ஐபக்கம் – 031 : ஒள விளையாட்டு

#மார்ச்22,2024

குரங்காட்டம், கொட்டாட்டம், குச்சியாட்டம், நொண்டியாட்டம், நாடுபுடியாட்டம், கண்ணாமூச்சி, கப்பை, கோட்டிப்புல், கோலி, பம்பரம், ஜெல்லி, பேய்பந்து, லக்கோரி, கொக்கொ, கபடி, ஆபியம், வச்சவச்ச வாழக்கா, மலைக்கு போறன், ஓரி, ஐஸ்நெம்பர், தாயம், ஆடு புலி, பல்லாங்குழி, கிரிக்கெட், செஸ், கேரம்… முதலான பல பத்து விளையாட்டுகளை சிறுவயது முதல் விளையாடிட்ட எனக்கு, ஐ இதுவரை இரண்டு புது விளையாட்டுகளை கற்றுத் தந்திருக்கிறான்.

இரண்டுமே உலகில் இதுவரை யாரும் அறியாத; விளையாடாத விளையாட்டுகள். ஒன்று, ‘ஒள…’ விளையாட்டு. மற்றொன்று, கண்ணும் கண்ணும் விளையாட்டு. ஆம்!

‘ஒள…’ விளையாட்டு என்பது, ஒருவர் மற்றவரை பார்த்து ‘ஒள…’ சொல்லி சிரித்திட்டால், பதிலுக்கு அவரும் ‘ஒள…’ சொல்லி சிரிக்க வேண்டும். இப்படி ஒரு தடவை தொடங்கி, எத்தனை தடவை வேண்டுமானாலும் சொல்லலாம்; செய்யலாம்.

கண்ணும் கண்ணும் விளையாட்டு என்பது, இருவரும் கண் சிமிட்டாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு புருவத்தை மட்டும் அசைத்து பேசிக்கொள்ள வேண்டும். குறைந்தது பத்து நொடி முதல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஐ பிறந்து இன்றோடு 85 நாட்கள் ஆகின்றன. அதற்குள் இரண்டு புதிய விளையாட்டுகளை கற்றுத் தந்திருக்கிறான். ‘வரும் நாட்களில் இன்னும் வளர்ந்து எத்தனை எத்தனை விளையாட்டுகளை சொல்லித் தருவானோ?’ என்று ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=