எங்க கல்யாணம் – 1

ஏப்ரல் 15, 2021

**

திருமணமாகி எங்களுக்கு இன்றோடு சரியாக ஒருமாதம் ஆகிறது. நினைத்துப் பார்க்கிறேன். சாதி, மதம், சடங்கு, சம்பிரதாயம், சட்டம் போன்ற யாவற்றையும் மறுத்து மனத்துக்குப் பிடித்தவாறு அதுவும், விரும்பிய வண்ணம் இதுவரை இல்லாத புதுமுறையில் திருமணம் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

அதுவும் பெண் வீட்டார் முற்றிலும் எதிர்க்க, அதற்கு அவர்கள் சாதியை முதன்மைக் காரணமாக சொல்ல, எதிர்த்து எங்கும் ஓடிப்போய் தலைமறைவாகாமல், அவர்களிடம் இடத்தையும் நேரத்தையும் சொல்லிவிட்டு திருமணம் செய்துகொள்வது கத்தி மேல் நடந்து காட்டாற்றைக் கடப்பது போலத்தான். ஆம்!

அன்றிரவு கடந்தால் எங்கள் திருமணம். அதுவும் மிகச் சில அன்பர்கள் சூழ, ஒருவரும் நினைத்துப்பார்க்காத சென்னையின் மையப்பகுதியில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் வள்ளுவரை சாட்சியாக வைத்து, மிக மிக எளிய முறையில் ‘இப்படிக் கூட ஒரு திருமணம் நடத்த முடியுமா?’ எனப் பலரும் கேட்கும் வண்ணம் எங்கள் திருமணத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தோம்.

என் சார்பாக நான் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கும் பதினைந்து பேரை அழைத்திருந்தேன். கோமதி சார்பாக தன் தாய் தந்தையரையும், உறவினர் இருவரையும், தோழிகள் இரண்டு பேரையும் அழைத்திருந்தார். என் ஐயாவிடமும், அம்மாவிடமும் முன்னமே ஊருக்குச் சென்றிருந்தபோது விரைவில் நான் திருமணம் செய்யப் போவதாகச் சொல்லி அனுமதி பெற்றிருந்தேன். அதனால் இரு தினங்களுக்கு முன்பு அழைத்து சொல்லிவிட்டு, உடன் பிறந்த அண்ணன்கள் நால்வருக்கும், அக்காவுக்கும் தனித்தனியாக முன்தினம் காலைமுதல் கூப்பிட்டு தகவல் சொன்னேன்.

அக்கா மட்டும் கண்கலங்கி அழுதபடி, ”நான் வரன்டா தம்பி..” என்றார். ”இல்லக்கா வேணாம். வந்தா எல்லாரும் வரணும், நீ மட்டும் வந்தா நல்லாருக்காது” என சொல்லி வரவேண்டாம் என்றேன்.

இரவு உணவு முடித்துவிட்டு சற்றுநேரம் என் அறை முன்புள்ள மொட்டைமாடியில் மெல்ல நடந்து, தூரத்தில் மின்னொளியில் தெரியும் வள்ளுவர் கோட்டத் தேரை பார்த்தபடி அடுத்தநாள் அங்கு நடக்கப்போகும் எங்கள் திருமணம் பற்றி திரும்பத் திரும்ப நினைத்துக்கொண்டிருந்தேன்.

பனி லேசாக இறங்க ஆரம்பித்ததை தொட்டுப்போகும் சில்காற்று கூட்டிக்காட்டிப் போனது. அளவுகடந்த மகிழ்ச்சி ஒருபக்கம். தேவையற்ற பதற்றம் மறுபக்கம். உடல் உறக்கத்தை விரும்பினாலும் மனம் விரும்பாமல் அடுத்தநாள் நடக்கப்போகும் நிகழ்வையே கண்முன் காட்சியாக விரித்து ஓட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது.

