ஐபக்கம் – 032 : ஒருசண்டை

#மார்ச்24,2024

ஐ பெரும்பாலும் அழுது ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்ய மாட்டான். எப்போதாவது சிறிது நடந்தபடி வேடிக்கை பார்க்க நினைத்தால், தூக்கச் சொல்லி லேசாக அழுவான். அவ்வளவுதான்.

அவ்வாறு இன்று காலை அழுதபோது, நான் குளித்துவிட்டு வந்து தலை துவட்டிக் கொண்டிருந்தேன். அதனால் தூக்க சற்று தாமதம் ஆகிவிட்டது. எனினும் மதி ஓடிவந்து தூக்கிவிட்டதால், நான் அதோடு சாப்பிட போய்விட்டேன். இதுதான் நடந்தது.

ஓர் இருபது நிமிடம் இருக்கும். ஆர அமர உட்கார்ந்து உண்டுவிட்டு வந்து எப்போதும் போல அவனிடம் பேசினேன். உடனே, முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான். அந்தப் பக்கம் போய் பேசினேன். மறுபடியும் திருப்பிக் கொண்டான். இப்படியே எல்லா பக்கமும் பார்த்தவன், என்னை மட்டும் பார்க்க மறுத்தான். நானும் என்னென்னவோ செய்து பார்த்தேன். ம்… ஹூம்.

எப்போதும் கண்டதும் சிரிப்பவன், சுமார் ஐந்து நிமிடத்திற்கு மேல் கண்டும் காணாமல் இருந்தது, எனக்குள் சங்கடத்தை உண்டாக்கியது.

‘சரி, அழுததும் தூக்காததாலதான்… கோபமா இருக்கான். கொஞ்ச நேரத்துல சரியாய்டும்’ என்று சாமாதானம் சொல்லிக்கொண்டு வந்து எழுத உட்கார்ந்தேன். முடியவில்லை.

மனசு கேட்காமல் திரும்பவும் போய், ”ஐ பாப்பா… அப்பா உடனே தூக்காத்து தப்புதான், சாமி. அப்பாவ மன்னிச்சிடு தங்கம். அப்பா பாவம்ல… பேசுப்பா’’ என்றுவிட்டு, ஈரக் குரலில் கேட்டேன்.

”அப்பு பாப்பாவுக்கு… இப்ப என்ன வேணும், சொல்லுங்க?’’

எந்த பதிலும் இல்லை.

”பப்பு பாப்பாவுக்கு என்ன வேணும்?’’

ம்… ஹூம்.

அருகில் இருந்த யானை பொம்மையை எடுத்துக் காட்டி கேட்டேன். ”யான பொம்ம வேணுமா…? இல்ல, பூன பொம்ம வேணுமா?’’

அப்போதும் பதில் இல்லை.

‘சரி, இது வேலைக்கு ஆகாது’ என்று முடிவெடுத்து, இவ்வளவு நேரம் சாதாரணமாகக் கேட்டதை பாடலாக பாடிக் கேட்டேன்.

”அப்பு பாப்பாவுக்கு என்ன வேணும்?

பப்பு பாப்பாவுக்கு என்ன வேணும்?

கேளுடா தங்கம்நீ 

கேளுடா தங்கம்… 

குக்கு பாப்பாவுக்கு என்ன வேணும்?

குட்டி பாப்பாவுக்கு என்ன வேணும்

கேளுடா தங்கம்நீ 

கேளுடா தங்கம்…”

சிறிது அசைவு அதாவது, முன்னேற்றம் தெரிந்தது. உடனே, எனது மனத் தரையில் கோடைத் தூறல் விழுந்ததாய் உணர்ந்திட்டேன்.

‘சரி, என்ன வேணும்? என்று கேட்டுவிட்டோம். அடுத்தது, என்ன தருவோம் எனச் சொல்லலாம். அதுவும், மிகப் பெரிதாக.’

”அந்த வானம் வேணுமா

இந்த பூமி வேணுமா

‘வானம், பூமி சொல்லிவிட்டோம். அடுத்து, இதைவிட பெரிதாக அல்லது நிகராக சொல்ல வேண்டும்.’

