ஐபக்கம் – 058 : அருள்தந்தை ஆசி

#மே24,2024
ஐ பிறந்து இன்றோடு ஐந்து மாதம் நிறைவானது. ஆகையால் இந்த ஐந்தாம் மாத 28 ஆம் தேதியில், எங்கள் வாழ்வில் கண்ட பெரும் சாதனையாளர்; உன்னத மனிதர் ஒருவரை அவனுக்கு அறிமுகம் செய்திட எண்ணியிருந்தோம்.
அதற்காக நான்கு நாட்களுக்கு முன்பாகவே நான் படித்த லயோலா கல்லூரிக்குக் கூட்டிப் போய், அருள்தந்தை இஞ்ஞாசிமுத்து அவர்களை இவ்வாறு அறிமுகம் செய்திட்டோம்.
”ஐ, குட்டி… நாம இப்போ யார பாக்கப் போறோம், தெரியுமா…? அருள்தந்தை இஞ்ஞாசிமுத்து தாத்தாவ. ஆமா, மகனே.
இவர் உன் அப்பாவோட வாழ்க்கையில… ரொம்ப ரொம்ப முக்கியமானவரு, தங்கம். அதோட, உலகின் மிக முக்கியமான சயின்டிஸ்ட்’ல ஒருத்தரு. இதுவரைக்கும் பல நூறு கண்டுபிடிப்புகள இந்த சமூகத்துக்காக செய்தவரு. அதுமட்டுமில்லாம… கல்வித் துறையிலயும் எண்ணற்ற சாதனைகள செய்தவரு. ஆமா, மகனே.
உலகின் புகழ்பெற்ற பல பல்கலைக் கழகங்கள்ல வருகைதரு பேராசிரியரா இருந்திருக்காரு; இருக்காரு. இவர் எழுதின நூல்கள்தான் இன்னிக்கு பல்வேறு இடங்கள்ல பாடத் திட்டமாவும், பலநூறு அறிஞர்கள் விரும்பிப் பயன்படுத்தும் நூலாவும் இருக்கு. ஆமா, மகனே.
தமிழ்நாட்டுல இருக்க சென்னைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம்னு ரண்டு பல்கலைக் கழகத்தோட துணை வேந்தராவும், இரு பெரிய கல்லூரிக்கு முதல்வராவும், ஒரு கல்லூரிக்கு துணை முதல்வராவும் இருந்திருக்காரு.
தன் இத்தன ஆண்டுகால வாழ்க்கையில… பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு நல்வழி காட்டியிருக்காரு. தன்னால முடிஞ்ச எல்லா உதவிகளையும் செய்திருக்காரு. ஆமா, மகனே.
ஒரு வரியில சொல்லணும்னா… இவர் அளவுக்கு சாதனை செய்த ஒருத்தர, நான் பார்த்ததே இல்ல. அதேநேரம், இவ்வளவு சாதனைகள் செய்தும்… இருக்குற இடம் தெரியாம அவ்வளவு எளிமையா இருக்க ஒருவர… எங்கேயும் பார்க்கவே முடியாது. ஆமா, மகனே.
இப்படிப்பட்ட அரிய மனிதரதான்… நாம இப்போ, பாக்கப் போறோம்.’’
சொல்லி முடித்துவிட்டு அருள்தந்தை இருக்கும் கட்டடத்துக்குள் நுழையவும், அவர் எங்களை பார்த்துவிட்டு சிரித்தபடி வெளியே வரவும் சரியாக இருந்தது.
வேகமாக பக்கத்தில் வந்தவர், ஐ’யை தொட்டு ஆசீர்வதித்துவிட்டு, ”ஐ குட்டி… கண்ணா… பாத்தியா, நீ எவ்ளோ சின்னக் குழந்தையா… இவ்ளோ பெரிய கல்லூரிக்குள்ள வந்திருக்க. வாழ்க்கையில இன்னும் பல பெரிய இடங்களுக்கு நீ போவ…’’ என்று மனத்தார சொல்லிவிட்டுப் போய் மிட்டாய் எடுத்துவந்து ஐ’க்கு தந்தார். ஆம்!
ஐ’க்கு அருள்தந்தையை அறிமுகம் செய்து அவன் கையால் அவருக்கு ‘மகவே வருக’ நூல் தந்ததும், அவர் அவனுக்கு ஆசி வழங்கி மிட்டாய் தந்ததும் கண்டு நானும் மதியும் உள்ளுக்குள் ஓராயிரம் அடி உயரத்துக்கு துள்ளிக் குதித்திட்டோம். ஆம், ஆம்!
*