எங்க கல்யாணம் – 2

ஏப்ரல் 16, 2021
**
என் அறைக்கு வெளியில் உள்ள பால்கனியில் நின்று சாலையில் வருவோர் போவோரையும், சற்று தள்ளியுள்ள மாமரத்தில் ஆங்காங்கே பூத்துக்குலுங்கும் பூக்களையும், சிறுசிறு காய்களையும் பார்த்துக்கொண்டு நடந்து முடிந்த எங்கள் திருமணத்தையும், ஐயா சொன்ன வார்த்தைகளையும் திரும்பத் திரும்ப நினைத்துக்கொண்டிருந்தேன்.
சட்டென பின்னால் யாரோ வரும் சத்தம். கோமதி. அருகில் வந்து நின்று, ”இங்க என்னப் பண்றீங்க?’’ என்றார். எதுவும் சொல்லாமல், ”சும்மா” என்றேன். அதற்குள், ”தம்பி’’ என்று ஜெனி அக்கா கூப்பிடும் குரல் கேட்டு இருவரும் திரும்பினோம்.
”ரண்டுபேரும் இங்க வந்து என்னப் பண்றீங்க? வாங்க’’ என நடுவீட்டுக்கு அழைத்துப்போய் அருகருகில் இருவரையும் உட்காரச் சொல்லிவிட்டு, என் அறையில் வைத்திருந்த முத்துசாமி ஐயா (ஐயாவின் நண்பர்) சிறுவயதில் எனக்காக செய்து தந்த எழுத்துமேசையை எடுத்துவந்து முன்னால் வைத்து, அதன் மீது ஒரு சிறு பாத்திரத்தில் சந்தனமும் இன்னொரு பாத்திரத்தில் குங்குமமும் வைக்க, அடுத்தென்ன நடக்கப்போகிறது என ஒருவாறு யூகித்துவிட்டேன்.
உடனே ஜெனி அக்காவைப் பார்த்து, ”என்னக்கா இது?’’ என்றதுதான், என் கேள்விக்காகவே காத்திருந்தவராய், ”சடங்கு, சம்பிரதாயம்லாம் இல்லாம கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது சந்தோசம்னாலும், ஒரு அக்காவா நான் செய்ய வேண்டியது சில இருக்கு தம்பி, அதுல இது ஒண்ணு’’ என்றதும், லேசாக கண் கலங்க ஆரம்பித்துவிட்டது.
ஜெனி அக்கா, என்னோடு முதுகலை இதழியல் (தொலைதூர வகுப்பில்) படித்தவர். சட்டென ஏதோவோர் தருணத்தில் அக்காவாக கிடைக்கப்பெற்றவர். என் வாழ்வின் நல்லது கெட்டது எதிலும் உடனிருந்து தன்னால் முடிந்ததை செய்யக்கூடியவர். என் எழுத்தை தனதாக நினைத்து கொண்டாடி மகிழ்பவர். இன்னும் இன்னும்.
அம்மாவோ, அக்காவோ ஒருவேளை அருகில் இருந்திருந்தால் இதைத்தான் செய்திருப்பார்களோ? அல்லது அவர்கள் சார்பாக ஜெனி அக்கா இதைச் செய்கிறாரா? இல்லை அவர்களின் வடிவமாகி செய்கிறாரா? ஏதேதோ யோசிக்கிறேன்.
என்னையும், நான் எதையோ யோசிப்பதையும் பார்த்துவிட்டு, ”இதிலெல்லாம் தம்பிக்கு நம்பிக்கை இல்லைனாலும் கோமதிக்காக, இல்ல எங்க மனதிருப்திக்காக’’ என்று முடிக்கும் முன்பே மெல்ல தலையசைத்து புன்னகைத்து, ”சரிக்கா, உங்க விருப்பம்’’ என்றேன்.
அதைக் கேட்டு முகம் மலர்ந்தவர், சந்தனம் எடுத்து எங்கள் இருவரின் கன்னங்களிலும் கைகளிலும் பூசிவிட்டு, குங்குமம் எடுத்து நெற்றியில் வைத்துவிட்டு, கோமதியின் இரு கைகளிலும் தான் வாங்கிவந்த செந்நிற மற்றும் பச்சை நிற கண்ணாடி வளையல்களை ஆசையோடு போட்டுவிட்டார்.
