ஐபக்கம் – 018 : நீராட்டு

#பிப்ரவரி12,2024
நேற்று முதல் தடவையாக ஐ’யை குளிப்பாட்டியது தொடங்கி ஒரு கேள்வி மனத்தில் ஓடிக்கொண்டிருந்தது.
‘ஏன், குழந்தைய குளிப்பாட்டும்போது… நாம ஒரு பாட்டுப் பாடி குளிப்பாட்டக் கூடாது? அதுவும், அந்தப் பாட்டு… நீராட்ட பத்தியே இருக்கக் கூடாது?’
இந்தக் கேள்வியோடவே மாலை நடை போனவன், ‘சரி எழுதிதான் பார்ப்போமே’ என முடிவெடுத்து, அருகில் இருந்த பூங்காவில் உட்கார்ந்து அடுத்த அரை மணிநேரத்தில் எழுதி முடித்துவிட்டு, வீட்டுக்கு வந்ததும் முதல் வேளையாக மதியிடம் பாடிக் காட்டினேன். அவளுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது.
அதனால் அந்தப் பாடலை இதோ, இன்று இரண்டாவது வாட்டி ஐ’யை குளிப்பாட்டும்போது முதல்தடவையாக பாடிக் காட்டினேன். அவன் அத்தனை ரசித்து மகிழ்வான் என்று கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. ஆம்!
வாழ்வில் நிகழும் எது ஒன்றையும் மகிழ்வாக்குவது நம் கைகளில்தான் உள்ளது என்று மேலுமொரு தடவை தெரிந்து கொண்டேன்; புரிந்துகொண்டேன்.
அந்த நீராட்டுப் பாடல் இதுதான் :
மேகம் கடலில் முகந்த நீர –
மழையா தந்தது வானம்…
வானம் தந்த மழைய –
நீரா கொண்டது பூமி…
பூமி சேமித்துக் கொடுத்த நீர –
அடுப்பில் பிடித்து வைத்து…
அக்கற கொண்டு எடுத்து –
அன்பால் முகந்து ஊற்றி…
நீராட்டு நீராட்டு –
நீரால் செய்யும் ஆராட்டு…
சமத்துப் பிள்ளையா இருந்தா –
தேடி வரும் பாராட்டு…
நீராட்டு நீராட்டு –
நீரால் பாடும் தாலாட்டு…
எதையும் ரசிக்கத் தெரிந்தா –
வாழ்க்க ஆகும் சீராட்டு…
(மேகம்…)
*
உச்சி முதல் பாதம் வரை –
தேய்த்து நல்லா குளிக்கணும்…
அழுக்கு எல்லாம் ஓடணும் –
அகத்தப் போல புறமும் சுத்தம் ஆகணுமே…
கண்ண மூடி சோப்பு போட்டு –
முகத்த நல்லா கழுவணும்…
சோர்வு மொத்தம் மறையணும் –
தாயப் போல தண்ணீரு எண்ணிப் பாக்கணுமே…
(நீராட்டு…)
(மேகம்…)
*