எங்க கல்யாணம் – 3

ஏப்ரல் 17, 2021
**
மெல்ல கோமதியும் நானும் குளித்து உடை மாற்றிக்கொண்டு உணவகத்தில் வாங்கி வந்த இட்லியையும், சப்பாத்தியையும் பங்கிட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சரியாக முடிக்கும்போது விக்கியிடமிருந்து அழைப்பு வந்தது.
எடுத்ததும், ”ஐயா, ரூம்க்கு வந்துட்டன். பாப்பாவயும் (வைரமணி) ஹாஸ்டல்ல வுட்டுட்டன். என்னனு தெரில ஒருமாதிரியாவே இருக்கு. அதான் ரூம்ல உக்கார முடியாம ஏன்ச்சி வெளியில இருக்க பார்க்குல வந்து தனியா உக்காந்திருக்கன்” என்றார்.
”ஏன், என்னாச்சு விக்கி?’’
”இல்ல, காலையில இருந்து எல்லாரும் ஒரு குடும்பம் மாதிரி சந்தோசமா இருந்துட்டு, இப்போ தனித்தனியா பிரிஞ்சு வந்துட்டதால ரொம்பத் தனியா இருக்கமாரி இருக்கு’’ என்று வருத்தத்துடன் சொல்ல, என்ன சொல்வதெனத் தெரியாமல், ”அட, என்ன விக்கி சின்னப்புள்ள மாதிரி… இங்க யாரும் எங்கேயும் போகல, இங்கதான் இருக்கோம். உனக்கு எப்போ எங்களப் பாக்கணும்னு தோணுச்சினாலும் உடனே கெளம்பி வந்துடு. இதோ இங்க உனக்குன்னு ஒரு வீடும், குடும்பமும் இருக்கு, சரியா..?’’ என்றதும், சற்று சமாதானம் ஆனவராய், ”ம்… சரிய்யா, கண்டிப்பா வந்துடறன்’’ எனச் சொல்லிவிட்டு வைத்தார்.
விக்கி, நண்பர் ராமின் (ராம் எனக்கு ‘ஐயா’ நூல் வழியாகக் கிடைத்த நட்பு) தம்பி. அவர் மூலமாக ஊருக்குப் போயிருந்தபோது அறிமுகமானவர். எனக்கும் நண்பர், தம்பி. அதிகம் படிக்காதவர் என்றாலும் பெரும் பாசக்காரர், உழைப்பாளி. என்னை எப்போதும் ‘ஐயா’ என்று மரியாதையோடு அழைப்பவர்.
அதிகாலை எழுந்தது முதல் நடந்ததை ஒவ்வொன்றாக மீண்டும் ஒருதடவை உள்ளுக்குள் அசைபோட்டுப் பார்த்தேன். சென்னையிலிருந்து மட்டுமல்லாமல் கோவை, சேலம் என பல ஊர்களிலிருந்தும் திருமணத்திற்கு முன்தினம் இரவே புறப்பட்டு வந்து கலந்துகொண்டு வாழ்த்திவிட்டு சென்றது. ஆளுக்கொரு வேலை என அவரவர் பங்குக்கு இழுத்துப்போட்டு செய்தது. ஒரு குடும்பமாய் கூடி அன்பால் ஒவ்வொருவரும் நனைய வைத்தது. யாவும் கண்முன் வந்து போனது.
நான் ஏதோ யோசனையில் இருப்பதைப் பார்த்த கோமதி, ”என்னாச்சி?’’ என்றார், சொன்னேன். கேட்டுவிட்டு எதுவும் சொல்லாமல் சிலநொடி மவுனத்திற்குப் பின், ”எனக்கும் அதேமாதிரிதான் தோணுது. காலையிலயிருந்து எல்லாரும் ஒரு குடும்பம் மாதிரி அக்கா, அண்ணன், தம்பி, தங்கச்சின்னு இருந்துட்டு… இப்போ திடீர்னு விட்டுட்டு அவங்கவங்க வீட்டுக்குப் போனது நம்மள தனியா விட்டுட்டுப் போன மாதிரி இருக்கு’’ எனச் சொல்லி என் கையை இறுகப் பற்றிக்கொண்டார்.
