ஐபக்கம் – 075 : நிம்மதிப் பெருமூச்சு

#ஜூன்21,2024

நாங்கள் வசிக்கும் ஜமீன் பல்லாவரம் பகுதியில் ஒரு மூத்த குழந்தைகள் நல மருத்துவர் இருக்கிறார் (பெயர் மணி). அவர் அனுபவம் மிக்க அரசு மருத்துவர் என்பதால், முதலில் அவரிடம்தான் ஐ’யை காட்டலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால், அவர் விடுமுறையில் இருந்ததால் முடியவில்லை.

இன்று விடுமுறை முடிந்து வருவதால், எதற்கும் ஒருதடவை அவரிடம் காட்டிவிடலாம் என்று போயிருந்தோம்.

நினைத்ததைவிட நன்றாகவே பரிசோதித்தவர், சொன்னார். ”எந்தப் பிரச்சினையும் இல்ல. கால் அதுவே தானா சரியாகிடும். வலி இருக்கிறதுனாலதான் அசைக்கல. ஒருவேளை சின்ன முறிவு இருந்தாக்கூட… இப்படித் தொட விடமாட்டாங்க. தொட்டாலே துடித்துப் போய் அழுவாங்க. அதனால பயப்படாமப் போங்க.

அப்படியும் எதனா ஆயில்மெண்ட் தடவுனும்னு தோணுச்சின்னா… இதோ, ஒரு ஆயில்மெண்ட் எழுதித் தர்றன், தடவுங்க. என்னைக் கேட்டா… அதுவும் வேணாம்னுதான் சொல்வேன்.

அதுக்கு முன்னாடி ஒரு விஷயத்த நல்லா தெரிந்துக்கோங்க. குழந்தைங்கள பொருத்தவரைக்கும்… அப்படியே ஓரளவு வரைக்கும் எலும்பு முறிவு இருந்தாலும், அதுக்கு நாங்க எந்த சிகிச்சையும் செய்யமாட்டோம். அதுவே சரியாகிடும். அதுதான் இயற்கையோட படைப்பு.’’

மிக மிகத் தெளிவாக; விளக்கமாக எங்களது அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொன்னார்.

கடந்த நான்கு நாட்களாக பெருத்த வலியோடும், பயத்தோடும் இருந்த எங்களுக்கு, அவரது இந்த வார்த்தைகள் வானளவு ஆறுதல் தந்தன. ஆம்.

எதையும் பயமாக்கி பணம் செய்யப் பார்க்கும் மருத்துவர்கள் மத்தியில், பணநோக்கம் இன்றி பயம் போக்குவிக்கும் மருத்துவர்களும் எங்கோ ஓரிருவர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று எண்ணி மகிழ்ந்திட்டோம்.

கூடவே, இதுபோன்ற ஒன்று யாருக்கும் நிகழக்கூடாது என்றும் வேண்டிக்கொண்டு, ஐ’க்கு எதுவும் ஆகாமல் பார்த்துக்கொண்ட இயற்கையன்னைக்கு மனத்தார நன்றி உரைத்திட்டோம். ஆம், ஆம்!

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=