ஐபக்கம் – 059 : நர்சிங்ஸ்டிரைக்

#மே29,2024

மதியும் நானும் பெரும் கவலையுடன் இருக்கிறோம். நேற்று இரவு முதல் ஐ கொஞ்சம் கூட பால் குடிக்கமாட்டேன் என்கிறான். ஏனென்று தெரியவில்லை. நாங்களும் பலவாறு முயன்று பார்த்துவிட்டோம். ம்…ஹூம்.

இதில் ஒரே ஆறுதல் என்னவென்றால், தூங்கும்போது மட்டும் தூக்கத்தில் தன்னை அறியாமல் சிறிது குடிக்கிறான். அவ்வளவுதான்.

முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது என்று இருப்பதால், யாது செய்வதென்று புரியாமல் தெரிந்த சிலரிடம் கேட்டுப் பார்த்தோம். ஒருவரிடமிருந்தும் தக்க பதில் வரவில்லை.

மாறாக, ‘பால் குடிக்கலன்னா என்ன… தண்ணி கொடுங்க. இல்லனா… சத்துமாவு கொடுங்க. அதுவும் இல்லனா… சோறு கொடுங்க…’ என்று தேவையற்ற பதில்களே வரிசைகட்டி வந்தன.

இங்கே பிரச்சினை ‘பால் இல்லை; வரவில்லை என்பதல்ல. ஐ பால் குடிக்கவில்லை’ என்பதுதான். இதை சொல்லிவைத்தது போல ஒருவரும் புரிந்துகொள்ளாமல், தங்கள் அட்வைஸ் மூட்டைகளை சகட்டுமேனிக்கு இறக்கி வைத்தது பெரும் எரிச்சலையே உண்டு பண்ணியது.

இருந்தாலும் ஒன்று மட்டும் தெளிவானது. குழந்தைகள் பிறந்த மூன்று மாதம் முதல் பால் குடிக்கும் காலம் வரையில், எப்போது வேண்டுமானாலும், இன்னதென்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத காரணங்களுக்காக (அது சாதாரண தும்மல் தொடங்கி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்) இதுபோன்று பால் குடிக்க மறுப்பார்கள். இதற்கு மருத்துவத்தில் ‘நர்சிங் ஸ்டிரைக்’ என்று பெயர்.

அதேநேரம், அவர்கள் எவ்வாறு பால் குடிக்க மறுத்தார்களோ அதேபோன்று இன்னதென்று சொல்லமுடியாத காரணங்களால் மறுபடியும் பழையபடி பால் குடிக்கத் தொடங்கிவிடுவார்கள். அது ஒரு நாளில் ஆரம்பித்து மாதக்கணக்கில்கூட ஆகலாம்.

பெரும் நம்பிக்கையோடு அருகில் இருக்கும் விநாயகர் கோயிலுக்கு, ‘ஐ மறுபடியும் பால் குடிக்கத் தொடங்கிட்டா… மூணு பால் பாக்கெட் வாங்கிட்டு வந்து… அவன் கையாலயே தர்றோம்’ என்று மனத்தார வேண்டிக்கொண்டோம்.

இப்போது எங்கள் இருவரது மனத்திலும் இருப்பது இது ஒன்றுதான். ‘ஐ சீக்கிரமே பழையபடி பால் குடிக்கணும். இனி இதுமாதிரி எப்போவும் நடக்கக் கூடாது.’ ஆம், ஆம்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=