பதினோரு மணி இருக்கும் ஜெனி அக்காவிடமிருந்து அழைப்பு. சட்டென எடுத்ததும், ”இன்னும் தூங்கலையா தம்பி?’’ என்றார். ”இல்லக்கா தூக்கம் வரல’’ என்றேன். ”எனக்கும்தான் தம்பி” என்றவர், மறுநாள் காலையில் சரியாக ஏழு மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள என் அறைக்கு வந்துவிடுவதாகவும், கோமதியோடு சேர்ந்து காலை உணவு சாப்பிட்டுவிட்டு அவரை தயார் செய்து வள்ளுவர் கோட்டத்திற்கு கூட்டிவருவதாகவும், அங்கு தான் செய்யப்போகும் வேலைகளையும் ஒவ்வொன்றாக வரிசைப்படி சொல்லி முடிக்கையில் கடைசி அண்ணனிடமிருந்து அழைப்பு வந்தது.

அக்காவிடம் பிறகு அழைப்பதாக சொல்லிவிட்டு அண்ணனின் அழைப்பை எடுத்தேன். ”மெட்ராஸ்ல எங்க கல்யாணம் வச்சிருக்க? வரணும் போல இருக்கு. ஆனா, வந்தன்னா தூரமா நின்னுப் பாத்துட்டு வந்துருவன். ஒன் முன்னால வரமாட்டன்’’ என்றான் (என் கடைசி இரு அண்ணன்களையும் எப்போதும் வாடா, போடா என்றே  அழைப்பேன்.)

இடத்தையும், நேரத்தையும் சொல்லி எவ்வளவு சமாதானப்படுத்தியும் கேட்காமல் அழைப்பைத் துண்டித்துவிட்டான். திரும்பவும் அழைத்தேன்; அணைக்கப்பட்டிருந்தது. சரியென எழுந்துபோய் தண்ணீர் குடித்துவிட்டு வந்து படுத்ததுதான் தெரியும், ஒரு வாரமாக சரிவர ஓய்வின்றி அலைந்த அசதியில் சட்டென உறங்கிவிட்டேன்.

சரியாக காலை ஐந்துமணி இருக்கும். விழிப்பு வந்து கண்களைத் திறக்க, ஜன்னல் வழியாகத் தெரிந்த லேசான வெளிச்சம் பொழுது புலரப்போவதை உரைத்தது. அருகில் புத்தகத்தின் மீது வைத்திருந்த நகர்பேசியை எடுத்துப் பார்த்தேன். நேரம் ஐந்தாக இன்னும் இரண்டு நிமிடம் இருந்தது. சரி, மெல்ல குளித்துக் கிளம்புவோம் என எழுந்து கதவைத் திறந்து வெளியில் வந்தேன்.

விடிவானம். குளிர் காற்று. இரைந்து கிடக்கும் நட்சத்திரக் கூட்டம். பட்சிகளின் மெல்லொலி. மனம் எதிலும் ஒன்றாமல் ஏதேதோ யோசிக்க ஆரம்பித்தது.

எங்கிருந்து வந்தது இந்த சாதி? பெற்ற பிள்ளைகளைவிட, அவர்களின் விருப்பத்தைவிட, வாழ்வைவிட பெரிதாய் நினைக்கும் அளவுக்கு எந்தவிதத்தில் முக்கியமாய்ப் போனது இச்சாதி? இத்தனைக்கும் என்னிடம் ஒருவார்த்தைகூட பேச கோமதியின் அம்மாவும், அப்பாவும் கடைசிவரை தயாராய் இல்லை என்பதை எப்படி எடுத்துக்கொள்வது?

கிழக்கே மின்னொளியில் மிளிரும் வள்ளுவர் கோட்டத் தேர் எங்கள் திருமண நிகழ்வுக்காக அன்று கூடுதலாக ஒளிர்வதுபோல் இருந்தது. அடுத்த அரைமணி நேரத்தில் குளித்துக் கிளம்பி ஊரிலுள்ள ஐயாவையும், அம்மாவையும் மனதார நினைத்துக்கொண்டேன் (நினைத்துக்கொண்டேன் எனச் சொல்வதைவிட வணங்கிக்கொண்டேன் என்பதே சரியாக இருக்கும்). நிச்சயம் அவர்களும் என்னை இந்நேரம் நினைத்துக் கொண்டிருப்பார்கள் என்பதை உள்ளூர என்னால் உணர முடிந்தது.

