ஐபக்கம் – 070 : ஒரு சங்கப் பாடல்

#ஜூன்17,2024

நேற்று நூலகத்தில் உட்கார்ந்து சங்கப் பாடல் படித்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று தோன்றியது. ‘ஐக்கு நாம ஒரே ஒரு சங்கப் பாட்ட சொல்லணும்னா… என்னப் பாட்ட சொல்லலாம்?’’

சட்டென்று இரண்டு பாடல்கள் நினைவுக்கு வந்தன. ஒன்று, கணியன் பூங்குன்றனார் பாடிய, யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற எல்லோருக்கும் தெரிந்த புகழ்பெற்ற புறநானூற்றுப் பாடல். மற்றொன்று, வெகு சிலர் மாத்திரமே அறிந்த,

‘நாடா கொன்றோ காடா கொன்றோ

அவலா கொன்றோ மிசையா கொன்றோ

எவ்வழி நல்லவ ராடவர்

அவ்வழி நல்லை; வாழிய நிலனே!’

என்ற ஔவையாரின் பாடல் (புறநா – 187). ஆம்!

நொடியும் யோசிக்காமல் பின்னதைத் தேர்ந்தெடுத்தேன். காரணம், ஆடவர் ஒழுக்கமே உலக மேன்மைக்கு அடிப்படை என்று இந்தப் பாடல் உரக்கச் சொல்வதால்.  

அந்தவகையில் இன்று காலை விழித்தெழுகையில் கூடாரத்துக்குள் நானும் ஐயும் மட்டுமே படுத்துக் கொண்டிருந்தோம். மதி அதிகாலையிலேயே சீக்கிரம் எழுந்து, எங்கள் தூக்கம் தடைபடாதவாறு மெல்ல அறைக்கதவை தாழிட்டுவிட்டுப் போய் நடுவீட்டுக்குள் உட்கார்ந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தாள்.

எழுந்து வெளியில் வந்தவன், இரு தினங்களுக்குமுன் எழுதி முடித்த கட்டுரையை எடுத்து திருத்தம் செய்துகொண்டிருந்தேன்.

ஓர் அரை மணிநேரம் ஆகியிருக்கும். ஐ விழித்து கூடாரத்தையும், காத்தாடியையும், கதவை ஒட்டிப் பறந்த துணியையும், நடுநடுவில் என்னையும் பார்த்து மென்குரலில் சத்தமிட்டு விளையாடிக் கொண்டிருந்தான்.

அவன் எழட்டும் எனக் காத்துக்கொண்டிருந்த நான், கட்டுரையை திருத்திவிட்டு மேசையில் இருந்த புறநானூறு புத்தகத்தை எடுத்துப்போய் அருகில் படுத்துக்கொண்டு, சற்றுநேரம் அவனோடு செல்லம் கொஞ்சி விளையாடிவிட்டு, ஔவையின் பாடலை பாடிக் காட்டி அதற்கான பொருளை இவ்வாறு சொன்னேன்.

”ஐ பாப்பா… ஒளவையார் பாட்டி, ரண்டாயிரம் வருசத்துக்கு முன்னாடி பாடின இந்தப் பாட்டுல… என்ன சொல்றாங்க, தெரியுமா…? நாடா இருந்தாலும், காடா இருந்தாலும், தாழ்ந்த நிலமா இருந்தாலும், மேடான நிலமா இருந்தாலும்… எந்த இடத்துல ஆண்கள் நல்லவரா இருக்காங்களோ… அந்த இடத்துல நிலம் மேன்மை பெற்று திகழும்னு சொல்றாங்க, அப்பு.

அதுமட்டும் இல்ல… நாடு, காடு, மேடு, பள்ளம்னு நால்வகை நிலங்களையும் (மருதம், முல்லை, குறிஞ்சி, நெய்தல்)… இந்த ஒரே பாட்டுல அதுவும், நாலு வரியில ஒருசேரக் குறிப்பிட்டு… அவ்ளோ அழகா பாடியிருக்காங்க, அப்பு.’’

அவனுக்கு புரிந்ததோ, இல்லையோ, என் தாடியை ஒரு கையால் பிடித்து இழுத்துக்கொண்டு, மறு கையை தீவிரமாக வாய்க்குள் விட்டு சப்பியபடி கேட்டவன், சொல்லி முடித்ததும் உற்சாகத்தில் ‘ஆ… ஊ…’ என்று சிரித்திட்டான்.

பதிலுக்கு நானும் ‘ஆ… ஊ…’ என்றுவிட்டு, ஒளவையின் பாடலை இன்னொரு தடவை எனக்குத் தெரிந்த ராகத்தில் பாடிக்கொண்டு, ஞாயிறு தாத்தாவிடம் காட்டுவதற்காக அவனை வெளியில் தூக்கிக்கொண்டு போனேன்.

அங்கே எங்களுக்கு முன்பாக சென்று நாற்காலி போட்டு ஒய்யாரமாய் அமர்ந்திருந்த மதியின் தோரணையில், நொடிநேரம் புறநானூறு ஒளவை தெரிந்திட்டாள்!

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=