கோமதிக்கு உறவுகள் மேல் எப்போதும் பெரும் மரியாதை உண்டு. அதிலும் தன் தாய் தந்தையரை பெரிதாக நேசிப்பவர். நிச்சயம் தன் காதலை புரிந்து ஏற்றுக்கொண்டு திருமணத்திற்கு வந்துவிடுவார்கள் என அவ்வளவு நம்பிக்கையோடு கடைசி நிமிடம் வரை காத்திருந்தார். ஒருவாரத்திற்கு முன்பிருந்தே அவர்கள் எண்ணுக்கு அழைத்து நடக்கப்போகும் இடத்தையும் நேரத்தையும் எப்படியாவது சொல்லிவிடவேண்டும் என தொடர்ந்து முயற்சித்தவர். இன்னும் ஒரு மணிநேரத்தில் திருமணம் எனும்போதுகூட நம்பிக்கையோடு அழைத்தார். கடைசிவரை அவர்கள் எடுக்காததை நினைத்து பெரிதும் வருத்தப்பட்டதை நான் மட்டுமே அறிவேன்.
பின் மெல்ல எழுந்து இருவரும் கை கழுவிவிட்டு என் அறைக்கு வெளியில் உள்ள பால்கனியில் சென்று நின்றோம். வாகனச் சத்தம் எதுவுமின்றி தெருவே வெறிச்சோடி இருந்தது. சட்டென மாமரத்தில் இருந்த பெயர்தெரியாத பறவை ஒன்று கத்தக் கேட்டு கோமதியைப் பார்த்தேன்.
எப்போதும் எதையாவது பேசும் கோமதி எதுவும் பேசாமல் இருப்பதை பார்த்துவிட்டு, ”ப்பா… ஒருவழியா எல்லாம் நல்லபடியா முடிஞ்சதில்ல’’ என்றேன், அவரை பேச வைக்கும் நோக்கில். அப்போதும் எதுவும் பேசாமல் எதையோ உள்ளுக்குள் நினைத்தவராய், ‘ஆமாம்’ என்று மட்டும் தலையாட்டினார்.
உடனே நான், ”என்னாச்சு, ஒருமாரி இருக்க?’’ என்றதற்கு, ”எதுவுமில்ல’’ என்றுவிட்டு, சாலையில் நடந்து செல்லும் வயதான தம்பதியர் இருவரையும் தெருமுனையில் சென்று மறையும் வரைக்கும் வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
மெல்ல அவர் கையைப் பிடித்து, ”எதுவும் நெனைக்காம வா, வீட்டுக்குள்ள போவோம்’’ என்றேன். அதைக்கேட்டு உடைந்தவராய், ”அப்பாவும் அம்மாவும் கோவத்துல வரல, சரி. ஏன் என் ஃப்ரெண்ட்ஸ் ரண்டுபேரும் வரல? எனக்குன்னு இருந்த ரண்டு க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் கூட வராம, உங்க பிரெண்ட்ஸ் மட்டுமே கல்யாணத்துக்கு வந்தது எனக்குன்னு யாருமே இல்லாமப் போனமாதிரி இருக்கு. நான் அப்படி என்ன பெரிய தப்புப் பண்ணிட்டன்?’’ எனச் சொல்லி கண்கலங்கி அழ ஆரம்பித்தார்.