வானம் மேலும் வெளுத்து சூரியன் உதயமாகி வரப்போகும் அறிகுறி தெரிந்தது. எழுந்து வெளியில் போய் நின்று வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். கண்கள் வானத்தைப் பார்த்தாலும் மனம் அடுத்த சில மணி நேரத்தில் நடக்கப்போகும் திருமண நிகழ்வு பற்றியே பதற்றத்துடன் நினைத்துக் கொண்டது. அதுவும், நினைத்ததுபோல் எவ்வித இடையூறுமின்றி நன்முறையில் நடக்கவேண்டும் என்பதை ஒரு மந்திரம்போல் இடைவிடாது திரும்பத் திரும்ப மென்குரலில் சொல்லிக்கொண்டது.

ஒருவரது வாழ்வில் திருமணம் என்பது எத்தனை முக்கியமான நிகழ்வு. அதுவும் ஒரே ஒருதடவை நடக்கப்போகும் நன்நிகழ்வு. அதனால் தன் திருமணம் இவ்வளவு செலவில் இப்படி நடக்க வேண்டும், ஊரே வியக்கும் அளவுக்கு ஆடம்பரமாக அப்படி நடக்கவேண்டும் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் ஆசைப்படுவார்கள், கனவு காண்பார்கள்.

ஆனால் நாங்களோ பத்திரிகை அடிக்காமல், பந்தல் போடாமல், ஊரை கூட்டாமல், மேள தாளம் என எதுவும் இல்லாமல் மனத்துக்கு பிடித்தபடி, அதுவும் உலகில் இதுவரை யாரும் செய்யாத புதுமுறைப்படி செய்ய நினைத்தது பலருக்கும் விந்தையாகப் பட்டிருக்கும். ஐயா மட்டும் கேட்ட சில நொடிகளில் என் விருப்பத்தையும், அதில் பொதிந்துள்ள ஆழமான அர்த்தத்தையும் புரிந்துகொண்டு, ”ஆமா, நீ சொல்றதான் சரி. ஒன் விருப்பப்படியே பண்ணு’’ என்றது, நினைக்கும்தோறும் வியத்தக்கூடியது.

மெல்ல மேகத்திறள்களுக்குப் பின்னிருந்து கதிரவன் அன்றலர்ந்த மலர்போல் கூடுதல் ஒய்யாரத்துடன் வெளிவரக் கண்டு உள்ளம் சிறகுவிரிக்க ஆரம்பித்தது. ஏதோ தனக்காகவே இன்று சூரியன் உதிப்பதாய் எண்ணிக்கொண்டது. அதுமட்டுமல்ல… இதுநாள்வரை கண்ட சூரிய உதயங்களைக் காட்டிலும் பலமடங்கு அழகானது என்றும் நினைத்துக் கொண்டது. ஆம்!

சட்டென அறைக்குள் இருந்த நகர்பேசி ஒலிக்கக் கேட்டு ஓடிப் போய் எடுத்தேன். கோமதி, ”இன்னும் கால்மணி நேரத்தில் வந்துடுவேன்” என்றார். வைக்கப்போகும் முன்பே ஜெனி அக்கா கூப்பிட்டு, ”தம்பி வீட்டிலேயிருந்து கிளம்பிட்டேன். இன்னும் முப்பது நிமிஷத்துல அங்கே இருப்பேன்’’ என்றார்.

அறைக்கு வெளியே உள்ள திண்ணையில் உட்கார்ந்து… திருவண்ணாமலை மாவட்டத்தின் தென் பகுதியில் எங்கோ ஒரு மூலையில் உள்ள சிறுகிராமத்தில், விவசாயக் கூலிக் குடும்பத்தில் கடைசி மகனாகப் பிறந்து வளர்ந்து, பெரும் கனவோடு முதல் தலைமுறைப் பட்டம் படித்து, இந்தியாவின் தலைசிறந்த கல்லூரியில் முதுகலை முடித்து எழுத்தை வாழ்வாகத் தேர்ந்தெடுத்து கடந்துவந்த பாதைகளையும், எதிர்கொண்ட போராட்டங்களையும் ஒவ்வொன்றாக நினைத்துப்பார்த்தேன்.

கோமதி வந்ததும் அறையில் உட்கார வைத்துவிட்டு, பக்கத்துத் தெருவில் உள்ள உணவகத்துக்குப் போய் நான்கு இட்லி ஒரு வடை சாப்பிட்டுவிட்டு, ஜெனி அக்காவுக்கும் கோமதிக்கும் ஆளுக்கு நான்கு இட்லியும், வடையும் பார்சல் வாங்கிக்கொண்டு வந்து அறைக்குள் நுழைந்தேன்.

