ஐபக்கம் – 017 : புதுவித பரவசம்

#பிப்ரவரி11,2024
ஐ பிறந்தபோது தொட்டுத் தூக்குவதற்கே பயமாக இருக்கும். ஆனால் போகப் போக ஓரளவுக்குப் பழகி, இன்றைக்கு சட்டென எப்போது வேண்டுமானாலும் தூக்கிக் கொஞ்சும் அளவுக்கு வந்துவிட்டேன்.
ஆகையால் அந்த தைரியத்தில், நேற்று மாலை ஆறு மணி இருக்கும். ஐ நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான். நானும் மதியும் பார்வையில் படுவது போல மாடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.
அப்போது தீடீரென்று பேச்சின் நடுவில், ”ஏன், பட்ட்டு… நாமளே ஐ’க்கு தண்ணீ ஊத்தினா, என்ன?’’ என்று கேட்டாள் மதி.
இது சற்றும் எதிர்பாராத கேள்வி என்பதால் புரியாதவன் போல, ”என்னது?’’ என்றேன்.
”நாளையிலருந்து நாமளே ஐ’க்கு தண்ணீ ஊத்தலாமா?’’
பெரிதாக யோசிக்கவெல்லாம் இல்லை. ”சரி” என்றேன்.
அதனால் இன்று காலை எழுந்தது முதலே, ‘எப்படி தண்ணீர் ஊற்றப் போகிறோமோ?’ எனும் பதட்டமாகவே இருந்தது. இன்னொரு பக்கம், ‘சரி, இன்னிக்கி ஒருநாள் ஊற்றிதான் பார்ப்போம். சரியா வந்தா, தொடரலாம். இல்லனா, அந்த அம்மாவையே வந்து ஊற்றச் சொல்லலாம்’ என எண்ணிக்கொண்டு, இருவரும் சேர்ந்து நினைத்ததைவிட நன்றாகவே தண்ணீர் ஊற்றிக் குளிப்பாட்டினோம்.
அதுவும் மதி தன் காலில் ஐ’யை பத்திரமாக எதிரில் இருக்கும் என்னைப் பார்த்து படுக்க வைக்க, நான் உடம்பெங்கும் தண்ணீர் ஊற்றி சோப்புப் போட்டு நன்றாகத் தேய்த்துவிட்டேன். பின் அவள் தலைக்கு சேம்ப்பும், முகத்துக்கு சோப்பும் போட்டுவிட்டாள். அந்த அம்மா எப்படி தண்ணீர் ஊற்றினார்களோ அதுபோலவே ஊற்றினோம். மிக நிறைவாக இருந்தது.
பெற்ற குழந்தையை நாமே நம் கைகளால் தொட்டுக் குளிப்பாட்டியது புது அனுபவமாகவும், ஒருவித பரவசமாகவும் இருந்தது. ஆம்!
‘இதற்காகவே இனி நாம்தான் குழந்தையை குளிப்பாட்ட வேண்டும்’ என்று முடிவெடுத்து, தண்ணீர் ஊற்ற வரும் அம்மாவை போய் சலூன் கடையில் பார்த்து எங்களால் முடிந்த பணத்தைத் தந்து, ”இனிமே நாங்களே ஊத்திக்கலாம்னு இருக்கோம்மா. ரொம்ப நன்றி’’ எனச் சொல்லிவிட்டு, ‘மகவே வருக’ நூலின் ஒரு பிரதியில்,
‘அக்கறையோடு என்னை குளிப்பாட்டிய பாட்டிக்கும்…
அவர்களை அனுப்பி வைத்த அத்தைக்கும்…
அன்புடன்,
‘ஐ’ பாப்பா’
என்று எழுதித் தந்துவிட்டு வந்தேன். ஆம்!
இனிமேல் ஐ’க்கு நாங்கள்தான் தண்ணீர் ஊற்றப் போகிறோம்!
*