும்…

கொம்புத்தேனுக் கணக்கா –

நெனப்பெல்லாம் சொட்ட…

மல்லிப்பூவா சிரிப்பா –

மஞ்சம்புல்லா எரிப்பா…

ஆகாசம் நீலநெறம் – 

ஆழ்கடலு மனசுக்குள்ள…

*

இன்னொரு பாடல் நூலகத்தில் கோமதி என்னெதிரில் உட்கார்ந்து படிக்கும்போது எழுதியது. அதுவும் இலக்கியப் பித்து கொண்டு நம் பழந்தமிழ் நூல்களின் பெயர்களை கோமதி தன் காதல் பித்தோடு சேர்த்துப் பாடினால் எப்படி இருக்கும்? என கற்பனை செய்துகொண்டு. ஆம்!

*

குறுந்தொகை கண்ணால –

நெடுந்தொகை செய்தானே…

நற்றிணை கையால –

நற்றுணை எய்தானே…

புறநானூறு வழியில –

கலித்தொகை கொண்டேனே…

அகநானூறு மொழியில –

பரிபாடல் கண்டேனே…

ஐங்குறுநூறு அழகில் விழுந்து –

பதிற்றுப்பத்தில் எழுந்தேன்…

பத்துப்பாட்டு சுவையில –

மின்னலாய் மின்னினேன்…

*

அவனக் காணும் முன்னால –

தொல்காப்பியத்தில் தவிச்சேன்…

அவனக் கண்ட பின்னால –

திருக்குறள்ல மகிழ்ந்தேன்…

அவனில் தொலையும் முன்னால –

சிலப்பதிகாரத்தில் கொறஞ்சேன்…

அவனில் தொலைந்த பின்னால –

முத்தொள்ளாயிரத்தில் நெறஞ்சன்…

*

இவ்விரு பாடல்கள் மட்டுமல்ல… அடியே காதல்காரியே, போறான், ஒருநாள் வாரலன், ஓ மஞ்சள் மேகமே… என இன்னும் எத்தனையோ பாடல்களை கோமதி நினைத்து எழுதியிருக்கிறேன். ஆம்!

இதுவரை கோமதியிடம் இதையெல்லாம் நான் சொன்னதில்லை.  சொல்லியிருந்தால் பெரிதும் மகிழ்ந்திருப்பார். என்றபோதும், ‘ஆகாசம் நீலநெறம்’ பாடலை மட்டும் அவர் குரலில் எப்படியாவது ஒரே ஒருதடவை கேட்கவேண்டும் போலிருந்தது. அதற்காக ஒருநாள் அவரிடம் பேசும்போது, ”இந்தப் பாட்ட மட்டும் நீங்க ஒரு வார்த்தை கூட தப்பில்லாம 24 மணி நேரத்துக்குள்ள பாடிட்டீங்கன்னா உங்களுக்கு ஒரு பரிசு தருவன். இல்லனா நீங்க எனக்கு தரணும்’’ என்று பெட் கட்டினேன்.

அவரும் உடனே ”சரி’’ எனச் சொல்லிவிட்டு, எப்படி எப்படியோ தீவிரமாகப் பயிற்சியெடுத்து ஒரு வார்த்தை கூட தவறில்லாமல் உச்சரிப்பு சுத்தமாக சொன்னதுபோல் பாடிக் காட்டி அசத்தினார். ஆம்!

என்னளவில் கோமதி பெரும் திறமைசாலி என்பேன். தன்திறம் அறியாதவர். எது ஒன்றிலும் மிக உறுதியானவர். தான் ஓர் இயன்முறை மருத்துவர் என்பதைத் தாண்டி… வாசிப்பிலும், எழுத்திலும் ஓரளவுக்கு ஆர்வம் கொண்டவர். தொடர்ந்து குங்குமம் ‘தோழி’ போன்ற இதழ்களில் இயன்முறை மருத்துவம் தொடர்பான கட்டுரைகளை கடந்த ஈராண்டுகளாக எழுதிவருபவர். வரும்காலங்களில் மருத்துவம் சார்ந்த நூல்கள் பல எழுதவும் திட்டமிட்டிருப்பவர். இன்னும் இன்னும்.

எப்படி அவர் என்னை இத்தனை ஆண்டுகளாக விரட்டி விரட்டி காதலித்தாரோ அதைவிட அதிகமாக அவரை காதலிப்பேன். எனக்காக எவ்வளவு விரும்பி கஷ்டப்பட்டாரோ அதற்கெல்லாம் சேர்த்து பலமடங்கு சந்தோஷமாக பார்த்துக்கொள்வேன். ஒரு பாட்டல்ல… இரு பாட்டல்ல… இன்னும் பல நூறு பாடல்கள் அவருக்காக எழுதுவேன். ஆம்!

எதையும் சொல்லி செய்வதைவிட சொல்லாமல் செய்து காட்டுவதே என்னைப் பொறுத்தவரை சிறந்தது என எப்போதும் நினைப்பேன். அவ்வகையில் எங்களுக்காக எழுதிய எங்கள் திருமணப் பாடலை கூடிய விரைவில் இசையமைத்து காட்சிப்படுத்தி, இந்நூலோடு சேர்த்து நடந்து முடிந்த எங்கள் திருமணத்திற்கு பரிசாக கோமதிக்கு தரப்போகிறேன்.

எனக்காகவும் என் காதலுக்காகவும் நான்கரை ஆண்டுகள் காத்திருந்தவர். பெரும் துன்பங்களை எல்லாம் எனக்காக அனுபவித்தவர். தம் வீட்டை எதிர்த்து உறுதியோடு என் கரம் பற்றியிருப்பவர். அப்படிப்பட்ட என் கோமதிக்கு நான் தரப்போகும் மிக எளிய பரிசுகளே இவ்விரண்டும்.

உலகில் இதுவரை யாராவது தம் திருமணம் பற்றி ஒரு முழுநூலே எழுதியிருப்பார்களா தெரியாது. அப்படியே எழுதியிருந்தாலும் அதை தம் இணையருக்கு பரிசாகத் தந்திருப்பார்களா தெரியாது. என்னைப் பொறுத்தவரை இதுவே நான் அவருக்கு தரும் மிக உயரிய பரிசாக நினைக்கிறேன். நிச்சயம் அவரும் இதையே நினைப்பார் என்றும் நம்புகிறேன். ஆம்!

காலமும் காதலும் தமிழும்தான் எங்கள் இருவரையும் ஒன்று சேர்த்திருக்கிறது. நிச்சயம் இம்மூன்றும் எங்களை எப்போதும் சீரோடும், சிறப்போடும் வாழவைக்கும் என உறுதியாக நம்புகிறேன்!

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=