சரியாக அந்நேரம் ஜெனி அக்கா பக்கத்துத் தெருவில் வந்து வழிதெரியாமல் அழைக்க, கீழே இறங்கிப் போய் கூட்டிவந்து அறையில் விட்டுவிட்டு, மாலையும் இணையேற்பு உறுதிமொழி சான்றிதழும் வைத்துள்ள பையை எடுத்துக்கொண்டு வள்ளுவர்கோட்டம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

கோமதி, 2016 ஏப்ரல் 12 ஆம் தேதி மாலை முதன்முதலில் எனக்கு அறிமுகமானது. அடுத்த இரு மாதத்தில் வந்த என் பிறந்தநாளுக்கு அழைத்து வாழ்த்து சொல்வதற்குப் பதிலாக தன் காதலைச் சொன்னது. உருகி மருகி என்னை துரத்தித் துரத்திக் காதலித்தது. எவ்வளவு மறுத்தும், அவமானப்படுத்தியும் தன் காதலை மாற்றிக்கொள்ளாதது. என் சிறு அசைவினையும் மனத்துள் சேர்த்துவைத்து ரசித்தது. எனக்காக, என்மேல் கொண்ட காதலுக்காக தன் மொத்த குடும்பத்தையும், சொந்தங்களையும் எதிர்த்து தனியொருத்தியாக உறுதிபட நின்றது. நான்கரை ஆண்டுகளில் கல்லென இருந்த எனக்குள் நுழைந்து என்னையும் காதல் சொல்ல வைத்தது… யாவும் ஒன்றன்பின் ஒன்றாக மனக்கண்ணில் வந்துவந்து போனது.

வள்ளுவர் கோட்டம் முன்தினம் போல் இல்லாமல் சரியான நேரத்தில் திறந்திருந்தது. சில நொடிகள் அதன்முன்னால் நின்று, இரும்புக் கம்பிகளுக்கிடையில் தெரியும் வள்ளுவத் தேரை பார்த்து இன்னும் ஒருமணி நேரத்தில் அதனருகே நடக்கப்போகும் எங்கள் திருமணம் அதுவும், எனக்கானவர்கள் சூழ நினைத்துப் பார்த்தேன்.

சட்டென கிளிகளின் கீச்சொலி கேட்டு மேலே அண்ணாந்து பார்க்க, ஆலமரத்தின் எதிரெதிர் கிளைகளில் உட்கார்ந்திருந்த இரு கிளிகள் ஒன்றைப் பார்த்து ஒன்று பேசிக்கொள்வதுபோல் கத்திக்கொண்டிருந்தது. உள்ளுக்குள் எங்கள் திருமண நிகழ்வை அங்குள்ள மற்ற பறவைகளுக்கும், மரம் செடிகொடிகளுக்கும் போட்டி போட்டுக்கொண்டு அறிவிப்பதாக எண்ணிக்கொண்டேன்.

அடுத்த நிமிடம் என்ன நடக்கப்போகிறது எனத் தெரியாத வாழ்வே என் பொறுத்தவரை அழகிய அர்த்தமுள்ள வாழ்வென நினைப்பவன் என்றாலும், கூடுதல் பதட்டமாகவே இருந்தது. என் பதட்டத்திற்கு இரு காரணங்கள். ஒன்று, வள்ளுவர் கோட்டத்தில் திருமணம் செய்ய அனுமதி பெறாதது (ஒருவேளை அனுமதி கேட்டிருந்தாலும் தரப்போவதில்லை. அப்படியே தருவதாக இருந்தாலும் ‘அவரைப் பார், இவரைப் பார்’ என நான்கைந்து மாதங்கள் அலையவிட்டு, கடைசியில் பல ஆயிரங்கள் கேட்டிருப்பார்கள் என்பது நன்கு தெரிந்த கதை என்பதால் அவ்வீண் முயற்சியில் ஈடுபடவில்லை.). இரண்டு, கோமதி வீட்டார் யாரேனும் வந்து பிரச்சனை செய்து திருமணத்தை தடுக்கக்கூடும்.

