ஐபக்கம் – 019 : தடுப்பூசி

#பிப்ரவரி14,2024

ஐ பிறந்ததும் மருத்துவமனையில் மூன்று தடுப்பூசி போட்டார்கள். அதற்கு அடுத்து வீட்டுக்கு வந்ததும் முதல் தடுப்பூசி (45 ஆவது நாள் தடுப்பூசி) போடுவதற்காக இன்று அருகில் இருக்கும் அங்கன்வாடி மையத்துக்கு போயிருந்தோம்.

கிட்டத்தட்ட வீட்டுக்கு வந்து இதுதான் முதல் தடவை ஐ’யை வெளியில் கூட்டிக்கொண்டு செல்வது என்பதால், ‘கோயிலுக்கு போயிட்டு போகலாம்’ என்றாள் மதி. சரி, என்று அருகிலுள்ள நீலகண்டர் கோயிலுக்கு சென்றுவிட்டு போனோம்.

[கூடவே, இன்று காதலர் தினம் என்பதால், ஐ’யை கொஞ்சம் கூடுதலாகவே [இதயப் பொட்டு; இதயம் போட்ட சட்டை… என்று] தயார் செய்து, அவன் Girl Friend யாஷா பாப்பாவுக்கு (அவனை முதன்முதலில் மருத்துவமனைக்கு வந்து பார்த்த பாப்பா) வாழ்த்து சொல்லிவிட்டு, கூட்டிப் போயிருந்தோம்!]

சென்றதும் அங்குள்ள குழந்தைகளையும், அந்த இடத்தையும் நன்றாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன், சொட்டு மருந்து போட்டதையும், கையில் ஊசி போட்டதையும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

அடுத்து இரண்டு தொடைகளிலும் தடுப்பூசி போட்டதும் (அதிலும் குறிப்பாக, ஐந்து மருந்துகள் கொண்ட இரண்டாவது தடுப்பூசி) அழுது ஆர்ப்பரித்தவன், ஊசி போட்ட செவிலியர் அம்மாவை நொடிநேரம் அழுகை நிறுத்தி ஒரு முறை முறைத்துவிட்டு தொடர்ந்தான்.

உடனே, தூக்கிக்கொண்டு போய் அங்கிருந்த அறைக்குள் உட்கார்ந்து பால் கொடுத்து சமாதானப்படுத்தி தூக்கி வந்தாள் மதி.

ஓரளவுக்கு அழுகை அடக்கியவன், வீடு வந்ததும் ஒரு தூக்கம் தூங்கி எழுந்து மறுபடியும் அழத் தொடங்கினான். கொஞ்சம் கால் அசைந்தாலும் வலி தாங்காது அழுகிறான்; துடிக்கிறான். பார்க்கும் எனக்குதான் அவனைவிட அதிகமாக வலிக்கிறது.

கூடவே, காய்ச்சல் வருமாம். ஊசி போட்ட இடத்தில் வீங்க வேறு செய்யுமாம். அதனால் ஐஸ் வைக்க வேண்டுமாம். என்ன செய்யப் போகிறோம், தெரியவில்லை.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=