ஐபக்கம் – 069 : அன்புள்ள மகனே நலமா?

#ஜூன்16,2024

இன்று தந்தையர் தினம் என்பதாலோ என்னவோ, தெரியவில்லை. என்னை தந்தையாக்கிய ஐ’யையும், என் தந்தையான ஐயாவையும் ஒருசேர எண்ணியபடியே காலையில் விழித்தெழுந்தேன். ஆம்.

எல்லோருக்கும் ஞாயிறு என்பது நன்கு ஓய்வெடுப்பதற்கான விடுமுறை தினம். ஆனால் எனக்கோ, நூலக தினம் என்பதால், காலையில் ஐ எழுவதற்கு முன்னமே  எழுந்து வேகவேகமாகக் குளித்துக் கிளம்பி சாப்பிட்டுவிட்டு, மதி கட்டித்தந்த எலுமிச்சைசோறு எடுத்துக்கொண்டு நூலகத்துக்கு வந்துவிட்டேன்.

ஏனோ தெரியவில்லை. காலையிலிருந்து ஒரே ஐ நினைவாகவே இருந்ததால், மதிய உணவு உண்பதற்காக பின்புறம் இருக்கும் மரத்தடி நிழலில் சென்று உட்கார்ந்ததும், முதல் வேலையாக மதி எண்ணுக்கு (வீடியோ கால்) அழைத்திட்டேன்.

என்ன ஆச்சரியம், எடுத்ததும் மதிக்கு பதிலாக ஐ தெரிந்திட்டான். இதை சற்றும் எதிர்பாராத நான் கொஞ்சம் சத்தமாகவே, ”ஐ பாப்பா… தங்கமே… என்ன பண்ற சாமி…? அம்மம் சாப்டியா…? விளையாடுனியா…?” என்று கேட்டேன்.

கண்கள் விரிய வியப்போடு என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

”அப்புக்குட்டி… என் செல்லப்பாப்பா… இன்னிக்கு அப்பா உனக்காக எழுதின ஒரு பாட்டப் பாடப்போறன்.’’

இதற்கும் எந்த அசைவும் இல்லை. ஆனால், வைத்த கண் வாங்காமல் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான்.

உடனே, அன்புள்ள மகனே நலமா? / ஆசையுடன் அப்பா எழுதுவது…” என்று ஆரம்பித்து, அவனுக்காக எழுதிய ‘கடிதப் பாடலை’ (அதுவும், உயிரெழுத்துகளை வரிசையாக; தொடக்கமாக வைத்து) பாடத் தொடங்கினேன்.

அமைதியாகக் கேட்டவன், பல்லவியின் இறுதி வரியான, ” ‘ஊ’ சொல்லும் உன் உள்ளம் நலமா?” என்றதும் சட்டென்று தன் மெளனம் களைத்து பொக்கை வாய் காட்டிச் சிரித்து, ”ஊ…’’ என்றிட்டான். ஆம்!

ஐ முதல் தடவையாக இன்று காணொளி அழைப்பில் (வீடியோ காலில்) அதுவும், இந்தத் தந்தையர் தினத்தில் என்னோடு சிரித்துப் பேசிட்டான். ஆதலால் இதையே இத்தினத்தில் அவன் எனக்குத் தந்திட்ட உன்னதப் பரிசாக எண்ணி மகிழ்ந்திட்டேன். ஆம், ஆம்!

ஐ’க்காக இன்று எழுதிப் பாடிய அந்தக் கடிதப் பாடல் இதுதான் :

அன்புள்ள மகனே நலமா?

ஆசையுடன் அப்பா எழுதுவது! (2)

இசைத்திடும் விரல்கள் நலமா?

ஈதிடும் உன் அன்னை நலமா? (2)

உதைத்திடும் கால்கள் நலமா?

‘ஊ’ சொல்லும் உன் உள்ளம் நலமா? (2)

(அன்புள்ள…)

*

எறும்புக்குத் தோழனே நலமா?

ஏகாந்த விரும்பியே நலமா? (2)

ஐக்கு ஐயே நலமா?

ஐக்கெல்லாம் ஐயே நலமா? (2)

ஒண்மிகு மணியே நலமா?

ஓடிடும் நதியே நலமா? (2)

‘ஒள’ என்ற உறவே நலமா?

அஃதுடை உயிரே நலமா? (2)

(அன்புள்ள…)

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=