ஐபக்கம் – 076 : இன்னொருவிரல்

#ஜூன்22,2024
இன்று மதிய உணவு உண்டுவிட்டு ஐ அருகில் படுத்து நானும் மதியும் சிறிதுநேரம் உறங்கினோம்.
சட்டென்று என் வலது கை ஆள்காட்டி விரலை யாரோ பற்றுவது போல உணர்ந்து, லேசாகக் கண் திறந்து பார்த்தேன். ஐ’தான் விரலை பற்றி எடுத்துப்போய் தனது வாயில் வைத்து சப்ப ஆரம்பித்தான். நானும் ‘சரி, சப்பட்டும்’ என்று விட்டுவிட்டேன்.
பயபுள்ளைக்கு பல்தான் இன்னும் முளைக்கவில்லையே தவிர, அத்தனை உறுதியாகத் தனது ஈரைக்கொண்டு கடித்துச் சப்பிட்டான்.
அடுத்து ‘எவ்வளவு நேரம் சப்புகிறான், பார்ப்போம்’ என்று நன்றாக விழித்துப் பார்த்தேன். உடனே பார்ப்பதைக் கண்டிட்டவன், தன் பொக்கை வாய் காட்டி சத்தமின்றி சிரித்திட்டான்.
அவனது அந்தச் சிரிப்பு, தான் சப்புவதற்கு இன்னொரு விரல் கிடைத்திட்டது என்று சொன்னது போல இருந்தது.
*