ஐபக்கம் – 072 : பெருவலி

#ஜூன்18,2024

என்னதான் நாம் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் சில சம்பவங்கள் நம்மையும் மீறி எதிர்ப்பாராத விதமாக நிகழ்ந்து பெரிதாய் கலங்கடித்து விடக்கூடும். ஆம், அப்படியான ஒன்றுதான் இன்று எங்கள் வாழ்வில் நடந்தது.

மதியும் ஐயும் வீட்டில் இருக்கும் மேட் வழுக்கி / தடுக்கி (அது இப்போதும் எப்படி நடந்தது என்று சரியாகத் தெரியவில்லை) கண் சிமிட்டும் நேரத்தில் ஆளுக்கு ஒரு பக்கமாக விழுந்துவிட்டார்கள்.

மதிக்கு காலிலும் முட்டியிலும் பலத்த அடி. ஐ சுமார் நான்கடி உயரத்திலிருந்து அப்படியே பின்பக்கமாக வெறும் டைல்ஸ் தரையில் விழுந்துவிட்டான்.

கழிவறையில் இருந்த நான் என்னமோ ஏதோ என்று பதறியடித்து ஓடிவந்து, ஐ’யை முதலில் தூக்கி அவன் தலையிலும் உடலிலும் தேய்த்துவிட்டேன். விழுந்து இரண்டு மூன்று நொடிகள் இருக்கும். அதிர்ச்சியில் அழாமல் இருந்தவன், அதன்பிறகு கத்தி அழ ஆரம்பித்தவன்தான். சுமார் ஒன்றரை மணிநேரம் விடாமல் அழுதுகொண்டிருந்தான்.

துடித்துப் போன நாங்கள் எவ்வளவு முயன்றும் அழுகையை நிறுத்த முடியவில்லை. அழுகை என்றால் வெறும் அழுகை அல்ல. பெருவலியில் துடிதுடித்து அழும் அழுகை. ஒரு கட்டத்துக்கு மேல் பார்த்த எங்களாலும் அழுகையை அடக்க முடியவில்லை.

எங்கள் குடும்ப தெய்வமான வடுவச்சி அம்மன் தொடங்கி, நான் பெரிதும் மதிக்கும் சிதம்பரம் நடராசர் வரைக்கும் எல்லா தெய்வங்களையும் வேண்டிக்கொண்டேன். ஐ’யின் பாதம் பற்றி மன்றாடி, ”அழாத சாமி… உனக்கு ஒண்ணும் ஆகாது. தெரியாமதான் நடந்துருச்சு. இனி இதுமாதிரி நடக்காமப் பாத்துக்குறோம்.’’ இன்னும் ஏதேதோ சொல்லிக் கேட்டுக்கொண்டேன்.

நான்கடி உயரத்தில் இருந்து வெறும் தரையில் அதுவும், பிறந்து 174 நாட்களே ஆன பிஞ்சுக் குழந்தை விழுந்ததை எங்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

தேம்பித் தேம்பி அழுதவன், ஒரு கட்டத்தில் லேசாக அடக்கினான். இருந்தாலும் அவனால் அந்த அதிர்வில் இருந்து மீள முடியவில்லை. அதனால் நினைத்து நினைத்து பயந்து பயந்து அழுதிட்டான்.

பக்கத்து வீட்டு அம்மாவும், கீழ் வீட்டு அக்காவும் ஓடிவந்து, ”என்னாச்சு?’’ என்று கேட்டார்கள். அவர்களிடம் நின்று பதில்கூட சொல்ல முடியாத நிலையில் உடைந்துபோய் இருந்திட்டோம்.

எல்லாம் பால் குடித்தால் சரியாகிவிடும் என்று எவ்வளவோ முயற்சித்தோம். குடிக்கவில்லை. மாறாக, விட்டுவிட்டு அழுகிறான்.