வளையல்களை விரும்பாத பெண்கள் எனக்குத் தெரிந்து இல்லை என்றுதான் சொல்வேன். அதிலும் கோமதிக்கு வளையல்கள் மேல் நிறைய விருப்பம். அதுவும் மண் மற்றும் கண்ணாடி வளையல்கள். அதை அவருடன் முதல்தடவை திருப்போரூர் முருகன் கோயிலுக்கு சென்றிருந்தபோதும், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சென்றிருந்தபோதும் அறிந்துகொண்டேன்.
ஜெனி அக்காவைத் தொடர்ந்து செந்தில் அண்ணனும் துளசியும் விக்கியும் சந்தனம் பூசி குங்குமம் வைக்க, கடைசியாக வைரமணி வந்தாள். ‘டேய் அண்ணா, என்னை ஒருவாட்டியாவது அன்பா பாப்பான்னு கூப்படமாட்டியா?’, குறைந்தது நூறு தடவையாவது கேட்டிருப்பாள். நானோ அவளை வம்பிழுக்கும் நோக்கில் எப்போதும் ”அக்கா’’ என்று அழைப்பது வழக்கம். சட்டெனக் கடுப்பாகி, ‘உன்ன விட பத்து வயசு சின்னப் பொண்ணு நானு. என்னப் போய் அக்கான்னு கூப்புட்றபாரு, ஒழுங்கு மரியாதையா ஓடிடு’ என்பாள்.
இதை தன் மனத்திரையில் ஒருதடவை ஓட்டிப் பார்த்துக்கொண்டு, என்னை பழிவாங்க இதுதான் தக்க சமயம் என்று காத்திருந்தவளாய் மொத்த சந்தனத்தையும் அள்ளி என் முகத்தில் பூசிவிட்டு, அதில் மிஞ்சிய சந்தனத்தை கோமதியின் முகத்திலும் கையிலும் தடவிவிட்டு, எங்கே நான் எழுந்து அடிக்க வருவேனோ என பயந்து ஓடிவிட்டாள்.
உடனே ஜெனி அக்கா, ”இன்னும் ஒண்ணே ஒண்ணு மட்டும் இருக்கு தம்பி, அப்படியே உக்காந்திருங்க’’ என வேகமாக சமையலறைக்கு சென்று ஒரு டம்ளர் நிறைய பாலும், உடன் ஒரு வாழைப்பழத்தையும் எடுத்து வந்து பாலை முதலில் என்னிடம் நீட்டி, ”கோமதிக்கு ஊட்டிவிடுங்க தம்பி. அவங்க அப்புறம் உங்களுக்கு ஊட்டுவிடுவாங்க’’ என்றதும், ‘இது என்னடா வம்பாப் போச்சு?’ என நினைத்துக்கொண்டு கையில் வாங்கி ஊட்டிவிட்டேன். கோமதியும் அதேபோல் எனக்கு ஊட்டிவிட்டார்.
அடுத்து இன்னொரு கையில் வைத்திருந்த வாழைப்பழத்தை தந்து, ”இதையும் அதேமாரி’’ என்றதும், மெல்ல சிரித்துக்கொண்டு (இதை நாணம் என்றும் சொல்லலாம்!) வாங்கி இருவரும் மாறிமாறி ஊட்டிக்கொண்டோம்.
அதைப் பார்த்து மகிழ்ந்த ஜெனி அக்கா, ”அவ்ளோதான் தம்பி, இப்பதான் என் மனசுக்கு நிறைவா இருக்கு’’ என்றுவிட்டு, அப்படியே எங்களை எழுந்து வேறு இடத்தில் உட்காரச் சொல்லி, சற்று நேரம் முகம் கழுவாமல் இருக்குமாறு கேட்டுக்கொண்டு, லேசாக கண் கலங்கியவராய் அருகில் வந்து உட்கார்ந்தார்.
”சின்னப் புள்ள என்னைய போய் ஏதோ பெரிய புள்ளமாதிரி உணர வச்சிட்டீங்க தம்பி’’ என்றதும், என்ன சொல்வதெனத் தெரியாமல், ”அக்கான்னா சும்மாவாக்கா’’ என்று மட்டும் சொன்னேன்.
அதற்குள் வரும்வழியில் துளசியும், விக்கியும் வாங்கிவந்த இனிப்பு, காரம், பழங்களை எங்கள் முன்னால் வைத்து, அதில் இனிப்புப் பெட்டியைத் திறந்து ஆளுக்கொன்று எடுத்துத் தந்தார்கள்.