”அந்த அம்மா வேணுமா?

இந்த அப்பா வேணுமா?

நீ கேளுடா தங்கம் – 

நீ கேளுடா தங்கம்…”

என்ன ஆச்சரியம்! சட்டென சண்டை; கோபம் எல்லாம் மறந்து, தனது பொக்கை வாய் காட்டி சிரித்திட்டவன், ‘ஒள… ஒள…’ என்று கை கால்களை ஆட்டி மகிழ்ச்சியில் குதித்திட்டான். மனத்தோடு சேர்ந்து மொத்த உடலும் குளிர்ந்தது போல இருந்தது. ஆம்!

மறுபடியும் பல்லவியை முதலிலிருந்து பாடிக்கொண்டு, மதியிடம் இருந்து அவனை வாங்கி நெற்றியிலும் கன்னத்திலும் முத்தமிட்டு, சிறிது நேரம் கொஞ்சி விளையாடிவிட்டு வந்து உட்கார்ந்தேன். எழுத வேண்டிய ‘ஆடூஉ மகடூஉ’ வரவில்லை. பாடிவிட்டு வந்த பாடல் வரிகள்தான் வந்தது.

‘சரி, பாடலை முழுமை செய்வோம்’ என்று அடுத்த இருபது நிமிடத்தில் எழுதி முடித்துவிட்டுப் போய் பாடிக் காட்டினேன்.

நல்லவேளை அவனுக்கு இன்னும் பல் முளைக்கவில்லை. இல்லையென்றால், மொத்தப் பல்லையும் காட்டிச் சிரித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருப்பான். ஆம்!

பாடல் பிடிக்காத குழந்தையே இருக்காது என்பார்கள். அது எந்த அளவுக்கு உண்மை என்று இன்று மனத்தார தெரிந்துகொண்டேன்.

ஐ’யின் கோபம் போக்க எழுதிப் பாடின பாடலின் முழு வடிவம் இதுதான் :

அப்பு பாப்பாவுக்கு என்ன வேணும்?

பப்பு பாப்பாவுக்கு என்ன வேணும்?

கேளுடா தங்கம்நீ 

கேளுடா தங்கம்… 

குக்கு பாப்பாவுக்கு என்ன வேணும்?

குட்டி பாப்பாவுக்கு என்ன வேணும்

கேளுடா தங்கம்நீ 

கேளுடா தங்கம்

அந்த வானம் வேணுமா

இந்த பூமி வேணுமா

அந்த அம்மா வேணுமா?

இந்த அப்பா வேணுமா?

நீ கேளுடா தங்கம் – 

நீ கேளுடா தங்கம்

(அப்பு….)

*

யான பொம்ம வேணுமா?

உனக்கு பூன பொம்ம வேணுமா

கேளுடா தங்கம்நீ 

கேளுடா தங்கம்… 

அணில் பாப்பா வேணுமா

உனக்கு எறும்பு பாப்பா வேணுமா?

கேளுடா தங்கம்நீ 

கேளுடா தங்கம்

வேப்பம் பூ வேணுமா?

உனக்கு புங்கம் பூ வேணுமா

கேளுடா தங்கம்நீ 

கேளுடா தங்கம்

காரப் பழம் வேணுமா?

உனக்கு சூரப் பழம் வேணுமா?

கேளுடா தங்கம்நீ 

கேளுடா தங்கம்

(அப்பு….)

*

திருக்குறள் வேணுமா?

உனக்கு குறுந்தொகை வேணுமா?

கேளுடா தங்கம்நீ 

கேளுடா தங்கம்

பெண்ணையாறு வேணுமா?

உனக்கு பட்டசோறு வேணுமா?

கேளுடா தங்கம்நீ 

கேளுடா தங்கம்

ஆல மரம் வேணுமா?

உனக்கு அரச மரம் வேணுமா?

கேளுடா தங்கம்நீ 

கேளுடா தங்கம்

ஞாயிறு தாத்தா வேணுமா?

உனக்கு திங்கள் பாட்டி வேணுமா?

கேளுடா தங்கம்நீ 

கேளுடா தங்கம்

(அப்பு….)

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=