ஐபக்கம் – 038 : இரண்டு எதிரிகள்

#ஏப்ரல்08,2024

ஐ நண்பர்கள் பற்றி எழுதும்போதே எதிரிகள் பற்றியும் எழுத எண்ணியிருந்தேன். மறந்துவிட்டதால் இப்போது எழுதுகிறேன்.

ஐ பிறந்து வீட்டுக்கு வந்திட்ட இத்தனை நாட்களில், அவனுக்கு இதுவரை இரண்டே இரண்டு எதிரிகள் மட்டுமே கிடைத்திருக்கிறார்கள். ஒன்று, மிக்ஸி. இன்னொன்று, குக்கர். ஆம்!

மிக்ஸி சத்தமும், குக்கர் சத்தமும் கேட்டிட்டால் போதும், ஏதோ பிரளயமே வந்துவிட்டது போல பயந்து நடுங்கி அழ ஆரம்பித்துவிடுவான். ஆரம்பத்தில் சாதாரணமாக பயந்து அழுகிறான் என்றுதான் நினைத்தோம். ஆனால் போகப் போக, இரண்டும் அவனுக்கு ஒருபோதும் பிடிக்காத சத்தமாகத் தோன்றிதான் அழுகிறான் எனப் புரிந்துகொண்டோம்.

ஆகையால் இப்போதெல்லாம் அதிகம் பயன்படுத்துவதில்லை. அப்படியும் பயன்படுத்த வேண்டி இருந்தால், அவனை படுக்கை அறைக்குள் தூக்கிவந்து கதவை நன்றாக தாழிட்டுக்கொண்டுதான் பயன்படுத்துகிறோம்.

அப்படியும் சிலநேரம் அவனுக்கு கேட்டுவிடுகிறது. அதனால் லேசாக பயந்து அங்கும் இங்கும் கண்கள் விரியப் பார்ப்பான். உடனே நாங்கள் எதையாவது பேசி அல்லது செய்து அதிலிருந்து வெளியே கொண்டுவந்து விடுவோம். ஆம்.

இது ஒருபக்கம் பார்க்க வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அவன் உலகத்தில் அவனிடத்தில் போய் பார்த்ததால், இப்போது மிக்ஸியும் குக்கரும் எங்களுக்கும் எதிரிகள் ஆகிவிட்டன.

ஆதலால் சத்தம் வராத மிக்ஸி குக்கர் கண்டுபிடிக்கச் சொல்லி அல்லது, இருப்பவற்றை தடை செய்யச் சொல்லி, பாரதப் பிரதமருக்கு ஐ சார்பாக ஒரு மின்னஞ்சல் அனுப்பலாம் என்று எண்ணியிருக்கிறோம்.

விரைவில் அனுப்ப வேண்டும்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=