ஒருபக்கம் விழுந்தது நினைத்து பயமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கையும் இருந்தது. ஆனாலும் மனசு கேட்காமல், ‘நாம மருத்துவர போய் பார்த்துடலாம்’ என்று அருகில் இருக்கும் மருத்துவரிடம் கூட்டிப் போயிருந்தோம்.

ஓரளவுக்கு பரிசோதித்துவிட்டு எங்களிடம் கேட்டார். ”விழுந்ததுக்கு அப்புறம் ஒருமணி நேரத்துக்கு… காது, மூக்கு, வாயில் இருந்தெல்லாம்… எதுவும் ரத்தம் வரலையே? வலிப்பு எதனா வந்ததா?’’.

உறுதியாக ”இல்லை’’ என்றோம்.

பிறகு சொன்னார். ”இப்போதைக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல. விழுந்த அதிர்ச்சியிலேயும், வலியிலேயும் குழந்தைங்க அழதான் செய்வாங்க. வலிக்கு பெயின் கில்லர் ட்ராப்ஸ் போட சொல்றேன். கூடவே, பாராசிட்டமல் ட்ராப்ஸ் எழுதித் தர்றேன். வாங்கிட்டுப் போய்… காய்ச்சல் வந்தாலும், வரலேனாலும்… மூணு நாளைக்கு மூணு வேளையும் போடுங்க.’’

அவரது பதிலில் திருப்தியுறாமல் சில கேள்விகள் கேட்டோம். இன்னொரு தடவை சோதித்துப் பார்த்துவிட்டு சொன்னார். ”நார்மலாதான் இருக்காரு. ஆனாலும் நாம அடுத்த 24 மணி நேரம் தீவிரமா கண்காணிக்கணும். மேல சொன்ன அறிகுறிகள் ஏதாவது இருக்கா? அப்னார்மலா பிஹேவ் பண்றாங்களான்னு பாருங்க. அப்படி எதுவும் இல்லன்னா… விட்டுடலாம். ஒருவேளை இருந்தா… ஸ்கேன் எடுத்துப் பார்த்துதான், எதுவும் சொல்லமுடியும்.’’

போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது.

விழுந்ததும் யாரிடமும் சொல்லாமல் தம்பி பிரபாகரனிடம் மட்டும் சொல்லி இருந்தேன். உடனே கிளம்பி பாதி தூரம் வந்துகொண்டிருந்தவரிடம் அழைத்து மருத்துவர் சொன்னதைச் சொல்லி, ”இதுக்காக இவ்ளோ தூரம் வரவேணாம் தம்பி” என்றேன். இருந்தாலும் மனசு கேட்காமல் ஐயைப் பார்க்க வந்துவிட்டார்.

வீட்டுக்கு வந்ததும் ஒருவாறு ஐக்கு பால் கொடுத்து தூங்க வைத்துவிட்டோம். ஆனாலும் அவன் பழையபடி தூங்காமல், நடுநடுவில் விழுந்த அதிர்ச்சியிலும், வலியிலும் அழுதபடி இருந்தான்.

நானும் மதியும் என்னென்ன செய்தால் சிரிப்பானோ, அதையெல்லாம் செய்து காட்டினோம். சிரித்தவன், சற்று நேரத்துக்கெல்லாம் அசதியில் நன்றாக உறங்கிவிட்டான்.

மனத்துக்குள் எனக்கு மட்டும் கேட்கும் குரலில் இம்மாபெரும் இயற்கையிடம் பிரார்த்தித்துக்கொண்டேன். ”ஐ’க்கு எதுவும் ஆகக்கூடாது. அவன் நல்லபடியா தூங்கனும். வலியெல்லாம் குறையனும். சீக்கிரமே பழைபடி மீண்டு வந்துடனும். இனி இம்மாதிரி நடக்காம துணையிருந்து பாத்துக்கனும்.’’

என் வேண்டுதல் ஐ’க்கும் கேட்டிட்டதோ என்னவோ, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவன் மெல்ல உதடசைத்துப் புன்னகைத்திட்டான்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=