ஐபக்கம் – 039 : ஒரு கதை

#ஏப்ரல்10,2024
ஐ வயிற்றில் இருக்கையில், நான் அதிகமாக அவனிடம் பேசாததை ஒரு குறையாகவே சொல்வாள் மதி. ஆனால் அவன் பிறந்திட்ட பிறகு, அதற்கு அப்படியே நேர்மாறாக அவனோடு மிக நெருக்கமாக பேசி விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டாள். அதிலும் அவனுக்கு விதவிதமாக பாடல்கள் எழுதிப் பாடுவதையும், கதை சொல்வதையும் பார்த்து உள்ளுக்குள் மகிழ்ந்திட்டாள். ஆம்!
ஐ பிறப்பதற்கு முன்பே அவனுக்கு நிறைய கதை சொல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அந்த வகையில் அவன் பிறந்திட்ட இந்த 105 நாளில், குறைந்தது பத்து கதைகளாவது சொல்லி இருப்பேன் (பாடல் கணக்கிருக்காது!). ஆனால் இன்று சொன்ன கதை அவற்றிலிருந்து வேறுபட்டது; மாறுபட்டது.
படுக்கை அறையில் என்னருகில் படுத்து விளையாடிக் கொண்டிருந்த ஐ’க்கு, சொன்ன கதை இதுதான்.
”ஐ பாப்பா… அப்பா, இன்னிக்கி உனக்கு… ஒரு முக்கியமான கத சொல்லப்போறன். ஓர் ஊர்ல… ஒரு பையன் இருந்தான். அவன் தான் பொறந்த கிராமத்தத் தவிர… வெளியுலகமே தெரியாம வளர்ந்தான். அவன் வீட்ல ஏன், அவன் பரம்பரயிலயே யாரும் பெருசா படிச்சதில்ல. அதனால அவனுக்கு நறயா படிக்கணுன்னு ஆச. ரொம்பக் கஷ்டப்பட்டு வெளியூருக்குலாம் போயி… லோன்லாம் போட்டு, நாட்டுலயே பெரிய காலேஜ்ல சீட்டு வாங்கிப் படிச்சான்.
படிச்சி முடிச்சிட்டு பெரிய வேலைக்கிப் போயி… அவன் படிக்க வாங்குன கடனலாம் அடச்சிட்டு, அவன் ஆசப்படி… புடிச்ச வேலய செய்யப் போயிட்டான். இருந்தாலும் அவனுக்கு… தன்ன கஷ்டப்பட்டு பெத்து வளத்த அப்பா அம்மாவுக்கு… அவங்க கனவுலக் கூட நெனச்சிப் பாக்காத ஒண்ண செய்யணும்னு ஆச.
என்ன பண்ணான், தெரியுமா…? திடீர்னு ஒருநாள்… அவங்கள எங்க கூட்டிட்டுப் போறன்னு சொல்லாம கூட்டிட்டுப் போயி… ஏரோப்பிளேன்ல ஏத்திட்டான். அவங்களுக்கு ஒண்ணுமே புரியல. அதுவும், அவங்க கனவுலகூட நெனச்சிப் பாக்காத விஷயத்த செஞ்சி… சந்தோசப் படுத்தினான்.
நீயும் நாளிக்கி வளர்ந்து… அவன மாதிரி படிச்சிப் பெரியாளாயி, உன் அப்பாவயும் அம்மாவயும் ஏரோப்பிளேன்ல கூட்டிட்டுப் போகணும், சரியா…?”
இக்கதையை நான் சொல்லி முடித்துவிட்டு, இந்தக் கதையின் நாயகன் யார்? என்பதையும், இதை சில ஆண்டுகளுக்குமுன் யார் யாரிடம் சொன்னது? என்பதையும் ஏனோ, வேண்டுமென்றே ஐ’க்கு சொல்ல மறந்துவிட்டேன்.
*