ஐபக்கம் – 067 : Solo Bath

#ஜூன்11,2024

ஐ’யை பொதுவாக நானும் மதியும் சேர்ந்துதான் குளிப்பாட்டுவோம். ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளில் நான் நூலகம் சென்றுவிடுவதால், அன்று ஒருநாள் மட்டும் மதி தனியாக அவனை குளிப்பாட்டுவாள்.

இதனால் மதிக்கு பெருத்த மகிழ்ச்சியும், எனக்கு சிறுத்த ஏக்கமும் உண்டு என்பது தனிக்கதை.

இந்நிலையில் இன்று ஐ’யை எதிரில் இருக்கும் மாடியில் வைத்துக் குளிப்பாட்டலாம் என்றாள் மதி. தரை கொஞ்சம் ஈரமாக இருந்ததால், இல்லை வீட்டிலேயே குளிப்பாட்டலாம் என்றேன் நான். அவளும் விடுவதாக இல்லை. நானும் விடுவதாக இல்லை.

ஒரு கட்டத்தில் மதி விளையாட்டாகச் சொன்னாள். ”அப்ப நான் வரமாட்டேன். நீங்களே குளிப்பாட்டிக்கோங்க.’’

நானும் விடாமல், ”சரி’’ என்று தனியாகக் குளிப்பாட்டத் துணிந்து, இன்று வெற்றிகரமாக அதுவும், முதல் தடவையாக ஐ’யை என் கால்களில் படுக்க வைத்துக் குளிப்பாட்டினேன். ஆம்!

இதில் வேடிக்கை யாதெனில், பொய்யாகக் கோபித்துக்கொண்டவள், நான் குளிப்பாட்டியதும் உண்மையாகவே கோபித்ததுதான்.

ஆதலால், காலை முதல் இதோ, இதை எழுதும் இம்முன்னிரவு வரை அவள் என்னிடம் சொல்ல வேண்டியதை நேரடியாகச் சொல்லாமல் ஐ’யிடமும், அதேபோல நான் அவளிடம் சொல்ல வேண்டியதை ஐ’யிடமும் மாறிமாறி கூறி வருகிறோம்.

பாவம் ஐ’தான் நடுவில் மாட்டிக்கொண்டு ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறான்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=