காலையில் தனியாக உணவகத்தில் உட்கார்ந்து சாப்பிட்ட இட்லியும் வடையும், அதன்பின் திருமணம் முடிந்து எல்லோரோடும் சேர்ந்து உண்ட பொங்கலும் அப்படியே இருந்தது. ‘சரி, நாம சாப்பிட்டாதான் எல்லாரும் சாப்பிடுவாங்க’ என நினைத்து ஒரு மைசூர்பாக்கை மட்டும் வாங்கி சாப்பிட ஆரம்பித்தேன்.
அதற்குள் அம்மாவிடமிருந்து அழைப்பு. எடுத்ததும், ”ஏன் இவ்ளோநேரம் ஒரு போன் கூட பண்ல? கல்யாணம்லாம் நல்லபடியா முடின்ச்சில்ல?’’ என ஒவ்வொன்றாக கேட்டுத் தெரிந்துகொண்டார்.
சற்றுநேரத்தில் செந்தில் அண்ணனின் மனைவி (எனக்கு அண்ணி) அண்ணனுக்கு அழைத்து திருமணம் குறித்து கேட்டுவிட்டு என்னிடம் தரச்சொல்ல, வாங்கிப் பேசினேன்.
அண்ணியும் அவரது இரு மகன்களும் (அதில் இளையவனுக்கு அன்று பிறந்தநாள்) வாழ்த்து சொல்லிவிட்டு, ”வரணும்னு அவ்ளோ ஆச தம்பி. ஒடம்பு கொஞ்சம் முடியல, அதான் அண்ணன மட்டும் அனுப்பி வச்சோம்.’’ என்றதும், என்னையறியாமல் கண் கலங்க ஆரம்பித்துவிட்டேன்.
மெல்ல அங்கிருந்து எழுந்து என் அறைக்கு வந்து தனியாக உட்கார்ந்து ஏதேதோ யோசிக்க ஆரம்பித்தேன்.
யார் இவர்கள்? எதற்காக என் மீது இவ்வளவு அன்பு காட்டுகிறார்கள்? எவ்வகையிலும் சொந்த பந்தம் இல்லாதவர்கள் ஏன் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னிடம் இப்படிப் பழகுகிறார்கள்? தம்பியாக, அண்ணனாக, நண்பனாக, இத்தனைக்கும் மேலாக தம் குடும்பத்தில் ஒருவனாக நினைக்கும் அளவுக்கு இவர்களுக்கு நான் என்ன பெரிதாக செய்துவிட்டேன்? தேவைக்குப் பழகும் கூட்டத்துக்கு நடுவில் எப்படி எனக்கான இவர்களை சம்பாதித்தேன்?
”என்ன தம்பு இங்க வந்து தனியா உக்காந்துட்ட?’’ செந்தில் அண்ணன் கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார். ”இல்லண்ணா சும்மாதான்’’ என்றேன்.
”ஐயா, அம்மா கூட இல்லையேன்னு வருத்தப்படாத. அவங்க கூட இல்லைனாலும், உன்னையேதான் நெனச்சினு இருப்பாங்க’’ என்று சொன்னபடி பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.
சற்றுநேரம் என்னுடன் பேசிக்கொண்டிருந்தவர், விக்கியை கூட்டிக்கொண்டு போய் ரயில் நிலையம் அருகில் உள்ள உணவகத்தில் எழுவருக்கும் மதிய உணவு வாங்கி வந்தார்.
ஜெனி அக்கா பரிமாற அனைவரும் வட்டமாக சுற்றி உட்கார்ந்து கதைகள் பேசிக்கொண்டு மகிழ்வோடு சாப்பிட்டோம். உண்மையில் கொஞ்சம் கூட யாருக்கும் பசி இல்லை. இருந்தாலும் நேரமாகிவிட்டதால் சாப்பிட வேண்டுமே என ஆரம்பித்தோம். ஒன்றாக சூழ உட்கார்ந்து கதைகள் பேசிக்கொண்டு சாப்பிட்டதில் எல்லோரும் நன்றாகவே சாப்பிட்டோம்.
பின் ஜெனி அக்கா எங்கள் நால்வரையும் சற்றுநேரம் படுத்து ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு கோமதியையும் வைரமணியையும் இன்னோர் அறைக்கு கூட்டிப்போனார்.