ஏதேதோ சொல்லி ஒருவாறு சமாதானம் செய்து, ”ஒன் ஃப்ரெண்ட்ஸ் என் ஃப்ரெண்ட்ஸ்னு எதுக்கு பிரிச்சிப் பாக்கற? வந்திருந்த எல்லாரும் இனி நம்மக் குடும்பத்துல ஒருத்தவங்க. எப்பவும் நம்மக்கூட இருக்கப்போறவங்க’’ என ஆறுதல் சொல்லி வீட்டுக்குள் கூட்டிவந்தேன்.
திருமணத்திற்குப் பின் சென்னையில் எந்தப் பகுதியில் வீடெடுத்து தங்கலாம் என யோசித்ததும் முதலில் நினைவுக்கு வந்தது பல்லாவரம்தான். முதல் காரணம், என் நண்பரும் அண்ணனும் இசையமைப்பாளருமான ஷ்ரவன் கலையின் வீடு இங்கிருப்பது. அடுத்தது, வெள்ளிக்கிழமைதோறும் இங்கே போடப்படும் மிகப் பிரமாண்டமான சந்தை (கடுகு முதல் கம்ப்யூட்டர் வரை வாங்கலாம்).
நாங்கள் நினைத்ததுபோல் அழகான வீடு அமைந்தது. அதுவும், இசையமைப்பாளரின் வீட்டார் வழியாக அவர் வீட்டின் பக்கத்துத் தெருவில் குறைந்த வாடகையில். இது நாங்கள் எதிர்பாராத ஒன்று என்பதால் பெரிதாய் மகிழ்ந்தோம்.
நண்பர்கள் யாரேனும் ஊரிலிருந்து சென்னைக்கு வந்தால் வீட்டுக்கழைத்து தங்கவைத்து ஒருவேளை சாப்பாடுகூட போடமுடியாமல் போவதை நினைத்து பலதடவை வருந்தியிருக்கிறேன். அதனால் திருமணத்திற்குப் பிறகான வீடு எப்போது ஊரில் இருந்து நண்பர்கள், உறவினர்கள் வந்தாலும் அழைத்து தங்க வைக்கும் அளவுக்கு இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அவ்வகையில் வீடும் அமைந்ததை நினைத்து சந்தோசப்பட்டோம்.
காலை முதல் திருமண வேலைகளிலும், யாவும் எவ்வித இடையூறுமின்றி நன்முறையில் நடக்கவேண்டும் என்னும் பதட்டத்திலும், வந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்ததிலும், என் இனிய நண்பரும் நான் பெரிதும் மதிக்கும் தற்காப்புக் கலைஞருமான ‘கோபுடோ’ கிருஷ்ணமூர்த்தி சாரின் பிறந்தநாள் இன்று என்பதையே மறந்துவிட்டேன்.
இத்தனைக்கும் இரண்டுநாள் முன்பு அவரைச் சந்தித்து திருமணத்திற்கு அழைத்தபோது கூட சொல்லியிருந்தார். மிகச் சில நண்பர்களை மட்டும் கூப்பிட்டு இம்முறை பிறந்தநாள் விழாவை கொண்டாடப் போவதாகவும், அதில் என்னையும் வாய்ப்பிருந்தால் கலந்துகொள்ளச் சொல்லியும்.
நேரம் சரியாக இரவு பத்து மணி. சரி, அழைத்து வாழ்த்துச் சொல்வோம் எனக் கூப்பிட்டு சொன்னேன். பெரிதும் மகிழ்ந்தார். சட்டென, ”I am very happy and proud sir. உங்க திருமணத்துல, அதுவும் நீங்க invite பண்ண குறிப்பிட்ட பதினைந்து பேர்ல நானும் ஒருத்தர்னு நினைக்கும்போது ரொம்பப் பெருமையா இருக்கு சார்’’ என்றார்.