வள்ளுவர் கோட்டம் கட்டி முடித்து சரியாக நாற்பத்தைந்து ஆண்டுகள் ஆகிறது. சென்னையின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றிது. பல லட்சம் பேரின் பாதம் பட்ட இடம். வள்ளுவரின் மொத்த குறட்பாக்களையும் அழகுற தாங்கி நிற்பது. இன்னும் பல பெருமைகளுக்குச் சொந்தமானது. இருந்தபோதும் இத்தனை ஆண்டுகளில் ஒரு திருமணத்தையும் கண்டிராதது. அதுவே பெருமகிழ்வைத் தந்தாலும், கூடவே அதற்கும் மேலான பதட்டத்தையும் தந்தது. ஆம்!

மெல்ல அங்கிருந்து நடந்து இடதுபக்கம் திரும்பி, வள்ளுவர் கோட்ட சுற்றுச்சுவர் ஒட்டிய நடைபாதை வழியாக பேருந்து நிறுத்தத்தருகே சாலையை கடந்து மறுபக்கம் சென்று அங்குள்ள இருக்கையில் போய் உட்கார்ந்தேன்.

நான்குபேர் என் அருகில் உட்கார்ந்தும், ஏழெட்டு பேர் நின்றும் பேருந்துக்காக காத்திருந்தார்கள். நான் மட்டும் கையில் மாலையையும், சான்றிதழையும் வைத்துக்கொண்டு என் திருமணத்திற்கு வரப்போகும் அன்பர்களுக்காகக் காத்திருந்தேன்.

ஐயாவும் அம்மாவும் ஊரில் இந்நேரம் என்ன நினைத்துக் கொண்டிருப்பார்கள்? அண்ணன்களும் அக்காவும் சட்டென அழைத்து நான் நாளை திருமணம் செய்யப் போவதாக சொன்னதை எப்படி எடுத்துக்கொண்டிருப்பார்கள்? கோமதி வீட்டிலிருந்து யாராவது வருவார்களா? வந்தால் என்ன சொல்வார்கள், செய்வார்கள்? இப்படி ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில், முன்னால் வந்து நின்ற செந்நிற மாநகரப் பேருந்திலிருந்து இறங்கி நண்பர்கள் ராமுவும், விக்கியும் வந்தார்கள்.

என்னை அங்கே சற்றும் எதிர்பார்க்காத விக்கி, ”என்ன கல்யாண மாப்பிள சார் பஸ்டாப்புல உக்காந்திருக்காரு?’’ என்றார் சிரித்துக்கொண்டு. என்ன சொல்வதெனத் தெரியாமல் மெல்ல சிரித்தபடி, ”உங்களுக்காகத்தான்” எனச் சொல்லி அவர்களை கூட்டிப் போய் அருகிலுள்ள உணவகத்தில் சாப்பிடவைத்து, நான் ஒரு தேநீர் மட்டும் குடித்துவிட்டு வள்ளுவர் கோட்டத்துக்குள் அழைத்துப்போனேன்.

முதல் தடவையாக ஒன்பதாம் வகுப்பு படிக்கையில் வந்தது. அதுவும், எங்கள் அரசுப் பள்ளியிலிருந்து சுற்றுலா கூட்டிவந்திருந்தார்கள். அதன்பின் லயோலாவில் படிக்கும்போதும், விகடனில் வேலை பார்க்கும்போதும் ஓரிரு தடவை வந்திருக்கிறேன். கடந்த நான்காண்டுகளாக அருகில் நான்கு தெரு தள்ளியுள்ள காமராஜபுரத்தில் குடியிருக்கும்போது ஐந்தாறு தடவை வந்திருப்பேன். அவ்வளவுதான். 

உள்ளே சென்று அங்குள்ள வேப்ப மரத்தடியில் நின்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். அடுத்த பத்து நிமிடங்களில் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். வரவேற்று ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்தேன். அடுத்த ஐந்து நிமிடத்தில் நான் பெரிதும் மதிக்கும் நண்பர்கள் கவிஞர் ரவிசுப்பிரமணியன் சாரும், ‘கோபுடோ’ கிருஷ்ணமூர்த்தி சாரும் வந்தார்கள். பின்னாலேயே ஜெனி அக்காவும், கோமதியும் வந்தனர்.

