ஐபக்கம் – 037 : வேண்டுதல்

#ஏப்ரல்05,2024
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்திட்ட எனக்கு, முதன் முதல் கண்டிட்ட பெருங்கோயில் என்றால், அது அண்ணாமலையார் கோயில்தான்.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலம். நினைத்தாலே முக்தி தரும் ஊர். பிரம்மனுக்கும், விஷ்ணுவுக்கும் அடிமுடி காணா அண்ணலாய் சிவபெருமான் நெடிதுயர்ந்து நின்ற இடம். அருணகிரிநாதர் அவதாரித்த பூமி. ரமணர் முதலான எண்ணிலா மகான்கள்; சித்தர்கள் வாழ்ந்த; வாழ்கின்ற மண். ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் வந்து செல்லும் கோயில்…
இவ்வாறு பல பெருமைகளுக்கு சொந்தமான திருவண்ணாமலை – அண்ணாமலையார் கோயிலுக்கு, முதல் தடவையாக இன்று ஐ’யை அழைத்துப் போயிருந்தோம்.
சிறுவயது முதல் எத்தனையோ தடவை சென்றிருக்கிறேன். ஆனால் ஐயுடன் போனது, புதுவித உணர்வைத் தந்தது. அதிலும், ஆயிரங்கால் மண்டபத்துக்குள் சென்றதும், உள் பிரகாரத்தில் ஆடிக்கொண்டிருக்கும் நடராசர் முன்னால் போய் வெகுநேரம் நின்றதும், கருவறையில் வீற்றிருக்கும் அண்ணாமலையாரையும், உண்ணாமுலையம்மனையும் கண்டு தரிசித்ததும் மறக்க முடியாத அனுபவத்தை ஈந்தது. ஆம்!
பெரிதாக இதுநாள்வரை அண்ணாமலையாரிடம் எந்த வேண்டுதலும் வைத்ததில்லை. ஆனால் இன்று வைத்திட்டேன். ”அண்ணாமலையாரே… இதோ, எங்க ஐ… இல்ல இல்ல, உன்னோட ஐ… முதன் முதலா உன் சன்னதிக்கு வந்திருக்கான். எப்பயும் அவன்கூட துணை இருந்து… நல்லபடியா பாத்துக்கோ.”
இதனை நான் மனத்துக்குள் சொல்லிவிட்டு, என் தோளில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்த ஐ’யை பார்க்கவும், அவன் லேசாக உதடசைத்து சிரிக்கவும் சரியாக இருந்தது.
ஒருவேளை எனது வேண்டுதல் அவனுக்கும் கேட்டிட்டதோ, என்னவோ!
*