‘கோபுடோ’ கிருஷ்ணமூர்த்தி சார், பலரும் அறிந்த பிரபலமான முகம் (சிறுவயதில் பலதடவை அவரை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன்). தற்காப்புக் கலையில் அதிலும், குறிப்பாக ‘கோபுடோ’வில் உள்ளூர் முதல் வெளிநாடு வரை பல சாதனைகளை நிகழ்த்தியவர். என்னைவிட இருபத்தைந்து வயது மூத்தவர். கடந்த 2012-ல் விகடன் மாணவப் பத்திரிகையாளராக இருந்தபோது அவள் விகடனுக்காக ‘பெண்களுக்கான தற்காப்புக் கலைகள்’ குறித்து பேட்டி எடுக்கப் போயிருந்தபோது அறிமுகமானவர். என் எழுத்துமேல் பெருமதிப்பு கொண்டவர்.
”என் life-லயே very first time இவ்வளவு simpleஆ, அதேநேரம் ரொம்ப அழகா ஒரு marriage-அ பார்த்திருக்கேன் சார். ஒரு கல்யாணம்னா இப்படித்தான் இருக்கணும். பணம் பந்தா எதுவும் இல்லாம, நமக்கானவர்கள மட்டும் கூப்பிட்டு… I am really very happy sir” என்றது, நான் சற்றும் எதிர்பாராதது. அதுவும் நான் பெரிதும் மதிக்கும் ஒருவர் சொன்னதைக் கேட்டு அவ்வளவு மகிழ்ந்தேன்.
”ஒரு small request sir. Coming weakல ஒருநாள் evening நீங்களும் உங்க மனைவியும், if possible உங்கக் கூட உங்க பத்து friends, both male and female வந்தாலும் happy sir, எங்க வீட்டுக்கு வாங்க. எங்க family-யோட உங்களுக்கு ஒரு விருந்து கொடுக்க ஆசப்படுறேன் சார். பொதுவா சொந்தக்காரங்க கல்யாணம் முடிஞ்சதும் மறுவீடுன்னு கூப்பிட்டு விருந்து கொடுப்பாங்க. As a friendஆ நான் உங்களுக்கு தரப்போற மறுவீடு விருந்துன்னு இத எடுத்துக்கோங்க’’ என்றதும், என்னையறியாமல் கண் கலங்க ஆரம்பித்துவிட்டேன்.
சிறுவயது முதல் ஐயா அடிக்கடி ஒன்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ‘சொத்து பத்த வுட மனுசங்கதான் பெரிய சொத்து. அத சம்பாதிச்சிட்டம்னா போதும், மத்ததெல்லாம் தானா வரும்’
ஆம்! நினைத்துப் பார்க்கிறேன். என் வாழ்வில் நான் சம்பாதித்த பெரும் சொத்துக்கள் என்றால் எனக்கான மனிதர்களை சம்பாதித்ததுதான். அதிலும் குறிப்பாக நண்பர்கள். மிகப் பெருமையாக உணர்ந்தேன்.
”ரொம்ப ரொம்ப சந்தோஷம் சார். கண்டிப்பா வர்றோம்’’ என்றேன்.
நடந்ததை அப்படியே கோமதியிடம் சொன்னேன். என்னைவிட பெரிதாய் மகிழ்ந்தார். பின் நடுவீட்டில் அவரை உட்காரச் சொல்லிவிட்டு அறைக்குள் போய் திருமணத்திற்கு வந்திருந்த பரிசில் ஒன்றை எடுத்துவந்து பிரிக்க ஆரம்பித்தேன்.
நடந்து முடிந்த எங்கள் திருமணம் பல ஆச்சர்யங்கள் நிறைந்தது என்றாலும், அதில் மிக முக்கியமான ஆச்சரியம் நான் பிரிக்கும் இந்தப் பரிசு. திருமணத்திற்காக தாலி வாங்க நானும் ஜெனி அக்காவும் சரவணா ஸ்டோர் சென்றிருந்தபோது அங்கே அறிமுகமான சேகர் கொடுத்தது. அதுவும் எதிர்பாராத தருணத்தில். ஆம்!