கால்சட்டை பையிலிருந்த நகர்பேசியை எடுத்து நேரம் பார்த்தேன், 9:25. நேரம் நெருங்க நெருங்க மனம் இன்னும் பதட்டமானது. எவ்வளவு முயற்சித்தும் கட்டுப்படுத்த முடியவில்லை. திட்டம் இதுதான். சரியாக ஒன்பது முப்பதுக்குள் அனைவரும் வந்துவிட, ஒவ்வொருவராக வள்ளுவர் கோட்டத்தின் மேற்பகுதியில் உள்ள தேர் முன்பு கூடி, அதனுள் உள்ள திருவள்ளுவர் சிலை முன்னால் நின்று, இணையேற்பு உறுதிமொழி சான்றிதழ் வாசித்து, அதில் இருவரும் கையொப்பமிட்டு, மாலை மாற்றி, தாலி அணிவித்து திருமணம் செய்துகொள்வது.

நினைத்ததுபோல் யாவரும் வந்துவிட, ஒவ்வொருவராக மேலே செல்ல ஆரம்பித்தோம். சரியாக அங்குள்ள தேர் முன்பு போய் நின்று,

‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது’

எனும் வள்ளுவரின் குறளோடு தொடங்கும் இணையேற்பு உறுதிமொழியை வாசித்து, அதில் நாங்கள் இருவரும் கையொப்பமிட்டு, பனையோலையில் செய்த மாலையை மாற்றிக்கொண்டோம். பின் கவிஞர் ரவிசுப்பிரமணியன் சார் தங்கத்தால் செய்த ‘அ’கரம் பதித்த தாலியை எடுத்துக் கொடுக்க, மகிழ்வுடன் பெற்றுக்கொண்டு வள்ளுவரை வணங்கி அவர் சாட்சியாக மிகச் சில அன்பர்களின் வாழ்த்தொலி முழங்க கோமதியின் கழுத்தில் அணிவித்தேன்.

வள்ளுவர் மட்டுமல்ல… அவரோடு சேர்ந்து தமிழ்த்தாய் தொடங்கி, நாஞ்சில் நாடன் வரை. கபிலர், ஒளவை, கணியன் பூங்குன்றனார், தொல்காப்பியர், இளங்கோவடிகள், சேக்கிழார், கம்பர்… என நீள்பெருந்தமிழ்ப்படை சூழ நின்று வாழ்த்துப்பா பாடி மலர்தூவி எங்களை வாழ்த்தியதாக உணர்ந்தேன். ஆம்!

நாங்கள் நினைத்ததைவிட பலமடங்கு அழகாக எங்கள் திருமணம் நடந்து முடிந்தது. அதுவும் எவ்வித இடையூறுமின்றி. நினைத்து நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்தேன். சொல்ல வார்த்தையின்றி புன்னகையால் பகிர்ந்தேன்.

ஐயாவும் அம்மாவும் அருகில் இருந்திருந்தால் என்னைவிட பெரிதாக மகிழ்ந்திருப்பார்கள். அதுவும் சொந்த பந்தங்கள் இன்றி, யாதொரு எதிர்பார்ப்புமற்ற நண்பர்களும், நலம் விரும்பிகளும் தம் வீட்டுத் திருமணமாய் நினைத்து மகிழ்வுடன் கலந்துகொண்டு சூழ்ந்து நின்று வாழ்த்தியதைப் பார்த்து வியந்திருப்பார்கள்.

நண்பர்கள் நால்வரை அழைத்து வந்திருந்த அனைவரையும் வெளியில் பேருந்து நிறுத்தத்தின் அருகே உள்ள உணவகத்திற்கு கூட்டிப் போய் அவர்கள் வேண்டுவதை சாப்பிட வைக்கச் சொன்னேன். அவர்களும் அவ்வாறே அழைத்துப்போய் சாப்பிட வைத்தார்கள். பின்னாலேயே நாங்களும் போய் அவர்களுடன் இணைந்துகொண்டோம். மனநிறைவோடு ஒவ்வொருவரும் வந்து மீண்டுமொரு தடவை வாழ்த்து சொல்லிவிட்டு விடை பெற்றார்கள்.

நான், கோமதி, ஜெனி அக்கா, செந்தில் அண்ணன், வைரமணி, விக்கி, துளசி எழுவர் மட்டும் அங்கிருந்து புறப்பட்டு பல்லாவரத்தில் உள்ள எங்கள் வீட்டுக்கு வந்தோம்.

