ஐபக்கம் – 054 : நடராசா

#மே15,2024
ஏற்கனவே தில்லை நடராசர் மீது பெருவிருப்பு கொண்டிருந்த எனக்கு, மார்கழி திருவாதிரை அன்று தில்லையில் திருவிழா நடந்திட்ட இரவு சற்றும் எதிர்பாராத வகையில் ஐ மகனாய் வந்து பிறந்திட்டது முதல் இன்னும் அதிகமானது. ஆம்!
அதனால், ஐ பிறந்த நாள் முதல் சிதம்பரம் சென்று நடராசரை பார்க்க வேண்டும்; வணங்க வேண்டும் என்று ஆவலோடு காத்திருந்தேன். அதற்கான நேரம் இன்றுதான் வந்தது; வாய்த்தது.
அதுவும் முன்னிரவு புறப்பட்டு அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் வந்திறங்கி, யாருமற்ற கிழக்கு கோபுர வாயிலில் உட்கார்ந்திருந்ததும், அப்போது சட்டென்று எங்கிருந்தோ ஐந்தாறு மாடுகள் மணியோசை ஒலிக்க வரக் கண்டதும், கோயில் திறந்ததும் முதல் ஆளாக சென்று நடராசரை வணங்கியதும், அங்குள்ள முக்குறுணி விநாயகருக்கு ஐ கவிழ்ந்ததற்காக சூரத் தேங்காய் உடைத்ததும் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியாதது.
அதிலும் குறிப்பாக, நடராசர் முன்பாக நின்று பாட வேண்டும் என்பதற்காகவே எழுதி எடுத்துப் போயிருந்த ‘நடராசா’ பாடலை, நடராசரை கண்டதும் ஐ போல இருந்ததால் பாடாமல் ‘ஐ பாட்டு’ பாடியதும், ஆசை தீர நடராசரையும், கோயிலையும் கண்டு ரசித்துவிட்டு வீட்டுக்கு வந்து, ஐ’யை பார்த்ததும் நடராசர் போல இருந்ததால் ‘நடராசா’ பாடலை பாடியதும் நினைக்க நினைக்க இனிப்பவை. ஆம்!
நடராசருக்காக எழுதி, ஐ’க்கு பாடிய அந்த ‘நடராசா‘ பாடல் இதுதான் :
நடராசா நடராசா –
உன் ஆடலை கொஞ்சம் நிறுத்து…
நடராசா நடராசா –
என் பாடலை கொஞ்சம் கேளு…
நீ ஆடும் கோயிலின் கதியை பாரு –
எங்கெங்கும் அழிந்துகொண்டிருக்கு…
நீ ஆளும் ஊரின் நிலையை பாரு –
என்னென்ன தீங்கு மிகுந்திருக்கு…
எல்லாம் அறிந்தும் ஆடிக்கொண்டிருப்பது –
உனக்கே சரிதானா? (2)
தீமைகள் போக்கி நன்மைகள் செய்வது –
உந்தன் பணியல்லவா?
(நடராசா…)
*
பக்தர் வேடமிட்டு –
பிழை பல இழைப்போரை –
ஏன், ஒன்றும் செய்வதில்லை?
பயம் துளியுமின்றி –
பொது சொத்து கொள்வோரை –
ஏன், கண்டு கொள்வதில்லை?
நான்கு கரங்கள் இருந்தென்ன லாபம் –
நால்வரை கூட தடுத்திடலாகாதா?
தீயும் மழுவும் வைத்தென்ன பயன் –
தீயோரை சுட்டு பொசுக்கிடலாகாதா? (2)
உன்மீது கொண்ட அன்பால்தானே –
இதனை கேட்கின்றேன்…
உன்னோடு இருக்கும் உறவால்தானே –
உன்முன் நிற்கின்றேன்…
(நடராசா…)
*
அழியும் உடலைக்கொண்டு –
ஆடித் திரிவோரை –
இன்றே நல்வழிப் படுத்திவிடு…
பணம்தான் பெரிதென்று –
செருக்கில் உழல்வோரை –
உடன் புதிதாய் மாற்றிவிடு…
ஒருகாதில் குழையும் மறுகாதில் தோடும் –
அணிந்திட்ட அத்தனே கேட்பாயா?
ஒருகாலை தூக்கி மறுகாலில் நின்று –
ஆடிடும் பித்தனே செய்வாயா? (2)
உன்னைக் கண்டு மகிழ்ந்திடத்தானே –
தில்லை வந்துள்ளேன்…
உன்னாடல் பார்த்து ரசித்திடத்தானே –
உள்ளம் கொண்டுள்ளேன்…
(நடராசா…)
*