ஐபக்கம் – 062 : தூங்கிக்கொண்டே குளித்தது

#ஜூன்01,2024

ஐ சரியாக பால் குடித்து இன்றோடு நான்கு நாட்கள் ஆகின்றன. வெயில் வேறு எப்போதும் விட மிகக் கடுமையாக கொளுத்துகின்றது. அதனால் ரொம்பவே சோர்வாக இருக்கிறான். நாங்களும் எவ்வாறெல்லாமோ முயன்று பால் குடிப்பாட்டி வருகிறோம். இருந்தாலும் அது அவனுக்குப் போதவில்லை. [ஆகையால் வேறுவழியின்றி கடந்த இரண்டு நாட்களாக இளநீர் மட்டும் கொடுத்து வருகிறோம்.]

எங்களிடம் இப்போதைக்கு இருக்கும் ஒரே வழி, ஐயை தூங்கவைத்து அவனுக்கே தெரியாமல் தூங்கும்போது பால் கொடுப்பது மட்டும்தான். ஆம்!

அப்படி இன்று மாலை தூக்கத்தில் ஓரளவுக்கு பால் குடித்தவன், காலை முதல் கொளுத்திய வெயிலில் சோர்ந்துபோய் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தான். வேர்த்து பிசுபிசுப்பாக இருந்ததால், ‘சரி, தூங்கும்போதே குளிப்பாட்டிவிடலாம்’ எனத் தூக்கிக்கொண்டு போய் வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டினோம்.

எப்போதும் முதல் சொம்பு நீர் ஊற்றியதும் கண்கள் விரிய கை கால்கள் அசைத்து பொக்கை வாய் காட்டிச் சிரிப்பவன், இன்று முழுதாய் குளித்து முடித்தும்கூட விழிக்கவே இல்லை. அந்த அளவுக்கு அவன் மேற்கொள்ளும் நர்சிங் ஸ்டிரைக்கும், இந்த வெயிலும் படுத்திவிட்டது. பாவம்.

‘சரி, அவன் பாட்டுக்கு நல்லா தூங்கட்டும்’ என்று இன்னொரு தடவை பால் கொடுத்துவிட்டுப் போய் கூடாரத்துக்குள் படுக்க வைத்துவிட்டு வந்தாள் மதி.

அதுவரைக்கும் நான் ஒன்றும் செய்யாமல், முதல் தடவை தூங்கிக்கொண்டே குளித்த ஐ’யை மனத்துக்குள் எண்ணிக்கொண்டிருந்தேன்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=