ஐபக்கம் – 074 : மருத்துவர் தேர்வு

#ஜூன்20,2024
ஐ விழுந்து இன்றோடு மூன்றாவது நாள்.
ஓரளவுக்கு அதிலிருந்து அவன் மீண்டு வந்துவிட்டாலும், அவ்வப்போது நினைவுக்கு வந்து பயப்படுகிறான்; அழுகிறான்.
இன்னொரு பக்கம் கால் வலி இன்னும் குறையவில்லை. அதோடு, அது எலும்பு முறிவாக இருக்காது. ரத்தம்தான் கட்டியிருக்கும் என்றும் பட்டது. ‘சரி, எதற்கும் இன்னொரு தடவை மருத்துவரைப் போய் பார்த்து… உறுதி செய்து கொள்ளலாம்’ என்று அதே மருத்துவரிடம் இன்று கூட்டிப் போயிருந்தோம்.
அன்று போலவே மிக மேலோட்டமாகப் பார்த்தவர் எடுத்ததும், ”எலும்பு முறிவா இருக்கலாம்… உறுதியா சொல்ல முடியல. எதுக்கும் ஒரு எக்ஸ்ரே எடுத்துட்டுப் போய்… ஆர்த்தோவ பாருங்க’’ என்று மேலும் பயமுறுத்தினார்.
எங்கள் இருவருக்குமே உறுதியாகத் தெரிந்தது, ‘அது முறிவு இல்ல. சாதாரண ரத்தக் கட்டிதான். அதனால எக்ஸ்ரே எடுக்க வேணாம். வேணும்னா… இன்னும் ஒரு வாரம் பார்த்துட்டு எடுக்கலாம்.’
‘சரி’ என்று அவரிடம் தலையாட்டிவிட்டு, அங்கிருந்து நேராக வீட்டுக்கு வந்துவிட்டோம்.
இதில் ஆச்சரியம் யாதெனில், வீட்டுக்கு வந்த சற்று நேரத்திலேயே எங்கள் பயத்துக்கும், கேள்விக்கும் விடை சொல்வதுபோல ஐ, முதல் தடவையாக இடது பக்கம் அதாவது, அடிபட்டு வீங்கியிருந்த கால் பக்கம் கவிழ்ந்து, ‘எனக்கு ஒண்ணும் இல்ல’ என்று சொல்லாமல் சொன்னதுதான்.
உடனே நூறு சதவிகிதம் முடிவு செய்துவிட்டோம். கூடவே, இன்று மருத்துவமனையில் இருந்த செவிலியரைப் பார்த்து அவன் சிரித்தது, அவரோடு சிறிது நேரம் விளையாடியது, சற்றுமுன் உள்ளங்கை ஊன்றி நெஞ்சை நிமிர்த்தியது போன்றவை எங்கள் முடிவுக்கு கூடுதல் பலம் சேர்ப்பது போல இருந்தது. ஆம்!
குழந்தைகளுக்கான மருத்துவர்களை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏற்கெனவே இதை நண்பர்கள் சொல்லவும் கேட்டிருக்கிறேன். ஆதலால், இனி எதற்கும் அவரிடம் போக வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டு, ஐ கற்றுத்தந்த ஒள விளையாட்டும், கண்ணும் கண்ணும் விளையாட்டும் அவனோடு விளையாட ஆரம்பித்தோம்.
*