எவ்வளவு படுத்து கண்களை மூடியும் உறக்கம் வரவில்லை. எழுந்து உட்கார்ந்து சுவரில் சாய்ந்துகொண்டு காலை எழுந்தது முதல் நடந்த ஒவ்வொரு நிகழ்வையும் உளத்திரையில் மெல்ல ஓட்டிக்கொண்டிருந்தேன்.
விரும்பியவாறு வாழும் வாழ்க்கை நம்மில் எத்தனை பேருக்கு வாய்க்கிறது? அதுவும் திருமண விஷயத்தில் பட்ட அல்லல்களை நண்பர்கள் பலர் அழாத குறையாக சொல்லக் கேட்டிருக்கிறேன். சிலரது கண்டும் இருக்கிறேன்.
நினைத்துப் பார்க்கிறேன், எப்போது நினைத்தாலும் இனிக்கும்படி நடந்து முடிந்த எங்கள் திருமணத்தையும், அதன் பின்னான நிகழ்வுகளையும். அதிலும் கோமதியிடம் ‘என்ன சொல்லப்போகிறாரோ?’ எனும் கேள்வியோடு, ”எல்லாரப் போல இல்லாம, நாம இப்படி திருமணம் செய்தா என்ன?’’ என்று சொன்னதும், எவ்வித எதிர்ப்பும் கூறாமல் சில நொடிகளே யோசித்துவிட்டு, ‘’நல்லாருக்கே” என சம்மதித்ததை நினைத்து இப்போதும் வியக்கிறேன்.
சட்டென ”தம்பி’’ என ஜெனி அக்கா கூப்பிடும் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.
”ஓய்வெடுக்காம என்ன பண்றீங்க தம்பி?’’, சொன்னேன்.
”எழுந்து கொஞ்சம் இங்க வாங்க தம்பி’’ எனக் கூட்டிப்போனவர், கதவருகில் உட்காரச்சொல்லி, ”எதப் பத்தியும் யோசிக்காதீங்க தம்பி. எல்லாம் உங்க மனசப்போல, ஐயாவோட ஆசியோட நல்லபடியா நடந்து முடிஞ்சது. எல்லாரும் ஏன்ச்சதும் பக்கத்துல இருக்க திருநீர்மலை கோயிலுக்கு போய் வரலாம். கல்யாணம் முடிஞ்சதும் ஒரு கோயிலுக்கு போகணும், அப்புறம் ஒரு கல்யாணத்துக்குப் போகணும்னு சொல்வாங்க. நாம இன்னைக்கு கோயிலுக்குப் போவோம்’’ என்றார். மெல்ல தலையாட்டி, ”சரிக்கா’’ என்றேன்.
மணி சரியாக மாலை நான்கரை இருக்கும். வீட்டிலிருந்து இரு ஆட்டோக்களில் ஐந்து கிலோமீட்டர் தாண்டியுள்ள திருநீர்மலைக்கு புறப்பட்டோம். சென்று மலையடிவாரத்தில் உள்ள தேநீர்க் கடையில் ஆளுக்கொரு தேநீர் குடித்துவிட்டு, கீழே உள்ள நீர்வண்ணப் பெருமாள் கோயிலுள் சென்று முதலில் தரிசித்துவிட்டு, பின் மலைமீது ஏற ஆரம்பித்தோம்.
படியின் இருமருங்கிலும் நிறைந்திருக்கும் வெப்பாலை மரங்களையும், வேப்ப மரங்களையும், பிரண்டை ஓணான் கொடிகளையும் கோமதிக்கும் ஜெனி அக்காவுக்கும் காட்டி, வெப்பாலை மரத்தின் அருமை பெருமைகளை ஒவ்வொன்றாக சொல்லிவிட்டு, அது அக்கோயிலின் தலமரமாக இருக்கும் தகவலையும் பகிர்ந்தேன்.