வழிநெடுக கனவு போல், கவிதைபோல் அவ்வளவு அழகாக நடந்துமுடிந்த எங்கள் திருமணம் பற்றியே நினைத்துக்கொண்டும், பேசிக்கொண்டும் வந்தோம். அதுவும் வந்தவர்களில் அதிகமானோர் சொன்ன, ”இவ்ளோ அழகா ஒரு கல்யாணம், நெனச்சிக் கூட பாக்கல வடிவு’’ என்ற வார்த்தைகள், திரும்பத் திரும்ப என் காதுகளில் ஒலித்தது.

சென்னை விமான நிலையம் கடந்து இடது பக்கம் திரும்பி, பல்லாவரம் வெள்ளிக்கிழமை சந்தை சாலை வழியாக ரயில்வே மேம்பாலம் ஏறி இறங்கி, மீண்டும் இடதுபக்கம் திரும்பி டாக்டர் சாலமன் தெருவுக்குள் நுழைந்து எங்கள் இல்லம் முன்பு வந்து காரிலிருந்து இறங்கினோம்.

ஜெனி அக்காவும், செந்தில் அண்ணனும் எங்கள் இருவரையும் வாசலிலேயே நிற்கச்சொல்லி போனவர்கள், கீழ்வீட்டு எதிர்வீட்டு அம்மாக்களை கூப்பிட்டு, ”எங்கத் தம்பி புதுசா கல்யாணம் பண்ணி வந்திருக்கான். பத்தரமா பாத்துக்கோங்க. உங்கள நம்பித்தான் விட்டுட்டு போறோம்’’ என்று அன்பொழுக சொல்லி கூட்டிவந்து, நாங்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைத்துப்போனார்கள்.

கோமதியிடம் தீப்பெட்டியை நீட்டி பூஜையறையில் வைத்திருந்த காமாட்சி அம்மன் விளக்கை ஜெனி அக்கா ஏற்றச்சொன்னது சட்டென அம்மாவை நினைவு படுத்த, கண்கள் இரண்டும் என்னையறியாமல் லேசாக கலங்க ஆரம்பித்தது.

தீப்பெட்டியை அக்காவின் கையிலிருந்து வாங்கி கோமதி விளக்கை ஏற்றியதும் மெல்ல அங்கிருந்து நடந்து பக்கத்திலுள்ள என் படிப்பு / படைப்பு அறைக்கு வந்து, மேசை மீதிருந்த ஐயா புத்தகத்தை கையில் எடுத்து அதன் முகப்பிலுள்ள ஐயாவின் முகத்தைப் பார்த்தேன். மெதுவாக உயிர்பெற்று உதடசைத்து புன்னகைத்து எனக்கு மட்டும் கேட்கும் குரலில், ”நல்லாருங்க ரண்டுபேரும்” என வாழ்த்துவது போல் இருந்தது.

உடனே என் நகர்பேசியை எடுத்து ஊரிலுள்ள அண்ணனுக்கு அழைத்து ஐயாவிடம் தரச் சொன்னேன். வாங்கியவர், ”எல்லாம் நல்லபடியா முடிஞ்சதுல்ல… நல்லாருங்க ரண்டுபேரும்’’ என்றார். ஆம்! அதே வார்த்தைகள்!

சட்டென கண் கலங்கிவிட்டது. அழக்கூடாது. அப்படியே அழுதாலும் ஊரிலிருக்கும் ஐயாவுக்கு அது தெரியக்கூடாது என நினைத்து, ”ம்… சரிய்யா’’ என்றுவிட்டு, ”சீக்கிரமே ஊருக்கு கூப்டுனு வரன்யா’’ என்று மட்டும் சொல்லி அழைப்பை துண்டித்துவிட்டேன்.

ஆம்! எல்லோரும் சொல்வதுபோல் எங்கள் திருமணம் மிக அழகான திருமணம்தான்! நேரில் பார்த்திருந்தால் ஐயா நிச்சயம் இதைத்தான் சொல்லியிருப்பார். அதனால்தான் இதோ நானும் சொல்கிறேன், என் குரலில், அவருக்குப் பதிலாக!

[இன்னும்]

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=