ஐபக்கம் – 007 : தந்தையின் தாலாட்டு

#ஜனவரி05,2024

மதி கருவுற்றிருந்த நாள் முதலே பலரும் எங்களை தம் சொற்களால் அச்சுறுத்தி வந்தார்கள்.

‘குழந்தை பிறந்தா தூங்கவே முடியாது… இப்பவே நல்லா தூங்கிக்கங்க.’

‘ராத்திரியெல்லாம் முழிச்சிக்கிட்டேதான் இருக்கணும்… லைட்ட கூட அணைக்க முடியாது.’

‘நெனச்ச நேரத்துல எழுந்து ஒண்ணுக்குக்கூட போக முடியாது, பாத்துக்கங்க… கொஞ்சம் அசஞ்சாலே அழுவாங்க.’

ஒரு பக்கம் பயமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் ‘நம்ம குழந்தை நிச்சயமா அப்படி எல்லாம் இருக்காது. நம்மள மாதிரிதான் இருக்கும்’ என்று நினைத்தோம்; நம்பினோம். ஆம்!

நினைத்தது போலவே ஐ சமத்தாக இருக்கிறான். மருத்துவமனையில் இருந்த எட்டு நாட்களும் மற்ற குழந்தைகள் போல அழுதுகொண்டு; இரவெல்லாம் தூங்காமல் இல்லாமல், அவன் பாட்டுக்கு எட்டுத் திக்கும் வேடிக்கை பார்த்துக்கொண்டு அல்லது உறங்கிக்கொண்டு இருந்தான். வேளா வேளைக்கு பால் தந்துவிட்டு, சிறுநீர் – மலம் கழித்திருந்தால் துணி மாற்றி துடைத்துவிட்டால் போதும். நாம் நம் வேலையை பார்க்கலாம்.

அதனால் வீட்டுக்கு வந்ததும் நேற்றிரவு நாங்கள் எப்போதும் படுக்கப் போகும் நேரத்தில் அவனையும் கொசு வலைக்குள் எங்களோடு படுக்க வைத்து, படுக்கையறை விளக்கை முற்றாக அணைத்துவிட்டு, ஹாலில் மட்டும் லேசாக வெளிச்சம் தெரிவதுபோல சிறு விளக்கு எரியவிட்டு படுத்துப் பார்த்தோம்.

இது அவனுக்கு முற்றிலும் புதிதாக இருந்ததால், உறங்காமல் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்தான். ‘ஒருவேளை பாட்டு பாடினா தூங்கிடுவானோ?’ எனத் தோன்ற, அவனுக்காக நேற்று எழுதிய தாலாட்டுப் பாடலை பாடினேன். என்ன ஆச்சரியம், பாடத் தொடங்கிய சற்று நேரத்திலேயே உறங்கிவிட்டான்.

‘இதுதான் இனி ஐ’யை உறங்க வைக்கப் போகும் உறக்கப்பாட்டு’ என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டு, நானும் மதியும் அவனோடு சேர்ந்து முதல்தடவை மூவராக உறங்கினோம்.

ஐ’க்கு பாடிய அந்தத் தாலாட்டுப் பாடல் இதுதான் :

கண்ணுறங்கணும் –

கண்ணுறங்கணும் –

தங்கமே தங்கம்…

அம்மா அப்பா –

நடுவில் படுத்து –

கண்ணுறங்கணும்…

உனக்கு என்ன வேணும் –

எங்கக்கிட்ட கேளுடா தங்கம்…

வாங்கித் தறோம் –

வாங்கித் தறோம்…

(கண்ணுற…)

*

நெலவுப் பந்த புடிச்சித் தாறோம் –

ஒதச்சி ஆடு…

இந்த பூமி சுத்தும் காலம் வரைக்கும் –

சுத்தித் திரி…

அகர முதல எல்லாம் படிச்சி –

அழகா வாழனும்…

அப்புத் தங்கமே –

பப்புத் தங்கமே…

செல்லத் தங்கமே –

வெள்ளத் தங்கமே –

சீனித் தங்கமே…

கண்ணுறங்குடா – நீ

கண்ணுறங்குடா…

குட்டித் தங்கமே –

பட்டுத் தங்கமே –

குக்குத் தங்கமே…

கண்ணுறங்குடா – நீ

கண்ணுறங்குடா…

(கண்ணுற…)

*

மேக மெத்த போட்டுத் தாறோம் –

படுத்துத் தூங்கு…

அந்த திங்கள் பாட்டி மறையும் வரைக்கும் –

கனவு காணு…

அன்ப வாரிக் கொடுத்துக் கொடுத்து –

முன்னால் நிக்கணும்…

தென்றல் பாப்பாவே –

தெய்வப் பாப்பாவே…

தேனு பாப்பாவே –

மீனு பாப்பாவே –

மானு பாப்பாவே…

கண்ணுறங்குடா – நீ

கண்ணுறங்குடா…

மயில் பாப்பாவே –

குயில் பாப்பாவே –

ஒயில் பாப்பாவே…

கண்ணுறங்குடா – நீ

கண்ணுறங்குடா…

(கண்ணுற…)

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=