அதுமட்டுமல்ல… பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 62-வது திவ்ய தேசம் இதுவென்றும், இத்தலத்தில் வேறெங்கும் இல்லாத வகையில் பெருமாளின் நான்கு கோல தரிசனம் (நீர்வண்ணப் பெருமாள் – நின்ற கோலம்; ரங்கநாதப் பெருமாள் – சயனக் கோலம்; உலகளந்த பெருமாள் – நடந்த கோலம்; நரசிம்மப் பெருமாள் – இருந்த கோலம்) காணலாம் என்றும், அதிலும் குறிப்பாக இங்குள்ள நரசிம்மப் பெருமாள் சாந்த ரூபியாக காட்சி தருவது கூடுதல் சிறப்பென்றும் சொல்லிவிட்டு,
இவ்வொரு கோயிலில் வந்து நாம் வழிபடுவதால் நாச்சியார் கோயில், திருவாலி, திருக்குடந்தை, திருக்கோயிலூர் போன்ற நான்கு திவ்ய தேசக் கோயிலை வழிபட்ட பலனையும்… திருவரங்கம், திருப்பதி போன்ற பெரும் தலங்களை சென்று வணங்கிய பயனையும் அடையலாம் என்று ஆழ்வார்களில் திருமங்கையாழ்வாரும், பூதத்தாழ்வாரும் குறிப்பிட்டுள்ள தகவலையும் சொன்னேன்.
பேசிக்கொண்டு செய்தால் கடினமான எவ்வேலையும் சுலபமான ஒன்றாக மாறிவிடும் என்பார்கள். அதிலும் குறிப்பாக மலைகள் மீது ஏறும்போது பேசியபடி ஏறினால் எவ்வளவு பெரிய மலையையும் மிக எளிதில் சிரமமின்றி ஏறிவிடலாம். அதனால் அதிகம் மலையில் ஏறிடாத இருவரிடமும் எனக்குத் தெரிந்த தகவல்களை ஒவ்வொன்றாக சொல்லியபடி மலைமேல் கூட்டிவந்தேன்.
அங்குள்ள ரங்கநாதர், உலகளந்த பெருமாள், நரசிம்மர் மூவரையும் வணங்கிவிட்டு, கோயிலை மெல்ல வலம் வந்தோம். பின் சற்றுநேரம் முன்புள்ள படிக்கட்டில் உட்கார்ந்து குடதிசை செவ்வானத்தையும், அதில் ஆங்காங்கே தீட்டிய ஓவியம்போல் மிதக்கும் மேகக் கூட்டங்களையும் நடுநடுவில் பார்த்து ரசித்துக்கொண்டு, சுற்றிலும் தெரியும் நிலங்களையும் மலைகளையும் கட்டிடங்களையும் அரைகுறையாகப் பார்த்துக்கொண்டு சற்று வேகமாகவே கீழே இறங்கி வந்தோம்.
சரியாக அந்நேரம் பார்த்து பல்லாவரம் வரை செல்லும் அரசுப் பேருந்து வந்து நிற்க, அதில் ஏறி விட்ட இடத்திலிருந்து கதைகள் பேசிக்கொண்டு பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தோம்.
நேரம் முன்னிரவு ஏழாக இன்னும் எட்டு நிமிடம் இருந்தது. துளசி ஒருபக்கமும், விக்கியும் வைரமணியும் இன்னொரு பக்கமும் புறப்பட்டுச் சென்றார்கள். செந்தில் அண்ணனை மின்சார ரயிலில் ஏற்றிவிட்டு, ஜெனி அக்கா மட்டும் எங்களோடு வீட்டுக்கு வந்தார்.
இரவு ஒன்பது மணி வரைக்கும் எங்களுடன் பேசிக்கொண்டு இருந்தவர் புறப்படும்போது, ”தம்பி எதப்பத்தியும் கவலப்படாம சந்தோசமா இருங்க, நாங்க இருக்கோம். இப்போ போல எப்போவும் உங்கக்கூட இருப்போம்’’ எனச் சொல்லிவிட்டு, போக மனமின்றி ஆதம்பாக்கத்தில் உள்ள தம்வீட்டுக்கு கிளம்பிப்போனார்.
‘தம்பி எதப்பத்தியும் கவலப்படாம சந்தோசமா இருங்க, நாங்க இருக்கோம். இப்போ போல எப்போவும் உங்கக்கூட இருப்போம்’
ஜெனி அக்கா சென்று வெகுநேரமாகியும், அவர் சொல்லிவிட்டுப் போன வார்த்தைகளும், குரலும் மட்டும் என்னுள் கேட்டுக்கொண்டே இருந்தது. ஆம்! அப்போது மட்டுமல்ல; இதை எழுதும் இப்போதும்தான்!
[இன்னும்]
*