ஐபக்கம் – 015 : நூலக அறிமுகம்

#ஜனவரி28,2024
ஐ பிறந்த முதல் நாள் எப்படி அவனுக்கு திருக்குறளை அறிமுகப்படுத்தி அதனை இப்போது தினந்தோறும் செயல்படுத்தி வருகிறோமோ அதுபோல, அவன் பிறந்த ஒவ்வொரு மாதம் 28 ஆம் தேதியும் ஒரு புதுவிஷயத்தை அறிமுகப்படுத்த எண்ணினோம்.
அந்த வகையில் இன்று இந்த முதல் மாத 28 ஆம் தேதியில், அவனுக்கு எங்கள் வீட்டில் இருக்கும் நூலகத்தை அறிமுகம் செய்திருக்கிறோம்.
‘ஒரு மாதக் குழந்தைக்கு போய் நூலக அறிமுகமா?’ என்று கேட்கலாம். ‘ஆம், செய்தால் என்ன?’ என்பதுதான் எங்கள் பதில்.
காலையில் ஐ’யை குளிப்பாட்டி புத்தாடை அணிவித்து, வீட்டு பூசை அறையில் இருக்கும் நடராசரை வணங்கிவிட்டு வந்து நூலகத்தை காண்பித்து இவ்வாறு அறிமுகம் செய்தோம்.
”ஐ பாப்பா… இன்னிக்கோட நீ பொறந்து ஒரு மாசம் ஆகுது. அம்மாவோட வயித்துக்குள்ளருந்து பூமிக்கு வந்து சரியா 32 நாள். அதனால, இந்த அப்பாவும் அம்மாவும் உனக்கு… வாழ்க்கையில மிக முக்கியமான ஒண்ண இன்னிக்கி அறிமுகம் செய்யப் போறோம். ஆமா, மகனே.
அது என்னென்னா…? நூலகம். ஆங்கிலத்துல இத லைப்ரரின்னு சொல்லுவாங்க. நூத்துக்கணக்கான; ஆயிரக்கணக்கான… ஏன், லட்சக்கணக்கான புத்தகங்கள் இருக்குற இடம். ஆம், மகனே.
இப்படியெல்லாம் ஒரு எடம் இருக்குறத… உன் அப்பா நான் பதினெட்டு வயசுலதான் தெரிஞ்சிக்கிட்டன். அதுவும், கல்லூரியில சேர்ந்தப்புறம்தான். ஆனா, உனக்கு… பொறந்த ஒரு மாசத்துலயே அறிமுகம் செய்து வைக்கிறோம். அதனால இது வாழ்க்கையில எவ்வளவு முக்கியம்னு புரிஞ்சிக்கோ, மகனே.
ஒரு மனிதனோட வாழ்க்கையில எத்தனையோ வகையான துணைகள் இருக்கலாம். என்னக் கேட்டா, அதுல இந்த புத்தகத் துணை… மனிதனுக்கு இருக்க வேண்டிய துணைகள்ல முதன்மையானதுன்னு சொல்வேன். அப்படிப்பட்ட இந்தத் துணைய, நீ என்னிக்கும் கொண்டிட்டா… உன்னோட வாழ்க்கை இன்னும் இன்னும் அழகாகவும்; அர்த்தமுள்ளதாகவும் ஆகும். ஆமா, மகனே.
அதனாலதான் நாங்க ரெண்டு பேரும் எப்பயும் புத்தகத்த துணையா கொண்டிருக்கோம். ஒவ்வொரு புத்தகமும் ஒரு நல்ல நண்பன்னு சொல்வாங்க. அவன் உனக்கு தெரியாத பல விஷயங்கள சொல்லித் தருவான். உன்னோட அறிவ விரிவு செய்வான். மத்தவங்கள்ல இருந்து உன்ன தனிச்சிக் காட்ட செய்வான். நீ யாருன்னு உனக்கு புரியவைப்பான். அதோட, நீ வாழாத வாழ்க்கைய வாழ வைப்பான். அப்படிப்பட்ட புத்தகங்கள் நிறைந்திருக்க இடம்தான் நூலகம்.
உன் அம்மா அப்பா ரண்டுபேருமே அடிக்கடி நூலகத்துக்கு போவோம். பார்க், பீச், தியேட்டர், மால்னு… இன்னிக்கி பொழுதுபோக்க எத்தனையோ இடங்கள் இருக்கு. அதையெல்லாம் விட எங்களுக்கு பொழுத அர்த்தமுள்ள வகையில பயன்படுத்த இருக்க நூலகம்தான் பெருசுன்னு நெனப்போம். ஆமா, மகனே.
அதோட முக்கியத்துவம் தெரிந்ததாலதான்… இப்படி வீட்டுலயே நல்ல நல்ல புத்தகங்களை சேமித்து வைத்து ஒரு சின்ன நூலகம் உருவாக்கியிருக்கோம். இது எங்களுக்கு மட்டும் இல்ல… உனக்கும்தான். இதுல இருக்க ஒவ்வொரு புத்தகமும் விலையுயர்ந்த பொக்கிஷம் மகனே. இன்னும் எங்களுக்காகவும், உனக்காகவும் நிறைய வாங்கி வைப்போம். அதையெல்லாம் நீ வளர்ந்து படிக்கணும், சரியா?
இன்னொரு முக்கியமான விஷயம் மகனே. நூலகத்துல இதோ, இங்க வரிசையா இருக்கு பாரு… இந்த புத்தகங்கள் எல்லாம், உன் அப்பா நான் எழுதின புத்தகம். இதுல கடைசியா இருக்கே, இந்த புத்தகம்… உனக்காக எழுதிக் கொடுத்த புத்தகம். இன்னும் இதுமாதிரி எத்தனையோ புத்தகங்கள எழுதுவன். அதையும் நீ படிக்கணும், சரியா?’’
இப்படி இன்னும் எவ்வளவோ சொன்னோம். எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டு, ஆச்சரியத்துடன் புத்தகங்களை பார்த்து வந்த ஐ’க்கு, ஐயன் திருவள்ளுவரின் திருக்குறளையும், தற்போது நடந்து முடிந்த சென்னை – புத்தகக் கண்காட்சியில் வாங்கி வந்த அந்த்வான் து செந்த் – எக்சுபெரி எழுதிய ‘குட்டி இளவரசன்’ புத்தகத்தினையும் பரிசளித்தோம். ஆம்!
புத்தகமும், நூலகமும் ஐ’யின் வாழ்வில் மிக முக்கிய ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம். அதனால்தான் அவன் பிறந்தபோது புத்தகம் தந்து இப்பூமிக்கு வரவேற்றேன். இதோ, இப்போது நூலகத்தை அறிமுகம் செய்திருக்கிறோம்.
நிச்சயம் நாளை வளர்ந்து அவன் எங்களுக்கு பல நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்து வைப்பான் என்று உறுதியாகத் தோன்றுகிறது; நம்புகிறோம். ஆம், ஆம்!
*