நடக்கப்போகும் எங்கள் திருமணத்தையும், அதற்காக நாங்கள் வாங்க வந்த ‘அ’கரத் தாலியையும், இல்லாத பட்சத்தில் அதுதான் வேண்டுமென ஆர்டர் கொடுத்து செய்யச்சொன்னதையும், அதற்காக நாங்கள் எடுத்த மெனக்கிடல்களையும் பார்த்தவர் வாங்கிக்கொண்டு புறப்படுகையில் வந்து, ”ஒரு அஞ்சு நிமிஷம் உட்கார்ந்து ஒரு காபி குடிச்சிட்டு இருங்க. இதோ வந்துட்றன்..’’ என்று சொல்லிவிட்டு போய் முன்னமே என்னிடம் தர வாங்கிவைத்த பரிசுப் பையோடு வந்து அதை என் கையில் நீட்டியது நாங்கள் சற்றும் எதிர்பாராதது.
அதுவும், ”தினமும் எத்தனையோ பேர் கல்யாணத்துக்கு நகை வாங்க வருவாங்க. எவ்வளவோ பேருக்கு என் கையால எடுத்துக் கொடுத்திருப்பேன். அது எல்லாத்தையும் விட உங்கக் கல்யாணம் ரொம்ப ஸ்பெஷலானது. நேர்ல வந்து பாக்கணும்னு ஆச, லீவு தரமாட்டாங்க. அதனால என்னோட இந்தப் பரிச நீங்க மறுக்காம வாங்கிக்கணும்’’ எனச்சொல்லி நீட்டியதும், என்னையறியாமல் கண் கலங்கிவிட்டது. அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் மெல்ல உதடசைத்து புன்னகைத்து மகிழ்வோடு பெற்றுக்கொண்டு வந்தேன்.
எத்தனை பரிசுகள் திருமணத்திற்கு வந்தாலும், முதல் பரிசு அதுவும் முக்கியப் பரிசு, யாரென்று தெரியாத ஒருவரால் அன்பால் வழங்கப்பட்ட பரிசு இதைத்தான் முதலில் பிரித்துப் பார்க்கவேண்டும் என அப்போதே முடிவு செய்துவிட்டோம். அதேபோல மிகுந்த ஆசையோடு பிரித்தேன். ஆம்! மிக அழகான குழந்தை புத்தர் சிலை.
பல கோடி ரூபாய் கொடுத்தாலும் யாருக்கும் எளிதில் கிடைக்காத பரிசிது. அன்பால் கிடைக்கப்பெற்றது. பெரும் உற்சாகத்தோடு மெல்ல கையிலெடுத்து வருடிப் பார்த்தேன். சட்டென மனத்திரை விரிந்து, ‘தினமும் எத்தனையோ பேர் கல்யாணத்துக்கு நகை வாங்க வருவாங்க. எவ்வளவோ பேருக்கு என் கையால எடுத்துக் கொடுத்திருப்பேன். அது எல்லாத்தையும் விட உங்கக் கல்யாணம் ரொம்ப ஸ்பெஷலானது. நேர்ல வந்து பாக்கணும்னு ஆச, லீவு தரமாட்டாங்க. அதனால என்னோட இந்தப் பரிச நீங்க மறுக்காம வாங்கிக்கணும்’ என்று, சரவணா ஸ்டோர் நகைக் கடையின் தரை தளத்தில் வைத்து சேகர் சொன்ன காட்சியும் வார்த்தைகளும் வந்துபோனது.
‘இதுதானே வாழ்க்கை! இவர்கள்தானே எனக்கான சொந்தங்கள்’ என சேகர் அன்பால் தந்த குழந்தை புத்தர் சிலையைப் பார்த்து மௌனமொழியில் சொன்னேன். அதைக் கேட்டுவிட்டு அச்சிலை மெல்ல உயிர்பெற்று உதடசைத்து சிரிப்பது போலிருந்தது!
[இன்னும்]
*