”வார்த்தை வழி திருமணம்!’’

(‘எங்க கல்யாணம்’ – முன்னுரை)

‘எங்க கல்யாணம் : The word album about a unique marriage’ – ‘எங்க கல்யாணம் சரி, அதென்ன word album?’ எனக் கேட்கலாம்.  ஒளிப்படங்களின் தொகுப்பு photo album எனில், வார்த்தைகளின் தொகுப்பு word album. ‘அப்போ, unique marriage?’ இதுவரை எங்கும் இல்லாத புதுமுறையில் நடந்த ஒரு தனித்துவமான திருமணம். மொத்தத்தில் எங்கள் திருமணம் பற்றிய நூல்.

‘திருமணம் பற்றிக் கூடவா நூல் எழுதுவது?’ எனக் கேட்பின், ‘ஏன் எழுதக்கூடாது?’ என்பதே பதில்கேள்வி. இன்னதுதான் என்றில்லாமல் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம், அதிலும் குறிப்பாக இதுவரை இல்லாத வாசிப்பனுபவம் மிக்க நுண்தகவல்கள் நிறைந்த uncommon wisdom என சொல்லக்கூடிய அனைத்தும் இலக்கியம் என்றால் இதுவும் இலக்கியம்தான்.

இது எங்கள் திருமணம் பற்றிய நூல் என்றாலும், இந்நூலில் நான் சொன்னவை மிகக் குறைவு. சொல்லாதவை மிக மிக அதிகம். அவற்றை சொற்களுக்கிடையில் மவுனமாக நிரப்பியிருக்கிறேன். வாழ்க்கையின் நுட்பங்களை உணரக்கூடிய மனப்பக்குவம் கொண்ட வாசகர்கள் அதை உணரக்கூடும்.

முதலில் இப்படி ஒரு நூல் எழுதவேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை. நண்பர்கள் பலர் ”ஏன் உங்க திருமணத்துக்கு எங்கள கூப்பிடல?’’ என்றும், ”இவ்ளோ அழகா நடந்த ஒரு திருமணத்த பக்கத்துல இருந்து பாக்கமுடியாமப் போச்சே’’ என்றும், ”உன்னோட கல்யாணத்த பார்க்க எவ்ளோ ஆசையா இருந்தேன் தெரியுமா?’’ என்றும் வருத்தத்துடன் சொல்லியிருந்தார்கள். அப்போதுதான் தோன்றியது… சாதாரண திருமணம் என்றால் தம் திருமணத்தை பார்க்காதவர்களிடம் காட்ட திருமணத்தன்று எடுத்த ஒளிப்படங்களை எல்லாம் சேர்த்துத் தொகுத்த photo album காட்டலாம். பார்த்தவர்கள் கிட்டத்தட்ட நேரில் கண்டதுபோல் உணர்வார்கள். நாமோ அவ்வாறு செய்யவில்லை. அதனால் நாம் ஏன் photo album போன்று word album அதாவது, ஒளிப்படங்களின் தொகுப்பு வழியாக திருமணத்தை நேரில் பார்த்தது போல் உணர்த்துவதற்குப் பதிலாக வார்த்தைகளின் தொகுப்பு வழியாக நேரில் பார்க்கவைக்கக் கூடாது என்று.

திருமணம் குறித்து என்ன எழுதுவது? வரிசை வரிசையாக விஷயங்கள் இருந்தது. சரி, எழுதித்தான் பார்ப்போமே என ஏப்ரல் 15, 2021 முதல் ஏப்ரல் 24, 2021 வரை தொடர்ந்து பத்துநாட்கள் என் முகநூல் பக்கத்தில் ஒவ்வொரு கட்டுரையாக எழுதி பதிவிட்டேன். சற்றும் எதிர்பாராத நூற்றுக்கணக்கானோர் தினந்தோறும் வந்து வாசித்துவிட்டு, ”அப்படியே உங்க கல்யாணத்த நேர்ல பாத்த மாதிரியே இருக்கு’’, ”இப்படி ஒரு திருமணமா? நெனச்சாலே பொறாமையா இருக்கு’’ என்றெல்லாம் சொல்லி தம் அன்பையும் கருத்தையும் பகிர்ந்தார்கள்.

சிலரோ, ”என்ன அதுக்குள்ள முடிச்சிட்டீங்க? இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாமே, ஒவ்வொண்ணும் ரொம்ப அழகா காட்சிப்பூர்வமா இருந்தது’’ என்றார்கள். இவை யாவற்றுக்கும் மேலாக பல புதிய வாசகர்கள் (இதில் சில எழுத்தாளர்களும் அடங்கும்) வந்து தினந்தோறும் படித்துவிட்டு தம் வாழ்த்தையும் அன்பையும் உடனுக்குடன் பகிர்ந்ததுதான். ஆம்!

நடந்து முடிந்த எங்கள் திருமணம் மட்டுமல்ல… எங்கள் திருமணம் பற்றிய இந்நூலும் தனித்துவம் மிக்கதுதான். வெறுமனே கரையில் நின்று பார்த்தால் நதி என்பது வெறும் நீரோடும் பேரோடையாகத்தான் தெரியும். உள்ளே இறங்கிப் பார்த்தால்தான் அது எத்தனை பொக்கிஷங்களை தன்னகத்தே கொண்ட பேரியற்கையின் சிற்றங்கம் என்பது புரியும். அப்படித்தான் இந்நூலும். மேலோட்டமாகப் பார்த்தால் திருமணம் பற்றிய ஒரு நூல். உள்நுழைந்து ஒவ்வொரு வார்த்தைகளாக வாசித்துப் பார்த்தால் பல திறப்புகள் அவிழும், ஒரு திருமணத்தையே அருகில் நின்று கண்டுகளித்த உணர்வு உருவாகும். ஆம்!

இப்படியொரு நூல் எழுத மிக முக்கியக் காரணம் என் அன்பு மனைவி (கோ)மதி. அவருக்கே இந்நூலை பெருங்காதலோடு சமர்ப்பணம் செய்வதில் மகிழ்கிறேன்.

நேரில் பார்க்காத ஒரு தனித்துவம் மிக்க திருமணத்தை என் வார்த்தைகள் வழியாக பார்க்கப்போகும் உங்கள் அனைவருக்கும் எனது அன்பும் வாழ்த்தும்!

                       – வடிவரசு

(ஏப்ரல் 25, 2021)

                     

(நாளை முதல் தினம் ஓர் அத்தியாயம் வெளியாகும்.)

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=