ஐபக்கம் – 006 : ஐ புறப்பாடு

#ஜனவரி04,2024

ஐ பிறந்து இன்றோடு எட்டு நாள். மருத்துவமனையில் இருந்து பல்லாவரத்தில் இருக்கும் எங்கள் வீட்டுக்கு முதல்தடவையாக அவனை காரில் அழைத்து வந்தோம். அவனது முதல் பயணம்; புறப்பாடு; இல் விஜயம் எல்லாம் இதுதான்.

நாங்கள் குடியிருக்கும் கட்டடத்தில் உள்ள பெண்களும், குழந்தைகளும் கூடி ஐ’யையும், மதியையும் ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். நான் காரில் இருந்து இறங்கியதும் எடுத்துவந்த பொருட்களில் பாதியை எடுத்துக்கொண்டு வேகமாகப் படியேறி வீட்டுக்கு வந்து, ஐ படுப்பதற்காக கட்டிலில் படுக்கை ஏற்பாடு செய்துவிட்டு, என் நகர்பேசியில் உள்ள ‘மகவே வருக’ பாடலை ஒலிக்கவிட்டு அவனை வீட்டுக்குள் வரவேற்றேன்.

‘ஏதோ, சினிமா பாடல்தான் ஒலிக்கிறது’ என நினைத்தவர்கள், அவனுக்காகவே எழுதிய வரவேற்புப் பாடல்தான் அது என்று தெரிந்ததும் வியந்தார்கள்.

பிறகு வந்திருந்தவர்களுக்கு இனிப்பும், ஐ கையால் ‘மகவே வருக’ நூலும் தந்துவிட்டு, அவர்கள் போனதும் நான் ஒருபக்கமும் மதி ஒரு பக்கமுமாக அமர்ந்துகொண்டு, ‘மகவே வருக’ பாடலை எனது குரலில் ஐ’க்கு முதல்முறையாக பாடிக் காட்டி மகிழ்ந்திட்டேன்.

ஐ வந்ததும் வீடே வேறு விதமாக; புத்தம் புதிதாக; ஒருவித நிறைவாக மாறிவிட்டதாக உணர்கிறேன். ஆம்!

இதோ, இந்த நிமிடம் மனத்தில் தோன்றுவது இதுதான் : ‘வெறுமே தம் வாழ்வை வாழ்ந்துவிட்டுப் போவதற்காக மட்டும் குழந்தைகள் இங்கே பிறந்து வருவதில்லை. நம்மை நமக்குக் காட்டவும்; நாம் வாழும் இந்த பூமியை இன்னும் இன்னும் அழகுள்ளதாய்; அர்த்தமுள்ளதாய் மாற்றவும்தான்.’

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=